ஒளி முருகவேள்

என் வாழ்வில் ஒரு ஒளியாய்ச் சேர்ந்தவர் ஒளி என்று நாங்கள் செல்லமாக அழைக்கும் ஒளி முருகவேள். அவர் ஒரு புகைப்படக் கலைஞர் மற்றும் ஒளிப்பதிவாளர். ஒளி என்பது புனைப்பெயர் அல்ல. அவர் தந்தை பெயர் ஒளி என்று ஆரம்பிக்கும். தந்தை மறைமலை அடிகளின் மாணவர்.

ஒளியைப் போன்ற சாத்வீக மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை. செல்வகுமார், குமரேசன் இருவரும் கூட சாத்வீகம்தான் என்றாலும் ஒளி அவர்களை விட சாத்வீகம். என் திட்டுகளையும் கூட சிரித்துக் கொண்டே கேட்டுக் கொள்வார். அப்படி ஒரு மனிதரை நான் பார்த்ததில்லை. அவருக்கு இன்று பிறந்த நாள். வாழ்த்த முடியவில்லை. நான் வேறொரு ஒளியைக் காணச் சென்று ஒளியில் ஐக்கியமாகி, சிரமப்பட்டு விடுபட்டு புத்தக விழாவுக்கு வந்தேன்.

ஒளியின் வாழ்வில் மகிழ்ச்சி பெருகட்டும், என்றும் அவர் மகிழ்ச்சியிலேயே திளைக்கட்டும் என பிரார்த்திக்கிறேன். பிறந்த நாளை முன்னிட்டு அவர் ஃபேஸ்புக்கில் எழுதியதை இங்கே பகிர்கிறேன். தாய்லாந்தில் மேகாங் நதிக்கரையில் நாங்கள் இருவரும் நின்ற காட்சியின் நிழல்படம் கீழே.

மற்றொரு முக்கியமான விஷயம். அன்பு நாவலை நான் ஒளி முருகவேளுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். அதுவே அவருக்கு என் பிறந்த நாள் பரிசு.

சாரு

இன்று என் பிறந்தநாளன்று என்னை மனமுவந்து வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி!
37 ஆண்டுகள். அதில் 25 வரை சென்னையில். மீதி பாம்பே, கோவா, அமெரிக்கா, மெக்சிகோ, துபாய்.. மீண்டும் 2020ல் நிரந்தரமாக சென்னை. ஒரு முழுச்சுற்று முடிந்த களைப்பு இருந்தாலும் கால்கள் ஓரிடத்தில் நிற்க மறுக்கின்றன. பயணங்களே வாழ்வாக இருக்கவேண்டுமென்ற ஆசை என்னை விடுவதாக இல்லை. அதை செய்யவிடாமல் கோவிட் சிறைபடுத்தியது. இறப்பை அருகில் கொண்டு வந்து காண்பித்து நம் சிறு வாழ்வின் உண்மை உணர்த்தியது. 
பிறந்த முதலே மனிதர்கள் என்னை ஒரு விசித்திரனாகவே கண்டு வந்துள்ளனர். Weird என்ற ஆங்கிலச் சொல் மூலமாகத்தான் என்னை அடையாளப்படுத்துகின்றனர். நேரில் யாராவது பிறந்த நாள் வாழ்த்து சொன்னால்கூட நன்றி என்று எனக்கு சொல்ல வராது. காரணம் ‘ந’வில் வாய் திக்கி நிற்கும். தேங்க்கியூ என்றால் ‘தே’வில் திக்கி நிற்கும். புதிதாக செல்லுமிடங்களில் என் பெயரையே எனக்கு சொல்ல வராது. திக்கித்திணறும்போது முறைத்துவிட்டு போவார்கள் அல்லது பெரிதாய் சிரிப்பார்கள். சிலர் என்னைப்போல் நடித்தே காட்டுவார்கள். திக்குவாயோளி ஊமத்தாயோளி ஊமக்குசும்பன் ஊமத்திருட்டுக்கோட்டு என்றெல்லாம் கூட அழைப்பார்கள்.
நான் பேச நினைத்தபோது பேச மறுத்த என் நாவும், பேச்சு வரும்போது கேட்க மறுத்த மனிதர்களும்தான் என்னை weird ஆக்குகிறது என நினைக்கிறேன். Being weird is the best way to be here என்று நாளும் எனக்கு உணர்த்தி வருகிறது இவ்வுலகு. 
பேசாமல் அமைதியாய் இருந்து பழக்கப்பட்டுவிட்டதால் கேள்வி கேட்டாலொழிய பேசுவதில்லை என்றாகிவிட்டது. மனிதர்களைவிட நாய்களுடனும் இயற்கையுடனும் இசையுடனும் இருப்பதே பேரின்பமாய் இருக்கிறது. உணர்ச்சியற்ற நிலைப்பாட்டில் நெடுங்காலம் இருந்து திடீரென உணர்வு பெற்ற இருப்பு. தேக்கிவைத்த உணர்வுகள் பீறிட்டு வெடித்து சிதறி கோரமாய் உருபெற்று நிற்கும் நிலை. அதில் ஆழ் அமைதியும் உண்டு அர்த்தமற்ற அரக்கத்தனமுமுண்டு. Enjoy this imbalance. Embrace this weirdness என்றொரு psychiatrist என்னிடம் சொன்னார். Live in pain, pain is creativity என்றும் ஒருவர் சொன்னார். அடங்க மறுக்கும் நிலையில் இருந்துகொண்டே தன்னில் அடங்கி ஒடுங்கும் நிலை எனக்கு குறிக்கோளற்றறிருப்பதே குறிக்கோள். 
இப்படியாய் நானிருக்க என்னிடம் தொடர்ந்து அன்பு செலுத்தியும் என் weirdnessஐயும் சேர்த்து என்னை அரவணைத்தும் ஊக்குவித்தும் வாழும் அன்புள்ளங்கொண்ட அனைவருக்கும் நன்றி சொல்லி தீராது. நல்ல செய்தி என்னவென்றால் நன்றி சொல்ல இப்போது திக்குவதில்லை. திக்கித்திரிந்து திமிர்கொண்டபின் திக்குவதேயில்லை. நன்றி நன்றி! 

ஒளி முருகவேள்