உங்களுக்குக் கர்மா தியரியில் நம்பிக்கை இருக்கிறா என்று தெரியாது, ஆனால் பெருமாளுக்கு இருக்கிறது. நம்பிக்கை மட்டும்தான். ஆதாரம் கேட்டால் அவனால் தர முடியாது. அந்த நம்பிக்கையினால்தான் அவனுக்கு இன்னமும் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது என்று அவன் நம்புகிறான். அநேகமாக முக்கால்வாசி இந்தியர்களும் அவனைப் போல்தான் இல்லையா? இல்லாவிட்டால் இந்த ஒட்டு மொத்த தேசமே பைத்தியக்காரர்களால்தான் நிரம்பியிருந்திருக்கும். அப்படி என்ன பிரச்சினை? உங்களுக்கே இதற்குள் தெரிந்திருக்குமே? பூனைகள்தான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, பெருமாள் வசித்த குடியிருப்புக்கு நேர் எதிரே இருந்த ஒரு பிரம்மாண்டமான கட்டிடத்தில் ஏதோ ஒரு மாடி இடுக்கில் சிக்கிக் கொண்டு இரவு முழுவதும் கத்திக் கொண்டிருந்தது ஒரு பூனைக்குட்டி. இரவில் என்ன செய்ய முடியும்? விதியை நொந்தபடி கவலையுடன் காத்திருந்த வைதேகியும் பெருமாளும் காலையில் முதல் வேலையாக அந்தக் குட்டியைக் காப்பாற்றினார்கள். காப்பாற்றிய உடனேயே அதற்கு Bussy என்ற நாமகரணமும் சூட்டப்பட்டது. ஒரு பேச்சுக்குத்தான் காப்பாற்றினார்கள் என்று எழுதியிருக்கிறேனே தவிர வைதேகிதான் ஆட்களை வைத்து கட்டிடத்தின் மேலே ஏறச் செய்து குட்டியைக் காப்பாற்றியது. பெருமாள் மட்டும் தனியாக இருந்திருந்தால் எல்லா இந்தியர்களையும் போலவே சும்மாதான் இருந்திருப்பான். வேறு என்ன செய்வது? அந்தப் பூனையின் கர்ம பலனை அது அனுபவிக்கிறது. (ஆஹா, ஆபத்தான ஏரியாவில் பிரவேசிக்கிறேன் போலிருக்கிறதே? இப்போதுதான் ஒரு இளம் சாமியார் இந்த மாதிரி உளறி ஜெயிலுக்குப் போனான். இந்த விஷயத்தைக் கொஞ்சம் கவனமாகக் கையாள வேண்டும்.) ஃபயர் சர்விஸுக்கு ஃபோன் பண்ணினால் உடனே வந்து உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றி விடுவார்கள். ஆனால் ஃபயர் சர்விஸுக்கு யார் ஃபோன் செய்வது? ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் உடனே சம்பந்தப்பட்ட இலாகாவுக்கு ஃபோன் செய்வது என்ற மேற்கத்திய பழக்கம் இன்னும் இந்தியாவில் வரவில்லை என்றே தோன்றுகிறது. இந்தியர்களின் மனோபாவத்தில் இன்னும் அது வந்து ஒட்டவில்லை. ஒரு கணவன் தன் மனைவியை அடிக்கிறான். தாறுமாறாக அடிக்கிறான். முடிந்தால் அவளும் பதிலுக்கு அடிப்பாளே தவிர போலீஸுக்கு ஃபோன் போடுவது பற்றி யோசிக்கவே மாட்டாள். அப்படியே போட்டாலும் “ஏம்மா நீ என்ன பைத்தியமா, புருசன் பொஞ்சாதி சண்டைக்கெல்லாம் ஃபோன் பண்ணிக்கிட்டு?” என்றுதான் போலீஸ்காரரே கடிந்து கொள்வார்.
குடியிருப்பின் தரைத்தளத்தில் ஒரு டஜன் பூனைகள் வசிக்கின்றன. ”வசிக்கின்றன” என்ற பதம் பூனைகளுக்கு சரியா என சந்தேகமாக உள்ளது. இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். சாப்பாட்டு நேரத்தில் வரும். சாப்பிட்டு விட்டுப் போகும். காலையும் மாலையும். காரணம், வைதேகி. அவள்தான் அந்தப் பூனைகளுக்கு இரண்டு வேளையும் உணவு எடுத்துக் கொண்டு போய் கொடுப்பது. வைதேகிக்குப் பெரிய மனசு. தினமும் ஒரே மாதிரி dry foodஏ சாப்பிட்டால் அவைகளுக்கு அலுப்பாக இருக்காதா என்று கேட்டு, wet food வாங்கித் தரச் சொல்லி அதையும் கொண்டு போய் உலர்ந்த உணவு, ஈர உணவு இரண்டையும் கலந்து கொடுக்க ஆரம்பித்தாள். உலர்ந்த உணவு ஏழு கிலோ ரெண்டாயிரம் ரூபாய் என்றால் ஈர உணவு நூறு கிராம் ஐம்பது ரூபாய். மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். காலையில் ஐந்து பாக்கெட். மாலையில் ஐந்து பாக்கெட். அப்புறம் அதோடு சிக்கனும் சேர்ந்து கொண்டது. சர்வர் சுந்தரம் என்று ஒரு படம். அதில் வரும் நாயகன் கைகளில் பத்துப் பன்னிரண்டு டபரா செட்டுகளை கீழே விழாமல் எடுத்துக் கொண்டு போய் வாடிக்கையாளர்களுக்குத் தருவான். அதே மாதிரி பூனைகள் சாப்பிடுவதற்கான குழிப் பாத்திரங்கள், ஒரு பாத்திரத்தில் வேக வைக்கப்பட்ட சிக்கன் (சூப்போடு), உலர்ந்த மற்றும் ஈர உணவு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சர்வர் சுந்தரம் மாதிரியே படிக்கட்டுகளில் இறங்குவாள் வைதேகி.
குடியிருப்பில் மொத்தம் ஆறு குடும்பங்கள். இதில் ஐந்து குடும்பங்கள் பூனைகளுக்கு எதிரி. அதிலும் இந்தக் குடியிருப்புக்கு சம்பந்தமே இல்லாத எதிர்க் குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண்மணி எதிரியோ எதிரி. வைதேகியைப் பார்த்தவுடன் கன்னாபின்னாவென்று கெட்ட வார்த்தைகளில் ஏச ஆரம்பித்து விடுவாள். இரவெல்லாம் பூனைகளால் தூங்கவே முடியவில்லை. (பொய்) பூனைகள் அவள் வீட்டுக்குள்ளேயே வந்து அட்டகாசம் செய்கின்றன. (பொய்) இன்னும் என்னென்னவோ. நீங்களே யோசித்துப் பாருங்கள். எந்த ஒரு பிராணியும் பசித்தால் மட்டுமே உணவு தேடி வீட்டுக்குள் வரும். இந்தப் பூனைகள்தான் காலை, மாலை இரண்டு வேளையும் வயிறு பொறுக்கத் தின்று விடுகின்றனவே, அப்புறம் எப்படி மேலே சொன்னதெல்லாம் நடக்கும்? எல்லாம் பச்சைப் பொய். சாப்பாட்டு நேரம் தவிர மற்றபடி அந்தப் பூனைகளைப் பார்க்கவே முடியாது. ஆனாலும் வைதேகி அந்தத் திட்டுகளையும் வசைகளையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு சும்மா இருந்து விடுவாள். பதிலே பேசுவதில்லை. ஒரு முறை அந்தப் பெண் வைதேகியை நேரடியாகவே விளித்து, “உங்களைத்தான் திட்டுகிறேன்” என்று சொல்லியிருக்கிறாள். அதற்கும் வைதேகி “பரவாயில்லை” என்று மட்டுமே பதில் சொல்லி விட்டாள். பெருமாளுக்கெல்லாம் அந்த அளவு பொறுமை கிடையாது. பதிலுக்கு இவனும் கெட்ட வார்த்தை சொன்னால் போலீஸ் கேஸ் ஆகி – இதற்கெல்லாம் போலீஸ் உடனே வந்து விடும் – அவனுக்கு மிகப் பெரிய பிரச்சினை ஆகி விடும். பெண்களுக்கும் ஆண்களுக்கும் சண்டை என்றால் ஆண்தான் குற்றவாளி. சட்டம் அப்படித்தான் சொல்கிறது. அதனால் பெருமாள் தன் வீட்டை விட்டுக் கீழேயே செல்வதில்லை.
மேற்படி டஜன் பூனைகளில் ஒன்று, எப்படியோ தெரியவில்லை, இரண்டாவது மாடியின் ஜன்னல் ஓர வெளிச்சத் தடுப்பில் வந்து மாட்டிக் கொண்டு கதறியது. டெட்டியைத் தவிர வேறு எந்தப் பூனைக்கும் பெருமாளோ வைதேகியோ பெயர் வைக்கவில்லை. டெட்டி தெருப் பூனையாக இருந்தாலும் பார்க்க பெர்ஷியன் பூனை போல் இருக்கும். அதன் பழக்க வழக்கமும் கூட பெர்ஷியன் பூனை மாதிரிதான். பூனைகள் என்றால் சண்டை போடும்தானே? டெட்டி போடாது. எந்தப் பூனையாவது சண்டைக்கு வந்தாலும் தள்ளிப் போய் விடும். ஒரே வார்த்தையில் சொன்னால் ஞானி. (வைதேகி வளர்த்த லக்கியும் ஞானிதான், லக்கி அறிமுகம் இனிமேல் நடக்கும், பொறுங்கள்).
டெட்டி பெண் பூனை. சர்வகாலமும் கர்ப்பமாகவே இருக்கும். குட்டி போடுவதுதான் அதன் ஒரே பணி. ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், குட்டிகளைப் போட்டு வளர்த்து எங்கேயாவது கொண்டு போய் விட்டு விடும். குட்டிகளையும் கொண்டு வந்து பூனை எண்ணிக்கையைப் பெருக்கினால் இந்தக் குடியிருப்புவாசிகள் எல்லா பூனைகளையும் அடித்துத் துரத்தி விடுவார்கள் என்று டெட்டிக்கு எப்படித் தெரியும் என்று தெரியவில்லை.
வெளிச்சத் தடுப்புக்காகக் கட்டப்பட்டிருந்த சிமெண்ட் பலகையில் மாட்டிக் கொண்ட அந்தப் பூனையும் டெட்டியைப் போலவே மிகவும் சாது. உடம்பெல்லாம் புள்ளி புள்ளியாக அழகாக இருக்கும். எப்படி அங்கே போய் மாட்டிக் கொண்டது என்று தெரியவில்லை. அது மாட்டிக் கொண்ட காலத்தில் பூனைகளுக்கு உணவு வைப்பது பெருமாளின் வேலையாக இருந்தது. வைதேகி இன்னும் அந்தப் பணியை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. அந்தப் பூனை பெருமாளை காலையிலும் மாலையிலும் பார்க்கும் போது நிராதரவாகக் கதறியது. அதன் கதறல் அவனை நடுங்கச் செய்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்தியாவில் இதுதான் வாழ்க்கை. எல்லா உயிரினங்களுமே எப்போதுமே ஏதாவதொரு வாதையில் கதறிக் கொண்டேதான் இருக்கின்றன. இல்லாவிட்டால் யானை வந்து தன் பழத்தோட்டத்தில் புகுந்து பழத்தைத் தின்கிறது என்பதற்காகப் பழத்தின் உள்ளே வெடிகுண்டை வைப்பானா எவனாவது? அந்தப் பழத்தைத் தின்ற யானை வாயில் வெடி வெடித்துச் செத்தது. பெருமாளுக்குப் பைத்தியம் பிடிக்குமா பிடிக்காதா சொல்லுங்கள்? அந்த நேரத்திலும் கர்மா தியரிதான் அவனைக் காப்பாற்றியது. (ஐயோ, திரும்பவும் கர்மாவா, அதுவும் இந்த இடத்தில்? கடவுள்தான் என்னைச் சிறை தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டும்!)
முதலில் தானாகவே எப்படியாவது குதித்து வந்து விடும் என்றுதான் எதிர்பார்த்தான் பெருமாள். பார்த்தால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கடும் கோடைக்காலம் வேறு. தண்ணீர் இல்லாமலேயே செத்து விடுமே என்று தோன்றியது. அது இருந்த உயரம் அறுபது அடி. ஆனால் நடுநடுவே சுவர்கள் இருந்தன. ஒரு சுவரில் குதித்து அங்கிருந்து இன்னொரு சுவரில் குதித்தால் பக்கத்தில் இருந்த மரத்தில் தாவி விடலாம். அந்த அளவுக்கு அதற்கு புத்தியோ தைரியமோ இல்லை போல் தெரிகிறது. ரொம்பப் பக்கத்தில் ட்ரான்ஸ்ஃபார்மர் இருந்தது. அதிலாவது குதித்து தப்பி விடலாம். அதில் குதிப்பது சுலபம். ட்ரான்ஸ்ஃபார்மருக்கு அருகிலேயே ஒரு சுவர் இருந்தது. பூனை பயத்திலேயே எதுவும் முயற்சிக்காமல் கதறியபடியே இருந்தது. இப்படியே ஐந்து நாட்கள் கடந்தன. ஐந்தாம் நாள் பெய்த மழையில் பூனைக்குக் கொஞ்சம் தண்ணீரும் குளிர்மையும் கிடைத்திருக்கும் என்ற சிறிய ஆறுதல் ஏற்பட்டது. ஆனால் இனியும் தாமதித்தால் பூனை செத்து விடும் என்று பயந்து வைதேகியிடம் சொன்னான். அவள் அவனை விட புத்திசாலி. போலீஸுக்கு ஃபோன் செய்தாள். போலீஸ் ஃபயர் சர்வீஸுக்கு ஃபோன் செய்யச் சொன்னதால் ஃபயர் சர்வீஸுக்குப் பண்ணினாள். பத்தே நிமிடத்தில் ஆறு ஃபயர் சர்விஸ் வீரர்கள் வந்து விட்டார்கள். பக்கத்தில் இருந்து பார்த்தால் தனக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும் என்று வீட்டுக்குள் போய் விட்டான் பெருமாள்.
அவனுக்கு இன்னொரு பயமும் ஏற்பட்டது. இம்மாதிரி உயரங்களில் பூனை மாட்டிக் கொண்டால் வைதேகி அவளுடைய புடவையையோ பெட்ஷீட்டையோ கயிறு மாதிரி சுற்றி மேலேயிருந்து இறக்குவாள். அதைப் பிடித்துக் கொண்டு பூனை மேலே ஏறி விடும். ஆனால் அந்த வீட்டு மொட்டை மாடியிலிருந்து அப்படி எதையும் தொங்க விட முடியாதபடி சாய்வாக ஒரு தடுப்பு கட்டியிருந்தார்கள். அதனால் அப்படி எதையும் தொங்க விடுவது சாத்தியம் இல்லாமல் இருந்தது. கயிறு கட்டித்தான் அந்த வெளிச்சத் தடுப்பு சிமெண்ட் பலகைக்கு இறங்க வேண்டும். மழை பெய்திருக்கிறது. வழுக்கும். பூனையும் பயத்தினால் சீறலாம். அறுபது அடி உயரம். அதிர்ஷ்டவசமாக அம்மாதிரி எதுவுமே நடக்கவில்லை. மொட்டைமாடியிலிருந்து பூனையை விரட்டியிருக்கிறார்கள் வீரர்கள். அது ட்ரான்ஸ்ஃபார்மரில் குதித்து அங்கிருந்து சுவரில் குதித்து ஓடி விட்டது. ஆனால் அந்த ஆறு நாட்களும் அந்தப் பூனை பட்ட அவஸ்தையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மொழி தோற்றுப் போகும்.
எல்லாம் பெருமாளின் முட்டாள்தனம். முதல் நாளே ஃபயர் சர்வீஸுக்கு ஃபோன் செய்திருக்க வேண்டும். அவனை விடுங்கள். அந்தக் குடியிருப்பில் அந்தப் பூனையின் கதறலைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருத்தருக்குக் கூட அது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோன்றவில்லையே? ரொம்பப் பெரிய பாவம் பண்ணியிருந்தால்தான் இந்தியாவில் ஒரு ஆத்மா பூனையாகப் பிறக்கும். நாய்க்காவது குப்பைத்தொட்டியில் ஏதாவது கிடைக்கும். பூனைகளை பெருமாள் குப்பைத்தொட்டியில் பார்த்ததில்லை.
இப்போது புஸ்ஸியை உங்களுக்கு முறையாக அறிமுகம் செய்ய வேண்டும். பிறந்து சுமார் பத்து தினங்களே ஆன குட்டி அது. கறுப்பும் வெள்ளையுமான நிறம். வெள்ளை மூக்கின் இரண்டு பக்கங்களிலும் கறுப்பு மச்சம். வீட்டுக்குக் கொண்டு வந்து காப்பாற்றியாகி விட்ட்து. வீட்டிலும் வெளியிலுமாக வளர்ந்தது புஸ்ஸி. சாப்பிடுவதற்கு மட்டும் படியேறி வீட்டுக்கு வரும். வீட்டுக் கதவைத் திறக்கும் வரை அமைதியாக கதவுக்கு வெளியிலேயே எந்த சத்தமும் போடாமல் அமர்ந்திருக்கும். யாராவது எதேச்சையாக்க் கதவைத் திறந்தால்தான் உண்டு.
முதல் பிரசவத்தில் இரண்டு குட்டிகள் பிறந்தன. இரண்டும் காரில் சிக்கி இறந்து விட்டன. கீழே கார்கள் அதிகம். அதில் ஒருவர் காரை எடுக்கும்போதே ஏதோ ரேஸில் ஓட்டுவது போல் எடுப்பார். சக்கரத்தின் அடியில் படுத்திருந்த குட்டிகள் ரெண்டும் நசுங்கிச் செத்து விட்டன. உடனே வைதேகி அந்த இரண்டு சடலங்களையும் ரகசியமாக அப்புறப்படுத்தினாள். அந்த மரணத்தைப் பார்த்துக் கொண்டிருந்த செக்யூரிட்டிகளுக்குக் கை நிறைய கையூட்டும் கொடுக்கப்பட்டது. யாரிடமும் சொல்லாமல் இருப்பதற்காக. சொன்னால் எல்லா பூனைகளையும் இந்தக் குடியிருப்புவாசிகள் அடித்தே துரத்தி விடுவார்கள். பூனை இருந்தாலே சகுனத் தடை என்கிறவர்கள் பூனை காரில் அடிபட்டுச் செத்தால் என்ன ஆகும்? உங்களால்தான் எல்லாம் வந்தது என்று பெரிய பழியைத் தூக்கி வைதேகி தலையிலும் பெருமாள் தலையிலும் போடுவார்கள்.
ஒருநாள் இரண்டாம் மாடியில் வசிக்கும் ஒருவர் ஏதோ முக்கிய காரியமாக வெளியே சென்று கொண்டிருந்த போது ஒரு பூனை குறுக்கே ஓடியது என்பதால் பக்கத்தில் கிடந்த ஒரு தடியை எடுத்து பூனையின் மீது எறிய அது அந்தப் பூனையின் காலில் பலமாகப் பட்டு கிட்டத்தட்ட மூன்று நான்கு மாதங்கள் அந்தப் பூனையின் ஒரு கால் செயலிழந்து போய் மூன்று காலிலேயே நடமாடிக் கொண்டிருந்தது. பூனையால் காலைத் தரையிலேயே ஊன்ற முடியவில்லை. வீட்டுப் பூனை என்றால் எடுத்துக் கொண்டு மருத்துவரிடம் போகலாம். இதைப் பிடிக்க முடியாது. அந்த மனிதர் தடியை விட்டெறிந்த போது பெருமாள் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தான். தடுக்க இயலவில்லை. எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தது. அடியை வாங்கிக் கொண்டு ஓடியே விட்டது பூனை. அதோடு அது வராது என்றே நினைத்தான். ஆனால் மறுநாளே காலை மடக்கி வைத்துக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் மூன்று கால்களில் நடந்து வந்தது. இனிமேல் அதனால் மரம் ஏறுவதோ சுவர் ஏறித் தாண்டுவதோ முடியாது. சண்டை போடுவதும் முடியாது என்பதால் மற்ற பூனைகளோடு சேருவதை நிறுத்தி விட்டு தனியாக வந்து சாப்பிட்டது. அதனால் மற்ற பூனைகளெல்லாம் சாப்பிட்டுவிட்டுப் போன பிறகுதான் இந்தக் கால் உடைந்த பூனை வரும். இப்படி அதற்குத் தனியாகக் கொடுக்க வேண்டும் என்பதால் வைதேகியின் பூனை நேரம் அதிகரித்தது. இதெல்லாம் போக, டஜன் பூனைகளின் மலக்கட்டிகளையும் அவள்தான் கூட்டி பெருக்கி சுத்தம் செய்து விட்டு வர வேண்டும். அந்த வேலையை அவள் துப்புரவுப் பணியாளர்களிடம் விடுவதில்லை. எல்லாமாகச் சேர்ந்து கீழே போனால் மேலே வர ஒன்றரை மணி நேரம் ஆனது அவளுக்கு.
பெருமாள் கடவுளிடம் வேண்டிக்கொண்டான், பூனையைத் தடியால் அடித்து கால் ஒடிய வைத்தவனின் காலும் ஒடிய வேண்டும் என்று. ஆனால் பெருமாள் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பை விட்டு அடையாறு கிளம்பும் வரை அப்படி எதுவும் நடக்கவில்லை. கடவுளின் கணக்கு வேறு போலிருக்கிறது. யாருக்குத் தெரியும்?
வாசகப் பெருமக்களே, பெருமாளின் கதையை எழுதிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் என் மண்டையில் வேறோர் விஷயம் வந்து உட்கார்ந்து கொண்டு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு வழி பண்ணாமல் இந்தக் கதையைத் தொடர முடியாது போல் இருக்கிறது. அதனால் குறுக்கீட்டைப் பொறுத்துக்கொள்ளுங்கள்.
டேய் டெட்ஸோல், உன்னை பெருமாள் மறந்து இருந்தானாம். உனக்கும் பிரச்சினை இல்லை, அவனுக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் இன்று நீ அவனுக்கு எழுதியிருந்த கடிதத்தைப் படித்து மீண்டும் நீ அவனுடைய மண்டையில் வந்து உட்கார்ந்து கொண்டாயாம். அவனுடைய ஒரு லௌகீகப் பிரச்சினைக்கு நீ கொடுத்திருந்த நல்லுபாயம்தான் காரணம் என்றான். பொதுவாக அவனுடைய லௌகீகப் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைப்பது கொக்கரக்கோதான் என்றாலும், அவனுக்கு பெருமாளைப் போலவே இன்னும் நூற்றியோரு பெருமாள்கள் இருந்து கொண்டு மண்டைக் குடைச்சல் கொடுத்து இப்போது அவன் மண்டையில் ஆயிரம் தேள்கள் வசிப்பது போன்ற நிலைமையில் இருக்கிறான். ஒரே ஒரு பெருமாளின் (வேறு பெருமாள்) ஒரே ஒரு பிரச்சினையை சொல்கிறேன், கேள். கொக்கரக்கோ வைத்திருக்கும் நிறுவனத்தை ஒரு பெருமாள் நடத்திக்கொண்டிருக்கிறான். கொக்கரக்கோ நேரடியாகப் போவதில்லை. நிர்வாகி என்று ஒருத்தன் இருக்கிறான். நம்பிக்கையான கை. கொக்கரக்கோவுக்காக உயிரையும் கொடுப்பான். ஆனால் அந்த நிர்வாகி ஒரு பெருமாள். கதையைக் கேள். கொக்கரக்கோ தன் மகளின் கல்லூரி அட்மிஷனுக்காக பணம் கட்டும் கவுண்டருக்கு முன்னே நிற்கிறான். பக்கத்தில் மனைவி பெருமாள். (அவளுமே பெருமாள் மாதிரிதான். சரியாகச் சொன்னால், வைதேகியும் பெருமாளும் சேர்ந்த மாதிரி ஒரு கலவை.) அப்போது நிர்வாகி பெருமாளிடமிருந்து கொக்கரக்கோவுக்கு ஃபோன். “பாஸ், ஸோ அண்ட் ஸோ நிறுவனத்துக்கு இன்று பணம் கட்ட வேண்டும். நேற்றே கடைசி நாள். பணம் கட்டுவதற்கான பாஸ்வேர்ட் கொடுங்கள்.”
கவுண்டரின் முன்னே நின்று பணத்தை எண்ணிக் கொண்டிருந்த கொக்கரக்கோ “ஒரு நிமிஷம் சார், ஒரு அவசரமான அழைப்பு. இதோ வந்து விடுகிறேன், அதற்குள் நீங்கள் எனக்குப் பின்னால் இருப்பவரை கவனியுங்கள்” என்று சொல்லி விட்டு வெளியே வந்து “ஏண்டா ங்கோத்தா புண்ட மவனே, நான்தான் உன்னிடம் சொல்லிட்டு வந்தேன் இல்லியா, என் மகளுக்கு ஃபீஸ் கட்டப் போகிறேன், எவ்வளவு முக்கியம் என்றாலும் என்னைத் தொந்தரவு பண்ணாதே என்று, அப்படியும் ஏன்டா இப்படித் தாலியறுக்குறே…” என்று ஆரம்பித்து ஒரு ஐந்து நிமிடம்ஆண் பெண் ஜனன உறுப்பை மையப்படுத்தி உபயோகமாகும் அத்தனை வார்த்தைகளையும் சொல்லிக் கத்தி விட்டு மீண்டும் உள்ளே போனான்.
இதெல்லாம் ஜுஜுபி. லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டமாகும் விஷயத்தையெல்லாம் கொக்கரக்கோவின் பேச்சைக் கேட்காமல் அதீத தன்னம்பிக்கையுடன் செய்து சிக்கல் பண்ணுவான் நிர்வாகி பெருமாள்.
சரி, அதையெல்லாம் எழுதினால் நிர்வாகி பெருமாள் என் மீது கோபித்துக் கொள்வான். மட்டுமல்லாம் நமக்கு ஒரு பெருமாளின் கதையே போதும். எதற்கு ஊரிலுள்ள பெருமாளெல்லாம்?
இந்தப் பின்னணியின் காரணமாகத்தான் பெருமாள் இப்போதெல்லாம் லௌகீகப் பிரச்சினைகளுக்கு கொக்கரக்கோவின் உதவியை நாடுவதில்லை. அந்த நிலையில்தான் நீ முன்வந்து அவனுக்கு இந்த உதவியைச் செய்திருக்கிறாய். அதுவும் “இனிமேல் பெருமாளைத் தொடர்பு கொள்ள மாட்டேன்” என்று உன் மனைவிக்கு சத்தியம் செய்து கொடுத்து விட்டு அதை மீறியிருக்கிறாய். பெருமாள் மீது நீ கொண்டிருக்கும் அக்கறை அவன் மனதைத் தொட்டு விட்டதாம்.
ஆனாலும் யாராக இருந்தாலும் அவனோடு பழகுவதற்கு சில முன் நிபந்தனைகள் இருக்கின்றன என்கிறான் பெருமாள்.
அவன், நீ, கொக்கரக்கோ எல்லாம் ஜனன உறுப்பைப் போட்டுப் பேசும் பேர்வழிகள். அதில் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தான் அப்படிப் பேசுவதற்கு இரண்டு காரணங்கள் சொன்னான் பெருமாள்.
அவன் ஊர் ஒரு காரணம். “டேய் ங்கொம்மால ஓக்க, எங்கடா ஆளையே காணும்?” என்றுதான் அவன் ஊரில் காலை வணக்கம் சொல்லிக்கொள்வார்களாம். ஆனால் இருபத்தைந்து வயது வரை அவன் அந்த வார்த்தைகளை உபயோகப்படுத்தியதில்லை. தில்லி சென்றவுடன் ஒட்டிக்கொண்டது. பஞ்சாபிகள் ஒரு காரணம். இன்னொரு காரணம், பொதுவாக உங்களுடைய மொழி தெரியாத பிராந்தியத்தில் வாழ்பவர்கள் தம் மொழியின் ஜன்ன உறுப்பு வார்த்தைகளை தாராளமாகப் புழங்குவார்கள். பெருமாள் இருபத்தைந்து வயதிலிருந்து முப்பத்தைந்து வரை தில்லியில் இருந்ததாலும் இந்தப் பழக்கம் தொற்றியிருக்கலாம்.
“டேய், நம்ம பக்கத்துல நிய்க்கிற பொண்ணோட மொலையப் பாரு… என்னமா துள்ளாட்டம் போடுது…” (பஸ்ஸில் போகும்போது பேசிக் கொள்வது.)
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், த்வனி. த்வனியை வைத்தே தன்னைப் பற்றித்தான் இந்த மதறாஸிகள் பேசிக்கொள்கிறார்கள் என்பதை சில பெண்கள் கண்டு பிடித்து விடுவார்கள். சமயங்களில் உதட்டுச் சாயம் அடித்து வட இந்தியப் பெண்களைப் போல் தோற்றம் கொள்ளும் தமிழ்ப் பெண்களும் உண்டு. அதனால் காமெண்ட் அடிக்கும்போது அவர்களை குஷிப்படுத்தும் விதத்தில்தான் அடிக்க வேண்டுமே தவிர மட்டம் தட்டுவதாக இருக்கக் கூடாது.
சரி, அதெல்லாம் நமக்கு எதற்கு? பெருமாள் போடும் நிபந்தனை என்னவென்றால், நீ என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஜனன உறுப்பு வார்த்தைகளைப் பேசிக் கொள். ஆனால் அதில் ஒன்று கூட பெருமாளை நோக்கி இருக்கக் கூடாது. இருபத்தைந்து வயது வரை பெருமாள் அவன் பெற்றோரால் ஒரு பேரரசனைப் போல் வளர்க்கப்பட்டவன். பிறகு தெருநாயைப் போல் சீரழிந்தவன். தற்சமயத்துக் கதைதான் உனக்கே தெரியும். இந்த நிலையில் நண்பர்களாக இருப்பவர்களும் சேர்ந்து கொண்டு அவனை சூத்தடித்தால் நட்பைத் துண்டித்து விடுவான்.
இதோ பார் டெட்ஸோல், உன் மனதில் பட்டதையெல்லாம் அவனிடம் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. பேசினால் ஃபனால்தான். அவனுடைய நாவல் உனக்கு அரைவேக்காடு என்று தோன்றியதா? சொல்லாதே. அதற்காக அவனுக்கு நீ ஜால்ரா அடிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. அவன் தன்னை ஒரு ஜீனியஸ் என்று நினைத்துக்கொண்டிருக்கிறான். ஒரு ஜீனியஸ் எப்படி அரைவேக்காட்டு நாவலை எழுத முடியும்? நீ சொல்வதை அவன் கொட்டையில் அடித்ததாகத்தான் அவன் எடுத்துக்கொள்கிறான். உன் நாவல் எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டுப் போ. ஒரு தோழி அந்தக் குறிப்பிட்ட நாவலைத் தன்னால் படிக்கவே முடியவில்லை என்றாள். ஆனால் அவன் எழுதிய மற்ற சில நாவல்களை ஓஹோ என்று புகழ்ந்தாள். அன்றிலிருந்து அவளிடம் அவன் தன் எழுத்து பற்றிப் பேசுவதே இல்லை. இருவருக்கும் இடையில் முன்பு உரையாடல் என்பதாக இருந்தது இப்போது soliloquyயாக மாறி விட்டது. அவள் பேசுவாள். இவன் கேட்டுக்கொள்கிறான். அவன் தன் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறான் டெட்ஸோல், அவன் எழுத்து அவன் ஆன்மா. அவன் எழுத்து அவன் குருதி. அதை அரைவேக்காடு என்று சொல்பவனிடமோ, அதை வாசிக்கவே முடியவில்லை என்று சொல்பவளிடமோ அவன் என்ன உரையாட முடியும்? இதில் ஜனன உறுப்பு வார்த்தைகளை வேறு போட்டு அவனைத் திட்டுகிறாய்? வாய்ப்பே இல்லை.
அதனால் இந்த நிபந்தனைக்கு நீ ஒப்புக்கொண்டாயானால் நீ உன் மனைவியிடம் கொடுத்த சத்தியத்தை மீறி அவனோடு நட்பு வைத்துக்கொள்ளலாம். அவன் எழுத்தையோ அவனையோ என்ன வேண்டுமானாலும் திட்டிக் கொள். அவனிடம் சொல்லாதே. அவ்வளவுதான்.
நம் மனதில் உள்ளதையெல்லாம் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு திரிவதாக இருந்தால் நமக்கு ஒரு பயல் தேற மாட்டான். தனியாகவே வாழ்ந்து தனியாகவே கையடித்துச் சாக வேண்டியதுதான். அதற்காக வேஷம் போட வேண்டும் என்று சொல்லவில்லை. அடுத்தவனை நோகச் செய்யும் வார்த்தைகளைப் பேசக் கூடாது. பேசவே கூடாது. அவன் நட்பு நமக்குத் தேவையாக இருக்கும் பட்சத்தில்.
***
இன்னொரு நாளும் முன்பு போலவே இன்னொரு பூனை கார் சக்கரத்தின் அடியில் மாட்டிச் செத்தது. அதே ரேஸ்காரர்தான். அதன் பெயர் சிஸ்ஸி. அதற்கு மூன்று குட்டிகள். தாயை இழந்த அந்த மூன்று குட்டிகளையும் ஒவ்வொன்றாக வாயில் கவ்வி மேலே பெருமாள் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வந்து விட்டது புஸ்ஸி. மூன்றையும் தானே பால் கொடுத்து வளர்த்தது. பால் வருகிறதோ இல்லையோ ஆறு மாதம் பால் கொடுத்தது புஸ்ஸி. மிருக வைத்தியரே அதை நம்பவில்லை. மூன்று குட்டிகளில் இரண்டு பெண், ஒரு ஆண். ஒரு கட்டத்தில் இரண்டு பெண் குட்டிகளும் கர்ப்பமாகி ஆளுக்கு மூன்று குட்டிகள் போட்டன. பூனை உலகில் இன்செஸ்ட் என்ற தடை இல்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். மொத்தம் இப்போது பத்து. ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் உள்ளே பத்து பூனைகளை வளர்ப்பது ஒரு கட்டத்தில் வைதேகிக்கும் பெருமாளுக்கும் சாத்தியமில்லாமல் போனது. குட்டிகள் அநியாயத்துக்குக் கலகம் செய்ய ஆரம்பித்தன. உண்மையில் அதை ஒரு காத்திரமான விடுதலைப் போராட்டத்துடன்தான் ஒப்பிட முடியும். அந்தக் குட்டிகளுக்கு உடனடியாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும். குட்டிகளின் விருப்பம் இல்லாமல் வீட்டில் வைத்து அடைத்துப் போட்டிருந்தாள் வைதேகி. வெளியே போனால் காரில் அடிபட்டுச் செத்து விடும் என்பது அவள் வாதம். அவளைப் பொருத்தவரை அவள் அந்தக் குட்டிகளுக்கு நல்லதே செய்கிறாள்.
குட்டிகள் தாங்கள் நடத்திய விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக கட்டிலில் போய் அமர்ந்து மூத்திரம் பெய்தன. சமையல் பாத்திரங்களைத் தேய்த்து கூடையில் வைத்தால் அந்தக் கூடையில் போய் மூத்திரம் அடித்தன. பிசுக் பிசுக் என்று அடித்து விட்டு ஓடின. குட்டிகள்தானே, மூத்திரம் அடித்ததும் பெரிதாகத் தெரியாது. ஆனால் எல்லா பாத்திரங்களிலும் மூத்திர நாற்றம் எடுக்கும்.
மலஜலம் போவதற்கு ஒரு பெரிய பிளாஸ்டிக் கூடையில் மண் நிரப்பி வைத்திருப்பாள் வைதேகி. அதில்தான் முன்பெல்லாம் அவை மலஜலம் போகும். அந்த மண் வாங்குவது ஒரு பெரிய கதை. பக்கத்திலிருந்த மெரினா பீச்சிலிருந்து ஒரு மூட்டை மண் கொண்டு வந்து கொடுப்பார் செக்யூரிட்டி பவுல். சுமார் ஐந்து கிலோ இருக்கும். அதற்கு அவருக்கு நூறு ரூபாய். நூறு ரூபாய் பெரிய விஷயம் அல்ல. ஆனால் பவுலைப் பிடிப்பதுதான் பெரிய விஷயம். இதோ என்பார். அதோ என்பார். தினமும் அவருக்கு ஃபோன் போட்டுத் தொங்க வேண்டியிருக்கும். பெருமாள் எழுதிக் கொண்டிருக்கும் அறையில்தான் அந்த மலஜலக் கூடை வைக்கப்பட்டிருக்கும். வீட்டில் வேறு இடத்தில் கூடை வைப்பது பாந்தமாக இல்லை. நட்ட நடு ஹாலிலா மலஜலக் கூடையை வைக்க முடியும்? அந்தக் கூடையில் அத்தனை பூனைகளும் மலஜலம் போய், அந்த அறையில் அமர்ந்து எழுதும் அனுபவம் இருக்கிறதே… அதை என்னவென்று சொல்ல? (கர்மா தியரி, கர்மா தியரி…) அதிலும் ஏசியைப் போட்டு அறைக் கதவை சாத்தி வைத்தால் என்ன ஆகும்? கதவை முழுதாக மூடுவதில்லை. கொஞ்சம் இடம் விட்டால்தான் குட்டிகள் உள்ளே வர போக வசதியாக இருக்கும். அந்த மண்ணைக் குப்பைக்கூடையில் சரித்துக் கொட்டி விட்டு, புதிய மண்ணைப் போடும் வேலை காலையிலும் மாலையிலும் நடக்கும். அப்படி சரிக்கும்போது கிளம்பும் நாற்றத்தில் மூச்சு நின்று விடும் போல் இருக்கும். அப்போதுதான் பெருமாளுக்கு பாதாள சாக்கடையில் இறங்கும் சிலர் விஷ வாயுவை சுவாசித்து இறந்து விடும் செய்தி ஞாபகம் வந்தது.
இந்த நிலையில்தான் புஸ்ஸிக்கு ஃபெப்ருவரி 2019-இல் கர்ப்பத்தடை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு பத்தாயிரம் ரூபாய் ஆகும் என்றார் பிராணி வைத்தியர். புஸ்ஸி லக்கியை ஈன்று இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. புஸ்ஸியை அழைத்துக் கொண்டு போனான். போன இடத்தில் ஒரு பெண்மணி தன்னுடைய நான்கு குட்டிகளுக்கு இப்படி கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்ததாகச் சொன்னார். அதில் ஒன்று கர்ப்பப் பையை நீக்கியதுமே இறந்து விட்டதாம். ”என்னது, கர்ப்பப்பையை நீக்குவதா? கர்ப்பத்தடை என்றால் அதற்கான ஊசியைப் போடுவது இல்லையா?” என்றான் பெருமாள் வெகுளியாக.
அப்போதுதான் அவனுக்கு மருத்துவர் ஒரு மணி நேரம் ஆகும் என்று சொன்னதன் அர்த்தமே புரிந்தது. அவன் அங்கே சென்றபோது வாய் மூலமாகக் கொடுக்கும் மருந்து என்றோ ஊசி என்றோதான் நினைத்திருந்தான். அப்புறம்தான் அந்தப் பெண்மணி விரிவாகச் சொன்னார். கர்ப்பப்பையை நீக்குவதற்காக மயக்க ஊசி போடுவார்களாம். சில பூனைகள் மயக்க ஊசியிலேயே செத்து விடும் என்றார் அந்தப் பெண்.
நிலைகுலைந்து போனான் பெருமாள்.
அறுவை சிகிச்சை முடிந்து புஸ்ஸியைப் பார்த்த போது இனிமேல் எந்தக் காரணத்திற்காகவும் எந்தக் காலத்திலும் இப்படி ஒரு படுபாதகச் செயலில் ஈடுபடக் கூடாது என்று முடிவு செய்தான். புஸ்ஸி ஒரு சருகைப் போல் துவண்டு கிடந்தது. மருத்துவர் அதன் கர்ப்பப்பையைக் காண்பித்தார். அடக் கடவுளே, இப்படி என்று தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டானே? ”ஒரு மணி நேரம் இங்கேயே இருந்து புஸ்ஸிக்கு சுய நினைவு வந்ததும் கிளம்புங்கள்” என்றார் மருத்துவர். புஸ்ஸியைக் கூடையில் வைத்து விட்டு மருத்துவமனையின் வெளியில் காத்திருந்தான். ஒரு மணி நேரத்தில் புஸ்ஸி ஈனஸ்வரத்தில் பேச முயற்சித்தது. எடுத்துக் கொண்டு மருத்துவரிடம் சொல்லி விட்டுக் கிளம்பினான். தையல் காய்வதற்காக வயிற்றைச் சுற்றி துணியால் கட்டியிருந்தார். இன்னும் பத்து நாட்களுக்கு புஸ்ஸியை வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்துக் காப்பாற்ற வேண்டும். வெளியே போனால் மற்ற பூனைகளோடு சண்டை போட்டு கட்டு அவிழ்ந்து விட வாய்ப்பு உண்டு. டெட்டியையும் லக்கியையும் நினைத்துக் கொண்டான். அந்த இரண்டும் எந்தக் காலத்திலும் எந்தப் பூனையோடும் சண்டை போட்டதில்லை. புஸ்ஸி வீட்டுக்கு வெளியே வளர்ந்த பூனை அல்லவா? இரண்டு தினங்களில் தெம்பு வந்ததுமே வெளியே செல்வதற்கான விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தது. அதனால் வீட்டில் உள்ள அத்தனை ஜன்னல்களும் அடைக்கப்பட்டன. இரண்டு பால்கனிகளின் கதவுகளும் மூடப்பட்டன. துளிக்கூட காற்று இல்லாமல் வீடே உலைக்களனாய் மாறியது. வாசல் கதவைத் திறந்தாலே வெளியே ஓடுவதற்குத் தயாராக நின்றது புஸ்ஸி. அதனால் பணிப்பெண்ணோ அல்லது பெருமாளோ வைதேகியோ வீட்டுக்குள் வர அல்லது வெளியே போக விரும்பினால் ஒருத்தர் புஸ்ஸியைத் தூக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கதவைத் திறக்க முடியும். இல்லாவிட்டால் வெளியே பாய்ந்து விடும்.
பூனைக்கு வாழ்வு கொடுக்கிறேன் என்று நினைத்து பூனைகளின் வாழ்க்கையைக் குலைத்துப் போட நமக்கு என்ன உரிமை இருக்கிறது என்று மனதில் நினைத்து மருகுவானே தவிர அதை வைதேகியிடம் சொல்ல மாட்டான். வீணாக வருத்தப்படுவாள்.
இடையில் வயிற்றைச் சுற்றிக் கட்டியிருந்த பேண்டேஜை பல்லால் கடித்துப் பிரித்து விட்டது புஸ்ஸி. பேண்டேஜ் துணி வாங்கி, பெருமாள் புஸ்ஸியின் கழுத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வைதேகி அதன் வயிற்றைச் சுற்றி பேண்டேஜ் போடுவாள். ஒரு வாக்கியத்தில் எழுதியாகி விட்டதே தவிர அதெல்லாம் வார்த்தைகளால் விளக்க முடியாத ஆக்கினை. மூவருக்குமேதான். கழுத்தைப் பிடித்து நெறிப்பது போல் பிடறியைப் பிடிக்க வேண்டும். அப்போதுதான் நகராது. பூனையிடம் இருப்பது இருபது கூரிய கத்திகள். கைகளையெல்லாம் பிறாண்டித் தள்ளி விட்டு ஓடி விடும். அப்படி வலுவாகப் பிடறியைப் பிடிப்பது பெருமாளுக்கு நூறு கிலோ எடையைத் தூக்குவது போல் இருந்தது. ஒவ்வொரு முறை அப்படிப் பிடித்து மல்லுக்கட்டும் போதும் லேசாக நெஞ்சை வலிக்கும்.
இப்படியாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பேண்டேஜைப் பிய்த்து எடுத்து விடும் புஸ்ஸி. பத்தாம் நாள் மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். ஒரு தையல் பிரிந்திருந்ததால் மீண்டும் அதைத் தைக்க வேண்டியிருந்தது. மீண்டும் மயக்க ஊசி. இப்படியே ஒரு மாத காலம் பெருமாளும் வைதேகியும் புஸ்ஸியும் வீட்டுச் சிறையில் இருந்த பிறகு புஸ்ஸியின் தையல் சேர்ந்து பழைய நிலைக்கு வந்தது. ஆனாலும் புஸ்ஸியிடம் பழைய துருதுருப்பும் விளையாட்டும் ரகளையும் இல்லாமல் ஆனது. அது பாட்டுக்கு ஒரு பக்கம் சோர்வாக அமர்ந்திருக்க ஆரம்பித்தது. இன்னும் ஒரு மாதத்தில் சரியாகி விடும் என்றார்கள் பூனையின் நண்பர்கள்.
அப்போதுதான் இந்தியாவுக்குக் கொரோனா அறிமுகம் ஆகி ஊரடங்கு போன்றவை எல்லாம் பழக்கத்துக்கு வந்தன. மார்ச் 2020. ஒரு மாத காலம் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்து மார்ச்சில் வெளிநாட்டுப் பயணம் கிளம்பலாம் என்று இருந்த பெருமாளுக்குப் பேரிடி. அதிலும் எப்படி என்றால், நாட்டு நடப்போடு எந்த விதத்திலும் பட்டுக் கொள்ளாமல் தான் உண்டு தன் எழுத்து உண்டு என்று இருக்கும் அவன் ஒருநாள் கொக்கரக்கோவை அழைத்து, மேலே கண்ட கதையை சுருக்கமாகக் கூறி, சீனாவுக்கு ஒரு நடை போய் வரலாமா என்று கேட்டபோதுதான் கொக்கரக்கோ “என்னய்யா நீர், இந்த உலகத்தில்தான் வாழ்கிறீரா?” என்று கேட்டு சீனாவிலிருந்து கொரோனா என்ற கொடிய வைரஸ் உலகம் பூராவும் பரவிக்கொண்டிருந்த கதையைச் சொன்னார். பெருமாளுக்கு ஏதோ சயன்ஸ் ஃபிக்ஷன் கதை கேட்பது போல் இருந்தது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து புஸ்ஸி ஒருநாள் மாடியின் பால்கனியிலிருந்து கீழே குதித்தது. ஆங், சொல்ல மறந்து விட்டேன். அந்த ஒரு மாத காலமும் வீட்டில் இருந்த மற்ற சைத்தான்களும் கண்ட இடத்தில் மூத்திரம் போவது, லக்கியை ரேப் பண்ணுவது என்று விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்திக் கொண்டிருந்தன. இப்போது அவை கட்டில் மெத்தையில் ஏறி மூத்திரம் போக ஆரம்பித்திருந்தன. அவைகளின் விடுதலைப் போராட்டத்தை முடுக்கி விட அவற்றில் ஒரு திலகர் இருந்திருக்க வேண்டும். நேரடி வன்முறை இல்லாவிட்டாலும் ஒருவிதமான உள்ளுறை வன்முறையைக் கொண்ட விடுதலைப் போராட்டமாக இருந்தது அது.
இதையெல்லாம் விட ஒரு பெரிய பிரச்சினை – ஆண் பூனைகள் பெண் பூனைகளை ரேப் பண்ண ஆரம்பித்ததுதான். வீட்டில் இருந்த பத்து பூனைகளில் லக்கி மட்டுமே புஸ்ஸியின் குட்டி. காலிகோ. புஸ்ஸி ஒரு வினோதமான குட்டி. தன் சொந்தப் பிள்ளையான லக்கியைத் துரத்தி விட்டு மாற்றான் வீட்டுக் குட்டிகளான ஸ்னீக்கி, ஸ்மோக்கி போன்ற மற்ற குட்டிகளுக்குத்தான் பால் கொடுத்தது. இந்தப் பூனை கோஷ்டியில் பெரிய ரௌடியாக இருந்தது ஸ்மோக்கி. அதுதான் விடாமல் லக்கியைத் துரத்தித் துரத்தி ரேப் பண்ணிக் கொண்டிருந்தது. பட்டப் பகலில். வீட்டு ஹாலில். சமையலறையில். பெருமாளின் அறையில். கட்டிலில். எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும். நடப்பது ரேப்தான். உடல் உறவு அல்ல. ஏனென்றால், அந்த அளவுக்குக் கதறியது லக்கி. சினிமாவில் ரேப் சீன் பார்த்திருக்கிறீர்கள்தானே? அப்படி இருக்கும். ஏன் என்றே பெருமாளுக்குப் புரியவில்லை. ஒருவேளை லக்கி இன்னும் முதிரவில்லையோ, அல்லது, அதற்கு யோனியின் சைஸ் சின்னதோ? ஸ்மோக்கி அதன் மேல் ஏறி அமர்ந்ததுமே கதற ஆரம்பிக்கும் லக்கி. ஒரு கட்டத்தில் இந்தக் கொடுமையைக் காணச் சகியாமல் அப்படி ஸ்மோக்கி லக்கி மேல் ஏறி அமரும் போதெல்லாம் ஸ்மோக்கியின் பட்டக்ஸில் ஒரு அடி அடிக்க ஆரம்பித்தான் பெருமாள். பலமாக அல்ல. இருந்தாலும் அடி அடிதானே? அதற்குப் பிறகு ஸ்மோக்கி பெருமாளைப் பார்த்தாலே பயந்து நடுங்கி ஓட ஆரம்பித்தது. அதைப் பார்த்து பெருமாள் தன்னைத் தானே வெறுக்கக் கூடிய மனிதனாக மாறினான். ஒரு சின்னஞ்சிறு பூனைக் குட்டியைப் போய் ஒரு மனிதன் அடிக்கலாமா? இனிமேல் ஸ்மோக்கியின் மீது கையே வைக்கக் கூடாது என்று சபதம் எடுப்பான். ஆனால் லக்கி பரிதாபமாகக் கதறும் போது சபதம் மறந்து விடும். இதற்கு ஒரு முடிவே இல்லையா என்று மனம் இறைஞ்சும். ஒரே ஒரு பூனைக்கு வாழ்வு கொடுக்கப் போய் இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக் கொண்டோமே என்று தோன்றியது அவனுக்கு.
ஏன் இத்தனை சிரமம், பூனைகளைக் கொண்டு போய் கீழே விட்டு விடலாமே என்றுதானே நினைக்கிறீர்கள்? காரில் நசுங்கிச் செத்து விடும். ரேஸ்காரர் இருக்கிறார் இல்லையா? இல்லாவிட்டால் எதிர்வீட்டுக்காரியோ இந்தக் குடியிருப்புவாசிகளோ அடித்தே கொன்று விடுவார்கள். எங்கேயாவது பூனைகள் காப்பகத்தில் கொண்டு போய் விடலாமா என்று யோசித்து ப்ளூ க்ராஸுக்கு ஃபோன் செய்தான். அதன் தலைவர் தங்களின் சோகக் கதையை மிக நீளமாக விளக்கி விட்டு மீனவர் சேரியில் கொண்டு போய் விடச் சொல்லி யோசனை கூறினார். அப்படியெல்லாம் அனாதையாக ரோட்டில் விடுவதில் பெருமாளுக்கோ வைதேகிக்கோ இஷ்டமில்லை. நம்மைக் கொண்டு போய் நம் பெற்றோர் எங்காவது ரோட்டில் அனாதையாக விட்டிருந்தால் எப்படி இருக்கும்? அல்லது, நம் குழந்தைகளைக் கொண்டு போய் அப்படி எங்காவது சாலைகளில் அனாதையாக விடுவோமா?
ஷெல்டருக்காகத் தீவிரமாக அலைந்து கொண்டிருந்த நேரத்தில் அந்த விலங்குப் பேராசிரியர் மாட்டினார். பெருமாளின் தீவிர வாசகர். அவர் தன்னிடம் விலங்கு மருத்துவம் படித்த ஒரு மாணவி ஒரு ஷெல்டரின் காப்பாளராக இருப்பதாகக் கூறி அந்தப் பெண்ணின் தொலைபேசி எண்ணைக் கொடுத்தார். அவரிடமும் பேசினார். அவர் பெயர் ஷீலா. விலங்கு மருத்துவத்தில் மேற்படிப்பை முடித்திருக்கிறார். ஷெல்டர் அவர் மேற்பார்வையில்தான் இருந்தது. அந்த ஷெல்டர் 150 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ்காரர் ஒருவரால் நிறுவப்பட்டு பிரமாதமான முறையில் பிராணிகளின் நலத்தைப் பேணிக் காத்த நிறுவனம். தற்சமயம் குரங்கு கையில் மாட்டிய பூமாலை கணக்காக சின்னாபின்னமாகிக் கிடந்தது. பத்து ஆண்டுகளாக வருமான வரி கட்டவில்லை. ஒரே ஊழல். இத்தனைக்கும் அதன் கமிட்டி உறுப்பினர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் நீதிபதிகள்.
ஆரம்பத்தில் ஷீலா பெரிய அளவில் பந்தா காட்டினார். பந்தா என்றால் புரிகிறதுதானே? பெருமாள் அழைத்தால் ஃபோனை எடுக்க மாட்டார். பலமுறை மெஸேஜ் அனுப்பினால் இரண்டு நாட்கள் கழித்துப் பேசுவார். அதிலும் ஒரு வார்த்தைதான். பேராசிரியரிடம் பேசினான். அவர் ஒரு பெரிய லெக்சர் கொடுத்தார். இந்தக் காலத்து இளைஞர் சமுதாயத்தைப் பற்றியதாக இருந்தது அந்த லெக்சர். பிறகு பெருமாள் அவனது வழக்கமான முறையைப் பின்பற்றினான். அதாவது, அரசு அதிகாரத்தில் உள்ள அவனுடைய ”தொடர்புகள்” குறித்துப் பேச்சுவாக்கில் குறிப்பிட்டான். வருமான வரித் துறை கமிஷனரே அவனுடைய நெருங்கின நண்பர்தான், இத்யாதி, இத்யாதி. மறுநாள் ஷீலா நேராக பெருமாளின் வீட்டுக்கே வந்து விட்டார். அதற்குப் பிறகு அவருடைய பேச்சும் பாவனையும் தலைகீழாக மாறிப் போனது. ஒவ்வொரு வாக்கியத்தையும் சார்-இல் ஆரம்பித்து சார்-இல் முடித்தார்.
பத்து பூனைகளும் ஷெல்டர் சென்றன. புஸ்ஸி, லக்கி உட்பட. பெருமாளுக்குத் தன் இதயத்தைக் கத்தியால் கிழித்துப் போட்டது போல் இருந்தது. இந்தக் கொடுமையை விட புஸ்ஸி அது பாட்டுக்குத் தெருவிலேயே வளர்ந்திருக்குமே? ’என்னடி நாயே, பூனைக்கு வாழ்வு கொடுக்கிறேன் என்று சொல்லி பத்து பூனைகளையும் உயிரோடு கொன்று விட்டாய்? இந்தப் பாவம் உன்னை சும்மா விடாது’ என்று வைதேகியைப் பலவாறு மனதுக்குள் சபித்துத் தள்ளினான். புஸ்ஸியையும் லக்கியையும் மட்டுமாவது வைத்துக் கொள்வோம் என்றான் வைதேகியிடம். குட்டிகளைத் தாயிடமிருந்து பிரிப்பது மகா கொடுமை என்றாள் அவள். அதுவும் சரிதான்.
மாதா மாதம் குட்டிகளுக்குத் தேவையான உணவை அனுப்பிக் கொண்டிருந்தான். நேரில் போய்ப் பார்க்க முடியவில்லை. கொரோனா தீவிரம் அடைந்து கொண்டிருந்தது. வைதேகியின் தோழிகளே ஐந்து பேர் இறந்திருந்தார்கள். பெருமாளின் வயது அறுபத்தெட்டு. பெரும்பாலான இந்தியர்களைப் போல் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தான். மாலை ஆகி விட்டால் மூச்சு விடுவது சிரமம். அதனாலேயே ஒருமுறை மாச்சு பிச்சு வரை போய் விட்டு அன்றைய இரவு மூச்சு விட முடியாததால் குஸ்கோவிலிருந்து சீலேவுக்குக் கிளம்பினான். இந்த நிலையில் அவனுக்குக் கொரோனா வந்தால் உடனடி விடுதலைதான். அது கூடப் பிரச்சினை இல்லை. அநியாயமாக யாருக்கும் விடை கொடுக்காமல், நம் பூத உடலைக் கூட யாரும் பார்க்க முடியாமல் போய் விடுமே என்பதுதான் அவனுடைய பிரதான கவலையாக இருந்தது. அதனால் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி முகத்தின் பளபளப்புக்காகப் பயன்படுத்திக் கொண்டிருந்த தங்கம் கலந்த முகப்பசையைக் கூட உபயோகிக்காமல் நிறுத்தி விட்டான். உடம்பே கிடைக்காது என்கிற போது முகத்தை எவன் பார்க்கப் போகிறான்? தன் இறுதி ஊர்வலத்தில் ஏகப்பட்ட பெண்கள் துக்கம் தாளாமல் மயங்கி விழுவார்கள் என்றெல்லாம் கொண்டிருந்த அவனுடைய கனவு சிதைந்து விழுந்தது.
கொரோனா பயத்தினால் எதன் பொருட்டும் வெளியே போகாமல் வீட்டுச் சிறையிலேயே இருந்தான்.
ஆறு மாதம் கழித்து ஒருநாள் வைதேகி “கிளம்பு ஷெல்டருக்கு. லக்கி என்னை அழைக்கிறது, அதற்கு ஏதோ பிரச்சினை” என்றாள். இங்கே வைதேகி பற்றிய ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். பெருமாளைத் திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து அன்று வரை – கடந்த முப்பது ஆண்டுகளில் – மிக அவசியமான தருணங்களில் தவிர வைதேகி வீட்டை விட்டு வெளியே கிளம்பினதில்லை. வீட்டுக்குப் பின்னால் ஐந்து நிமிட நடையில் மெரினா பீச் உள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒருமுறை கூட சென்றதில்லை. கோவில், சினிமா, உணவு விடுதி எங்குமே சென்றதில்லை. அவளுக்கு வீட்டை விட்டு வெளியே போகப் பிடிக்காது. அவளுடைய அம்மா மற்றும் அப்பாவின் மரணம் நிகழ்ந்தபோது மட்டும் வீட்டிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரம் உள்ள பெற்றோர் வீட்டுக்குப் போய் வந்தாள். அதுவும் காலையில் போய் மாலையில் வந்து விட்டாள்.
வைதேகியின் அம்மா இதை விட பயங்கரம். எந்தக் காரணத்துக்காகவும் வீட்டை விட்டு வெளியே சென்றதே இல்லை. முப்பதாவது வயதிலிருந்து அந்த முடிவை எடுத்தாராம். காரணம் யாருக்கும் தெரியவில்லை. பிள்ளைகளின் திருமணம், உறவுக்காரர்களின் மரணம் எதற்குமே வீட்டை விட்டு வெளியே போனதில்லை. சரி, உடம்புக்கு வந்தால் மருத்துவரைப் பார்க்கப் போக வேண்டுமே? இல்லை. எல்லாமே வீட்டுக்குள்ளேயே கை மருத்துவம்தான். அவருடைய எண்பத்தைந்தாவது வயதில் உயிரற்ற உடம்பு மட்டுமே வீட்டை விட்டு வெளியே சென்றது. வைதேகி அந்த அளவுக்குத் தீவிரம் இல்லை என்றாலும் தன் அம்மாவின் அந்த குணத்தைப் பெருமளவு கொண்டிருந்தாள். அப்படிப்பட்டவள் அன்றைய தினம், கிளம்பு ஷெல்டருக்கு என்று சொல்லி அந்த க்ஷணமே கிளம்பி விட்டாள்.
”இப்போது இதை உன்னிடம் சொல்லும் போது கூட என் உரோமக்கால்கள் குத்திடுகின்றன” என்றான் பெருமாள். ஷீலா அந்த ஷெல்டர் வேலையை விட்டு ஒரு மாதம் ஆகியிருந்தது. இவர்கள் கொடுத்த பூனைகள் எதுவுமே ஷெல்டரில் இல்லை. எல்லாவற்றையும் மற்றவர்கள் அடாப்ஷனுக்கு எடுத்துக் கொண்டு போய் விட்டதாகச் சொன்னார் பணியாள். அங்கே இருந்த பத்துப் பதினைந்து பூனைகளில் இரண்டு விதமான பிரிவு இருந்தது. ஐந்து பூனைகள் மட்டும் கழுத்தில் மணி கட்டி கொழு கொழு என்று காட்டுப் பூனைகள் போலவும், ஏழெட்டு பூனைகள் எலும்பும் தோலுமாகவும் இருந்தன. கொடும்பஞ்சத்தில் அடிபட்ட எலும்புக் கூடு மனிதர்களைப் பார்த்திருக்கிறீர்கள்தானே, அப்படி இருந்தன மணி கட்டாத பூனைகள். அப்படியானால் பெருமாள் அனுப்பிய பூனை உணவெல்லாம் பூனைகளுக்குப் போகாமல் விற்கப்பட்டிருக்க வேண்டும். லக்கி லக்கி என்று வைதேகி பெருங்குரலெடுத்துக் கத்திய போது ஒரு எலும்புக் கூடு ஓடி வந்து வைதேகியின் மீது தொற்றிக் கொண்டது. புஸ்ஸி எங்கே என்று பணியாளைக் கேட்டாள். திருதிருவென்று விழித்தார் பணியாளர். சரி, அந்த மணி கட்டிய பூனையில் ஒன்றை நாங்கள் அடாப்ஷனுக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று சொன்னாள் வைதேகி. அதெல்லாம் டாக்டர் ஷீலாவினுடையது, தர மாட்டோம் என்றார் அந்த மனிதர். ஷெல்டரில் ஒரு டஜன் மாடுகள் வற்றிப் போய்க் கிடந்தன. ஒரு நவநாகரீக வட இந்திய இளம் பெண் தன் அம்மாவுடன் வந்து மாடுகளுக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்தாள். இப்போதைய இந்தியக் கலாச்சாரத் தாக்கம்.
அடிதடியில் இறங்காதது ஒன்றுதான் குறை. கண்ணகியைப் போல் அந்த ஷெல்டருக்கும் அதை நடத்திக் கொண்டிருந்தவர்களுக்கும் சாபம் கொடுத்து விட்டு லக்கியை மட்டும் அழைத்துக் கொண்டு கிளம்பினாள் வைதேகி.
வீட்டுக்கு வந்த ஓரிரு மாதத்தில் லக்கி நான்கு குட்டிகளை ஈன்றது…
(இவ்வளவையும் என்னிடம் சொன்ன பெருமாள் இன்னொரு விஷயத்தையும் சேர்க்கச் சொன்னான். அவன் வார்த்தைகளிலேயே தருகிறேன்: ”இதை உன்னிடம் சொல்லும்போது என் ஆன்மா பதறியது, என் இதயத்தில் குருதி வடிந்தது, சரியா? அப்படியென்றால் என்ன அர்த்தம்? சொல்லும்போதே நெஞ்சு வெடித்துச் செத்திருப்பேன் என்று அர்த்தம்டா… இதையும் படித்து விட்டு டெட்ஸோல் அரைவேக்காட்டு நாவல் என்று சொன்னான் என்று வை, மகனே, அமெரிக்காவுக்குப் போய் அவனை வெட்டுவேன் என்று எழுது.”
பின்குறிப்பு: ஆனால் எனக்கு என்னவோ பெருமாளின் கடைசி எச்சரிக்கையைக் கேட்ட போது ஏதோ ஒரு படத்தில் சிவாஜி கணேசன் மேஜர் சுந்தர்ராஜனிடம் பேசும்போது சிவாஜியின் வாயிலிருந்து ரத்தமாக ஊற்றும். அந்தக் காட்சியை அடிக்கடி மீம்ஸில் போட்டுக் கலாய்ப்பார்கள். அதுதான் என் மனக்கண்ணில் வந்தது. என்ன செய்வது? ஒவ்வொருவரின் வாதையும் அவரவருக்குத்தான் காவியச் சோகமாக இருக்கிறது. கேட்பவர்களுக்குப் பெரும்பாலும் அது காமெடிதான்.
ஏனென்றால், பெருமாள் இந்தக் கதையில் விவரித்த எல்லாமே எனக்கு புல்ஷிட் என்று தோன்றுகிறது. பெருமாளுக்கே ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படித்தான் தோன்றியதாகச் சொன்னான். ஆன்மாவிலிருந்து ரத்தம் வடிந்த கதையெல்லாம் வைதேகிக்கும் பெருமாளுக்கும் விவரம் போதவில்லை என்பதனால் விளைந்தது. பூனைகள் மலஜலம் போன மண்ணை மாற்றும்போது விஷ வாயு உருவாகி மயக்கம் போட்டு விழுவது போல் இருந்தது என்று சொன்னானா? இதைத் தவிர்ப்பதற்கு வெறும் நூறு ரூபாய் போதும். மல்லிகை போலவும் ரோஜா போலவும் மணக்கும் மண் இருக்கிறது. பத்து கிலோ ஆயிரம் ரூபாய். அதைப் போட்டால் பூனைகள் மலம் கழிக்கும்போது அந்த மலத்தை அந்த மண் சுருட்டிக்கொண்டு விடும். கொஞ்சம் கூட மலம் நாறாது. மலம் மண்ணுக்குள் மறைந்து விடும். மண்ணின் மல்லிகை மணம்தான் வீட்டில் சுற்றும். இந்த விஷயத்தைப் பெருமாளிடம் சொன்னது பெருமாளின் தோழி ஆனந்தி. இந்த விவரம் தெரிந்திருந்தால் விஷவாயுப் பிரச்சினை இல்லை.
கர்ப்பப்பை நீக்கம் பற்றி உருகி உருகிச் சொன்னானா? அதுவும் அவனுடைய, வைதேகியினுடைய மடத்தனத்தினால் விளைந்ததுதான். அவன் ஏதோ ஒரு உருப்படாத மருத்துவரிடம் போயிருக்கிறான். சென்னையில் பல பூனை மருத்துவர்கள் பூனைக்கு எந்த வலியும் இல்லாமல், மிகச் சரியாக மயக்க மருந்து கொடுத்து, சொகுசாக கர்ப்பப்பையை நீக்கி விடுகிறார்கள். ஒரு வாரத்துக்கு பூனையை தங்கள் மருத்துவமனையிலேயே ஒரு பெரிய கூண்டில் வைத்துப் பாதுகாத்து அது விளையாட ஆரம்பித்த பிறகே கொடுக்கிறார்கள். பூனை காயத்தை மூடியிருக்கும் கட்டை அவிழ்த்து விட்டால் உடனே மறு கட்டு போடுகிறார்கள். ஒரு பிரச்சினையும் இல்லை. இத்தனைக்கும் பெருமாள் கூறும் குண்டாந்தடி மருத்துவர் வாங்குவதை விட குறைவான கட்டணம்தான்.
ஒரு விவரமும் தெரியாமல் எதையாவது மடத்தனமாகப் பண்ணி விட்டு, நேரில் போய் வெட்டுவேன் நொட்டுவேன் என்றால் என்ன அர்த்தம்? ஆனால் ஒன்று, விவரம் தெரிந்ததோ, தெரியவில்லையோ, வாதை வாதைதானே? அதையும் பார்க்க வேண்டியதுதான்.
நாளை தொடரும்…
நாவலின் இந்தப் பகுதி வரை வந்து விட்டீர்களானால் மகிழ்ச்சி. நாவல் உங்களுக்குப் பிடித்திருக்கிறது அல்லது வாசிக்கும் அளவு இருக்கிறது என்று எடுத்துக் கொள்கிறேன். அப்படியானால் இதற்கான சன்மானத்தை சந்தாவாகவோ நன்கொடையாக அனுப்பி வைப்பீர்கள் என நம்புகிறேன். ஒரு நாளில் 2000 வார்த்தைகள் எழுதுகிறேன். பத்து நாளில் முடிப்பேன்.
சந்தா மற்றும் நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா
***
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
வங்கி விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai