யாதும் ஊரே யாவரும் கேளிர்!

மீள் பிரசுரம்

ஜுனியர் விகடன்

ஜூலை 5, 2017


யாதும் ஊரே யாவரும் கேளிர்!

இது எல்லோருக்கும் தெரிந்த வரி தான். பரவலாக புழக்கத்தில் இருக்கிற வரியும் கூட. ஆனால், இந்த வரியைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறோமே ஒழிய அதன் உள்ளீடான பொருளை நாம் உணர்ந்ததில்லை. உண்மையில், அந்த வரியை முழுமையாக உள்வாங்கிக் கொண்டோமானால், நாட்டில் இருக்கிற பிரிவினைவாதம், குறுகிய மனோபாவம் எல்லாம் காணாமல் போய்விடும். வன்முறை இல்லாத சமூகமாக நம் சமூகம் மாறிவிடும். ஆனால், இதை நான் வலியுறுத்தினால் மொழிவிரோதி, தேசவிரோதி என்றெல்லாம் எனக்கு முத்திரை குத்தி விடுவார்கள். இப்போது இருக்கும் நம்பிக்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இந்த வரியும் அதன் உள்ளடக்கமும் முற்றிலும் நேர் விரோதமானது. 

நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது இந்த வரியைப் படித்தேன். அப்போது முதல் இந்த வரி ரத்தத்தைப் போல எனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. நான் பிறந்த ஊர், இந்து முஸ்லீம் கிறித்தவர்கள் என மூன்று சமூகத்தினரும் வாழும் ஊர். ஒரு சமூகம் அசைவம் சாப்பிடும். மற்றொரு சமூகம் அதை தீண்டத்தகாத ஒன்றாகப் பார்க்கும் . ஒரு சமூகம், தன் கடவுளைப் பெரிதென்று பேசும். இன்னொரு சமூகம் அதை மறுத்து தங்களுடைய கடவுள் தான் பெரிதென்று சொல்லும். இதுவெல்லாம் எனக்குள் ஏற்படுத்தியக் கேள்விகளுக்குப் பதிலாக இருந்தது இந்த வரி தான். கிருஷ்ணர் வாயைத் திறந்த போது இந்தப் பிரபஞ்சமே தெரிந்தது அல்லவா? அந்த மாதிரி இந்த ஒரு வரியில் எனக்கு உலகமே புலப்பட்டு விட்டது. மிகப்பெரிய தரிசனம் போல இருந்தது எனக்கு.

ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் புதியதொரு கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. தேசியவாதம் என்கிற நம்பிக்கையே மனித குலத்துக்கு எதிரானது என்ற கருத்தாக்கம் வலுத்து வருகிறது. தேசியவாதம் என்பது ஹிட்லர் போன்ற பாசிசவாதிகளைத் தான் உருவாக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்தியாவிலோ தேசியவாதம் என்பது போற்றுதலுக்கு உரியதாகக் கட்டமைக்கப்படுகிறது. 

ஆனால், இந்த சிந்தனையை எல்லாம் கடந்து, ‘இந்தப் பூவுலகில் இருக்கும் எல்லா ஊரும் என் ஊரே… எல்லா மக்களும் என் உறவுக்காரர்களே’ என்கிற ஒரு மனிதனின் சிந்தனை எவ்வளவு மகத்தானது. இந்த வரிக்குள்ளே எவ்வளவு பிரச்னைகளுக்குத் தீர்வு இருக்கிறது..! எல்லா ஊரும் என் ஊரே என்றால் பாகிஸ்தானோடு நமக்கு ஏன் விரோதம் வரப்போகிறது. அத்வானி எங்கே பிறந்தார், அந்த மண்ணில் தானே… ?

கணியன் பூங்குன்றனின் இந்த வரியை முழுமையாகப் புரிந்து கொண்டது காந்தி தான். அவர் கடைசி வரைக்கும் ‘எல்லா மதமும் என் மதம்… எல்லா ஊரும் என் ஊர்’ என்று தெளிவாக இருந்தார். மாட்டுக்கறி விஷயத்தில் கூட காந்தியின் கருத்து வித்தியாசமாக இருந்தது. ‘மாடு எனக்குத் தெய்வம் தான்… ஆனால், மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை சாப்பிடக்கூடாது என்று நான் சொல்லமாட்டேன்’ என்றார். இதன் விளைவு தான், ‘என் மதமே சிறந்தது’ என்று நம்பிய ஒருவனால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

பாரதியிடம் கூட நான் இப்படியான ஒரு பரந்த மனநிலையைப் பார்க்கவில்லை. ‘நாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்கிறார் அவர். இன்றைக்கும் இதை பலர் பேசிக்கொண்டு திரிகிறார்கள். பாரதி வாழ்ந்த காலத்தில் வேண்டுமானால் அது சரியாக இருந்திருக்கலாம். அந்தக் காலக்கட்டத்தில் தமிழ் நீசபாஷை என்று கருதப்பட்டது. அதனால் பாரதி அப்படிப் பாடினார். இன்று அது எப்படிப் பொருந்தும்? அரபி, பிரெஞ்சு, ஸ்பானிஷ் போன்ற மொழிகளும் மிகச்சிறந்த மொழிகள் தான். அரபி மொழி கேட்பதற்கு இசை மாதிரி இருக்கும். 

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரி எனக்குள் சிறு வயதிலேயே விழுந்ததால் தான் எல்லா மொழியும் என் மொழியே என்ற பரந்த எண்ணம் எனக்கு வந்தது. அதனால் தான் ’பிராந்தியவாதம்’ என்ற குறுகிய மனோபாவத்திலிருந்து என்னால் மீளமுடிந்தது. 

இந்த வரியை மேலும் ஆராய்ந்து உள்ளே நுழைந்தோம் என்றால், பல மனத்தடைகளில் இருந்து வெளியே வரலாம். என் சாதி தான் பெரிது என்ற எண்ணம் வராது. என் மதம் தான் சிறந்தது என்ற எண்ணம் வராது. 

பெரியாரோடு எனக்குப் பல முரண்பாடுகள் உண்டு. எல்லாவற்றையும் கடந்து, அவர் மீது பெரும் மதிப்பை உருவாக்கிய செய்தி ஒன்று உண்டு. அந்தச் செய்தி காந்தியோடும் ஒத்துப்போகும், கணியன் பூங்குன்றனோடும் ஒத்துப்போகும். ‘பாஷாபிமானம், தேசாபிமானம், குலாபிமானம் ஆகிய மூன்றும் கூடவே கூடாது…’ என்கிறார் பெரியார். ஆனால் பெரியாரிஸ்ட்டுகள் எல்லாம் தமிழ்த் தீவிரவாதிகளாக இருக்கிறார்கள். 

நம் நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்களை ஆதிக்கவாதிகள், எதேச்சதிகாரிகள் என்கிறோம். ஆனால் இன்னொரு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கொடி நாட்டும் தமிழ் மன்னர்களைப் பற்றி பெருமை பேசுகிறோம். வெள்ளைக்காரன் இங்கு வந்து நம்மை ஆதிக்கம் செய்தான். சோழன் கிழக்காசியா வரை சென்று அந்த நாடுகளைப் பிடித்தான். அவன் எதேச்சதிகாரவாதி என்றால் இவனும் எதேச்சதிகாரவாதி தானே. ஆனால் நாம் வெள்ளைக்காரனைத் திட்டுவோம். சோழர்களைக் கொண்டாடுவோம். 

பெரியார் இந்த விஷயத்தை எதிர்மறையாகச் சொல்கிறார். கணியன் பூங்குன்றன் நேர்மறையாகச் சொல்கிறார். 

ஒரு திரைப்பட விழாவில் நான் பார்த்த விபரீதம் இது: தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் போட்டார்கள். எல்லோரும் அவ்வளவு பக்தியாக எழுந்து நின்றார்கள். உலகத்தில் வேறெந்த சமூகமும் மொழிக்காக ஒரு வாழ்த்து இசைத்து, எழுந்து நின்று மரியாதை செலுத்துவதில்லை. இங்கு தான் இந்தக் கூத்தெல்லாம். தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்து நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் பேசிய எவரும் தமிழில் பேசவேயில்லை. ஒரு இளம் இசையமைப்பாளர்… அவர் வாயில் தமிழே வரவில்லை. இப்படித்தான் நம் செயல்பாடுகள் இருக்கின்றன. எதையுமே சிலையாக்கி வணங்கி விட்டு வாழ்க்கையில் எப்படி அதை தவிர்க்கிறோமோ, அதைப்போலவே, கணியன் பூங்குன்றனின் இந்த வரியைப் படித்துவிட்டுக் கடந்து விடுகிறோம். 

இன்று நடக்கிற அரசியல் செயல்பாடுகள், மதத் துவேஷங்களை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது கணியன் பூங்குன்றன் சொன்ன அந்த வரிகள் இன்னும் வீரியமாக உயிர் பெற வேண்டும் எனத் தோன்றுகிறது. அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக, பண்பாட்டு ரீதியாக இந்த வரியைக் கொண்டு செல்ல வேண்டும்.