சிறுகதைப் பட்டறை

பாண்டிச்சேரி அருகில் உள்ள ஆரோவில் வன இல்லத்தில் வரும் 28 மற்றும் 29 தேதிகளில் நடக்க இருக்கும் சிறுகதைப் பட்டறைக்கு யார் யார் வருகிறீர்கள்? வினித்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

சிறுகதைப் பட்டறையில் மூன்று சிறுகதைகள் குறித்து விவாதிக்கப்படும்.

ஆண்டன் செகாவின் வான்கா. இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எங்கே என்று எனக்கு எழுதிக் கேட்காதீர்கள். தேடினால் பத்து நொடியில் கிடைக்கும்.

இரண்டாவது கதை மௌனியின் அழியாச் சுடர்.

மூன்று, ஊரின் மிக அழகான பெண். சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி.

நான்காவதாக ஆலன் ராப் க்ரியே (Alain Robbe-Grillet) எழுதிய பீச் என்ற கதையைப் படித்து விட்டு வரலாம். பீச் கதையைத் தொடாமல் என்னால் சிறுகதை பற்றிப் பேச முடியாது. நடுவில் ஒரு நாற்காலி போட்டு சுற்றிவர அறுபது எழுபது பேர் அமர்ந்து ஜே. கிருஷ்ணமூர்த்தி மாதிரி நான் உரையாற்ற மாட்டேன். இதுவரை அப்படித்தான் நடந்தது என்றாலும் இந்த முறை கலந்துரையாடல்தான். கலந்துரையாடல் சொதப்பினால் பழைய மாடலுக்குப் போய் விடலாம்.

தங்குமிடமெல்லாம் அவரவரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். சென்ற முறை மதிய உணவு வாசகர் வட்ட நண்பர்களே ஏற்பாடு செய்தார்கள். சிக்கன் பிரியாணியை யாரும் தொடவில்லை. மட்டன் பிரியாணியில் எனக்கு பீஸ் கிடைக்காமல் வெறும் குஸ்காதான் சாப்பிட்டேன். அதனால் மதிய உணவையும் அவரவரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஸ்விக்கியில் ஆர்டர் போட்டால்அதிக பட்சம் அரை மணி நேரத்தில் வந்து விடும். குறைந்த பட்சம் இருபது நிமிடம். காண்டினெண்டல் லோக்கல் என்று எல்லா உணவும் ஸ்விக்கி மூலம் கிடைக்கும்.

வன இல்லத்துக்கு வாடகையில் என் பங்கு பத்தாயிரம் ரூபாயைக் கேட்டு வினித் முந்தாநாள் செய்தி அனுப்பினார். அனுப்பி மூன்றாம் நிமிடத்துக்குள் அனுப்பி விடுவேன். பணம் என்றால் நான் அதிவிரைவில் செயல்படும் ஆள். ஆனால் இந்த முறை இன்னும் அனுப்பவில்லை. எனக்கே இதுதான் நிலை. அந்த வன இல்லத்தை நாம் சந்தித்துப் பேசுவதற்காகப் பிடித்து வைத்திருக்கிறோம். அவ்வளவுதான் எங்களால் செய்யக் கூடியதாக இருக்கிறது.

மூன்று கதைகளையும் படிக்காமல் பட்டறைக்கு வர அனுமதி இல்லை. படித்திருந்தால் மட்டுமே வரலாம். பெண்களும் வரலாம்.

என் சீலே பயணத்துக்குப் பொருளுதவி செய்பவர்களாக இருந்தால் இரவில் வாசகர் வட்ட நண்பர்களுடன் நடக்கும் உரையாடலில் கலந்து கொள்ளலாம். மற்றவர்கள் பகலில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். இரவில் வேண்டாம். என்னோடு முப்பது ஆண்டு காலமாகப் பழகிய ஒரு நண்பரை உடன் வைத்துக் கொண்டு ஒரே ஒரு நாள் பிரிட்டிஷ் எம்பயர் என்ற பியரை ராஜபாளையத்தில் சாப்பிட்டேன். அந்த நண்பர் டீட்டோட்டலர். அவர் அப்போது என்னைக் குறித்து சொன்ன அபிப்பிராயங்களினால்தான் ஒரே வாரத்தில் அன்பு நாவலை எழுதினேன். எனக்கு எழுதுவதற்கு ஏற்கனவே பல கண்டெண்ட் உள்ளது. தியாகராஜாவை முடிக்க வேண்டும். எனவே புதிது புதிதாக வந்து கண்டெண்ட் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தொடர்பு கொள்ள வினித்தின் தொலைபேசி எண்: 84384 81241