நிறமேறும் வண்ணங்கள் (சிறுகதை) : அராத்து


புக்கட் பங்களா தெருவில் இருக்கும் ஒரு அமெரிக்கன் பப்பில் இருந்து அவர்கள் வெளிவந்தார்கள். குதூகலமாக ஆடிக்கொண்டே வெளியே வரும் அவர் ஒரு எழுத்தாளர். அந்த வண்ணமயமான இடத்துக்கு சற்றும் பொருத்தமில்லாமல் சட்டைப்பாக்கெட்டில் கருநீல வண்ணத்தில் பாஸ்போர்ட் தலை நீட்டிக்கொண்டு இருந்தது. கதை அவரின் பாக்கெட்டில் நுழைந்து அவரின் பாஸ்போர்ட் பக்கத்தை இரண்டு புரட்டு புரட்டியது.  பாஸ்போர்ட்டினுள் இருக்கும் தகவல் மூலம் அவருக்கு வயது 70 . பெயர் ஊர் எல்லாம் பார்த்தால் கதை டிரான்ஸில் (trance) மாட்டிக்கொள்ளும் என்பதால் , அடுத்த கணமே கதை பாக்கெட்டை விட்டு குதித்து விட்டது.

இந்த சைக்ளிக் கேப்பில் ஒருவன் ஒருத்தியிடம் , “யூ ஆர் ஃபர்ம்?” என்று கேட்டதையும் , அதற்கு அந்த ஒருத்தி “மலேஷியா “ என்று சொன்னதும் கதைக்குத் தெரியாமல் போனது. கதையின் கவனத்துக்கு வராத இதைப்போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் பெரும்பாலும் கதையை பாதிப்பதில்லை. சில சமயங்களில் பாதிக்கலாம்.

உற்சாகமாக நடனம் ஆடிக்கொண்டு வருவதைப் பார்த்தால் அவருக்கு 54 சொல்லலாம். அவரின் பின்னே ஒருவன் எஸ் எல் ஆர் கேமராவில் பெரிய லென்ஸைப் போட்டு படமெடுத்துகொண்டு வருவதைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது. அவர் இப்போது தெருவில் இறங்கி 20 டிகிரி , 30 டிகிரி என மாறி மாறி கோணமெடுத்து நோக்கமின்றி நடக்க ஆரம்பித்தார். அந்த கேமராமேன் சுற்றிச் சுற்றி படமெடுத்துக்கொண்டே வந்தான். பங்களா தெருவில் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இல்லையென்றாலும் , கட்டுக்கடங்கும் நிலையிலும் இல்லை. இசை என்ற பெயரில் பேஸ்(base) அதிரும் பேரிரைச்சல். காற்றே குழம்பித் தவிக்கும் அளவுக்கு வகை வகையான பர்ஃப்யூம் வாசனைகள். காற்று, அதனால் முடிந்து அளவுக்கு வகை பிரித்து பரப்பிக்கொண்டு இருந்தாலும் மூக்கு அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அதிக பட்சம் மூன்று வகைகளாகப் பிரித்து மூளைக்கு ஏற்றிக்கொண்டு இருந்தது.

பெரும்பாலான பெண்கள் தொடை மூலம் பளீர் பளீர் என விளக்குகளுடன் போட்டி போட்டபடி 10 டிகிரி வானத்தை நோக்கித் தலயைத் தூக்கியபடி நடந்து கொண்டிருந்தார்கள். தளும்பிக்கொண்டிருந்த அவர்களின் வெண்ணெய்க் கட்டிகளுக்கு கவனமாக கிரீம் தேய்த்து பவுடர் அடிக்கப்பட்டிருந்தது.

திடீரென மஞ்சள்  வண்ணம் ஒட , அதைத் துரத்திக்கொண்டு , ஆரஞ்ச் , பிங்க் , சிவப்பு  மற்றும் இன்னொரு பிங்க் வண்ணங்கள் ஓட ஆரம்பித்தன. இதனால் தெருவில் சிறு சலசலப்பு உண்டானது. எல்லோரும் அந்த வண்ணங்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள். அந்த வண்ணங்களுக்குள் சின்ன கைகலப்பு போலத் தோன்றியது. அந்த வண்ணங்கள் அந்தத் தெருவில் இருக்கும் கடைகளுக்குள் புகுந்து வெளியேறின. பிறகு ஒரு சூப்பர் ஸ்டோருக்குள் புகுந்து கொண்டன. மீண்டும் சீரான இடைவெளியில் வெளியேறி ஓட ஆரம்பித்தன. ஓரிரு சாப்பாட்டுக் கடைகளுக்குள் அந்த வண்ணங்கள் புகுந்து வெளியேறிய போது யாருக்கும் பெரிதாக ஏதும் புரியவில்லை. ஏதோ ஒரு தொடர்ச்சி அறுபட்டுப் போயிருந்தது.

கதையும் குழம்பித்தான் விட்டது. அதனால்தான் மேம்போக்காகப் பார்ப்பதற்கு தரமான இலக்கியச் சிறுகதை வித் குறியீடு என்பது போல காட்சியளித்தாலும் ஒன்றும் புரியாமல் பூசி மெழுகவேண்டியதாகி விட்டது கதைக்கு. இதற்கு நடுவே கதை எழுத்தாளரையும் , கேமராமேனையும் கோட்டை விட்டிருந்தது. இது அல்லாமல் இன்னும் இரண்டு கேரக்டரையும் கதை இதுவரை கண்டுகொள்ளவேயில்லை. அதில் ஒருவர்தான் முன்பே “மலேஷியா “ என்று பதில் வாங்கிய “ஒருவன்”.

இப்போது தெருவில் காட்சிகள் துலங்கின. மஞ்சள் வண்ணம் பிங்க் வண்ணத்தைத் துரத்திக்கொண்டு இருந்தது. இதை இப்படிக் கூட  சொல்ல முடியாது. அதாவது , துரத்திக்கொண்டு ஓடவில்லை. தெருவின் ஓரத்தில் ஒரு தள்ளுவண்டி. அதில் சில பூச்சிகள் , கிளிஞ்சல்கள் மற்றும் தவளைகள் பொரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. மஞ்சள் வண்ணமும் பிங்க் வண்ணமும் அந்தத் தள்ளுவண்டியைச் சுற்றி இடமிருந்து வலமாகவும் , வலமிருந்து இடமாகவும் மாறி மாறி சுற்றிக்கொண்டு இருந்தன. இரண்டு வண்ணங்களும் சுற்றிக்கொண்டு இருந்தாலும் , மஞ்சள் வண்ணம்தான் பிங்க் வண்ணத்தைத் துரத்துகிறது என்பது அந்தத் தெருவில் இருக்கும்  போதையில் இருந்து விடுபடப் போராடும் கண்களுக்குத் தெரிந்தே இருந்தது. அந்தக் கண்களுக்கு சங்கடமாக இருந்த விஷயம் என்னவென்றால், மஞ்சள் வண்ணத்திடமிருந்து சிவப்பு வண்ணம் ஒழுகிக்கொண்டு இருந்ததுதான்.

சிவப்பு வண்ணம் ஒழுக ஆரம்பித்த அந்தக் கணத்தை கதை கோட்டை விட்டிருந்தது. சூப்பர் ஸ்டோர் அல்லது வேறு ஏதோ ஒரு கடைக்குள் அனைத்து வண்ணங்களும் நுழைந்து வெளியேறும் ஏதோ ஒரு கணத்தில் ஏதோ ஒரு வண்ணம் மஞ்சள் வண்ணத்தைக் குத்தி சிவப்பு வண்ணத்தை வரவழைத்து இருக்கலாம். மஞ்சள் வண்ணம் அவ்வப்போது தன்னிடம் இருந்து வழிந்து கொண்டிருக்கும் சிவப்பு வண்ணத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தது.

இந்த நாடகம் எப்போது முடியும் எனத் தெரியாமல் , ஆனால் பலரும் அந்தப் புரியாத நாடகத்தைப் பார்த்தபடியே இருந்தனர். தெருவில் நின்றுகொண்டிருந்தவர்கள் தங்கள் மொபைல் போன் மூலம் internal memoryயைக் காலி செய்துகொண்டிருந்தனர். பார்களின் வெளிப்புற இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் பியரையும் காக்டெயிலையும் சப்பியபடி இதை சைட் டிஷ் ஆக உள்வாங்கிக்கொண்டு இருந்தனர்.

வெவ்வேறு இடங்களில் இந்த முழு வட்டப் பெண்டுலத் துரத்தல்  தொடர்ந்து கொண்டே இருந்தது. எதுவாக இருந்தாலும் ஒரு முடிவுக்கு வந்துதானே ஆகவேண்டும்? சூரியன் உதித்து மறைவது ஒரு நாள் முடிவுக்கு வரப்போவதையும் ஒரு கதை பதிவு செய்து கொண்டுதான் இருக்கிறது. என்ன அந்தக் கதை கொஞ்சம் படிக்க நீட்டமாக இருக்கும். யாரும் படிக்காமலும் போகலாம்.

மஞ்சள் வண்ணத்தின் கைகளுக்கு  இப்போது ஒரு காலி பியர் பாட்டில் சிக்கிக்கொண்டது. பிரபஞ்ச விதிப்படி பிங்க் வண்ணத்தின் கைகளில் ஒரு குடை மாட்டிக்கொண்டது.

இப்போது இரு வண்ணங்களும் நடுத்தெருவுக்கு வந்தன.

மஞ்சள் வண்ணம் பாட்டிலை வாள் போல பாவித்துக் குத்தப் போக , பிங்க் வண்ணம் குடையால் அதைக் கேடயம் போலத்  தடுத்து பின் குடையயே வாளாக மாற்றி மஞ்சள் வண்ணத்தைக் குத்தப் போக , பியர் கேடயம் குடை வாளை அடித்து விலக்கிக் குத்தீட்டியாக மாறியது. ஒரு கட்டத்தில் பிங்க் வண்ணம் கையிலிருந்த குடையை மஞ்சள் வண்ணத்தை நோக்கி ஈட்டி போல் எரிய , மஞ்சள் வண்ணம் விலகிக்கொண்டது. பிங்க் வண்ணம் நிராயுதபாணியாக ஆனதும் மஞ்சள் வண்ணமும் பியர் பாட்டிலைத் தூக்கி எறிந்து விட்டு பிங்க் வண்ணத்தை நெருங்கி அடிக்க ஆரம்பித்தது. பிங்க் வண்ணம் மஞ்சள் வண்ணத்தின் தலைமுடியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டே அடி வாங்கிக்கொண்டு இருந்தது. எவ்வளவு அடி வாங்கினாலும் ஏனோ பிங்க் வண்ணம்  மஞ்சள் வண்ணத்தின் முடியை விடுவதாயில்லை. திடீரென்று கதையில் இருந்து காணாமல் போன ஆரஞ்சு , சிவப்பு மற்றும் இன்னொரு பிங்க் வண்ணம் தங்களோடு நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களையும் அழைத்துக்கொண்டு ஓடி வந்தன.

கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்து வண்ணங்களும் மஞ்சள் வண்ணத்தின் மேல் தாக்குதலைப் பொழிந்தன.

கதை , கதையை விளக்கமாக ஒவ்வொரு நொடியாக விவரித்துக்கொண்டு போனால் கதை போய் விடும். அதனால் கதை இப்படி ஒற்றை வரியில் ஒரு டகால்டி செய்து விட்டு தொடரப் பார்க்கிறது. கொஞ்சம் விவரித்து எழுதினால் , அடுத்த இரண்டு  பத்திகள்  ஆகி விடும்.

வண்ணங்கள் ஒன்றின் மேல் ஒன்று ஏறின. ஒன்றுடன் ஒன்று இணைந்து பிரிந்தன.  சிவப்பு , பிங்க் , ஆரஞ்ச் , நீலம் மற்றும் கறுப்பு வண்ணங்களின் கலவையாட்டம் பேரெழிலாகக் காட்சியளித்தது. ஒவ்வொரு வண்ணத்திலும் நிறமேற்றம் அதிகமாகி அடர்த்தியாவது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வண்ணமயமான ஒரு நவீன ஓவியம் நடனமாடுவது போல் இருந்தது.

அனைத்து வண்ணங்களும் ஓடி வந்து மஞ்சளை நெருங்கினாலும், முதலில் இன்னொரு பிங்க் வண்ணம்தான் மஞ்சள் வண்ணத்தின் பின் மண்டையில் ஒரு அடி போட்டது. சிவப்பு வண்ணம் செவுளில் தாக்கியது. கருப்பு வண்ணம் புட்டத்தில் எட்டி உதைத்து மஞ்சள் வண்ணத்தைத் தரையில் தள்ளியது. நீல வண்ணம் கீழே விழுந்த மஞ்சள் வண்ணத்தின் முகத்தில் தன் ஹீல்ஸ் காலால் மிதித்தது. அதைத் தொடர்ந்து அனைத்து வண்ணங்களும் தத்தமது ஹீல்ஸ் கால்களால் மஞ்சள் வண்ணத்தை முழுக்க முழுக்க மிதிக்க ஆரம்பித்தன. இப்படி இடைவிடாமல் மிதித்துக்கொண்டிருக்கும் ஹை ஹீல்ஸ் உடைய, நளினமான , மூடு கிளப்பும்  கால்களை மட்டும் படம் எடுத்து வைத்தால், சர்வதேசப் புகைப்பட விருது கிடைக்கும் என்பது திண்ணம். இதுவரை மஞ்சள் வண்ணத்திடம் அடி வாங்கிக்கொண்டு இருந்த பிங்க் , வலு இல்லாமல் , மஞ்சள் வண்ணத்தின் இரு தொடைகளுக்கு இடையே மிதித்துக்கொண்டு இருந்தது.

மஞ்சள் வண்ணத்திடம் எந்த எதிர்வினையும் இல்லாதது தெரிய வந்ததும் , அனைத்து வண்ணங்களும் நிறமேறிய கொக்கரிப்புடன் சிதறி ஓடி மறைந்தன. மஞ்சள் வண்ணம் இப்போது உடல் முழுக்க சிவப்பு வண்ணத்தோடு கொண்டாட்டமான அந்த நடுவீதியில் ஸ்மரணை இல்லாமல் கிடந்தது. அதன் முகத்தின் அருகில் ஒரே ஹை ஹீல்ஸ் classical poseஇல் கிடந்தது.  போலீஸை விட அதீத ஹோதாவாக உடையணிந்து கொண்டிருந்த, Guard என ஆடையின் முதுகில் எழுதப்பட்டிருந்த ஒருவர் , காற்றில் கைக்கு கிடைத்த அதிகாரத்தை அளைந்து எடுத்துக்கொண்டு மஞ்சள் வண்ணத்தின் அருகே வந்து மூக்கில் கை வைத்துப் பார்த்தார்.

எழுத்தாளரை விடியோ எடுத்துக்கொண்டிருந்த கேமராமேன் மஞ்சள் வண்ணம் கீழே கிடந்ததை விடியோ எடுக்கும் போது அந்த “கார்ட்”  லென்ஸில் தன் உள்ளங்கையை  வைத்து மறைத்தார். மொபைலில் விடியோ எடுத்துக்கொண்டிருந்தவர்களை அவர் கைகள் ஒன்றும் செய்யவில்லை.

இங்கும் கதை தடுமாறும் இடம் இதுதான். கதை அதன் போக்கில் விறுவிறுப்பாகச் செல்ல வேண்டி , பல விஷயங்களைத் தவற விடுகிறது. பல வண்ணங்களும் சேர்ந்து மஞ்சள் வண்ணத்தைக் கால்களால்  கலைத்துக்கொண்டு  இருக்கையில் அந்த எழுத்தாளர் இந்த வண்ணங்களின் சண்டைக்குள் தன்னியல்பாகப் புகுந்தார்.  அப்போது அவர் முகத்தில் குரோதம் , அன்பு , கருணை என ஏதும் தென்படவில்லை. அப்போது கதை இதுவரை கண்டுகொள்ளாத , அந்த எழுத்தாளருடன் வந்திருந்த பளபளா மொட்டை ஆசாமி புகுந்து எழுத்தாளரை இழுத்துக்கொண்டு வண்ணங்களின் குழம்பில் இருந்து வெளியேறினான்.

ஏனோ அந்த மொத்தத் தெருவிலும் போலீஸ் தலை தென்படவே இல்லை. மழை இப்போது வலுக்க ஆரம்பித்து இருந்தது. மஞ்சள் வண்ணத்திடம் இருந்து சிவப்பு வண்ணம் மழையில் கலந்து ஓட ஆரம்பித்தது.

கதை மிஸ் செய்த இன்னொரு விஷயம் இது. கதை ஆரம்பித்த போதே தூறல் போட்டுக்கொண்டு இருந்தது. அவ்வப்போது சிறு மழையும் வந்து ஓய்ந்தபடி இருந்தது. தெருவே நனைந்துதான் காணப்பட்டது. தெருவில் நடந்துக்கொண்டிருந்த பலரும் மெல்லிசான ரெயின் கோட் அணிந்தபடியேதான் சென்றுகொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பாரின் (bar) வெளிக்கூரைகளிலும் மழைத்தண்ணீர் சொட்டிக்கொண்டு இருந்தது. கதை , இதை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் அந்த மூட் வேறு அல்லவா ?

மஞ்சள் வண்ணத்தை விட்டு விட்டு எல்லோரும் கலைய ஆரம்பித்தனர். மழையும் வலுக்க ஆரம்பித்து இருந்தபடியால் பலரும் பெரிய தேர்வுகள் ஏதுமின்றி அக்கம் பக்கம் கிடைத்த பார்களில் அடைக்கலமானார்கள்.

எழுத்தாளர் மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் ஒரு  food streetக்குள் நுழைந்தார்கள் . அங்கே சின்னச் சின்ன கடைகள். வெளியே மேஜைகள். ஃபூட் ஸ்டிரீட் என்றாலும் மதுவும் பரிமாறுவார்கள். உண்மையில் மதுதான் பிரதானம். இவர்கள் ஒவ்வொரு கடையாகப் பார்த்துக்கொண்டு வருகையில் டீஷர்ட் மற்றும் ஜீன்ஸில் இருந்த ஒரு பாட்டி இவர்களை அழைத்தாள். பாட்டி லோ கட் டீஷர்ட் அணிந்திருந்தாள். பல வருடங்களாக பேட் மூலம் வெளியுலகத்தைத் தலை நிமிர்ந்து பார்த்திருந்த முலைகள் இப்போது சுணங்கிப்போயிருந்தன. அவளின் நெஞ்சாங்கூட்டின் எலும்பு துருத்திக்கொண்டு அந்தத் தெருவை பழிப்பு காட்டிக்கொண்டு இருந்தது. இவர்கள் அந்தக் கடையைத் தேர்ந்தெடுத்து உயரமான ஸ்டூல்களில் அமர்ந்து மதுபானங்களை ஆர்டர் செய்தார்கள். இந்தக் கடையைத் தேர்ந்தெடுத்ததற்கு பாட்டியின் அழைப்பு காரணம் அல்ல. அந்தப் பாட்டி அளவுக்கு அதிகமாகச் சிரித்து அழைத்ததும் காரணம் அல்ல. அங்கே ஒரு டேபிளில் அமர்ந்திருந்த நான்கு அழகான இளம் நங்கைகள்தான் காரணம். அவர்கள் விலை மாதர்கள் அல்ல.

இவர்கள் ஆர்டர் செய்து ஒரு  ’டிரிங்க்’போட்டுக்கொண்டு இருந்தார்கள்.  வெளியே கொடும் மழை ஊற்றிக்கொண்டு இருந்தது. அவ்வளவு உற்சாகமான சாலையில் ஒருவரும் இல்லை.

நல்ல காலம் கதை, கதையை இங்கே சொல்லிக்கொண்டு இருப்பதால் அந்த மஞ்சள் வண்ணத்திடம் போகவில்லை. இல்லையெனில் சினிமாவில் காட்டுவதைப் போல ஏரியல் வியூவில் யாருமில்லா நடுத்தெருவில் சோவென மழைக் கொட்டிக்கொண்டு இருக்க , மஞ்சள் வண்ணம் தனியாகக் கிடந்தாள் என வந்திருக்கும். அல்லது இன்னும் ’கலாபூர்வமாக’ “கொட்டும் மழையில் மஞ்சள் வண்ணம் மழைத்தண்ணீரில் முகத்தைப் புதைத்துக்கொண்டு , ஒரு காலை நீட்டியபடியும் , இன்னொரு காலை மடக்கியபடியும் கிடந்தாள்” என வந்திருக்கும்.

இவர்கள் அந்த இளம் பெண்களை சைட் அடித்துக்கொண்டு  இரண்டாவது ’டிரிங்க்’ போடும் போது ,தெருவில் ஆம்புலன்ஸ் போகும் சத்தம் கேட்டது. அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள். மழையைக் கிழித்துக்கொண்டு ஆம்புலன்ஸ் மறைந்தது.

மழை தொடர்ந்துகொண்டிருந்ததால் இளம் பெண்களும் இவர்களும் அடுத்த ’டிரிங்க்’ ஆர்டர் செய்தார்கள்.

இப்போது கதை ஆம்புலன்ஸைத் தொடர வேண்டுமா ? இவர்களையா ?

கதை ஆம்புலன்ஸைத் தொடர்ந்தது. அதற்குள் ஆம்புலன்ஸ் மறைந்து போனது. கதை சலிப்புடன் மீண்டும் இவர்களிடம் வந்தது. இவர்களும் காணவில்லை. அந்த இளம் பெண்களும் காணவில்லை. அந்த ஃபூட் ஸ்டிரீட்டை மூடிக்கொண்டு இருந்தார்கள். கதை அலுப்புடன் நடுத்தெருவுக்கு வந்து நின்றது.

மழை இப்போது இன்னும் வலுத்திருந்தது .

கதையால் வேறு என்ன செய்ய முடியும். இப்படித்தான் முடிக்க முடியும். கதை சொல்லாமல் விட்ட இன்னொரு விஷயம் ,அந்த மஞ்சள் வண்ணம் ஒரு லேடி பாய். –

அடிக்குறிப்பு: புகைப்படங்களும் காணொலிகளும் எடுத்தது மனோகரன் மாசாணம், மற்றும் ஒளி முருகவேள்.  மிகுந்த ஆபத்தான சூழலில், பாதுகாவலர்களின் எச்சரிக்கையின் காரணமாக கேமராவை சட்டைக்குள் ஒளித்தபடி எடுத்தவை இந்தப் புகைப்படங்களும் காணொலிகளும்.