எழுத்தைத் தவிர வேறேதும் செய்வதற்கில்லை…

நான் ஒரு துறவியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் யாரும் நம்புவதில்லை.  ஆனால் நான் நம்புகிறேன்.  அது மட்டும்தான் எனக்கு முக்கியம்.  நீங்களும் நம்புகிறாற்போல் ஒரு கதையை டிசம்பர் 18 அன்று உங்களுக்கு நான் சொல்லுகிறேன்.  2500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கதை.  இப்போதே சொன்னால் சுவாரசியம் போய் விடும்.

அதனால் எனக்கு தீபாவளி என்பதெல்லாம் எவ்விதத்திலும் அர்த்தமாவதில்லை.  நான் எப்போதுமே தீபாவளி கொண்டாடியதில்லை.  எப்போதுமே எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாடியதில்லை.  உணவின் மீது அதீத பிரியம் கொண்டவன் என்பதால் ரம்ஸான் என்றால் பிரியாணியும், பொங்கல் என்றால் பொங்கலும், தீபாவளி என்றால் முறுக்கும் அதிரசமும் சுழியமும் இன்னபிற ஐட்டங்களும் சாப்பிடப் பிரியப்படுவேன்.  இந்தக் காலத்தில் சென்னையில் யாருக்கும் சுழியம் செய்யத் தெரிவதில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன்.  மற்றபடி பட்டப்பாவிடமிருந்து பலகாரங்கள் வந்திருந்தன.  பத்து நாள் வைத்திருந்து உண்ணலாம்.  எல்லாமே தேவாமிர்தம்.  சுழியம் மட்டும் வரவில்லை.  எனக்குப் பிடித்த ஜாங்கிரியை சொல்ல மறந்து விட்டாள் அவந்திகா. 

நான் கொண்டாடும் ஒரே பண்டிகை என் பிறந்த நாள்தான்.  அதுவும் கூட ஏன் என்றால், நண்பர்களை சந்திக்கலாம் என்பதால்தான்.  அதுவும் கூட கடந்த இருபது ஆண்டுகளாகத்தான் கொண்டாடுகிறேன்.  காரணம், இருபது ஆண்டுகளாகத்தான் ”நீ எழுதுவது இலக்கியம் அல்ல, குப்பை” என்று சொல்லாத, என் எழுத்தின் மீது மதிப்பு வைத்திருக்கும் நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

பட்டாசு தயாரிப்பதற்கு எதிராக நீங்கள் எழுத வேண்டும் என்று இரண்டு தினங்களுக்கு முன்பு பிராணிகள் நலச் செயல்பாட்டாளரான என் நெருங்கிய நண்பர் செய்தி அனுப்பியிருந்தார். 

எனக்கு எரிச்சலும் கோபமும்தான் வந்தது. ஏற்கனவே நான் இருபது பூனைகளுக்கு உணவிட்டுக் கொண்டிருக்கிறேன்.  அதற்காக மாதம் அறுபதாயிரம் ரூபாய் ஆகிறது.  அதற்காகப் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.  அது எப்படி அறுபதாயிரம் என்பவர்கள் விவரம் தெரியாதவர்கள். கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு சென்னையில் பதினைந்தாயிரம் ரூபாய் கட்டணம்.  இப்படித்தான் ஒன்று ஒன்றாக செலவு வரும்.  வெறும் சோற்றுச் செலவு மட்டும் அல்ல.  இதுவே என் எழுத்துப் பணிக்கு நான் செய்யும் துரோகம்.  இந்த நிலையில் நான் களப்பணியிலுமா ஈடுபட வேண்டும்?   

களப்பணியில் ஈடுபட்டால் நான் முழுமையாக எழுதுவதை விட்டு விட வேண்டியிருக்கும்.  நான் இப்போது மிகத் தீவிரமாக தியாகராஜாவையும் த அவ்ட்ஸைடர் என்ற தொடரையும் ஒரே நேரத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  நேற்று நீங்கள் ஐந்தே நிமிடத்தில் வாசித்திருக்கக் கூடிய கட்டுரைக்காக நான் நாள் முழுவதும் படித்துக் கொண்டிருந்தேன்.

பரிசோதனைச்சாலையில் தன் முழு நேரத்தையும் செலவிட்டு ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு விஞ்ஞானியின் காரியத்தை விடக் கடினமானது என் எழுத்து வேலை.  ஒரு ஞானியின் தவம் மாதிரி என்று வேண்டுமானால் சொல்லலாம்.  அந்த தவத்தை நிறுத்தி விட்டு, நான் எப்படி பட்டாசு தயாரிப்பதற்கு எதிராக எழுத முடியும்? 

இது எல்லாமே எனக்கு புற்றுநோய்க்கு ஷாம்பு போட்டுக் குளிப்பது போல் தெரிகிறது.  நோயின் அடிப்படையை விட்டு விட்டு மனிதர்கள் மேம்போக்காக எதையெதையோ செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஒரு ஆரோக்கியமான சமூகத்தில் தெருவில் நாய்களே திரியக் கூடாது.

அப்படித் திரிந்தால் அந்த சமூகம் இன்னும் காட்டுமிராண்டிக் காலத்திலேயே இருக்கிறது என்றுதான் பொருள்.  தெருநாய்களின் வாழ்க்கை எத்தனை கொடூரமானது தெரியுமா?  கண்டவர்களும் கல்லால் அடிப்பார்கள்.  சோறு கிடைக்காது.  தோல் பூராவும் உண்ணிகள் பிடுங்கிக் கொண்டிருக்கும்.  நமக்கு ஒரு பேன் கடித்தால் எத்தனை வலிக்கிறது?  தெருநாய்களை வாழ்நாள் பூராவும் உண்ணிகள் பிடுங்கி ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கும்.  அதனால் சொறி உண்டாகும்.  எத்தனை வறண்டினாலும் கடித்துக் கொண்டாலும் அரிப்பு அடங்காது. ரத்தம்தான் வரும்.

பல நாட்கள் கொலைப்பட்டினி கிடக்க வேண்டும்.  பெண் நாயைத் தேடி தெருவைக் கடக்க வேண்டுமானால் காரோ லாரியோ அடித்து குடல் தெறித்துச் சாக வேண்டும். 

மழைக்காலமோ கொடூர நரகம். 

இப்படி தெருநாய்களின் பாடு பற்றி நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதிக் கொண்டே போகலாம்.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் தெருநாய்கள் கிடையாது. 

மேலே விவரித்த சூழ்நிலையில் வளரும் நாய்கள் எப்படி நம் வீட்டு நாய்களைப் போல் இருக்கும்?  எப்போதுமே வெறியில் இருக்கும் தெருநாய்கள் மனிதர்களைக் கண்டவுடன் பிடுங்கி விடும்.  கொடூரமான முறையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படித்தான் இருக்கும் தெருநாய்கள்.  பெங்களூர்த் தெருநாய்கள் அப்படிப்பட்டவைகள்தான்.  காலையில் நடைப் பயிற்சிக்குச் சென்றால், நிச்சயம் நாயால் கடிபடுவீர்கள். சந்தேகமே இல்லை. 

இப்படி ஒரு சமூகத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு பட்டாசுக்கு எதிராக எழுதுங்கள் என்று சொன்னால் அது எனக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தெரிகிறது. 

ஏனென்றால், இங்கே எல்லாமே தப்பாக இருக்கிறது.  இரவு பத்து மணிக்கு மேல் வெடிகள் வெடிக்கக் கூடாது என்பது சட்டம்.  ஆனால் அதை யாருமே கடைப்பிடிக்கவில்லை என்கிறபோது அரசு என்ன செய்ய முடியும்?  சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்தினால் அது திமுக அரசுக்கு எதிராகப் பாயும்.  அதிமுக ஆட்சியில் இரவு பத்து மணிக்கே வெடி சத்த்த்தை நிறுத்தி விட்டது அரசு.  இப்போது செய்தால் அது இந்து விரோதம் என்று அர்த்தம் கற்பிக்கப்படும். 

நான் இதுவரை ஒரு பூத்திரி கூட கொளுத்தியது இல்லை.  ஆர்வம் இல்லை.  அவ்வளவுதான்.  எவ்வளவு வற்புறுத்தினாலும் நான் வெடி வெடிக்க மாட்டேன்.  அது ஒரு கொள்கை மாதிரி எனக்கு.  பிராணிகளைத் துன்புறுத்துவதை விட மோசமான காரியம் எதுவும் இல்லை என்று நம்புபவன் நான்.

ஆனாலும் நான் இதிலிருந்தெல்லாம் ஒதுங்கியிருக்கிறேன்.  வெடித்தால் எனக்கென்ன?  வெடிக்காவிட்டால் எனக்கு என்ன?  என் வீட்டில் உள்ள பத்து பூனைகளும் வீட்டுக்குக் கீழே தரைத் தளத்தில் உள்ள பூனைகளும் பயத்தில் நடுங்குகின்றன. 

என்ன செய்ய முடியும்?  கதவு ஜன்னல் எல்லாவற்றையும் மூடிவிட்டு ஏசியைப் போட்டேன்.  பூனைகளுக்காக.

இந்தியா மட்டும் அல்ல, நான் கண்ட பல நாடுகளில் ஏதாவது பண்டிகைகளில் இப்படித்தான் வெடிக்கிறார்கள்.  2000-2001 டிசம்பர் ஜனவரியில் நான் பாரிஸிலும் பெர்லினிலும் அதைப் பார்த்தேன்.  இங்கே தீபாவளி மாதிரிதான் கிறிஸ்துமஸிலிருந்து ஜனவரி முதல் தேதி வரை வெடித்தார்கள்.  பலர் தங்கள் கார்களின் ஒலிப்பான்களைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்கிறார்கள். 

ஆனால் ஒன்று, அவர்கள் அளவுக்குப் பிராணிகளை நேசிப்பவர்கள் யாரும் இல்லை.  அங்கெல்லாம் ஒரு தெருநாய் கூட கிடையாது.  எல்லாம் ஜன்னல்கள் அடைத்த, பாதுகாப்பான, வெதுவெதுப்பான அறைகளில் சொகுசாக இருக்கும் என்பதால் இந்த வெடிச் சத்தம் அவைகளுக்குக் கேட்கும் வாய்ப்பு இல்லை.

ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவில் வெடிச்சத்தம் அதிகரித்துக் கொண்டிருப்பதாகக் கேள்விப்படுகிறேன்.  நான் வசிக்கும் சாந்தோம் நெடுஞ்சாலை பகுதியில் யாரும் வெடி வெடிப்பதில்லை என்பதால் எனக்கு எதுவும் பாதிப்பு இல்லை. 

எனக்கு லாரிகளில் மாடுகளை ஏற்றிக் கொண்டு செல்வதைப் பார்க்கும்போது கூடத்தான் நெஞ்சிலிருந்து குருதி கசிகிறது.  என்ன செய்ய முடியும்?  எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும், சகித்துக் கொண்டும், எழுதிக் கொண்டிருக்கிறேன்.  

எழுத்தைத் தவிர வேறேதும் செய்வதற்கில்லை எனக்கு.