த அவ்ட்ஸைடர்: சில எதிர்வினைகள்

சாரு, 

தருமபுரியிலிருந்து ஸ்ரீதர். “இன்னும் சத்தமாகக் குரை” பகுதியைப் படித்தேன். உங்களது ஆதங்கம் நியாயமானது. அதற்கான பதில் – படிக்கிறோம். எப்போதும் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவுரங்ஸேப்  போல ஒரு செறிவைக் கொண்டது சீலேயின் சரித்திரம். நீங்கள் சொன்னதுபோல் நமக்கான வரலாறு அதிகார மையங்களால் தந்திரமாகக் கட்டமை க்கப்பட்டது. நிதர்சனமான உண்மையான சரித்திரங்கள் சமூகங்களுக்கு என்றுமே காட்டப்படுவதில்லை. பெருந்திரளான மக்கள் கூட்டங்களுக்கு மத்தியில் மிகச் சொற்ப எண்ணிக்கையிலான மனச்சான்றுடைய எழுத்தாளர்கள், கலைஞர்களே அவை குறித்து பதிவாக்குகின்றனர். அவையும் பல்வேறு இடர்ப்பாடுகளைக் கடந்தே அதே சொற்ப அளவிலான வாசிப்போரை அடைகின்றன. இது ஒரு புரையோடிப் போன நோய். இதனை அழிக்க தங்களைப் போன்றோர் போராடிக் கொண்டுள்ளனர்.

இதனை ஆவணப்படமாகக் காண்பதை விட நூலாக வாசிப்பதே ஒரு Impact ஐ அளிக்கும். இவற்றை அருகில் வைத்துக் கொண்டு படத்தைப் பார்ப்பதே முறையாக இருக்கும். இன்னும் பல பதிவுகளைப் பார்க்கக் காத்திருக்கிறோம்.

கூடுதலாக அபிலாஷின் zoom கலந்துரையாடலில் சூழல் காரணமாகக் பங்கேற்க இயலாது போனது. அது பதிவாகப்பட்டுள்ளதா? வாய்ப்பு இருப்பின் லிங்க் அனுப்பி உதவுங்கள். ஏனெனில் தகடூர் பேரவையின் நண்பர் தங்கமணி இது குறித்து பேச முதலில் என்னைக் கேட்டார்.  உடல்நிலை காரணமாக நான் பேச இயலவில்லை. அபிலாஷ் சிறந்த, பொருத்தமான தேர்வு. அவர் பேசாது வேறு யார் பேசிவிட முடியும்?
அன்புடன், 

ஸ்ரீதர் மணியன் 

தருமபுரி.

***

சாரு,

இந்தத் தொடரை யாராவது படிக்கிறார்களா, புரிகிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தீர்கள். நான் தினமும் உங்கள் வலைத்தளத்தில், எதாவது எழுதியிருக்கிறீர்களா என்று பார்ப்பேன்.
விக்தர் ஹாரா கொல்லப்பட்ட இடத்தின் புகைப்படத்தை இன்று பார்த்தபொழுது, அந்தக் காட்சியை, மனம் தானாகவே கற்பனை செய்து பார்த்தது.
ஞாபகம் எவ்வளவு முக்கியமானது, அதை அழிக்க முற்பட்டால், எப்படி அது அடிப்படைவாதமாக உருவாகி, எழுந்து வருகிறது முதலியானவற்றை நன்றாக உணர முடிந்தது.
அராத்து எழுதியது போல், உங்கள் எழுத்து குற்றவுணர்ச்சியில் இருந்து விடுவிப்பதாக இருந்ததால்தான், எனக்குப் பிடித்திருக்க வேண்டும்.
பி.கு. எனக்கு வரலாற்றின் மீது ஆர்வம் இருப்பதால், கூடுதலாக உங்கள் எழுத்து பிடிக்கும்.

அப்துல் ரஹ்மான்,

புதுச்சேரி.

***

மதிப்பிற்குரிய சாரு,
உங்களுடைய சீலே பற்றிய கட்டுரைகளை படித்துக்கொண்டிருக்கிறேன்.கடந்த 3 ஆண்டுகளாக உங்களை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.லத்தின் அமெரிக்கா பற்றி நீஙகள் கூறும் விஷயங்கள் யாவும் எனக்கு வாசிக்க வாசிக்க மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.உங்கள் நூல்கள் மூலமாகவே நான் லத்தின் அமெரிக்காவின் இசை, மக்களின் வாழ்வு முறை,கலாச்சாரம்,லத்தின் சினிமா போன்றவறறை அறிந்துகொண்டேன்.நான் போட்டித்தேர்வுக்கு படித்துக்கொண்டிருப்பதால் என்னால் உங்களுக்கு பணம் ஏதும் அனுப்ப முடியவில்லை.

மன்னிக்கவும் சாரு.
inta Eyh-nancy Ajram இந்த அருமையான பாடலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சாரு

அ.பழனிசாமி 

மேட்டூர்,சேலம்

***

கடிதம் எழுதிய நண்பர்களுக்கு நன்றி. அப்துல் ரஹ்மானும் பழனிசாமியும் மாணவர்கள். மாணவர்களும், வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகளும் பணம் அனுப்புவது பற்றி சற்றும் யோசிக்க வேண்டாம். அது பற்றி எனக்கு எழுதவும் வேண்டாம். எழுதினால் என் மனம் சங்கடப்படுகிறது. ஆனால் என்ன பிரச்சினை என்றால், வேலைக்குப் போனதும் மறந்து விடுகிறார்கள். அப்படி சிலரை எனக்குத் தெரியும். அதுதான் எனக்கு ஆச்சரியம் அளிக்கும். சிலர் திருமணம் ஆனதும் மறந்து விடுகிறார்கள். சிலர் அமெரிக்கா சென்றதும் மறந்து விடுகிறார்கள். நான் அப்படி இல்லை என்று கூட நினைக்க வேண்டாம். அப்படி இல்லாமல் இருக்க அந்தச் சூழ்நிலையில் முயற்சி செய்தால் போதும். அப்படியும் முடியாவிட்டால் அது பற்றியும் கவலை வேண்டாம். ஏனென்றால், நாளை என்ன நடக்கும், சூழ்நிலை எப்படி மாறும் என்று சொல்ல முடியாது. சாருவோடு தொடர்பு வைத்துக் கொண்டால் விவாகரத்து செய்து விடுவேன் என்று மனைவி மிரட்டினால் நாம் என்ன செய்ய முடியும்? தொடர்பை அறுத்து விட வேண்டியதுதான். எனவே தற்சமயம் மகிழ்ச்சியாக இருங்கள். மகிழ்ச்சியாக வாசியுங்கள்.