விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 1

வெள்ளிக்கிழமை (16.12.2022) மாலை ஏழரைக்கு கோவை செல்லும் விமானத்தைப் பிடித்தேன்.  அன்று இரவு பத்து மணிக்கு கோவையிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள வடசித்தூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஆட்டோநேரட்டிவ் ப்ப்ளிஷிங்கின் தொடக்க விழா இருந்தது.  இரவு பத்து மணி என்ற வினோதமான நேரத்துக்குக் காரணம் என்னவென்றால், அன்று பகலிலேயே கோவை வர முடியாத நிலையில் இருந்தேன்.  டிசம்பர் 16 அவந்திகாவின் பிறந்த நாள் என்பதாலும், டிசம்பர் 18 என்னுடைய பிறந்த நாள் அன்று நான் வீட்டில் இருக்க மாட்டேன் என்பதாலும், டிசம்பர் 16 மாலை வரையாவது நான் வீட்டில் இருக்க வேண்டும் என்பது உத்தரவு.  வடசித்தூருக்குப் போய்ச் சேர்ந்த போது இரவு பத்து மணி.  விமான நிலையத்துக்கு விஷ்ணுபுரம் வட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் வருவதாகச் சொன்னார்கள்.  ஆனால் நான் நேராக வடசித்தூர் செல்வதால் அவர்களை அலைக்கழிக்க விரும்பவில்லை.  மதுரை நண்பர் அருணாசலமும் கோவை நண்பர் விஷ்வாவும் விமான நிலையத்திலிருந்து வடசித்தூர் அழைத்துச் சென்றார்கள்.  ஆனாலும் யோகா குரு சௌந்தரும் காளி ப்ரஸாதும் வடசித்தூர் வந்திருந்தார்கள். 

என்னால் ஒரு விஷயம் நம்ப முடியவில்லை.  அந்த இரவு நேரத்திலும் ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத்தின் தொடக்க விழாவுக்கு 100 பேர் வந்திருந்தார்கள்.  அதை விட ஆச்சரியம், விழா நள்ளிரவு ஒரு மணி வரை நீண்டு கொண்டிருந்த போதும் அந்த நூறு பேரில் ஒருவர் கூட குறையவில்லை. 

என் நீண்ட கால நண்பரும் கவிஞருமான ராஜ சுந்தர்ராஜனும் நானும் அராத்துவின் நிறமேறும் வண்ணங்கள் என்ற சிறுகதை நூலைப் பற்றிப் பேசினோம்.  அந்த நள்ளிரவிலும் விழாவில் நாலைந்து பெண்களும் இருந்தது மற்றொரு ஆச்சரியம்.

வடசித்தூரிலிருந்து திரும்பி அருணாசலம் காரிலேயே அன்னபூர்ணா ஐகான் ஓட்டலுக்கு வந்தோம்.  ஓட்டலில் நுழையும்போது நள்ளிரவு இரண்டே கால்.  ஏற்கனவே நான் மீனாம்பிகையிடம் இன்னமாதிரி நான் ஓட்டலுக்குப் போய்ச் சேர நள்ளிரவு ஆகி விடும் என்று சொல்லியிருந்தேன்.  மீனாம்பிகையும் என்னுடைய அறை எண்ணை எனக்கு அனுப்பி விட்டார். 

ஐகான் மூன்று நட்சத்திர ஓட்டல்.  ஆனால் இந்தியாவில் மூன்று என்ன, ஏழு நட்சத்திர ஓட்டலாகவே இருந்தாலும் வரவேற்பு அறையில் அமர்ந்திருப்பவர்கள் பெரும்பாலும் மனநோயாளிகள்தான்.  அதைப் போலவேதான் எனக்கு அன்றைய நள்ளிரவு இரண்டேகால் மணிக்கு நடந்தது.  ”என் பெயர் அறிவழகன்.  சாரு நிவேதிதா என்பது என் எழுத்துக்கான பெயர்.  எனக்கு இந்த ஓட்டலில் 706ஆம் எண்ணுள்ள அறை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  சாவி தாருங்கள்.” இதை எத்தனை பணிவாகச் சொல்ல முடியுமோ அத்தனை பணிவாகச் சொன்னேன்.

இந்தியாவில் உள்ள எல்லா ஓட்டல்களிலும் என்ன பதிலைச் சொல்வார்களோ அதே பதிலை ஐகான் வரவேற்பாளரும் சொன்னார்.  இல்லை.  அறை காலி இல்லை.

இல்லை சகோதரரே.  எனக்காக அறை எண் 706 ஒதுக்கப்பட்டுள்ளது.  என் அடையாள அட்டையைச் சோதித்து விட்டு எனக்கு அறைச் சாவியைக் கொடுக்க வேண்டியதுதான்.  வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை.

இந்த வார்த்தைகளை எத்தனை பணிவாகச் சொல்ல முடியுமோ அத்தனை பணிவாகச் சொன்னேன்.

ம்ச்ச என்று சலித்துக் கொண்டபடி, “நான்தான் சொல்கிறேனே சார், 706 காலி இல்லை.  வேறு அறைகளும் காலி இல்லை” என்றார் வரவேற்பாளர்.

மணி இரண்டரை.  கொலைப்பசி.  தாகத்தில் நாக்கைக் கடித்துக் கொண்டிருந்தேன்.

என்ன செய்யலாம்?  மீனாம்பிகைக்கு இந்த நேரத்தில் ஃபோன் செய்து பயன் இல்லை.  ஏனென்றால் எனக்கு மிக நிச்சயமாகத் தெரிந்திருந்தது, இந்த வரவேற்பாளன்தான் ஏதோ குளறுபடி செய்கிறான் என்று.  ஏனென்றால், இந்தியா முழுவதுமே ஓட்டல் வரவேற்பாளர்களின் முதல் வார்த்தை நோ தான்.  இவன் கொஞ்சம் வித்தியாசமாகத் தொடர்ந்து நோ சொல்லிக் கொண்டிருக்கிறான்.

சௌந்தருக்கும் ராம் ப்ரஸாதுக்கும் ஃபோன் செய்யலாமா என்று யோசித்தேன்.  வேண்டாம்.  இந்த ஓட்டல் வரவேற்பாளர்கள் செய்யும் அராஜகத்துக்கு அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்.

அந்த இளம் வரவேற்பாளனிடம் சொன்னேன், என் பக்கம் தவறு இருக்க வாய்ப்பே இல்லை.  இந்தியா பூராவுமே இப்படித்தான் ஓட்டல் வரவேற்பாளர்கள் இல்லை என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  சரியாகப் பாருங்கள்.  என் பெயர் அறிவழகன்.  சாரு நிவேதிதா என்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  இங்கே 706 என்ற அறை எண் எனக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு முப்பது நொடியில் சாவியை எடுத்துக் கொடுத்தான் அந்த இளைஞன். 

ஜெயமோகனாக இருந்திருந்தால் நாகர்கோவில் மளிகைக்கடையில் நடந்ததே நடந்திருக்கும்.  எனக்கும் அந்த இளைஞனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து செவுளிலேயே நாலு கொடுக்க வேண்டும் போல் இருந்தது.  என் அருகில் வினித், அருண் பாண்டியன் ஆகியோரும் இருந்தனர்.  நள்ளிரவில் எவ்வளவு விளக்கியும் கேட்காமல் எத்தனை மண்டைக் குடைச்சல் கொடுத்து விட்டான்?  கொஞ்சம் உரத்த குரலில் “ஏன் இப்படி ஓட்டல் வரவேற்பாளர்கள் மட்டும் எடுத்த எடுப்பில் நோ என்று மட்டுமே சொல்கிறீர்கள்?  நான் எத்தனை விளக்கியும் கேட்காமல் ஏன் நீங்கள் இல்லை இல்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தீர்கள்?  எனக்கு இப்போது பதில் தேவை” என்று அவனிடம் கத்தினேன்.    

”சார், நான் உங்களை ரொம்ப நேரம் காத்திருக்க வைக்கவில்லைதானே, சாவியைக் கொடுக்கக் கொஞ்ச நேரம்தானே எடுத்துக் கொண்டேன்?” என்றான் இளைஞன்.

“உண்மைதான்.  ஆனால் இந்த நள்ளிரவில் நாங்கள் மூவரும் இன்னொரு ஓட்டல் பிடித்து அறை போடும் அளவுக்கு யோசிக்க வைத்தது தப்பு இல்லையா?  இதுவே பகலாயிருந்தால் சரி.  இந்த நள்ளிரவில் ஏன் டார்ச்சர் கொடுத்தீர்?”

”இருந்தாலும் நான் உங்களை ரொம்ப நேரம் காத்திருக்க வைக்காமல் சாவியைக் கொடுத்து விட்டேன்தானே?”

இல்லை, இந்த நாட்டில் பிறந்தது தப்பு என்று நினைத்துக் கொண்டு அறைக்கு வந்தேன்.

மணி மூன்று.  இரவு நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேயாட்டம் போட்டிருக்கிறேன்.  நடன நிகழ்ச்சி.  கொலைப் பசி.  அதை விடக் கொடுமையாக தண்ணீர்த் தாகம்.  நாக்கை நாக்கைக் கடித்துக் கொண்டேன்.  அறையில் இரண்டு பாட்டில் இருந்தது.  ஒவ்வொரு பாட்டிலும் 250 மில்லி. சாண் அளவு உயர பாட்டில் இரண்டு. எனக்கோ இரவில் இரண்டு லிட்டர் தண்ணீர் வேண்டும்.  வினித் கொஞ்சமும் கவலையில்லாமல் ஓட்டலில் கேட்டால் தருவார்கள் என்றார்.

அடப் போய்யா, தூக்கம் சொக்குது, பசி வேறு கொல்லுது.  அங்கே வடசித்தூரில் நிகழ்ச்சி நடந்த இடத்தில் பத்துப் பதினைந்து தாம்பாளங்களில் ஆப்பிளும், பப்பாளியும் திராட்சையும், இன்னும் பெயர் தெரியாத பத்து வகைப் பழங்களும் மலை மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன.  மூன்று மணி நேரமாவது உட்கார்ந்து அவ்வளவையும் உரித்திருக்க வேண்டும்.  பிரியாணி வேறு விதம் விதமாக இருந்தது. 

இப்போது பசி.  தாகம்.  ஆர்டர் பண்ணி சாப்பிடலாம்.  ஆனால் கிட்டத்தட்ட அதிகாலை ஆகப் போகிற இந்த நேரத்தில் அதெல்லாம் சாத்தியமா?  விஷயம் இதுதான்.  அங்கேயே – வடசித்தூர் கொண்டாட்டத்திலேயே –  இருந்திருந்தால் காலை ஐந்து மணி ஆகி விடும்.  பத்து மணிக்கு விஷ்ணுபுரம் தொடக்க விழாவுக்கு நான் செல்ல முடியாது.  அதனால் வினித்தும் அருணும் என்னை ஐகான் அறைக்குக் கடத்திக் கொண்டு வந்து விட்டார்கள்.  அதுவரை சரி.  ஆனால் தண்ணீரும் உணவும்? 

ஸ்விக்கியில் போடவா, இருபத்து நாலு மணி நேரமும் சர்விஸ் உண்டு என்றார் வினித். 

என்னது, ஸ்விக்கியா?  யோவ், அங்கே வடசித்தூரில் பிரியாணி மலைமலையாகக் குவிந்து கிடக்கிறது.  அதைக் கொஞ்சம் ஒரு டப்பாவில் போட்டுக் கொண்டு வந்திருக்கலாம்.  அல்லது, வாழைப் பழம் தார் தாராக இருந்தது.  ரெண்டைப் பிய்த்துக் கொண்டு வந்திருக்கலாம்.    

நான் விமானத்திலும் சரியாக சாப்பிட்டிருக்கவில்லை.  விமானத்தில் நாலைந்து முந்திரிப் பருப்பு அடங்கிய பாக்கெட் கொடுத்திருந்தார்கள்.  அந்த நாலைந்து முந்திரியைத் தின்று விட்டு, 250 மில்லி தண்ணீரைக் குடித்து விட்டு மூன்று மணிக்குப் படுத்தேன்.   

Empathy என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியும்.  சீனிக்கு (அராத்து) எம்பத்தி கிடையாது.  அன்பு என்ற வார்த்தை என்னைப் போலவே அவருக்கும் பிடிக்காது.  அன்பு என்ற வார்த்தை இன்று வன்முறையாக மாறி விட்டது.  அன்பு என்ற பெயரில் எல்லோரும் ஒருவர் மீது ஒருவர்  வன்முறையை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  அன்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான்.  ஆனால் – இது முக்கியமான ஆனால் – சீனி என்னோடு அன்றைய தினம் ஐகான் ஓட்டலுக்கு வந்திருந்தால் நான் தாகத்திலும் பசியிலும் துடித்திருக்க நேர்ந்திருக்காது. 

என்னை வடசித்தூரிலிருந்து ஐகான் ஓட்டலுக்குக் காரில் கொண்டு வந்தவர் அருணாசலம்.  அவருமே அன்பின் மொத்த வடிவம்.  ஆனால் வினித், அருணாசலம், அருண் பாண்டியன் ஆகிய மூன்று அன்பாளர்கள் வந்தும் எனக்கு அன்றைய இரவு தண்ணீர் கிடைக்கவில்லை.  அன்பே இல்லாத சீனி வந்திருந்தால் தண்ணியும் கிடைத்திருக்கும்.  பழமும் கிடைத்திருக்கும்.  சாருவுக்குத் தேவைப்படும் என்று எடுத்து வந்திருப்பார் சீனி.  இது ஒரு ரூம் பாய் செய்யக்கூடிய வேலை என்கிறார் சீனி.   அதெல்லாம் எந்த ரூம் பாயாலும் செய்ய முடியாது.  சரியாகச் சொன்னால், சீனியை மட்டும் நான் பார்த்திராவிட்டால் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போயிருக்கலாம்.  சும்மா சொல்லவில்லை.  ஒரு சின்ன ஊருக்கு ஒரு இலக்கிய நிகழ்வுக்காகப் போகிறேன். இரண்டு நாள் இருப்பேன்.  அங்கே போனதும் குடிக்க வேண்டும் என்று தோன்றியது.  அந்தச் சிற்றூரில் நான் குடிக்கும் சீலே வைனுக்கு எங்கே போவது?  நூறு ரூபாய் சரக்கை வாங்கிக் குடித்தேன்.  ஒரு வாரத்துக்கு முதுகு வலி.  சரியாகத்தான் போட்டிருக்கிறான், குடி குடியைக் கெடுக்கும் என்று. 

இன்னொரு முறை இன்னொரு சிற்றூருக்கு சென்றேன்.  வெறும் கையோடுதான் செல்ல இருந்தேன்.  சீனிதான் போன் செய்து இரண்டு வைன் பாட்டில் வாங்கிக் கொண்டு செல்லுங்கள் என்றார்.  தப்பினேன்.  உடல் வலி எதுவும் வரவில்லை.  இது எதுவும் ரூம் பாய் செய்யக் கூடிய வேலை இல்லை.  இன்னொரு விஷயம், சீனி கொடுத்த யோசனையால்தான் என் சீலே பயணம் சாத்தியம் ஆயிற்று.  இப்படி நூற்றுக்கணக்காக சொல்லிக் கொண்டே போகலாம். 

இந்தத் தண்ணிக் கதையைக் கேட்டுக் கேட்டு சனிக்கிழமை அன்று ஸ்ரீராம் பதினாறு வாட்டர் பாட்டில்களை வாங்கிக் கொண்டு வந்தார். என்னங்க இது அந்யாயம், பதினாறு பாட்டிலா என்றேன்.  இருக்கட்டும், தேவைப்படும் என்றார் ஸ்ரீராம். அந்த பாட்டில்கள் என்ன ஆயின என்று அப்புறம் சொல்கிறேன்.   

Empathy வேறு; ஒரு வேலையை எடுத்தால் அதை முறையாகவும், பொறுப்பாகவும் செய்வது வேறு.  என் வீட்டில் பத்து பூனைகள்.  அவந்திகாவுக்கு மனிதர்களை விடவும் பூனைகளே பிடித்தம்.  அவந்திகா அன்பின் மொத்த வடிவம்.  ஆனால் பூனைகளுக்கான தண்ணீர்ப் பாத்திரம் எப்போதுமே குப்பை மிதக்கத்தான் கிடக்கும்.  நான் மட்டுமே மூன்று அல்லது நான்கு வேளை தண்ணீரை மாற்றுவேன்.  வீட்டிலேயே இருக்கும் பணியாளர்களிடம் கூட சொல்லிப் பார்ப்பேன்.  யாருமே செய்ய மாட்டார்கள். 

ஏதோ எனக்கு தண்ணி சாபம் போல.  கோவையிலிருந்து கிளம்பும் போதும் ஒரு தண்ணிப் பிரச்சினை.  ஸ்ரீராம் வாங்கி வந்த பதினாறு பாட்டில்களில் நாலு தீர்ந்து போய் மீதி பன்னிரண்டு பாட்டிலும் அறையிலேயே இருந்தன.

திங்கள் கிழமை முன் மாலை மூன்றரை மணிக்கு விமானம்.  ஆனால் கோவை நண்பர்கள் தங்களின் அன்பு மழையில் என்னைத் திக்குமுக்காடச் செய்து விட்டதால் இத்தனை பரிசுப் பொருட்களையும் மலர்க்கொத்துகளையும் எப்படி விமானத்தில் எடுத்துக் கொண்டு செல்வது என்று யோசித்தேன்.  அப்படியே விட்டுவிட்டுப் போகவும் மனம் இல்லை.  அப்போதுதான் ராம்ஜி காரில் சென்னை செல்கிறார் என்று கேள்விப்பட்டு அவர் காரிலேயே சென்று விடலாம் என்று முடிவு செய்தேன். 

நானும் ராம்ஜியும் காயத்ரியும் ஐகான் ஓட்டலிலேயே கீழ்த்தளத்தில் இருந்த உணவகத்தில் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.  ஷாஹுல் ஹமீதும் மீனாம்பிகையும் சுஷில் குமாரும் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள்.  மேலே ஏழாம் தளத்தில் இருந்த என் அறையில் இருந்த என் உடமைகள் அனைத்தையும் அழகுற பெட்டியில் போட்டுக் கொடுத்தவர் ஷாஹுல் ஹமீது.  அந்த வேலை எனக்கு எப்போதுமே வராது. 

ராம்ஜியோடு சென்னை திரும்பிக் கொண்டிருந்த போது வழக்கம் போல் தண்ணீர் தாகம்.  ”டிக்கியில் பன்னிரண்டு பாட்டில்கள் உள்ளன.  காரைக் கொஞ்சம் நிறுத்துங்கள்” என்று ராம்ஜியின் டிரைவர் பத்மநாதனிடம் சொன்னேன்.  அவர் “இல்லை சார், பாட்டிலெல்லாம் அறையிலேயே இருக்கிறது” என்ற ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். 

ஏன் எடுக்கவில்லை?

அதை யாரும் எடுக்கச் சொல்லவில்லையே?

டஜன் பாட்டில்கள் வாங்கினாலும் எனக்குத் தண்ணீர் கிடைக்காது என்று சாபம் போல.   பிறகு ராம்ஜி வைத்திருந்த தண்ணீரை வாங்கிக் குடித்தேன்.