நீதி போதனையும் இலக்கியமும்

நீதி சொன்னால் அது இலக்கியத்தில் மட்டம் என்று எல்லோருக்கும் ஒரு கருத்து உண்டு.  எனக்கும்தான்.  இலக்கியம் ஒன்றும் நீதி போதனை அல்ல.  திருடன் மணியன் பிள்ளை என்ற சுயசரிதத்தைப் படித்தால் யாருக்கும் திருடவே தோன்றாது.  சார்வாகனின் முடிவற்ற பாதையைப் படித்தால் யாருக்கும் அடுத்தவர் பணத்தின் மீது ஆசை வராது.  அறம் படித்தால் யார் வயிற்றிலும் அடிக்கத் தோன்றாது. 

ஆனால் காமரூப கதைகள், ராஸ லீலா, ஸீரோ டிகிரி, ஓப்பன் பண்ணா எல்லாம் படித்தால் அதிலிருந்து நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய நீதி என்ன? அறம் என்ன?  ஒன்றுமே இல்லை. 

இல்லை.  அது அப்படி இல்லை.  எல்லா இலக்கியப் படைப்புமே தமக்குள் சிலபல நீதிகளையும் அற மதிப்பீடுகளையும் கொண்டிருக்கவே செய்கின்றன.  சில வெளிப்படையாக இருக்கின்றன. சில உள்ளீடாகக் கொண்டிருக்கின்றன. 

ஸீரோ டிகிரியையும் ஓப்பன் பண்ணாவையும் படித்தால் முன்னதில் ஓர் பிரபஞ்ச ஓர்மையையும் பின்னதில் வாழ்வின் அபத்தம் என்ற தத்துவ நோக்கையும் பெறுகிறோம்.  இது நம்முடைய ஆழ்மனதில் ஒரு துறவு மனோபாவத்தை உண்டாக்குகிறது.  இதுவும் நீதிதானே?  ஆக, இவ்வுலகில் எழுதப்படும் எல்லா எழுத்துமே ஒரு செய்தியைத்தான் கொண்டிருக்கிறது. 

அந்த வகையில் அன்பு நாவலும் ஒரு செய்தியைத் தருகிறது.  அது, நான்காயிரம் ஆண்டு மனித வரலாற்றில் எந்த தீர்க்கதரிசியும் சொல்லாத ஒரு செய்தி.  உங்கள் வாழ்வில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தப் போகும் செய்தி.  நீங்கள் பின்பற்றுவீர்களோ இல்லையோ, ஆனால் ஒரு அன்பான செயலைச் செய்யத் தொடங்கும்போது இந்த நாவல் உங்கள் கண் முன்னே நிற்கும்.  அதில் எனக்கு சந்தேகமே இல்லை.  ஏனென்றால், கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் தமக்குள் அன்பு செலுத்துவதாகக் கூறிக் கொண்டு ஒருவரை ஒருவர் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  அதைப் பிளந்து காண்பிக்கிறது அன்பு நாவல்.  அதைக் கட்டுடைக்கிறது அன்பு நாவல். 

இன்று ஸீரோ டிகிரி அரங்குக்கு வாருங்கள்.  நாலரையிலிருந்து ஒன்பது வரை அங்கே இருப்பேன்.  புத்தகத்தில் கையெழுத்திட்டுத் தருகிறேன்.