ஔரங்ஸேப் – சில கேள்விகள்

நான் அத்தனை புத்திசாலி அல்ல.  என் மூளையில் எந்த விஷயமும் சட்டென்று பதிந்து விடாது.  மொழிகளைக் கற்றுக் கொள்வதிலும் பூஜ்யம்.  தமிழ் மட்டும் விதிவிலக்கு.  வாசிக்கும் வேகமோ ரொம்பக் கம்மி.  உங்களுக்கு ஒரு புத்தகத்தைப் படிக்க மூன்று நாள் ஆகும் என்றால் எனக்குப் பன்னிரண்டு நாள் ஆகும்.  இதனாலேயே நான் எதிலும் அதிக உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கிறது.  இதையெல்லாம் தன்னடக்கமாகச் சொல்லவில்லை.  என் உயரம் 5.5 என்பதைப் போல் சொல்கிறேன்.  6.2 ஆக இருந்திருந்தால் ஆகாயத்தில் பறப்பேன்.  ஆனால், 5.5 என்பதற்காக அழவா முடியும்?  அந்த மாதிரிதான்.  இருப்பதை வைத்துக் கொண்டு ஓட வேண்டியதுதான்.  பந்தயத்தில் சேராமல் தனியாக ஓடினால் தாழ்வு மனப்பான்மையிலிருந்து தப்பலாம். 

என் வாழ்வில் ஔரங்ஸேப் நாவலுக்குப் படித்த நூல்களின் எண்ணிக்கைதான் அதிகம்.  இரவு பகலாகப் படிப்பு.  கூட இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் அவந்திகாவே மிரண்டு விட்டாள்.  அன்பு மிகுதியால் நாவலை நிறுத்தி விடு என்றும் அறிவுரை கூறுவாள்.  எனக்கும் சமீபத்தில் நிறுத்தி விடலாம் என்றே தோன்றியது.  நிறுத்தி விட்டு, முடிக்க வேண்டியதை எழுதி முடித்து புத்தகமாகப் பதிப்பகத்துக்குக் கொடுத்து விடலாம்.  காரணம், அதிக உழைப்பைக் கோருவதால் அல்ல.  யாரைக் கேட்டாலும் படிக்கவில்லை என்கிறார்கள்.  என் ஆருயிர் நண்பர்களைக் கேட்டால், 35, 45, அப்பப்போ, 12 என்றெல்லாம் சொல்லி மன உளைச்சல் தருகிறார்கள்.  மேலே உள்ள எண்ணிக்கை அத்தியாயங்களின் எண்ணிக்கை.  நான் எழுதி முடித்திருப்பது 106 அத்தியாயம்.  இவர்கள் படித்திருப்பது 35, 45, அப்பப்போ, 12.  டார்ச்சர் கோவிந்தன் போன்றவர்கள் படிக்கவே இல்லை.  பலரும் புத்தகமாக வந்த பிறகு படிக்கப் போகிறார்களாம்.

மை காட், புத்தகமாக வரும்போது நாவல் வேறு வடிவத்தில் இருக்கும், இப்படி இருக்காது என்று சொன்னாலும் கவலையில்லை.  இப்போது பிஞ்ஜில் இருப்பது drought பியர்.  புத்தகமாக வருவது processed பியர். 

நிறுத்தி விடலாமா என்று யோசித்ததற்கு இன்னொரு காரணம், பிஞ்ஜில் ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை வாசகர்களெல்லாம் படை படையாக ஔரங்ஸேபைப் படித்து விட்டு த்ராபை த்ராபை என்று திட்டுகிறார்கள்.  அதனால்தான் நிறுத்தி விட்டு புத்தகமாக முடித்துக் கொடுத்து விடலாமா என யோசித்தேன்.

இந்த நிலையில் கருந்தேள் ராஜேஷ் போனில் அழைத்தார்.  வாசகசாலை பதிப்பகத்திலிருந்து ஔரங்ஸேப் பற்றி அவர்களின் புரவி பத்திரிகைக்கு ஒரு பேட்டி கேட்கிறார்கள் என்றார்.  சம்மதம் சொன்னேன். 

நேற்று கேள்விகள் வந்தன. 

ஔரங்ஸேப் இன்னும் ஒரு நூறு அத்தியாயம் எழுதலாம் என்ற அளவுக்குத் தெம்பு வந்து விட்டது.  இதை விட ஒரு எழுத்தாளனுக்கு வேறு என்ன வேண்டும்? 

அப்படியே அந்த நாவலைக் கரைத்துக் குடித்திருக்கிறார்கள்.  என்ன மாதிரி கேள்விகள் தெரியுமா?  கேள்விகளை உருவாக்கியவர்கள் மூவர்.  வாசகசாலை கார்த்திகேயன், வளன் அரசு, நிர்மல்.  வளனும் நிர்மலும் என் வளர்ப்புப் பிள்ளைகள்.  கார்த்திகேயன் என்னிடம் கற்று வெளியில் சுதந்திரமாகச் சென்றவர். 

இந்த மூவருக்கும் என் சலூட்.  கேள்விகளும் பதிலும் புரவி இதழில் வரும். 

***

சந்தா/நன்கொடை சம்பந்தமாக இப்போது Razorpay என்ற ஏற்பாட்டின் மூலம் அனுப்புவது சுலபமாகி விட்டதால் இங்கே என் வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுப்பதில்லை. ஏதாவது விவரம் தேவையெனில் எனக்கு எழுதலாம்.

charu.nivedita.india@gmail.com