சீனியை நினைத்து பயந்துகொண்டே இதை எழுதுகிறேன். கீழே தரைத்தளத்தில் ஒரு பதினைந்து பூனைகள் உள்ளன. ஒரு பூனைக்குட்டியை கீழே உள்ள பாதுகாவலர்கள் அடித்துக் கொன்று விட்டார்கள். விரிதியானா படம் பார்த்திருப்பதால் அப்படித்தான் நடந்திருக்கும் என்று நம்புகிறேன்.
அந்தப் பதினைந்தில் ஒரு தாய்ப்பூனையும் அதன் மூன்று குட்டிகளும்.
நாங்கள் வீடு மாற்றிக்கொண்டிருக்கிறோம். கடந்த இரண்டு தினங்களாக தாய்ப்பூனையைக் காணவில்லை. குட்டிகளின் வயது ஒரு மாதம். நாள் பூராவும் பசியில் கதறிக்கொண்டிருந்தது. பூனைகளின் பெருந்தாயான அவந்திகா நேற்று அடையாறு காந்திநகர் வீட்டுக்குப் போய் bird net போடும் வேலையில் மும்முரமாக இருந்தாள். பேர்ட் நெட் போடாவிட்டால் எங்கள் பூனைகள் வீட்டிலிருந்து வெளியே பாய்ந்து விடும்.
பூனைகளின் பசிக் கதறல் என்னைப் பதற்றமடையச் செய்துகொண்டிருந்தது. ஆனாலும் எனக்கு பூனைக்குட்டிகளின் பராமரிப்பு பற்றி எதுவும் தெரியாது.
கடவுளிடம் பிரார்த்தித்து விட்டு வேலையில் ஈடுபட்டேன். அவந்திகா வந்தவுடன் சிரிஞ்ஜ் மூலமாக அந்த ஒரு மாதக் குட்டிகளுக்குப் பால் கொடுத்தாள். பாலை வெறுமனே கொடுக்கக் கூடாதாம். வயிறு வீங்கி விடும். தண்ணீர் கலந்து கொடுக்க வேண்டும். (பார்த்தீர்களா?) அதிலும் பாலில் வெதுவெதுவென்ற சுடுநீர் கலந்து கொடுக்க வேண்டும்.
குட்டிகள் அதைக் குடித்து விட்டு அமைதியாகி விட்டன.
தாய்ப்பூனையையும் அடித்து விரட்டியிருப்பார்களோ என்று எனக்கு சந்தேகம். அதன் பெயர் ச்சிண்ட்டூ.
அவந்திகா நாலு தெருக்களில் ச்சிண்ட்டூ ச்சிண்ட்டூ என்று கத்தி அழைத்து தாய்ப்பூனையைக் கண்டு பிடித்து இங்கே கொண்டு வந்தாள். பார்த்தால் தாய்ப்பூனைக்கு நல்ல ஜுரம். அதனால்தான் ஓடிப்போய் இருக்கிறது.
இன்று அதற்கான மருந்து வாங்கி ச்சிண்ட்டூவுக்குக் கொடுத்தாள் அவந்திகா.
நாங்களோ நாளை வீட்டைக் காலி பண்ணுகிறோம்.
இந்த மூன்று பூனைக்குட்டிகளும் நல்ல ஆரோக்கியமாக அழகாக உள்ளன. பால் கொடுக்க வேண்டியதுதான் வளர்ப்பவர்களின் வேலை. உங்களில் யாருக்காவது ஆர்வம் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். அவசரம். நாங்கள் இங்கிருந்து சென்றால், அந்தக் குட்டிகள் பட்டினியால் இறந்து விடும். மற்ற குட்டிகளுக்கு அவந்திகா தினமும் அடையாறிலிருந்து இங்கே வந்து உணவு கொடுத்து விட்டுச் செல்வதாக முடிவு செய்திருக்கிறாள். ஒரு நாளில் ஒருமுறை. ஆனால் ஒருமாதக் குட்டிகள் தாய் இல்லாமல் இறந்து போகும். தாய்ப்பூனை மீண்டும் ஓடி விட்டது. உடம்பு சுகமில்லாமல் குட்டிகளோடு இருக்காது போலிருக்கிறது.
நான் ஒரு பூனை மருத்துவரைத் தொடர்பு கொண்டேன். அவர் ஆரோக்கியமான பூனைகளை எடுத்துக்கொள்வதில்லையாம்.
மிகுந்த கருணையுணர்வோடு இதை எழுதியிருக்கிறேன். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com