விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 3 Miserere mei, Deus!

1770ஆம் ஆண்டு சிறுவன் மொட்ஸார்ட் தன் தந்தையுடன் ரோமில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்துக்கு ஒரு ஈஸ்டர் தினத்தன்று செல்கிறான்.  அப்போது அவன் வயது பதினான்கு.  அந்தக் காலத்தில் பாதிரிகள் மத்தியில் பிரபலமாக இருந்த ஒரு துதிப்பாடல் Miserere mei, Deus!  (என் மீது கருணை கொள்ளுங்கள், கடவுளே!) ஆனால் அந்தப் பாடலை செயிண்ட் பீட்டர் தேவாலயத்தைத் தவிர வேறு எங்கும் இசைப்பதில்லை.  அந்தப் பாடலை இயற்றியவர் க்ரிகேரியோ அலெக்ரி (Gregario Allegri:1582 – 1652).  அதைக் கேட்டு விட்டு வந்த மொட்ஸார்ட் அன்று இரவே அந்தப் பாடலின் இசைக் கோர்வையை அச்சு அசலாக எழுதி விட்டான்.  இது ஒரு நம்ப முடியாத விஷயமாகக் கருதப்பட்டது.  ஆனாலும் ஐந்து வயதிலேயே மொட்ஸார்ட் தன்னுடைய முதல் இசைக் கோர்வையை எழுதி விட்டார்.  ஆறாவது வயதிலேயே அதை அரசவையிலும் இசைத்துக் காண்பித்தவர்.

அனு, பின்னணியில் ஸ்ரீ

அந்தப் பாடலை எனக்கு அனுப்பினார் அனு என்ற வாசகி.  இவரையும் இவர் அண்ணன் சேகரனையும் நான் வெள்ளிக்கிழமை இரவு அராத்து புத்தக வெளியீட்டு விழாவில்/ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத் தொடக்க விழாவில் பார்த்தேன்.  முன்பின் பழக்கம் இல்லாவிட்டாலும் சேகரன் மற்றும் அனுவின் பேச்சு என்னை வெகுவாக ஈர்த்து விட்டது.  இருவரையும் நான் சனிக்கிழமையும் ஞாயிறு அன்றும் பார்த்தேன்.  ஞாயிற்றுக்கிழமை இருவரும் என்னிடம் பேசியது எனக்கு ஒரு புதிய அனுபவம்.  அவர்கள் என் எழுத்தை ஏதோ சொர்க்கத்திலிருந்து அவர்களுக்குக் கிடைத்தது போல் கொண்டாடினார்கள்.  அவர்கள் என்னோடு பேசும்போது அவர்கள் கண்கள் கலங்கின.  கைகள் நடுங்கின.  இருவரும் ஒருவித பரவச உணர்வில் இருப்பதை நான் முற்றாக உணர்ந்தேன். எழுத்து ஒருவரை இந்த அளவுக்கா பாதிக்கும் என்று இருந்தது. 

வெள்ளிக்கிழமை இரவு அராத்து புத்தக அறிமுக விழா மற்றும் ஆட்டோநேரட்டிவ் தொடக்க விழா முடிந்ததும் நானும் சில நண்பர்களும் நடனம் ஆடினோம்.  அதில் ஒரு பாடல் ஜார்ஜ் மைக்கேலின் கேர்லஸ் விஸ்பர்.  மிக மிக மென்மையான பாடல்.  அதற்கு நான் ஆடியது எனக்கே பிடித்திருந்தது.  அனுவும் நான் மிக நன்றாக ஆடியதாகச் சொன்னார்.  நீங்களும் என்னோடு ஆடியிருக்கலாமே என்றேன்.  கூச்சம் என்றார்.  யாரோ ஒரு ஆடவர் என்னோடு ஆடினார்.  யார் என்று ஞாபகம் இல்லை.  பெண்களுக்குத்தான் இன்னும் கூச்சம் போகவில்லை.  ஆனால் எங்கே ஆடக் கூடாதோ அங்கே ஆடுகிறார்கள்.  பள்ளிச் சிறுமிகளும் மணமகள்களும் குத்துப் பாடலுக்கு ஆடிக் கொண்டிருக்கும் கண்றாவியை அடிக்கடி பார்க்கிறேன். 

என்னை மூன்று தினங்களும் ஒரு குழந்தையைப் போல் கவனித்துக் கொண்ட விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களுக்கும், என் வாசகர் வட்ட நண்பர்களுக்கும் இந்த இரண்டு பாடல்களையும் சமர்ப்பிக்கிறேன்.  விஷ்ணுபுரம் நண்பர்கள் எண்ணிக்கையில் அதிகம்.  எனக்கோ பெயர்கள் மறந்து விடும்.  இருந்தாலும் முடிந்தவரை ஞாபகப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.  என்னோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து கவனித்துக் கொண்ட குருஜி சௌந்தர் மற்றும் காளி ப்ரஸாத், மீனாம்பிகை, ஷாகுல் ஹமீது, லெ.ரா.வைரவன், சுஷீல்குமார், அரங்கா, செந்தில் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.  அதோடு என் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த அருணாசலம், கணேஷ் அன்பு, விக்னேஷ், ராஜா வெங்கடேஷ், ஸ்ரீதர், வினித், அருண் பாண்டியன், மனோகரன் மாசாணம், மனாசே ராஜா மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. 

பதினெட்டு அன்று மேடையில் என் நன்றியுரையின் போது ஒரு பெரிய தவறு செய்து விட்டேன்.  அவந்திகாவின் பெயரை விட்டு விட்டேன்.  அந்த உரையைக் கேட்டால் கொலைவெறி ஆகி விடுவாள்.  ஏற்கனவே அவளை அழைத்துக் கொண்டு வராததில் கடும் கோபத்தில் இருந்தாள்.  உனக்கு எப்போதுமே உன் நண்பர்கள்தான் முக்கியம் என்று வேறு குற்றம் சாட்டிக் கொண்டே இருப்பாள்.  மேலும், அவள்தான் என் முதல் பதிப்பாளர்.  ஸீரோ டிகிரி கையெழுத்துப் பிரதியைத் தூக்கிக் கொண்டு நானும் அவளும்தான் திருவல்லிக்கேணியில் தெருத் தெருவாக அலைந்திருக்கிறோம்.  பதிப்பாளரைத் தேடி அல்ல.  அச்சகத்தைத் தேடி.  அந்தக் கதையைக் கொஞ்சம் என் பேச்சினூடே சொல்லியிருக்கலாம்.  பேச்சு இன்னும் கொஞ்சம் சுவாரசியமாகியிருக்கும். நகைகளை விற்று விற்றுத்தான் ஒவ்வொரு நூலாகப் பதிப்பித்துக் கொண்டே இருந்தேன்.  இருந்தோம். 

இன்னொரு விடுபடல், மனுஷ்ய புத்திரன்.  இதை சுட்டிக் காட்டியது யார் தெரியுமா?  ஜெயமோகன்.  என்ன இருந்தாலும் உங்கள் பதிப்பாளர், அவர் பெயரையே விட்டு விட்டீர்களே என்று நான் பேசி முடித்ததும் சொன்னார் ஜெ.  வேண்டுமென்று விடவில்லை.  மறதிதான் காரணம்.  இல்லாவிட்டால் அவந்திகாவின் பெயரை விடுவேனா?  அவள் அந்த உரையைக் கேட்டால் என் கதி என்ன ஆவது? 

இன்னொரு முக்கிய விடுபடல், அராத்து.  அராத்து இல்லாததால் வெள்ளிக்கிழமை இரவு எனக்கு நடந்த கூத்தையே சொல்லியிருக்கலாம்.  செம நகைச்சுவையாக இருந்திருக்கும்.  இதற்கிடையில் அனு வேறு எனக்காக உரித்த மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஒரு மூட்டை பழம் கொண்டு வந்திருக்கிறார்.  கூச்சத்தின் காரணமாக ஆட்டோநேரட்டிவ் தொடக்க விழா பண்ணை வீட்டில் இருந்த ஏராளமான பழங்களுடன் வைத்திருக்கிறார். 

இனிமேல் எந்தப் பரிசாக இருந்தாலும் அதை என் கையில் கொடுத்து விட்டு, அது என் அறை வரைக்கும் போய்ச் சேர்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

பதினெட்டு அன்று விழா நடந்த அன்றே என் பிறந்த நாளும் என்பதால் மேடையிலேயே கேக் வெட்டினேன்.  அதில் சியர்ஸ் என்று எழுதி இரண்டு வைன் கோப்பைகளும் வரையப்பட்டிருந்தன.  எனக்காக.  அந்தப் பெயர் தெரியாத நண்பரைக் கட்டி அணைத்து ஒரு முத்தமிடுகிறேன்.  விஷ்ணுபுரம் விழாவில் இப்படி எப்போதாவது நடந்திருக்கிறதா?  இதை அனுமதிக்கும் ஜெயமோகனின் ஜனநாயக உணர்வுக்கும் என் நன்றி. 

இது அனைத்தையும் சாத்தியப்படுத்தி, என் வாழ்வில் மறக்க முடியாத பிறந்த நாளாக டிசம்பர் 18, 2022 அன்றை நிகழ்த்திய ஜெயமோகனுக்கும் விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. 

விரியும் கனவுகள்- விஷ்ணுபுரம் 2022 | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)