எழுத்தாளனைச் சந்தித்தல் (2)

அன்பரே, நான் ஜக்கியை விடப் பெரிய ஆள்.  நான் சொல்லவில்லை.  மஹா பெரியவர் சொல்கிறார்.  ஆன்மீகவாதிகளை விட எழுத்தாளர்களும் கவிகளும்தான் பெரியவர்கள் என்கிறார் அந்த ஞானி.  ஒரு மொழியையும், கலாச்சாரத்தையும், நிலத்தின் அடையாளத்தையும் காப்பாற்றுபவர்கள் எழுத்தாளர்களே என்கிறார் அவர்.

இப்படி நான் எழுதியிருந்தேன். இதற்கு முன்பு எழுதியிருந்த ஒரு சின்ன சம்பவத்தை இங்கே மீண்டும் எழுதுகிறேன்.

அவர் ஒரு ஜோதிடர். தனக்கு வந்த பணத்தை மட்டுமே வைத்து ஒரு கோவிலே கட்டியிருக்கிறார். வசூலித்த பணம் அல்ல. தன் ஜோதிடத்தால் சம்பாதித்தது. முதலமைச்சரிலிருந்து மத்திய அமைச்சர் வரை அவரிடம் வந்து செல்பவர்கள். முதலமைச்சர்கள் பகுத்தறிவுவாதிகளாயிற்றே, எப்படி என்று நீங்கள் என்னைக் கேட்கக் கூடாது. அவர்களின் மனைவி அப்படி பகுத்தறிவுவாதியாக இல்லாமல் இருக்கலாம் அல்லவா?

ஒரு நண்பரோடு அவரைக் காண சென்றிருந்தேன். வயது எண்பதுக்கு மேல் இருக்கும். மலையாளி. உங்கள் தந்தை விரைவில் மத்திய அமைச்சராவார் என்று என் நண்பரிடம் சொன்னார் ஜோதிடர். ஜோதிடர் என் நண்பரின் குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர்.

அவர் சொன்னது போலவே நண்பரின் தந்தையும் விரைவில் மத்திய அமைச்சரானார்.

எனக்கு சொல்லி முடித்ததும் எழுந்து வெளியே கேட் வரை வந்து வழியனுப்பினார். அப்போது என் நண்பர் சொன்னார், என் தந்தைக்காகக் கூட அவர் எழுந்து வெளியே வந்ததில்லை. ஆனால் உங்களுக்காக எழுந்து இத்தனை தூரம் வந்திருக்கிறார்.

ஒரு ஆண்டு சென்று மீண்டும் அவரை சந்தித்தேன். கிளம்பும் போது மீண்டும் முன் போலவே எழுந்து வெளியே வந்தார். மிகவும் மூத்தவர் என்பதால் வேண்டாங்க என்று மறுத்தேன்.

இந்த மரியாதை உங்களிடம் இருக்கும் சரஸ்வதிக்கானது, உங்களை நான் என் அறையோடு வழியனுப்பினால் அது அந்த சரஸ்வதியை அவமதித்ததாகி விடும் என்றார்.

எல்லா ஆன்மீகவாதிகளை விடவும் சரஸ்வதி பெரியவள். கீழே மஹா பெரியவர் அருளியுள்ள வாக்கியங்களைப் படியுங்கள், தெரியும். ஒரு வார்த்தை கூட மாற்றாமல் அப்படியே மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

“ஒரு தேசம் என்று இருந்தால் அதில் நல்லவனும் இருப்பான், கெட்டவனும் இருப்பான். திருடன், பொய்யன், மோசக்காரன் எல்லாரும் இருப்பான்.  இருந்தாலும் ‘இந்த தேசத்தில் பண்பு இருக்கிறது, இந்த தேசம் பிழைத்துக் கொள்ளும்’ என்று தெரிந்து கொள்வது எப்படி?  ஒரு நோயாளிக்குப் பல கோளாறுகள் இருந்தாலும் டாக்டர் இருதயத்தைச் சோதித்து விட்டு, இருதயம் நன்றாக இருக்கிறது; ஆகவே பயமில்லை என்கிறார் அல்லவா? அதேபோல் ஒரு தேசத்தில் கோளாறுகள் இருந்தாலும் அதன் பண்பாட்டை உரைத்துப் பார்க்க ஒரு இருதய ஸ்தானம் இருக்கிறதா? இருக்கிறது.  ஒரு தேசத்தின் பண்பு உயர்ந்திருக்கிறது; மனோபாவங்கள் உயர்ந்திருக்கின்றன; ஆங்காங்கே அழுக்குகள் இருந்தாலும் மொத்தத்தில் அது சுத்தமாக இருக்கிறது என்பதை உரைத்துப் பார்ப்பதற்கு அந்த தேசத்து மகாகவிகளின் (இலக்கியக் கர்த்தாக்களின்) வாக்கே ஆதாரமாகும்.  ஒரு தேசத்தின் பண்புக்கு இதயமாக அல்லது உரைகல்லாக இருப்பது அந்த நாட்டு மகாகவியின் வாக்குதான்.”
பாருங்கள், மகாகவி என்று சொல்லிவிட்டு நமக்கு நன்றாகப் புரிய வேண்டும் என்பதற்காக ‘இலக்கியக் கர்த்தா’ என்று வேறு சொல்கிறார் மகாப் பெரியவர்.  அடுத்து, ஒரு இலக்கியவாதி எப்படி இருப்பான் என்று வர்ணிக்கிறார்.
“தனது என்று எதையும் பிடித்துக் கொள்ளாமல் விஷயத்தை உள்ளபடி பார்த்து objective-ஆக, பேதமில்லாமல் நடுநிலையோடு, சர்வ சுதந்திரமாக, திறந்த மனதோடு உள்ளதை உள்ளபடி சொல்வான்.  உலகம் முழுவதையும் இப்படியே படம் பிடித்துக் காட்டுவான்.  அதை உலகம் எடுத்துக் கொண்டாலும் சரி, தள்ளி விட்டாலும் சரி, அதைப் பற்றியும் இலக்கியக் கர்த்தாவுக்குக் கவலை இல்லை.  பயனை எதிர்பார்க்காதவன் அவன்.  ஒரு விஷயம் ஒரு நாட்டின் பண்புக்கு உகந்ததுதான் என்று அறிய வேண்டுமானால் அந்தப் பிரமாண வாக்கு (authority) அந்தத் தேசத்தின்மகாகவியின் வாக்குதான்.”

மேலே மஹாப் பெரியவர் ஒரு எழுத்தாளனுக்கு அடையாளமாக எதையெல்லாம் சொல்லியிருக்கிறாரோ அதன்படியே 69 வயது வரை வாழ்ந்திருக்கிறேன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். இது போதும் எனக்கு.