புருஷன் -1 நாவல் மதிப்புரை: நிர்மல்



இந்த நாவலுக்கு விமர்சனம் எழுதுவதே இதற்கு செய்யும் துரோகம்தான். ஏனென்றால் விமர்சனம் என்பது வாசித்த படைப்பைப் பற்றிக் கருத்து சொல்வதுதானே? இப்படி கருத்து சொல்வதையும், கருத்து சொல்கிறவரின் நோக்கத்தையும், கருத்தைக் கட்டமைக்கும் மொழியின் ஆற்றல்களையும், அதைப் பயன்படுத்துகிறவரின் மொழிப் புலமையையும் புலமையின்மையையும் சந்தேகிக்க வைப்பது இந்த நாவலில் இழையோடும் உணர்வாக நான் கருதுவதால், விமர்சனத்தை அபத்தமாகவே இந்த நாவல் கருதும். கருதினால் கருதிவிட்டுப் போகட்டும், வேறு வழியில்லை. ஆகையால் விமர்சனம் என்கிற பெயரில் எழுதியதே கீழ்க்காணும் கட்டுரை!   

அராத்துவின் “புருஷன்” வாசித்து முடித்தேன். மாபெரும் வாசிப்பு அனுபவம் பெற்றேன். துள்ளித் துள்ளி ஓடும் எழுத்துக்கள் வாசிப்பை ரசனையாக்கின. அருகில் இருந்து நம்மிடம் தோள் மீது கை போட்டுக் கதை சொல்கின்றன. அங்கும் இங்கும் பிய்த்துப் போட்டு நம்மை புதிர்ப் பாதைக்குள் அழைத்துச் செல்கிறது கதை. புதிர்ப்பாதைப் பயணம் என்றால் ஏதோ கலவரமாக, மர்மமாக, திகிலோடு பயணிக்கும் என கலங்கி விட வேண்டாம். நம் மண்டையை கிறுக்குப்பிடித்து அலையவிடாமல், அந்தப் பயணத்தை ரகளையாய் துள்ளலாய் பயணிக்க வைக்கிறது இந்நாவல்.
ஏதேனும் கோட்பாட்டின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டிருப்பவர்களையும் இலக்கியம் என்றால் இதுதான் இப்படித்தான் எனும் முன் முடிவுகளோடு நுழைகிறவர்களையும் இந்த நாவல் அதிர வைக்கும், அதிர்ச்சிக்குள்ளாக்கும். 

எழுத்து நடை என்பார்களே, அது எப்படி இருக்கிறது எனச் சொல்ல வேண்டுமென்றால் சாக்கோபார் ஐஸை வாயில் விட்டு சுவைப்பது போல் மென்மையாக குளுமையாக இருக்கிறது.  யுவால் நோவா ஹராரி – சேப்பியன்ஸ் எனும் புத்தகத்தில் வாசித்த எழுத்து தொனியும் தாளமும் எனக்கு நினைவுக்கு வந்தது.

ஒரு நாவல், பொதுவாக எப்படிப் பயணிக்க வேண்டும் என்கிற ஒரு பெருவழி(high way)  இருக்கிறது அல்லவா? அப்படிப் பழகிப் புளித்தப் பழைய பாதையைத் தவிர்த்து… கல கலவென  மெட்ரோவில் பயணிப்பதைப் போலத் தெரிக்கவிட்டு புதுப் புது வடிவங்களில் கதையைப் பயணிக்க வைத்திருக்கிறார் அராத்து. யார் யாரோ கதை சொல்கிறார்கள், புது புதுக் கதைகளை எழுதிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.
எல்லோரும் வந்து ஏதேதோ கதைகளை நம் மண்டைக்குள் அமைக்கிறார்கள், மூளை நரம்புகளில் முடிச்சுப் போட்டுச் செல்கிறார்கள்.
ஏன் இப்படியான கதை சொல்ல வேண்டும்? ஒரு ஊரில் ஒருவன், யாரும் செல்லாத ஊரில் ஒரு சமூகம் என ஆரம்பித்து கதை சொல்லும் முறையைத் தவிர்த்து, இப்படிக் கதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஓ, ஒருவேளை பின்நவீனத்துவ எழுத்து முறையைப் பின்பற்றி எழுதப்படுவதால் இப்படி எனப் புரிந்து கொண்டால் அது சரியல்ல. இப்படி கதை சொல்வதற்கும் இந்த  நாவலின் முக்கிய நோக்கத்திற்கும் தத்துவ கலைத் தொடர்பு இருப்பதுதான் காரணம். ஒரு நோக்கத்தை நோக்கிச் செல்லும் அல்லது சிதறிப் போகும் ஒரு ஓட்டம் அந்த நோக்கத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அதுதான் இந்த நாவலை கலைப் படைப்பாக்குகிறது.
ஒரு திரைப்படத்தின் பின்னணி இசை, ஒலி, ஒளி அமைப்பு, அந்தப் படத்தின் கருப்பொருளுக்கு ஏற்றவாறு அமைக்கப்படுவது அச்சூழலை நம் உள்ளத்தின் உள்ளே சென்று வர உதவுமல்லவா அதைப்போல.

சரி, இனி கதைக்கு வருவோம்.
இதுவரை வாசித்த உங்களுக்கு ஏதோ திமிர் பிடித்து மண்டையாகப் பேசும் நாவல் இதுவெனத் தோன்றலாம். (ஆனால் அப்படியல்ல) நாவல் சொல்லப் போகும் “எதிர்க் கருத்து” இயல்பாக இந்த தொனியைக் கொண்டு வந்துவிடுவதே அதற்குக் காரணம்.
இது வாசகனை எரிச்சலூட்டக் கூடும் என்பதற்காக அராத்து ஒரு “ஸ்பெஷல்” வழிமுறை செய்திருக்கிறார். இது மட்டும்ன்றி இன்னும் பல ’தொழில் நுட்பங்களைப்’ பயன்படுத்தியுள்ளார்.

நாவலில் ஒரு ஆண் கதாபாத்திரம், ஒரு பொம்மையிடம் பல கேள்விகள் கேட்கிறான் அதில் ஒன்று:
“ஒரு பெண் காலின் சதையை கண்டதும் என் உள்ளம் ஏன் இப்படிக் குழம்புகிறது?” இந்த ஒற்றைக் கேள்வியை வைத்து நாவலின் கதையைக் குறித்துப் பேசுவோம். இதில் தோல் என சொன்னாலும் அச் சொல்லுக்குப் பதில், பெண்ணின் எந்த உடல் பாகத்தையும் எழுதிக் கொள்ளலாம்.

அது சாதாரண தோல்தானே. அந்தக் காலில் என்ன மாயம்?. மனித மண்டை இருக்கிறதே அது ஒரு விசித்திர டப்பா… அது இதையும் அதையும் எதையும்  தோலாக  மட்டும் பார்க்கப் பயிற்றுவிக்கப்படவில்லை. கண்ட கண்ட கோளாறான, பைத்தியக்காரத்தனமான நம்பிக்கைகள், கதையாடல்கள், அரசியல், கருத்துருவாக்கங்கள், mythகளைக் கொண்டே பார்க்கப் பழகியுள்ளது.
புனிதம், பாவம், ஆசை, வெறுப்பு, இன்னும் அது இது எது என பலதும் அந்தத் தோல் எனும் உறுப்பைக் குறித்த நம்பிக்கைகளும் கதைகளும்  நமக்குத் தெரியாமல் நம் மண்டைக்குள் கெட்டியாகப் படிந்துக் கிடக்கிறது.

 ஒரு உறுப்பின் முக்கிய செயலைத் தவிர அதைக் குறித்து கட்டமைக்கப்பட்டதையே உண்மையென நம்புகிற போக்கை சந்தேகத்துக்கும் கேள்விகளுக்கும் உட்படுத்துவதே இந்த நாவலின் நோக்கமாக இருக்கிறது.
கதை என்றால் கதை மாந்தர்கள், கதைக்களம், கதைப் பயணம் போன்றவைதானே சொல்ல வேண்டும், அதை விடுத்து வேறு ஏதோ சொல்கிறேன் என்றால், கதைக் குறித்துப் பேசிப் பேசி அலுத்துவிட்டதும், அதில் ஒன்றும் சுவாரஸ்யம் இல்லை என்பதை அறிந்ததால்தாலே.  இந்த நாவலில் பல கதைகள் ஒன்றுக்குள் ஒன்றாக ஊடாடிச் செல்கின்றன. அதை வாசிக்கும் பொழுது வாசகர்கள் தெரிந்து கொள்வார்கள்.

இந்த நாவல் ஒரு perverted நாவல் என அட்டைப்படத்தில் தன்னைத் தானே அறிமுகப் படுத்திக்கொண்டிருக்கிறது. ஒரு நாவல் எதை வைத்து தன்னைத் தானே இப்படிச் சொல்லிக்கொள்ள முடியும்? அது எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ அதை வைத்துத்தான் சொல்ல முடியும்! எது கட்டமைக்கிறது என்றால் அதற்கு எழுத்துக்களை கொண்டுதானே கட்டமைக்கப்படுகின்றது என்பதுதான் பதில், ஆனால் இங்கு எழுத்துக்களை பலரும் கண்டமேனிக்கு வந்து எழுதிச் செல்கிறார்கள். இப்படி கண்டவர்கள் வந்து கண்டமேனிக்கு சொல்லிச் செல்லும் கதைகளாலே கட்டமைக்கப்பட்டிருக்கிறது இந்நாவல்.
எப்படி தன்னைத்தானே பல எழுத்தாளர்களால் கட்டமைக்கப்பட்டு பெர்வெர்ட் ஆகிறதோ அதைப் போலத்தான் நமது புரிதல்களும் பலரின் கதையாடல்கள் மூலம்  கட்டமைக்கப்படுகின்றன. அப்படியெனில் நாவலைப் போல நாமும் ஏன் பெர்வெர்ட்டாக இருக்கக் கூடாது என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இதுவும் இந்த நாவல் எனக்கு உணர்த்திய தரிசனம்! 

ஒரு எழுத்தாளராகவும் ஒரு வாசகராகவும் நாவலின் மையச் சரடு… குறித்து ஒரு குட்டி சிந்தனை வருகிறது.
அமீபா, பாம்புகள், சிலந்திகள்… இவை எல்லாம் தங்களின் இனப்பெருக்கத்தைச் செய்கின்றன, பிளக்கின்றன, கலக்கின்றன, மாறுகின்றன. ஆனால் அவை அந்தச் செயலைப் பற்றி எண்ணுவதில்லை. அவை அதைத் தனியாக பெருமைப்படுத்திக் கொள்வதில்லை. அவை வழக்கம்போலத் தொடர்கின்றன. அதில் வெட்கம் இல்லை. அழகு இல்லை. ஆசை இல்லை. வெறுப்பு இல்லை. அதன் மீது கோவில்கள் கட்டப்படுவதில்லை.
ஆனால் மனிதனிடம் மட்டும், அந்த இயற்கைச் செயல் ஒரு முக்கியமானச் சிக்கலாக மாறுகிறது. அவன் அதை பற்றிச் சிந்திக்கிறான். அதற்குப் பொருள் கொடுக்கிறான்.
அதைச் சட்டமாக்குகிறான்.
அதைப் பாவமாக்குகிறான்.
அதைச் சக்தியாக்குகிறான்.
மூன்றே நிமிடங்கள் நிகழும் ஒரு செயல், மனிதனின் வாழ்க்கையை முழுவதுமாக நிர்ணயிக்கிறது. காதல், கல்யாணம், காமம், குடும்பம்—இவை அனைத்தும் அதைச் சுற்றியே சுழல்கின்றன.
அதனால்தான், இந்தச் செயல்,
ஒரு பிணைப்பு என்றால் கூட, இது ஒரு விருப்பம் என்றால் கூட, மனிதனின் மனதில் இது என்றும் ஒரு வினாவாக தொடர்கிறது. இந்த நீங்க முடியாத சிந்தனை சுழற்சிக்குள் சிக்கிக் கொள்கிறான். இந்த சுழற்சி சிக்கலுக்குள்ளே எல்லா பெர்வெர்ஷன், வன்முறைகள், பாசாங்குகள், போலித்தனங்கள், பொய்கள், இன்னும் பல தோன்றுகின்றன.  
இப்படி நிறைகள் நிறைந்த முழுமையான நாவலா இது என்றால் அப்படியெல்லாம் இல்லை. முழுமை என்பதே ஒரு கற்பனைதான் என்ற போதும் இந்த நாவலும் குறைகளைக் கொண்டதுதான்.
உதாரணமாக ரகளையாகப் போய்க்கொண்டிருந்த நாவல் திடீரென பெரும் வறட்சியாக மாறிவிடுகிறது. தத்துவ விசாரணைகளில் நுழைந்துவிடுகிறது. ஐயா இது என்ன கொடுமை என பீதியடைய வைக்கிறது.
Show, Don’t Tell என்பது முக்கியமான யுக்தி. வர்ணனைகளாகச் சொல்லாமல் வாசகர்களுக்குக் கடத்த வேண்டியதைக் காட்சிப் படுத்தினால் இன்னும் பக்கங்கள் குறையும், வாசக இன்பமும் தொடரும்.

அடுத்த குறை, எழுத்து அச்சுமுறை குறைபாடுகள். ஆங்கில எழுத்துரு Indesign softwareல் கசமச என்று ஆகிவிடும். அதனால் அவை சில இடங்களில் கவனித்துத் திருத்தப்பட வேண்டும். பல இடங்களில் இரண்டு மூன்று சொற்கள் இணைந்து வருகின்றன. வெவ்வேறு MSword-லிருந்து காபி பேஸ்ட் செய்யும் போது இப்படி ஆகக் கூடும்.
அடுத்து ஆங்கில சொற்கள் வாக்கியங்களை தவிர்த்திருக்கலாம். உதாரணமாக, வித்தின் கோட்ஸ், டிராப் .. போன்ற ஆங்கில சொற்களை தவிர்க்கலாம். அடுத்து என்னதான் பின்நவீனத்துவ எதிர்க்கருத்து நாவல் என்றாலும் தமிழ் நாவல்களின் இறுதிக்கட்டம் என்பது ஆன்மிகத்தனமாகத்தான் இருக்கும். எவ்வளவு வித்தியாசமான எழுத்தும் இறுதியில் இமையமலை, கங்கை, ஜென் புத்தர் என்று ஏதோ ஆன்மீகத்தன்மைக்குள் இறுதியில் புக வேண்டியிருக்கும் சூழல் இந்த நாவலிலும் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இது நாவலின் இறுதி அல்ல. இது நீண்ட நாவல் உலகம் இன்னும் விசாலமானது. அந்த உலகின்  அறிமுகமே இந்த நாவல் எனத் தெரிய வரும்போது புருஷன்-2க்காக ஆவலுடன் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

சுருக்கமாக சொன்னால் ஹோமோ சேபியன் ஆண்கள்  படும்பாடுகள், மற்றவர்கள் அவர்களையும் அவர்கள் மற்றவர்களையும் படுத்தும்பாடுகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள தேவையான அடிப்படையான புரிதலை புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட ரகளையான நாவல்தான் புருஷன்.