பாண்டிச்சேரி சந்திப்பு

என்னைச் சந்திக்க விரும்பும் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் வருகின்ற பதினேழாம் தேதி பாண்டிச்சேரி ஆரோவில்லில் உள்ள காட்டு இல்லத்தில் சந்திக்கலாம். அடர்ந்த காடு. அங்கிருந்து முக்கால் கிலோமீட்டர் நடந்தால் வீதியும் கடைத்தெருவும் வந்து விடும். காட்டு இல்லத்தின் அருகிலேயே பல தங்கும் விடுதிகளும் உள்ளன.

இரவு தங்குவதற்கு நீங்களேதான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். வினித்திடம் கேட்டால் விவரம் சொல்வார். பகலில் மது அருந்தக் கூடாது. இரவில் அருந்துபவர்களும் என்னோடு உரையாடுவது சாத்தியம் இல்லை. சென்ற முறை அப்படி மது அருந்திய ஒருவர் காட்டிலேயே தூங்கி விட்டார். பிறகு அந்தக் காட்டு இல்லத்தின் முதலாளிதான் அவரைத் தூக்கிக் கொண்டு வந்து இல்லத்தில் போட்டிருக்கிறார். அப்படித் தூக்கிக் கொண்டு வந்தவரை அந்த அன்பர் திட்டியிருக்கிறார்.

பகல் முழுவதும் என்னோடு இருக்கலாம். பேசலாம்.

ஏற்கனவே வந்த நண்பர்கள் வர வேண்டாம். ஏனென்றால், என் எழுத்தும் செயல்பாடுகளும் ஓர் இயக்கம். நேரில் சந்தித்து விட்டு, பிறகு தொடர்பே இல்லாமல் கம்மென்று இருந்து விட்டால் நம் செயல்பாடுகளை எப்படி மேற்கொண்டு எடுத்துக் கொண்டு போவது? எல்லா வேலைகளையும் சீனியும் வினித்துமே செய்ய வேண்டும் என்றால், அது முடிகின்ற காரியமா? எனக்கு செயல் திறன் மிக்க இளைஞர்கள் தேவை. ஒன்றுமில்லை, சென்ற முறை எல்லோரும் இல்லத்தை விட்டுக் காலி செய்யும் போது சமையலறையில் ஒரு வண்டி சமையல் பாத்திரங்களும் சாப்பிட்ட தட்டுகளும் கிடந்தன. சீனியோ வினித்தோதான் சுத்தப்படுத்தினார்கள். எல்லொருக்குமே அதனால் ஒரு மணி நேரம் தாமதம். நம் வீட்டு வேலையை நாம்தானே எடுத்துக் கட்டி செய்ய வேண்டும்? காலையும் மாலையும் நான் செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றினேன். காய்ந்து கிடக்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று ஏன் யாருக்குமே தோன்ற மாட்டேன் என்கிறது? வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்றால் அது வெறும் வார்த்தைகளா?

அடுத்த உயிரின் வலியை நீங்கள் உணர வேண்டும். செடி வாடியிருந்தால் உங்கள் மனம் வாட வேண்டும். உடனடியாக செயலில் இறங்க வேண்டும்.

அதன் பிறகு அங்கே தரையில் கிடந்த பத்து ஐம்பது சிகரெட் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துக் குப்பையில் போட்டேன். சந்திப்புக்கு வரும் நண்பர்கள் யாரும் புகைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஏனென்றால், அது ஒரு திறந்த வெளி. புகை ஒன்றும் சுற்றிக் கொண்டு நிற்காது. ஆனால் புகைத்து முடித்தவுடன் துண்டுகளை அணைத்து அதற்கென்று உள்ள இடத்தில் போட வேண்டும். என்னைப் படித்து இதைக் கூட கற்றுக் கொள்ளவில்லை என்றால் அப்புறம் நான் என்ன சொல்வது?

இல்லத்தில் இருக்கும் இரண்டு நாய்களும் மனிதர்களை ஒன்றுமே செய்யாது. பயம் வேண்டாம்.

ஏற்கனவே வந்த நண்பர்கள் யாரும் வர விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

வினித்தின் தொலைபேசி எண்: 84384 81241

(வினித் பேசும் போது அதட்டுவது போல் இருக்கும். அஞ்ச வேண்டாம். அவர் பேச்சே அப்படித்தான். மற்றபடி ரொம்பவும் நல்ல பையன்.)