ஒரு புதிய நாவல்… என்.எஃப்.டி.யில்

மிக மும்முரமாக பெட்டியோ நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். நாளைக்குள் முடிக்க வேண்டும் என்பது திட்டம். இன்று மூன்றாவது நாள். நான்கு நாள்களில் ஒரு நாவல் எழுதியது இப்போதுதான். அன்பு நாவலை பத்து நாளில் எழுதினேன். ஆனால் அதில் ஒரு நாற்பது சதவிகிதம் இணைய தளத்தில் உள்ளது. இப்போதைய பெட்டியோ நாவலில் இரண்டு பக்கம் மட்டுமே தளத்தில் இருக்கிறது. மற்றவை அனைத்தும் புதியது. அராத்துவுக்கே தெரியாது. அனோஜன் மற்றும் ப்ரஷாந்த் இருவருக்கும் மட்டுமே தெரியும். அதிலும் சிலது அவர்களுக்கும் தெரியாதது. நாவலில் சில பகுதிகள் eroticஆக இருக்கும். அது அவ்வாறாகத் தீர்மானிக்கப்பட்டது. என் கையில் இல்லை.

இலங்கையில் எனக்குப் பேருதவி செய்த நண்பர்களுக்கு நான் இன்னும் ஃபோன் செய்யவில்லை. நாவலை முடித்ததும் அழைப்பேன். தொடர்ந்து அவர்களோடு தொடர்பில் இருப்பேன். அநேகமாக டிசம்பரில் இலங்கை வருவேன். என்னுடைய செலவிலேயே வருவேன் என்பதால் என்னை வசை பாடுபவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்.

நாவலை என்.எஃப்.டி. மூலமே வெளியிடுவேன். காரணம், தமிழின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவரான இரா. முருகனின் நாவலே 200 பிரதிகள்தான் வெளியிடப் போவதாக வந்த அறிவிப்பைக் கண்டேன். என்னுடைய மிக முக்கியமான நூலான அ-காலம் கூட 200 பிரதிகள் விற்றிருக்குமா என்பது சந்தேகம்தான். என்.எஃப்.டி. மூலம் வெளியிட்டால் பல அனுகூலங்கள் உண்டு. அது பற்றி அராத்து நிறைய எழுதியிருக்கிறார்.

நாவலை முடித்து விட்டுத் தொடர்பு கொள்கிறேன்.

பெட்டியா தான் தலைப்பு. ட்டி என்பதே சரியான உச்சரிப்பு. சிங்களம் தமிழ் இரண்டிலும் புலமை பெற்ற ஒருவரின் தீர்மானமான கூற்று. கொழும்பிலும் உள்ள பப்பின் பெயர் Patioதான். Padio இல்லை. சம்பவம் அங்கேதான் நடந்தது என்பதாலும் செல்லக்குட்டீ என்பது ஒரு குறியீடு என்பதாலும் அந்தத் தலைப்பு.