கனவு இல்லமும் ஒரு நூலகமும்

வீடு மாற்றிக்கொண்டிருக்கிறோம். இதில் பெரிய பிரச்சினையாக இருப்பது என் நூலகம்தான். என்னிடம் சுமாராக பத்தாயிரம் நூல்கள் உள்ளன. இதில் கால்வாசி புத்தகங்கள் உலகில் ஓரிரண்டு இடங்களில்தான் கிடைக்கும். உதாரணமாக அந்தோனின் ஆர்த்தோவின் காதலி Colette Thomas. அவருடைய சுயசரிதை The Testament of the Dead Daughter. அந்தப் புத்தகம் லண்டன் நூலகத்தில்தான் இருந்தது. அதைத் தவிர வேறு எங்குமே இல்லை. பாரிஸின் உலகப் புகழ் பெற்ற நூலகமான பொம்ப்பிதூவிலும் இல்லை. அமெரிக்காவிலும் இல்லை. அதைப் பதிப்பித்த பதிப்பாளரும் கை விரித்து விட்டார். ஃப்ரான்ஸ் முழுவதும் என் நண்பர்கள் தேடினார்கள். கடைசியில் அத்தனை பிரபலம் இல்லாத ஒரு சிறிய நூலகத்தில் இருந்ததை தர்மிணியும் அவர் மகனும் கண்டு பிடித்து பிரதி எடுத்து அனுப்பினார்கள்.

பேரரசர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றை புலவர்களைக் கொண்டு எழுதுவார்கள். அக்பர் கதை நமக்குத் தெரியும். அம்மாதிரி புலவர்களைத் தன் அரசவையிலிருந்து அடித்து விரட்டி விட்டார் ஔரங்ஸேப். அவருக்கு முகஸ்துதி பிடிக்காது. புலவர்களையும் பிடிக்காது. ஆனால் அவர் காலத்தில் இரண்டு பேர் தங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்கள். அது ஔரங்ஸேபுக்கே தெரியாது. ஒருவர் படைவீரர். இன்னொருவர் ஒரு சராசரியான வியாபாரி. பனார்ஸி தாஸ் என்று பெயர். அந்த சுயசரிதைகளில் ஔரங்ஸேபின் காலமும் அக்காலகட்டத்திய வாழ்க்கையும் தெரிகிறது. அந்த இரண்டு நூல்களும் எங்கேயும் கிடைக்காமல் கடைசியில் மும்பையில் உள்ள ஒரு கருவூலத்திலிருந்து என் வாசக நண்பர் மனோஜ் பிரதி எடுத்து அனுப்பினார்.

என் நூலகத்தில் உள்ள பத்தாயிரம் நூல்களில் ஆயிரம் நூல்கள் இப்படிப்பட்டவைதான். விலை மதிக்க முடியாதவை. எங்கேயும் கிடைக்காதவை.

இப்படித்தான் பல எழுத்தாளர்களின் நூலகங்கள் உள்ளன. ஆனால் அவர்கள் சொந்த வீடு இல்லாமல் லோல் படுவதைக் கருதி குமுதத்தில் தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினேன். முக்கியமான எழுத்தாளர்களுக்கு வீடு தாருங்கள் என்று. அப்போது இறையன்பு முதன்மைச் செயலாளராக இருந்தார். முதல்வர் ஒரே வாரத்தில் அதைச் செயல்படுத்தினார். கனவு இல்லம் தருவதாக அறிவித்து அதை மற்றவர்கள் போல் கிடப்பில் போட்டு விடாமல் உடனடியாக நடைமுறையிலும் கொண்டு வந்தார்.

ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால், அந்தக் கனவு இல்லம் பெறுவதற்குத் தகுதி சாகித்ய அகாதமி விருது வாங்கியிருக்க வேண்டும்.

அடக் கடவுளே, சாகித்ய அகாதமி விருது வாங்குவதை விட நோபல் விருது வாங்குவது எளிதாயிற்றே? நோபல் கிடைத்தால் நானே பலருக்கும் கனவு இல்லம் வழங்குவேனே சாமி? மேலும், சாகித்ய அகாதமி வாங்குவதற்கு பலருக்கும் முறைவாசல் செய்ய வேண்டும். அதைவிட சுலபம் சினிமாவுக்கு வஜனம் எழுதுவது. அப்படி எழுதினாலும் நானே பலருக்கும் கனவு இல்லம் வழங்க முடியும். அதெல்லாம் வேண்டாம் என்றுதானே இப்படி வாழ்கிறேன்?

இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், என் முப்பதாண்டுக் கால நண்பரான இறையன்பு முதன்மைச் செயலராக இருந்தும் எனக்குக் கனவு இல்லம் வழங்கப்படாததற்குக் காரணம் ஒன்று உள்ளது. அரசு அதிகாரத்தில் உள்ள என் நண்பர்கள் இரண்டு மூன்று பேரும் கடுமையான நாணயத்தையும் நேர்மையையும் பின்பற்றுவர்கள். அதில் இறையன்பு முதன்மையானவர். அதனால் எக்காரணம் கொண்டும் என் பெயரை சிபாரிசு செய்வதில் அவர் ஈடுபட மாட்டார். சரி, வேறு அதிகாரிகள் இருந்தால் என் காரியம் நடக்குமா என்றால், அந்த அதிகாரிகளுக்கோ அரசுக்கோ என் பெயரே தெரியாது. ஆக மொத்தத்தில், என் நண்பர்கள் அதிகாரத்தில் இருந்தாலும் எனக்குப் பயன் இல்லை. நண்பர்கள் அல்லாதவர்கள் அதிகாரத்தில் இருந்தாலும் எனக்குப் பயன் இல்லை. ஆக, இந்தக் கனவு இல்லம் திட்டத்துக்கு அடிகோலிய எனக்குக் கனவு இல்லம் கிடைப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

இதேதான் எழுத்தாளர்கள் வாசகர்களிடம் பணம் கேட்கும் விஷயத்திலும் நடந்தது. அந்த வேலையை முதல்முதலாக ஆரம்பித்து வைத்தது நான்தான். வாசகர்களும் உதவினார்கள். ஆனால் எனக்குக் கிடைத்த பெயர் இண்டர்நெட் பிச்சைக்காரன். இப்போதோ பெரும்பாலான எழுத்தாளர்கள் வாசகர்களிடம் பணம் கேட்கிறார்கள். சென்ற மாதம் ஒரு அதிர்ச்சி. ஏதோ கோனார் நோட்ஸ் மாதிரி ரெண்டு மூணு புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து சுட்டு எழுதிய ஒருவர் – அவர் பெரும் செல்வந்தர், ஆரம்ப காலத்திலிருந்தே ஐ.டி.யில் பணி புரிகிறார் – அவரும் தன் உடல்நலம் கெட்டு விட்டது என்று லட்சக்கணக்கில் பணம் கேட்டு ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார். அடப் பாவிகளா, அம்பானியே பணம் கேட்டால் அப்புறம் நானெல்லாம் என்னய்யா செய்வது என்று நினைத்துக்கொண்டேன்.

இப்படி எல்லா விஷயத்திலும் நான் முன்னோடியாக இருந்தும் எனக்கு அதனால் எந்தப் பலனும் கிடைப்பதில்லை.

இந்த இடத்தில் எனக்கு தி.ஜ. ரங்கநாதன் என்ற எழுத்தாளரின் ஞாபகம் வருகிறது. அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம். சுதந்திரத்துக்கு முன்னால் சென்னையில் ஒரு காங்கிரஸ் மாநாடு. காந்தி, நேரு போன்ற பெருந்தலைவர்கள் வந்திருக்கிறார்கள். மூன்று நாள் மாநாடு. தி.ஜ. ரங்கநாதன் இளைஞன். அங்குமிங்கும் அலைந்து அலைந்து வேலை செய்கிறார். மாநாடு முடிந்ததும் பரபரப்பாக வீட்டுக்குக் கிளம்ப எத்தனிக்கிறார். அப்போது மாநாட்டுத் தலைவர் ஒருவர் “மூன்று நாள் இரவு பகலாக வேலை செய்திருக்கிறாய்? இருந்து நிதானமாக சாப்பிட்டு விட்டுத்தான் போயேன்” என்கிறார்.

“இல்லை தலைவரே, உடனே வீட்டுக்குப் போக வேண்டும். அவசரம்.”

“அப்படி என்ன அவசரம்?”

”காலையில் என் கைக்குழந்தை இறந்து விட்டது. உடனே போய் ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க வேண்டும்.”

”அடப்பாவி, நீ மனுசனாய்யா?”

“இல்லை தலைவரே. நான் தொண்டன்.”

அப்படிப்பட்ட ரங்கநாதன் பின்னாளில் நிறைய சிறுகதைகள் எழுதினார். பத்திரிகைகளில் பணியாற்றினார். நிறைய மொழிபெயர்ப்புகள் செய்தார். தியாகி பென்ஷன் கூட வாங்கிக் கொள்ளவில்லை.

இறுதிக் காலத்தில் வறுமை. அவர் மனைவி மைலாப்பூரில் வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்த்து குடும்பத்தை நடத்துகிறார். குடியிருக்க வீடு இல்லை. ரங்கநாதனின் நண்பர்கள் அரசாங்கத்திடம் சொல்லி ஒரு வீட்டுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். 600 சதுர அடியில் மைலாப்பூர் குயில் தோப்பில் அவருக்கு ஒரு வீடு கொடுக்கப்படுகிறது. குயில் தோப்பு என்ற பெயரில் உள்ள அழகு அந்த இடத்தில் கிடையாது. அது ஒரு சேரி. ஹிட்லரின் வதைமுகாம் மாதிரி இருக்கும். நான் வசிக்கும் மைலாப்பூர் வீட்டுக்கு எதிரேதான் உள்ளது.

தி.ஜ.ரங்கநாதனுக்கு வீடு கொடுக்கும்போது அந்தப் பத்திரத்தின் எண்ணை ஒரு சிலேட்டில் எழுதி அவரைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி ஒரு புகைப்படம் எடுத்து அரசுக் கோப்பில் சேர்க்கப்பட்டது. ஜான் ஜெனே ஜெயிலில் அடைக்கப்பட்ட போது அவருக்கும் அப்படி ஒரு சிலேட்டு கொடுக்கப்பட்டது. அதில் அவரது கைதி எண் எழுதப்பட்டிருக்கும். அந்தப் புகைப்படம் உலகப் புகழ் பெற்றது. தி.ஜ.ர.வுக்கு நம் சமூகம் கொடுத்த பரிசின் புகைப்படம் கீழே.

புதுமைப்பித்தனுக்குக் காச நோய். நோய்க்கு மருந்து வாங்கக் காசு இல்லை. இத்தனைக்கும் தினமணியில் உதவி ஆசிரியராக இருந்தவர். அவரும் அவர் மனைவி கமலாவும் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் அனைத்திலும் பட்டினிக் கதைகள். கண்ணே கமலா, நீ மூன்று நாள் பட்டினி என்பதைக் கேட்டு என் மனம் பதறுகிறது. நானும் இரண்டு நாள் பட்டினி.

நம்ப முடியாவிட்டால் கண்மணி கமலாவுக்கு என்ற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்.

கடைசியில் புதுமைப்பித்தன் காச நோய் முற்றிய நிலையில் மருந்து சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற நிலையில், தன் நண்பர் ஒருவரை விட்டு தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். தமிழின் மகத்தான சிறுகதைகளை எழுதி, தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிய அந்த மகத்தான கலைஞனால்- வாழ்நாள் முழுவதும் எழுதிய ஒருவரால் – தன் கைப்பட ஒரு கடிதம் எழுத முடியாத நிலை.

“இந்தச் சமூகத்துக்காகவும் தமிழுக்காகவும் என் வாழ்நாள் முழுவதும் உழைத்திருக்கிறேன். இப்போது மருந்து வாங்கக் காசு இல்லை. எனக்கு உதவி செய்ய வேண்டியது உங்கள் கடமை.”

இதுதான் கடிதத்தின் சாரம். மறுநாள் புதுமைப்பித்தன் இறந்து விடுகிறார்.

ஆனால் இப்போதைய எழுத்தாளர்களின் நிலை அப்படி இல்லை. சமூகம் காரணம் இல்லை. சமரசமே காரணம். சமரசம் என்றதும் எல்லா எழுத்தாளர்களும் என்னை அடிக்க வந்து விடாதீர்கள். எல்லோரும் ஒவ்வொரு வேலையில் இருக்கிறார்கள். நானும் இருபது ஆண்டுகள் அரசாங்கப் பணியில் இருந்தேன். பலர் இன்று சினிமாவுக்கு எழுதுகிறார்கள். புதுமைப்பித்தனின் நிலை இன்றைய எழுத்தாளர்களுக்கு இல்லை. என் நிலை ரொம்பவும் விசேஷம். பெட்டியோ நாவலை நாலு லட்சம் கொடுத்து வாங்கினீர்கள். இரண்டு பேர் இரண்டு லட்சத்துக்கு வாங்கினார்கள்.

ஆனால் என்னுடைய நூலகத்தைப் பராமரிப்பதுதான் பெரும் செலவை இழுக்கும் காரியமாக இருக்கிறது. அதனால்தான் அசோகமித்திரன் நூல்களை வைக்க இடம் இல்லை என்று தன் புத்தகங்களையெல்லாம் தூக்கி நண்பர்களிடம் கொடுத்து விட்டார்.

க.நா.சு.வுக்கு நடந்ததுதான் மன்னிக்கவே முடியாத குற்றம். தமிழ் எழுத்தாளர்களிலேயே அதிக புத்தகங்கள் வைத்திருந்தவர் அவர்தான். ஆனால் அவர் காலத்துக்குப் பிறகு அந்த நூலகத்தை வைக்க இடம் இல்லை என்று அவர் குடும்பத்தார் அந்த நூல்கள் அனைத்தையும் ஒரு பதிப்பாளரிடம் கொடுத்து விட்டனர். அதற்குப் பிறகு அந்த நூல்களின் கதியே தெரியவில்லை.

இருபத்தைந்து வயதிலிருந்து நாற்பது வயது வரை நான் என் நூல்களை என் கட்டிலுக்கு அடியில் ட்ரங்க் பெட்டியில் வைத்திருந்தேன். அவந்திகா வந்த பிறகு அவை இரும்பு அடுக்குகளில் இடம் பெயர்ந்தன. இந்த எழுபது வயது வரை அந்த இரும்பு அடுக்குகளிலேயே இருந்து மக்கிக்கொண்டிருக்கின்றன. மூடப்பட்ட மர அடுக்குகளில் இருந்தால் அவை இன்னும் நூறு ஆண்டுகள் வரும். இனிமேலாவது என் நூலகத்தை மர அடுக்குகளில் வைக்கலாம் என்று நேற்று பூராவும் மரச்சாமான் கடைகளில் அலைந்தேன். பெப்பர் ஃப்ரை என்ற கடையில் அடித்து விரட்டாத குறை. அத்தனை விரோத மனோபாவம். ஆன்லைன் வியாபாரத்தில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள். பிறகு வேக்ஃபிட் போனோம். நல்ல வரவேற்பு. ஆனால் அவர்களிடம் இருப்பதைத்தான் வாங்க முடியும். நம் அளவுக்கு செய்து கொடுக்க இயலாது.

பிறகு வழக்கம்போல் ராயப்பேட்டை கடைகளுக்கு வந்தோம். தேக்கு மரத்தில் வாங்கலாம் என்று ஆசை. ஒரு அடுக்கு நாற்பதாயிரம் ரூபாய். எனக்குப் பத்து அடுக்கு வேண்டும். அவசரமாக ஒன்றுக்கு வருகிறது என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டேன்.

இன்னொரு பிரச்சினை. எனக்கு அடுக்குகள் ஐந்தே நாளில் தேவை. கடைகளில் பதினைந்து நாள் சொல்கிறார்கள். அதுவரை புத்தகங்களை மூட்டையில் வைத்தால் பூனைகள் துவம்சம் பண்ணி விடும். புத்தகங்களின் பக்கம் போகாது. ஆனால் மூட்டையாக இருந்தால் விடாது.

கடைசியாக என் நண்பனும் நீண்ட நாள் வாசகனுமாகிய தட்சிணாமூர்த்தி ஐந்து நாள்களில் செய்து தருகிறேன் என்று சொல்லி விட்டார். தட்சிணாமூர்த்திக்கு என் நெஞ்சு நிறைந்த அன்பும் ஆசீர்வாதமும் உண்டு. ஆகும் செலவில் ஒரு பகுதியை நான் தருகிறேன் என்றார். ஒருக்காலும் ஏற்க முடியாது என்று சொல்லி விட்டேன். அவரும் என்னைப் போலவே ஒரு அன்றாடங்காய்ச்சி. வேலை செய்தால்தான் கூலி. அதனால் “நீங்கள் உங்களுடைய உழைப்பைத் தருகிறீர்கள், அதுவே போதும்” என்று சொல்லி விட்டேன்.

எனவே நூலகத்துக்கான மர அடுக்குகளுக்கு ஆகும் செலவை பண வசதி உள்ள நண்பர்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா? பயப்பட வேண்டாம். தேக்கு கருங்காலி எல்லாம் இல்லை. சாதாரண ப்ளைவுட்தான். ஆனால் நல்ல ப்ளைவுட்டாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். ஒரு டஜன் அடுக்குகள் வேண்டும். அதுவே போதுமா என்று தெரியவில்லை. ப்ளைவுட்டாக இருந்தாலும் கடும் செலவாகத்தான் இருக்கிறது. ஒன்றரை லட்சம் ரூபாய்.

முடிந்தவர்கள் பணம் அனுப்புங்கள். சென்ற வாரம் கூட ஒரு மாணவர் – என் நண்பர் – 300 ரூ. அனுப்பியிருந்தார். இனிமேல் அனுப்பாதீர்கள், வேலைக்குப் போன பிறகு இன்னும் அதிகமாக அனுப்புங்கள், பெற்றுக் கொள்கிறேன் என்று எழுதினேன். சிவில் சர்விஸுக்குப் படித்துக்கொண்டிருக்கிறார். எனவே, பணப் பிரச்சினை இல்லாதவர்கள் இந்த நூலகச் செலவில் பங்கு பெறுங்கள்.

என் காலத்துக்குப் பிறகு இந்த நூல்கள் உங்கள் வாசிப்புக்கு வரும். என் வாசகர் வட்ட நண்பர்கள் இதற்கென்று சில ஏற்பாடுகளை யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நூல்கள் ஒருபோதும் வீணாகாது. இந்த நூல்களில் என் ரத்தமும் வியர்வையும் கலந்திருக்கின்றன என்று மாதம் ஒருமுறை சொல்வாள் அவந்திகா. முப்பது ஆண்டுகளாக அவள்தான் இவற்றைத் துடைத்து அடுக்கி வைக்கிறாள். ஒரு முழுநாள் ஆகும். இடையே எனக்கு ஓத்தான் பாட்டும் விழும். (இத்தனை அரிய புத்தகங்களை என் இப்படி தூசி தூசியாய் வைத்திருக்கிறாய்?) இருந்தாலும் இந்த நூல்களின் பராமரிப்பு முழுக்க முழுக்க அவந்திகாவின் பங்களிப்புதான்.

உங்கள் உதவியை எதிர்பார்க்கிறேன்.

இந்தக் கட்டுரையைப் பதிவேற்றம் செய்து முடித்த பிறகு சீனியிடம் ஒரு ஆலோசனை கேட்டேன். அந்த ஆலோசனைக்கு பதில் சொல்லி விட்டு, இந்தப் பதிவில் பணம் கேட்டு எழுதியிருப்பதை மட்டும் நீக்கி விடுங்கள் என்று சொன்னார் சீனி. காரணம், இந்த ஆளுக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் நம்மைத்தானே பணம் கேட்கிறார் என்று நினைத்து விடுவார்கள், அவ்வப்போது பணம் அனுப்புபவர்களுக்கு அலுப்புணர்வு வந்து விடும். இப்போதுதானே திருவண்ணாமலைப் பட்டறைக்கும் பணம் அனுப்பினோம், இப்போது இவர் புத்தக அலமாரி வாங்குவதற்குமா?

அப்படி நினைப்பவர்கள் இந்தப் பதிவைக் கண்டும் காணாமல் கடந்து விடும்படி மிகுந்த பிரியத்துடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்போது சமன் செய்து விட்டதாகத் தோன்றுகிறது. சரியா சீனி?

ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)

ரேஸர்பே மூலமாகவும் அனுப்பலாம்.

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai.