வல்லீர்கள் நீங்களே!

திருப்பாவையின் பதினைந்தாவது பாடல் எல்லே இளங்கிளியே என்று தொடங்கும்.  அதில் ஒரு கருத்து உண்டு.  வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக. நீங்களே வலிமையானவர்கள், நானே தோற்றவளாக இருந்து விட்டுப் போகிறேன் என்று பொருள்.  இதுதான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என் வாழ்வியல் தத்துவம்.  இதுதான் இந்தியத்துவம்.  இதுதான் இந்தியாவின் ஆன்மா.  நான் எப்போதுமே சொல்லி வருகிறேன், நான் ஒரு ஐரோப்பியனாக வாழ்கிறேன் என்று.  ஆனால் அடி ஆழத்தில் இந்த இந்தியத்துவம்தான் என் சுவாசமாக இருக்கிறது.  இந்தியர்களிடம் தத்துவம் இருந்தது, ஏராளமான செல்வம் இருந்தது, உலகிலேயே பெரும் பணக்கார நாடாக இருந்தது, உலகமே இந்தியாவின் தங்கத்தை எண்ணிப் பொறாமை கொண்டது, திரும்பத் திரும்ப வந்து இந்தியாவைக் கொள்ளையடித்தார்கள் அந்நிய தேசத்தவர், அலெக்ஸாந்தர் “உலக நாடுகளையெல்லாம் என் தந்தையே பிடித்து விடுவார் போலிருக்கிறதே, நான் வெல்வதற்கு நாடுகள் இருக்காதே?’ எனக் கவலையுற்ற போது ‘இந்தியா என்று ஒரு தேசம் இருக்கிறது, அங்கே செல்” என்று சொன்னார் அவன் குரு, அப்படியெல்லாம் இருந்திருக்கிறது இந்தியா.  ஆனால் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இங்கேயுள்ளவர்கள் வழி செய்து கொள்ளவில்லை.  எடுத்துக் கொண்டு போ என்பதே இவர்களின் தத்துவமாக இருந்த்து.  ஊரையெல்லாம் பிடிக்க வேண்டும் என்று ஐரோப்பியர்களும், முஸ்லிம் அரசர்களும், மராட்டியர்களும், தெலுங்கர்களும் தஞ்சை மண்ணில் அடித்துக் கொண்டு ரத்த ஆறு ஓடிக் கொண்டிருந்த போது ஒரு ஹிந்து தெருத் தெருவாகப் பிச்சையெடுத்து வாழ்ந்து கொண்டிருந்தான்.  அடுத்த நாளைக்கு அவன் வீட்டில் தானியமோ பணமோ பொருளோ இருக்கலாகாது.  மன்னன் பொற்குவியலைக் கொடுத்தான்.  அதைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டான் கவிஞன்.  அப்படியும் விடாத மன்னன் மறுநாள் அந்தக் கவிஞனின் பிச்சைப் பாத்திரத்திலே பொன்னையும் பொருளையும் போட்டான்.   பிச்சை எடுத்த தானியத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, பொன்னையும் பொருளையும் தெருவிலே விட்டெறிந்தான் கவிஞன்.  இன்னொரு மன்னன் பசித்த புலிக்காகத் தன் தேகத்தையே உணவாகக் கொடுத்தான்.

திபெத்தில் ஏழு ஆண்டுகள் என்ற படத்தில் ஒரு வசனம் வரும்.  மேற்குலகம் பொருளைத் தேடி ஓடுகிறது.  கிழக்கோ தன்னிடம் இருப்பதை ஒவ்வொன்றாகத் தன்னிடமிருந்து விலக்கிக் கொள்கிறது.  மேற்குலகம் முதல் முதல் என்று எல்லாவற்றிலும் முதலாவதாக வர முந்துகிறது; ஆனால் கிழக்கோ தன்னிடமிருக்கும் எல்லாவற்றையும் நிராகரிக்கிறது.

இப்படிப்பட்ட மண்ணிலிருந்து வந்த நான் வேறு எப்படி இருக்க முடியும்?  நான் மேற்கிலிருந்து கற்றுக் கொண்டது மனித சுதந்திரத்தை மட்டுமே.  கிழக்கிலிருந்து கற்றது நான் என்று எதுவும் இல்லை என்பதை.  நானொரு பிரதிபிம்பம் மட்டுமே, நீரில் தெரியும் நிலவைப் போல.  நான் எழுதுவது அத்தனையும் என்னுடையது அல்ல.  எனக்கு வழங்கப்படுவது.