முதல் நூறு: 12: எழுத்தாளர்களுக்கு சகிப்புத்தன்மை இல்லையா?

12.  தமிழ்ச் சூழலில் ஏன் பெரும்பான்மையான எழுத்தாளர்களால், வாசகர்களின் பார்வையில் உள்ள நியாயமான எதிர்வினைகளை, கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை? எதிர்வினை என்றுகூட அல்ல, மிகச் சாதாரண விமர்சனத்தைக்கூட எதிர்கொள்ள மறுக்கின்றனர். (இந்த பட்டியலில் முதிர்ந்த எழுத்தாளர்களும் உண்டு).

தமிழ்ச் சூழலில் எது இலக்கியம்? ஏனெனில், பல எழுத்தாளர்கள் கழக கட்சி சார்ந்து பொய் பாதி, மெய் மீதி என்று கலந்துகட்டி எழுதுகிறார்கள்.  இது எப்படி இலக்கியமாகும்? இது அடுத்த அடுத்த தலைமுறைக்கும், இலக்கியத்திற்கும் செய்யும் பாவமில்லையா? 

தமிழரசு.எஸ்.

பதில்:  எனக்குத் தெரிந்து விமர்சனங்களை ஏற்காத எழுத்தாளர்களை நான் கண்டதில்லை.  சொல்லப் போனால் தமிழில் படைப்புகளின் மீது விமர்சனங்களோ மதிப்பீடுகளோ செய்யப்படவே இல்லை.  கொலை மிரட்டல்தான் விடுகிறார்கள்.  இல்லாவிட்டால் அவதூறு செய்கிறார்கள்.  நேற்று ஒரு நண்பர் ஃபேஸ்புக்கில் என்னைப் பற்றி ஒரு வரி எழுதுகிறார்.  பின்னூட்டம் எழுதுபவர் பலர் கக்கூஸில் கிறுக்கிக் கொண்டிருந்தவர்களின் வாரிசுகள்தாம்.  அந்த வகையில் பின்னூட்டம் எழுதும் ஒருத்தர் யாரைப் பற்றிச் சொல்கிறீர்கள், புளிச்ச மாவைப் பற்றியா என்று கேட்கிறார்.  அவருக்கு என் பெயரும் தெரியவில்லை.  என் சக எழுத்தாளர் பெயரும் தெரியவில்லை.  நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்படும் தகுதியுள்ள ஒரு எழுத்தாளனை புளிச்ச மாவு என்று அவமதிக்கும் சமூகம் ஐயா இந்தத் தமிழ்ச் சமூகம்.  இங்கே வந்து நீங்கள் எழுத்தாளர்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்கிறீர்கள்.  எனக்கு மிரட்டல் கடிதம், ஆபாச வசைக் கடிதம் வராத நாளே இல்லை.  ஒரு இளைஞர் என்னைத் திருடன் என்று எழுதினார்.  என் சக எழுத்தாளர்களே இதைக் கண்டிக்கவில்லை.  அந்த அளவு சகிப்புத்தன்மை கொண்டவர்கள் நாங்கள்.

மேலும், எது ஒன்று பற்றியும் விமர்சிப்பதற்கு முன்னால் அதற்கான தகுதி நமக்கு இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும்.  எனக்கு மூணாம் வாய்ப்பாடே தெரியாது.  நான் போய் கணித மேதை ராமானுஜத்தின் கணித சூத்திரங்களை விமர்சிக்கலாமா?  அது மடமை இல்லையா? 

எனக்குத் தெரிந்த ஒருவர் அராத்துவின் ஓப்பன் பண்ணா நாவலில் ஒன்றுமே இல்லை, அதை எப்படி சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று என்னைக் குற்றம் சாட்டும் விதத்தில் கேட்டார்.  அப்படியானால் அவர் என்னை அவமதிக்கிறார் என்று பொருள்.  ஏனென்றால், நான் உலக இலக்கியம் கற்றவன்.  நண்பர்களுக்காக இலக்கிய சலுகை எதுவும் கொடுக்காதவன்.  பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறிந்து விடுவேன்.  நண்பராக இருந்தாலும் இதேதான்.  அப்படியிருக்கும்போது ஓப்பன் பண்ணா நாவலை ஐந்து லட்சம் ரூபாய் பரிசுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்றால் நான் என்ன முட்டாளா?  உங்களுக்கு ஓப்பன் பண்ணா பிடிக்காமல் போகலாம்.  அதற்கு உங்களுக்குப் பூரண உரிமை உண்டு.  அதை வந்து என்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே?  ஒன்றுமே இல்லை என்றால் அது உங்கள் பிரச்சினை.  அதை ஏன் கொண்டு வந்து என் மீது உரசுகிறீர்கள்? 

என் நண்பர் ஒருவர் சொன்னார், சாரு கடவுள், அவரை விமர்சிக்க வேண்டுமானால் நீ ஒரு குட்டிக் கடவுளாக இருக்க வேண்டும். 

இங்கே கடவுள் என்பதை நிபுணர் என்று போட்டுப் பாருங்கள்.  இலக்கியத்தில் நிபுணத்துவம் பெற்ற என்னை, என் கருத்தை ஒருவர் விமர்சிக்கவோ மறுக்கவோ வேண்டுமானால் அவர் ஒரு குட்டி நிபுணராகவோ இருக்க வேண்டும்.  சும்மா ஒன்றுமே தெரியாமல் போகிற போக்கில் என் கருத்தை மறுப்பவர்களோடு நான் உரையாடுவதில்லை.   

எது இலக்கியம் என்றும் என்னால் சொல்ல இயலாது.  நீங்களேதான் கண்டு பிடிக்க வேண்டும். 

கட்சியில் இருக்கும் எழுத்தாளர்கள் இங்கே ஒன்றிரண்டு பேரைத் தவிர யாரும் இல்லை.  அவர்களும் தங்கள் படைப்புகளில் கட்சியைக் கொண்டு வருவது இல்லை. 

கடைசியாக, உண்மை என்றால் என்ன?  பொய் என்றால் என்ன?  என்னுடைய உண்மை உங்களுடைய பொய்.  உண்மை என்று எதுவும் absoluteஆக இல்லை.  உண்மை என்று சிலவற்றை நம்புகிறோம்.  பிறகு அது பொய் என்று ஆகிறது.  உலகம் தட்டை என்பது ஒரு காலத்திய உண்மை.  பிறகு அது பொய் ஆகி விடவில்லையா?

ஆனால் ஒரு விஷயம்.  உங்களுக்கு சில எழுத்தாளர்களைப் பிடிக்கலாம்.  சிலரைப் பிடிக்காமல் போகலாம்.  அதில் தவறே இல்லை.