”அராஜகமானது, காலரா போல் தொற்றிக்கொள்ளக் கூடியது, கோபப்படுத்தக் கூடியது, அதன் எல்லா அம்சங்களிலும் தீவிரத்தன்மை கொண்டது, இதுவரை ஒருபோதும் பார்த்திராத அளவுக்கு உடல் இன்பத்தைக் கொண்டாடும் கற்பனைகளைக் கொண்டது, வெறித்தனமான கடவுள் மறுப்புக் கொள்கையைப் பேசுவது – சுருக்கமாகச் சொன்னால் இதுதான் என் எழுத்து. இதற்காக நீங்கள் என்னைத் திரும்பவும் கொல்லலாம். அல்லது, நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால், நீங்கள் என்ன செய்தாலும் நான் என்னை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.”
சமூகம் அவரைக் கொல்ல முடிவு செய்தது. முதலில் அவரை மனநோய் விடுதிகளில் அடைத்தும், அடுத்து அவரை அவர் விரும்பியபடியே மறதியின் சவக்குழிகளில் தள்ளியும்.
-இப்படித்தான் ஸிமோன் தெ பூவா மார்க்கி தெ ஸாத் பற்றிய தன் கட்டுரையைத் தொடங்குகிறார். மார்க்கியே அப்படித்தான் எழுதியிருக்கிறார். ”என் சமாதி மூடப்பட்ட பின், அதன் மீது புல் பூண்டுகளும் விருட்சங்களும் முளைத்துப் படர்ந்து பூமியின் நிலப்பரப்பிலிருந்து என் சமாதியின் அத்தனை தடயங்களும் மறைந்து போகும்; மனிதர்களின் மனங்களிலிருந்து என் நினைவும் துடைக்கப்படுவதைப் போல…”
தடயங்களை அழித்தது மார்க்கியின் மகன். மார்க்கி தெ ஸாத் எழுதிய எல்லா நாள்குறிப்புகளும் காணாமல் அடிக்கப்பட்டன. அவர் எழுதிய கடைசி நாவல் Les Journées de Florbelle ou La Nature dévoilée (The Days of Florbelle; or, Nature Unveiled)-இன் பத்து தொகுதிகளையும் மார்க்கியின் மகன் தீ வைத்துக் கொளுத்தி விட்டான்.
(தமிழிலும் சில எழுத்தாளர்களுக்கு அப்படி வேறு விதமாக நடந்திருக்கிறது. சார்வாகன் தான் சாகும் தருணத்தில் தான் ஆயுள் முழுவதும் எழுதிய கவிதைகளை எனக்கு மின்ன்ஞ்சல் செய்து அதை எந்தப் பதிப்பகத்திலாவது கொடுத்து பிரசுரிக்க முடியுமா என்று கேட்டார். மின்ன்ஞ்சல் என்பதால் கடிதம் என்னிடம் இருக்கிறது. நானும் ஸீரோ டிகிரியில் கொடுத்தேன். ஆனால் இடைப்பட்ட காலத்தில் சார்வாகன் இறந்து விட்டார். இருந்தாலும் அதைப் பிரசுரிப்பதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்திருந்தேன். இதற்கிடையில் சார்வாகனோடு நீண்ட காலம் பழகிய ஒரு யோக்கியர் ஸீரோ டிகிரி பதிப்பகத்தை அணுகி அதை ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் பிரசுரிக்க்க் கூடாது என்றும், அதற்காக அவர் சார்வாகனின் சகோதரரின் ஒப்புதலைப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார். ஸீரோ டிகிரி என்ற பெயரை மாற்றினால் அதைப் பிரசுரிப்பதற்கு அனுமதி தருவதாகவும் சொன்னார்.
அதற்குப் பிறகு அந்தக் கவிதைத் தொகுதி வரவே இல்லை. எழுத்தாளர்களை உயிரோடு புதைப்பது என்றால் இதுதான்.
எஸ். சம்பத்தின் இடைவெளி நாவலுக்கும் இதேதான் நடந்த்து. பிரசுரிக்க்க் கூடாது என்று குடும்பத்தார் தடை.
மார்க்கியின் நிலைமைக்கும் இங்கே உள்ள நிலைமைக்கும் உள்ள ஒரே வித்தியாசம், இங்கே எரிக்க மாட்டார்கள். உயிரோடு அல்லது உயிர் போன பிறகு புதைத்து விடுவார்கள்.
என்னுடைய நாவல்களுக்கும் அந்த கதி நேரலாம். அதனால் யார் தடுத்தாலும் அவற்றை வெளியிட்டே தீருமாறு ஸீரோ டிகிரி பதிப்பகத்திடமும், அவர்கள் தயங்கினால் நீங்கள் செய்ய வேண்டும் என்று சீனியிடமும் கேட்டிருக்கிறேன். என் எழுத்தைத் தடை செய்ய என் குடும்பத்துக்கு உரிமை கிடையாது.)
மார்க்கி தெ ஸாத் ஏன் அப்படிச் சொன்னார்? நான் மனித மன்ங்களிலிருந்து காணாமல் போய் விடுவேன் என்று அவர் சொன்னது அவருடைய முன்னறிவிப்பு அல்ல, விருப்பம். ஏன் அப்படி விரும்பினார்?
அகோரா என்ற புத்தகத்தில் ஒரு அகோரி வருகிறார். அந்நூலை எழுதிய ராபர்ட் ஸ்வபோதா அந்த அகோரிக்கு விமலானந்தா என்று ஒரு புனைப்பெயரை இடுகிறார். அந்த அகோரி தனக்கென்று ஒரு அமைப்பையோ சீடர்களையோ – ஏன், ஒரு நூலைக் கூட அடையாளமாக வைக்கவில்லை.
ஏனென்றால், என் தர்சனத்தைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு மனிதர்கள் தகுதியானவர்களாக இல்லை என்றார் விமலானந்தா. மனிதர்கள் யாவரும் பணத்தை வணங்குபவர்களாகவும், ஏமாற்றுப் பேர்வழிகளாகவும் இருக்கிறார்கள் என்றார். உதாரணமாக, என்னிடமிருக்கும் ஏராளமான சொத்துக்களை என்னுடைய சீடனாகவும் ஆடிட்டராகவும் இருப்பவனே சுருட்டிக் கொள்வான் என்றார். அவர் இறந்த பிறகு அவர் சொன்னபடியே நடந்தது.
அந்த விமலானந்தாவைப் போலவே மார்க்கி தெ ஸாத்- உம் நினைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ’மனித குலச் சிந்தனையில் இதுவரை நடந்திராத கண்டுபிடிப்புகளைச் சொல்கிறோம், இந்த மனிதர்களோ நம்மைப் பிடித்து சிறையிலும் மனநோய் விடுதியிலும் தள்ளுகிறார்களே’ என்று அவர் நினைத்திருக்கலாம். அதன் காரணமாகவே தன் பெயரும், எழுத்துக்களும் மனித ஞாபகத்திலிருந்து மறைந்து விட வேண்டும் என்று அவர் சொல்லியிருக்கலாம்.
ஆனால் அவர் நினைத்தபடி நடக்கவில்லை. நீட்ஷே, ஃப்ராய்ட் போன்ற சிந்தனையாளர்களை பெருமளவு பாதித்தவராக இருந்தார் மார்க்கி தெ ஸாத். அதன் காரணமாகவே அவர் ஒரு மகத்தான தீர்க்கதரிசி என்று ஃப்ரெஞ்ச் சிந்தனை உலகில் அவர் பெயர் மீண்டும் நிறுவப்பட்டது. ஏனென்றால், மார்க்கி தெ ஸாத் இல்லையேல் நீட்ஷேயிலிருந்து நகீஸா ஓஷிமா (Nagisa Oshima) வரையிலான பெயர்களை நாம் கேள்விப்பட்டிருக்கவே முடியாது. சாரு நிவேதிதா என்ற பெயரையும்.
மார்க்கி தெ ஸாத்-இன் எழுத்துக்கள் ஏன் எரிக்கப்பட்டன என்பதற்கான விடையை நாம் மார்க்கி பற்றிய ஜார்ஜ் பத்தாயின் ஆய்விலிருந்து புரிந்து கொள்ளலாம். பத்தாய் சொல்கிறார்: இந்த உலகம் இரண்டு அடிப்படைகளைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒன்று, மேட்டர். இன்னொன்று, ஸ்பிரிட். (உடல் மற்றும் ஆன்மா என்று புரிந்து கொள்ளலாமா?) மார்க்கி மேட்டர் பற்றி எழுதினார். (மேட்டர் என்ற வார்த்தையை நீங்கள் இங்கே சிலேடையாகவும் எடுத்துக்கொள்ளலாம். பத்தாய்க்கும் தமிழ்நாட்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!)
ஆனால் சரித்திரத்தில் ஆன்மா பற்றி எழுதுபவர்களுக்குத்தான் பெயர். தம் சம காலத்தவர் பலர் தர்சனம் என்றும் ஆன்ம ஞானம் என்று புல்லரித்துக்கொண்டிருந்த போது தஞ்சை ப்ரகாஷ் உடல் பற்றியும் உடலின் வேட்கை பற்றியும் எழுதினார். அதனால்தான் தமிழ்கூறு நல்லுலகம் அப்படி ஒரு எழுத்தாளர் இருந்தார் என்பதையே கண்டு கொள்ளவில்லை.
பொதுவாகவே உலகில் உள்ளொளி பற்றி எழுதுபவர்களே உயர்ந்த கலையை வெளிப்படுத்துபவர்களாகவும் உடல் பற்றி எழுதுபவர்கள் கீழாகப் பார்க்கப்படுவதும் ஒட்டு மொத்தமாக மறக்கடிக்கப்படுவதும் இதனால்தான்.
ஜப்பானிய சினிமாவை எடுத்துக் கொண்டால் அகிரா குரஸவாதான் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். குரஸவாவின் படங்களில் போரும் சண்டைகளும் நிறையவே இருந்தாலும் அவற்றின் உள்ளோட்டம் ஆன்மீக தர்சனம்தான். ஆனால் கொதார் குரஸவாவை வெறும் adventure படங்கள் என்று ஒதுக்கி விட்டு Kenji Mizoguchiயைத்தான் உண்மையான ஜப்பானியத் திரைக் கலைஞர் என்கிறார்.
இதைவிட இன்னும் வலுவான உதாரணம், ஜப்பானிய இயக்குனர் நகீஸா ஓஷிமா. குரஸவாவை ஜப்பானே கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில் ஓஷிமாவின் In the Realm of the Senses என்ற பட்த்தை ஜப்பான் தடை செய்த்து. இன்றளவும் அந்தப் பட்த்தின் முழுமையான வடிவத்தை ஜப்பானில் பார்க்க முடியாது. பட்த்தை ஜப்பானில் எடுத்து முடித்து விட்டு ஓஷிமா அதை ஃப்ரான்ஸுக்கு அனுப்பித்தான் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளைச் செய்து முடித்து வெளியிடவும் முடிந்தது.
இந்த எல்லா விஷயங்களையும் நாம் மேட்டர், ஸ்ப்ரிட் என்ற பிரிவினைக்குள் வைத்துப் புரிந்து கொள்ளலாம்.
***
வீடு நாவலிலிருந்து ஒரு நகைச்சுவைத் துணுக்கு:
”என் நிலைமையைப் பார். இத்தனை சாமான்களையும் புது வீட்டுக்கு மாற்ற வேண்டும். என்னதான் மூவர்ஸ் அண்ட் பேக்கர்ஸ் அதைச் செய்தாலும் மற்ற வேலைகளை யார் செய்வது? எனக்கு ஒரு ஆள் துணை கூட இல்லையே?” என்று புலம்பிக்கொண்டிருந்தாள் என் மனைவி.
”அவ்வளவுதானே, இதெல்லாம் ஒரு பிரச்சினையா? என் நண்பன் எக்ஸ் தன் மனைவியோடு வந்து உதவி செய்வதாகச் சொல்லியிருக்கிறான். வரச் சொல்லுகிறேன்.”
உண்மையில், ”நான் என் கணவன் எக்ஸோடு வருகிறேன்” என்று என்னிடம் சொல்லியிருந்தது ஒய்தான். எக்ஸ் அல்ல. ஒய் சொன்னால் எக்ஸ் சொன்ன மாதிரிதான். அது வேறு விஷயம்.
என்ன, உங்களுக்குப் புரியவில்லையா?
ஒய் ஒரு அழகி (இந்தக் குறிப்பு இங்கே ரொம்ப முக்கியம்.) பத்து ஆண்டுகளாக என் வாசகி. அவள் காதலன் எக்ஸ் ஒரு ஆணழகன். அவனும் என் பத்தாண்டுக் கால வாசகன். இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். ஒருநாள் ஒய் என்னைத் தொலைபேசியில் அழைத்து, எக்ஸை அழைத்துக்கொண்டு வந்து வீடு மாற்றுவதற்கு உதவி செய்யட்டுமா என்று கேட்டாள்.
கேட்டுச் சொல்கிறேன் என்றேன்.
அதனால்தான் சந்தர்ப்பம் வந்த போது கேட்டேன்.
இந்த வீட்டுக்குப் பெண்கள் வரக் கூடாது.
அவ்வளவுதான் என் மனைவி சொன்ன பதில். நான் வாயை மூடிக்கொண்டேன். ஒய்யை அழைத்து இனிமேல்தான் விஷயத்தைச் சொல்ல வேண்டும். எக்ஸை மட்டும் அனுப்பு, நீ இந்தப் பக்கமே திரும்பி விடாதே என்று.
இப்படி ஒவ்வொரு கதவையாக அடைத்தால் பிறகு எப்படி ஒத்தாசை செய்ய மனிதர்கள் வருவார்கள்?
இப்படியான ஒரு தாலிபான் அரசுக்குக் கீழேயிருந்துதான் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
***
சந்தாவைப் புதுப்பியுங்கள். குறைந்த பட்ச சந்தா 300 ரூ. நன்கொடையாக அதற்கு மேலும் அனுப்பலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொருத்தது.
ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)
***
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
வங்கி விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai