ஒரு சனிக்கிழமை இரவு

வினித் ஒரு டீட்டோட்டலர்.  மது அருந்தியதே இல்லை.  அருந்தப் போவதாகவும் இல்லை.   ஆனால் அவரை வாரம் ஒருமுறையாவது எங்காவது ஒரு பப்பில் பார்க்கலாம்.  ஏதாவது ஒரு குளிர்பானத்தை அருந்தி விட்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பார்.  டான்ஸ் அவருக்குப் பிடிக்கும்.  டான்ஸ் ஆட பப்தான் ஒரே இடம் என்பதால் அங்கே போகிறார். 

குடி, பப் இரண்டின் தொடர்பும் விடுபட்டுப் போனதால் வினித் பப்புக்குப் போகலாம் என்றதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. சென்ற சனிக்கிழமை.  டென் டௌனிங்கில் ஆண்கள் மட்டும் என்றால் விட மாட்டார்கள்.  என்னை அவர்களுக்கு நன்கு தெரியும் என்பதால் என்னையும் வினித்தையும் வேண்டுமானால் அனுமதிக்கலாம்.  ஆனால் நாங்கள் மூன்று பேர், மார்க்ஸையும் சேர்த்து.  டென் டி முதலாளியிடம் ஃபோன் பண்ணி விட்டுப் போனால் விடுவார்கள்.   ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது.  டென் டௌனிங்கில் டான்ஸ் ஃப்ளோர் ரொம்பவும் சிறியது.  நாலைந்து பேர்தான் ஆடலாம்.  நேற்று சனிக்கிழமை என்பதால் பெண்கள் கூட்டம் நிரம்பி வழியும்.  (சனிக்கிழமை அங்கே பெண்களுக்கு அரைக் காசுதான்.  அதை எப்படிச் சொல்வது?  ஆயிரம் ரூபாய்க்குக் குடித்தால் ஐநூறுதான் வாங்குவார்கள்.  அதைத்தான் அரைக் காசு என்றேன்.) 

அதனால் டென் டௌனிங் வேண்டாம் என்று முடிவெடுத்தோம்.  சீனிக்கு ஃபோன் போட்டு பிரச்சினையை சொன்னேன்.  தி. நகரில் உள்ள டைம் ஸ்கொயர் ரெஸ்டோபாரை சிபாரிசு செய்தார்.

சென்னை நரகத்தில் எந்த பப்பாக இருந்தாலும் ஷூ அணிந்திருக்க வேண்டும்.  ஷூ இல்லையேல் அனுமதி இல்லை.  பெண்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம்.  அவர்களுக்கு எந்த விதிமுறையும் கிடையாது. 

மார்க்ஸை ஷூ அணிந்து வர வேண்டி சொல்லச் சொன்னேன்.  பார்த்தால் அதில் ஒரு சிக்கல்.  மார்க்ஸிடம் ஷூ இல்லையாம்.  அடக் கடவுளே, நாற்பது ஆண்டுகள் ஃபிஸிக்ஸ் ப்ரஃபஸராக இருந்தவரிடம் ஷூ இல்லையா?  முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிறப்பிரிகை கருத்தரங்குகளுக்கே ஷூவோடு வருபவர் ஆயிற்றே? 

வினித்துக்கும் மார்க்ஸுக்கும் நடந்த ஷூ பற்றிய நீண்ட உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.  கடைசியில் வினித் ”ஷூ இல்லேன்னா வாங்கிப் போட்டுக்கிட்டு வாங்க மார்க்ஸ்” என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார். 

இரவு எட்டு மணிக்குப் போனோம்.  டைம்ஸ்கொயர் ரெஸ்டோபார்.  மும்பை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களின் பப்களோடு ஒப்பிட்டால் சென்னை பப் எல்லாம் மரண மொக்கை. 

பெண் துணை இல்லாமல் போனால் ஆணுக்கு ஆயிரம் ரூபாய் என்று வசூலித்தார்கள்.  ஆனால் உள்ளே ஆகும் செலவில் கழித்துக் கொண்டார்கள்.  வினித் மட்டும் பாவம்.  இருநூறு ரூபாய்க்கு ஜூஸ் குடித்தார்.  அவ்வளவுதான்.

ஆங், சொல்ல மறந்து விட்டேன்.  மார்க்ஸ் வந்த போது முதல் வேலையாக அவர் காலைத்தான் கவனித்தேன்.  ஷூ அணிந்திருந்தார். ஆனால் சட்டை பாக்கெட்டில் பேனா சொருகப்பட்டிருந்த்து.  முகமூடித் துணியும் பாக்கட்டிலிருந்து நீட்டிக் கொண்டிருந்தது.  சட்டையை பேண்ட்டுக்குள் விட்டு பெல்ட் போட்டிருந்தார்.  ஏற்கனவே நான் பயந்தபடி டை கட்டியிருக்கவில்லை என்பதால் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தேன்.  அவரைப் பார்த்ததுமே ஓடி வந்த வினித் உடனடியாக அவர் பாக்கட்டிலிருந்த பேனாவையும் முகமூடித் துணியையும் எடுத்துத் தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.     

பப்பில் அமர்க்களமான இசை.  கடுமையான மெட்டல் ராக்.  ரசித்துக் கேட்டேன்.  ரசித்து ஆடினேன்.  கொஞ்ச நேரத்தில்தான் கவனித்தேன்.  எல்லாமே ராக்தான்.  ஹிந்திப் பாடல்கள் கூட ஒன்றிரண்டுதான்.  தமிழோ சுத்தமாக இல்லை. 

எனக்குப் பிடித்த பறக்கப் பறக்கத் துடிக்குதே (திருச்சிற்றம்பலம்) பாடலைப் போடச் சொன்னேன். 

ஐயோ, தமிழ்ப் பாடல்களே போடுவதில்லை சார் என்றார் டிஜே.

ஏங்க, இதெல்லாம் திருமா, சீமான் போன்றவர்களுக்குத் தெரிந்தால் என்ன ஆகும் தெரியுமா?

ஐயோ, வேண்டாம் சார்.  தமிழ்ப் பாட்டு போட்டால் எல்லோரும் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுலேங்கிற பாட்டையே திரும்பத் திரும்பப் போட சொல்றாங்க சார்.  பேஜாராப் போகுது.  ஒரு கட்டத்துல எளவட்டங்கள்ளாம் வர்றதே கொறய ஆரமிச்சிருச்சி.  அந்தப் பாட்டுக்கு எப்டி சார் டான்ஸ் ஆட்றதுங்கிறாங்க.  அப்றம்தான் தமிழ்ப் பாட்டை நிறுத்தினோம்.

ஏன் ப்ரோ, ஸ்லோ மோஷன்ல ஆடலாமே?  ஒரு நூற்றாண்டின் பாடல்னு எல்லாரும் புகழ்றாங்களே? 

கரெக்ட்தான் சார்.  ஆனா போதைல இருக்கிறதால அந்தப் பாட்டைக் கேட்டா – அதிலயும் அந்த ‘நேசம் பொறந்தாலே ஏதோ ஒடம்பெல்லாம் சிலுக்குது’ங்கிற வரி வந்தாப் போதும், ஒடனே உணர்ச்சி வசப்பட்டு விக்கி விக்கி அழ ஆரமிச்சிர்றாங்க சார்.   

ஓ, இப்படியும் ஒரு பிரச்சினை இருக்கிறதா என்று மெட்டல் ம்யூசிக்கில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தேன்.  

ஆடும் போது பல விஷயங்களை கவனிக்க முடிந்தது. அங்கே மொத்தம் ஐம்பது பேர் இருந்தார்கள்.  Floating crowd தான் என்றாலும் எப்போதுமே அந்த ஐம்பதில் ஐந்து பேர்தான் பெண்கள்.  அதற்கு மேல் இல்லை.  அந்த ஐந்து பேரும் மினி கவ்ன் மாதிரி ஒரு ஆடையை அணிந்திருந்தார்கள்.  கிட்டத்தட்ட பனியன் மாதிரி ஒரு ஆடை.  கீழே எதுவும் இல்லை.  அதிலும் ஒரு பெண் போதை அதிகமாகி எல்லா ஆண்களோடும் ஆட விரும்பி காளி ஆட்டம் போட்டாள்.  நாற்பத்தைந்து ஆண்களில் பத்து இளைஞர்களுக்கும் எனக்கும் மட்டுமே துணிச்சல் இருந்ததால் நாங்கள் மட்டுமே ஆடிக் கொண்டிருந்தோம். மற்ற ஆடவர் யாவரும் வேடிக்கை பார்த்தபடி குடித்துக் கொண்டிருந்தார்கள்.  போதை அதிகமான பெண் எனக்குப் பக்கத்தில் ஆடிக் கொண்டிருந்ததால் அடிக்கடி என் மீதும் வினித் மீதும் தாவ முயற்சித்தவளை அவளுடைய பாய் ஃப்ரெண்ட் மிகுந்த சிரமத்துடன் கண்ட்ரோல் பண்ணிக் கொண்டிருந்தான்.  மதுரைப் பிராந்தியத்தில் காளை அடக்கும் விளையாட்டு நடக்குமே அந்த மாதிரி இருந்தது. 

இப்போது நான் சொல்வதை நீங்கள் யாரும் நம்ப மாட்டீர்கள்.  டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் என்னை நெருங்கி “நீங்கள் குடித்ததற்கு நாங்கள்தான் பணம் தருவோம்” என்றார்கள். 

அதி ஆச்சரியத்துடன் ஏன் என்றேன். 

மார்க்ஸ் எங்கள் ஆசான்.  நீங்கள் எங்கள் சிநேகிதர். 

சொல்லி விட்டு எக்ஸைல் நாவலிலிருந்து ஒரு பகுதியை விவரிக்க ஆரம்பித்தார்கள் அந்த இளைஞர்கள்.  இலங்கைத் தமிழர்கள்.  சிங்கப்பூர் வாசம். ஒருவர் பெயர் மயூரன்.

பிறகு ரெஸ்ட் ரூமில் போய் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் நின்ற வேறு ஒரு இளைஞர் “தெரியும் சாரு, தெரியும், நான் உங்கள் தீவிர ரசிகன்” என்று ஆங்கிலத்தில் சொன்னார். 

ஓ, நாமும் ஒரு ஆள்தான் போலிருக்கிறது என்று உணர்ந்த தருணம் அது. 

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனித்தேன்.  ஆடிக் கொண்டிருந்த அத்தனை ஆண்களும் என்னோடு கொஞ்ச நேரம் ஆட வேண்டும் என்று கேட்டதுதான்.  அதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.  பிற்பாடு அது பற்றி டார்ச்சர் கோவிந்தனிடம் ஆச்சரியப்பட்ட போது, “நீங்கள்தானே ஸ்டைலிஷாக இருக்கிறீர்கள், அதனால்தான் கேட்கிறார்கள்” என்றார். ஆ, பயங்கரமான cynic என்று உறுதி கொண்டிருந்த ஒருவர் வாயிலிருந்து இப்படி ஒரு நல்ல வார்த்தையா?

என்னவோ தெரியவில்லை.  கோவாவின் பிரபலமான ஒரு பப்பிலும் இப்படியே நடந்தது.  இளைஞர் பலரும் என்னோடு ஆட வந்தார்கள்.  ஆனால் அப்போது அதற்கு நான் ஒரு காரணம் கற்பித்துக் கொண்டேன்.  என் அருகில் என் நண்பரின் அழகான தோழி ஒருவர் ஆடிக் கொண்டிருந்ததால் அந்தப் பெண்ணுக்காகத்தான் அவர்கள் என்னோடு ஆட விரும்புகிறார்கள் என்று நினைத்தேன்.  ஆனால் டைம்ஸ்கொயர் ரெஸ்டோபாரில் என்னோடு வினித் மட்டுமே ஆடிக் கொண்டிருந்த போதும் பல இளைஞர்கள் – அவர்களுக்கு நான் யார் என்று தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை – என்னோடு வந்து வந்து ஆடியதற்கு எனக்கு உண்மையிலேயே காரணம் தெரியவில்லை.

ஒன்றரை மணி வரை பப் இருக்கும் என்றார்கள்.  நாங்கள் பதினொன்றரைக்குக் கிளம்பி விட்டோம்.  பூனைகளுக்கு சாப்பாடு போட வேண்டும் எனக்கு.  நாங்கள் கிளம்பும்போதும் திமிறிக் கொண்டிருந்த அந்த பனியன்காரியை அவள் பாய் ஃப்ரெண்ட் பிடித்து அமுக்குவதற்கு மிக சிரமத்துடன் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தான்.

வினித்தை நினைத்து பலவித யோசனைகள் கிளர்ந்தன.  ஒரு இருபத்தைந்து வயது இளைஞன் குடி, குட்டி, புகை என்று எதுவும் இல்லாமல் எழுபது மற்றும் எழுபத்தைந்து வயது ஆன இரண்டு முதியவர்களுடன் பப்புக்குப் போகிறான்.  கலியில் என்னென்னவோ நடக்கிறது!