சுய வரலாற்று ஆவணப்படம்

மேற்கு நாடுகளின் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் தொண்ணூறு வயதைத் தாண்டியும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.  நிகோனார் பார்ரா 104 வயது வரை வாழ்ந்தார்.  வாழ்வது மட்டுமல்ல, அத்தனை வயது வரை மதுவும் சுருட்டுமாக ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.  இந்தியாவில் அப்படி இல்லை.  சென்ற வாரம் ஒரு வங்காள எழுத்தாளரை சந்திக்க நினைத்து கொல்கத்தா செல்லலாம் எனத் திட்டமிட்டேன்.  அவர் எழுத்து அச்சு அசலாக என் எழுத்தைப் போலவே இருந்ததால் அவரைச் சந்திக்க ஆர்வம் கொண்டேன்.  அவரது மொழிபெயர்ப்பாளரைக் கேட்டபோது அவர் பேசவும் முடியாமல் நோயில் விழுந்திருப்பதாகத் தெரிந்தது.  அவர் வயது 79.  சுபிமல் மிஸ்ரா.  இந்தியாவில் 79 எல்லாம் 99 மாதிரி இருக்கிறது.  நம்முடைய வாழ்க்கை முறையில்தான் ஏதோ கோளாறு இருப்பதாகத் தோன்றுகிறது.

நான் ஒருபோதும் மரணத்துக்கு அஞ்சியதில்லை.  ஆனால் இப்போது அசோகா, தியாகராஜா, 1857, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற நாவல்களை எழுத வேண்டியிருப்பதால் கடவுளிடம் அதற்கு மட்டும் அனுமதி கேட்டிருக்கிறேன்.  அதேபோல் ஒரு நிமிடத்தையும் வீணடிக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டுடனும் இருக்கிறேன்.  நிகோஸ் கஸான்ஸாகிஸ் 74 வயது வரை வாழ்ந்தார்.  74ஆவது வயதில் உடல்நலம் அவர் உயிருக்குக் கெடு விதித்து விட்டது.  ஆறு மாதம் என்பது கெடு.  ஆனால் கஸான்ஸாகிஸ் அப்போது ஒரு நாவலை எழுதிக் கொண்டிருந்தார்.  அதை முடிக்க ஒரு வருடம் தேவை.  மருத்துவரின் கெடுவோ ஆறு மாதம்.  அப்போது அவர் தன் மனைவியிடம் சொல்வாராம், தெருவில் போய் நின்று கொண்டு ஒவ்வொருவரிடமும் அவர்களது ஆயுளில் ஒரே ஒரு நாளை யாசிக்க வேண்டும் போல் இருக்கிறது என்று.  இயற்கையின் கருணையில் அவர் அந்த நாவலை முடித்து விட்டே மறைந்தார். 

இயற்கை எப்படி எனக்கு விதித்திருக்கிறது என்று தெரியவில்லை.  அதற்குள் என் வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஆவணப் படம் எடுத்து விட வேண்டும் என்பது என் ஆசை.  கடந்த ஐந்து ஆண்டுகளாகவே அந்த எண்ணத்தில் இருந்தேன்.  அதற்கான ஏற்பாடுகளைக் கூட செய்தோம்.  நாகூர் மற்றும் புதுச்சேரியில் சில படப்பிடிப்புகளையும் நடத்தினோம்.  ஆனால் பணம் தேவைப்பட்டதால் அந்த வேலை அப்படியே நின்று விட்டது. 

இப்போது அந்த ஆவணப் படம் தயாரிப்பதற்கான ஒரு தேவை எழுந்துள்ளது.   எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்படங்கள் தமிழில் போதுமான அளவுக்கு இல்லை.  போதுமான அளவு என்று கூட சொல்ல முடியாது.  ஒன்றிரண்டு படங்கள்தான் உள்ளன.   அதிலும் ஒரு பிரமுகர் தோன்றி அந்த எழுத்தாளர் பற்றியும் தன்னைப் பற்றியும் பதினைந்து நிமிடம் அறுப்பார்.  இப்படித்தான் இங்கே ஆவணப் படங்கள் உள்ளன. 

என்னைப் பற்றிய ஆவணப் படத்தை சீலே இல்லாமல் எடுக்க முடியுமா?  பாரிஸ் இல்லாமல் எடுக்க முடியுமா?  நாகூர், தஞ்சாவூர், சிங்கப்பூர், தில்லி, சென்னை…

சீலே சென்று வர ஒருவருக்கு டிக்கட் இரண்டரை லட்சம்.  இரண்டு பேருக்கு டிக்கட் மட்டுமே ஐந்து லட்சம். 

ஆவணப் படத்துக்கான மொத்த பட்ஜெட் ஐம்பது லட்சம்.  படம் உலகத் தரமாக இருக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம்.  வாழ்க்கை வரலாற்று ஆவணப் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறாற்போல் ஒரு முன்மாதிரிப் படமாக இருக்கும். 

மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் சீலே சென்ற போது பொலிவியாவின் உயரம் காரணமாக என் உடல்நிலை சொதப்பி விட்டதால் பயணக் குழுவிலிருந்து பிரிந்து நான் மட்டும் சீலே போய் விட்டேன்.  அதனால் திட்டமிட்ட ஆறு லட்சத்தைத் தாண்டி இன்னொரு ஆறு லட்சம் ஆகி விட்டது.  அதை ஒரே வாரத்தில் அனுப்பி வைத்தது என் வாசகர்கள்தான்.  அவர்களில் பலர் எனக்கு முன்பின் அறிமுகமே இல்லாதவர்கள்.   பணம் அனுப்பிய பிறகும் அவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை.  ஒரே வாரத்தில் ஆறு லட்சம் ரூபாய் அனுப்பினார்கள். 

இப்போது என் நண்பர்களுக்கும் என் வாசகர்களுக்கும் இந்த வேண்டுகோளை வைக்கிறேன்.  ஆவணப் படத்துக்கான உங்கள் பங்களிப்பு தேவை.  இரண்டு லட்சமும் அதற்கு மேலும் கொடுப்பவர்களின் பெயர் தயாரிப்பாளர்கள் என்ற பிரிவில் டைட்டில் கார்டில் சேர்க்கப்படும்.  பணம் அனுப்புபவர்கள் ஆவணப்படம் என்று குறிப்பிட்டால் கணக்கு வைத்துக் கொள்ள வசதியாக இருக்கும்.  லட்சங்கள் அனுப்ப முடியாதவர்கள் ஆயிரங்களும் அனுப்பலாம்.  அப்படித்தான் என் முந்தைய சீலே பயணம் நிகழ்ந்தது.   சீலே ஏன் என்றால், உங்கள் அனைவருக்கும் இளையராஜா எப்படியோ அப்படித்தான் எனக்கு விக்தொர் ஹாரா (Victor Jara). ஆக, விக்தொர் ஹாரா ஸ்டேடியம் இல்லாமல் என் வாழ்க்கையைப் பதிவு செய்தால் அது முழுமையடையாது. 

இதை என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோளாகக் கருதி செயல்படுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.  படம் செப்டம்பரில் முடிந்தால் நலம் என்று திட்டமிட்டிருக்கிறோம். 

charu.nivedita.india@gmail.com