இலங்கைப் பயணம்

ஏப்ரல் 22ஆம் தேதி இலங்கை செல்கிறேன். இதுதான் என்னுடைய முதல் இலங்கைப் பயணம்.

24 அன்று மட்டக்களப்புவில் நடக்க இருக்கும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறேன். ஒரு வாரம் நடக்கும் புத்தக விழாவில் தினமும் கலந்து கொள்வேன். அதற்குப் பிறகு இரண்டு வாரம் இலங்கையைச் சுற்றிப் பார்க்க நினைக்கிறேன். எங்கே போகலாம், எங்கே தங்கலாம் என்று எந்த யோசனையும் இல்லை. இந்த மாதக் கடைசியில் கோவா செல்லும்போது அந்தத் திட்டத்தைப் போடலாம் என்று உத்தேசித்திருக்கிறேன்.

புத்தக விழா தவிர வேறு எங்கும் கூட்டங்களில் பேசுவதைத் தவிர்த்து விடலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், 2000இல் பாரிஸில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். பேச ஆரம்பிக்கும்போது ஒரு பெண் கவிஞர் எழுந்து “நீங்கள்தான் நிர்வாணமாக எழுதுகிறீர்களே? இப்போதும் நிர்வாணமாக இருங்கள் பார்ப்போம்” என்றார். இப்போது சொல்லியிருந்தால் சட்டை பேண்ட்டைக் கழற்றியிருப்பேன். அப்போது பயந்தாங்கொள்ளி. ரொம்பவே அரண்டு விட்டேன். அது போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம் என்று கருதியே மட்டக்களப்புவைத் தவிர வேறு எங்கும் இலக்கியக் கூட்டங்களில் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். நான் பேசிக் கேட்க வேண்டும் என்றால், ஒரு மொட்டை மாடியில் அல்லது ஒரு வீட்டுக் கூடத்தில் தரையில் அமர்வோம். ஒத்த மனமுடைய நண்பர்களாக இருந்தால் பேசுவோம். ஆறு மணி நேரம் கூட என்னால் தடையின்றிப் பேச முடியும். சண்டை பிடிப்பதற்குக் கூட்டம் எதற்கு? எனக்கு ஒரு சென்னை புத்தக விழாதான் ஞாபகம் வருகிறது. எடுத்த எடுப்பில் ஒரு ஆள் என்னை “நீ ஒரு செக்ஸ் எழுத்தாளன்” என்று குற்றம் சாட்டினார். நான் செருப்பால் அடிப்பேன் என்று சொல்ல ஒரே கலாட்டாவாகப் போய் விட்டது. கூட்டம் நடக்கவில்லை. இதை இலங்கை வரை போய் செய்ய வேண்டுமா? என் எழுத்தின் மீது வெறித்தனமான விருப்பமும் கொலை செய்யக் கூடிய அளவுக்கு வெறுப்பும் வாசகர்களிடம் உள்ளதை நான் அறிவேன். சல்மான் ருஷ்டிக்கு சமீபத்தில் நடந்தது என்னை மிகவும் பாதித்தது. நான் தொடர்ந்து இலக்கியக் கூட்டங்களில் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இது எல்லாம் ஆரம்பித்தது நான் போட்ட நாடகத்திலிருந்து. அது ஒரு கொலைவெறித் தாக்குதல்.

அதனால் 2006இல் நான் பாரிஸ் சென்ற போது இலக்கியக் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. ஷோபாவையும் கலாமோகனையும் பார்த்து விட்டு வந்து விட்டேன்.

எனவே இலங்கையில் மட்டக்களப்பு தவிர மற்ற ஊர்களில் இலக்கியக் கூட்டங்களைத் தவிர்த்து விட்டு நண்பர்களுடன் பேசலாம் என்று பார்க்கிறேன். கொழும்புவில் சில சிங்கள எழுத்தாளர்களையும் இயக்குனர்களையும் பார்க்கத் திட்டமிட்டுள்ளேன்.

என்னைத் தொடர்பு கொள்ள:

charu.nivedita.india@gmail.com