ஒரு குறுங்காவியம்

குமுதம் ஆசிரியராக இருந்து இளம் வயதில் இறந்து போன ப்ரியா கல்யாண ராமன் என் நெருங்கிய நண்பர். என் மேல் அன்பைப் பொழிந்தவர். இப்படி என் மேல் அன்பைப் பொழிந்த இன்னும் இரண்டு பேர் சார்வாகன், வாலி. என்ன துரதிர்ஷ்டம் என்றால் இந்த மூன்று பேருமே வெகு சீக்கிரத்தில் என்னை விட்டுப் பிரிந்து போனார்கள். அதில் ப்ரியா கல்யாண ராமனின் பிரிவு சற்றும் எதிர்பாராதது. சார்வாகன் சொல்லி விட்டார், அடுத்த தீபாவளிக்கு நான் இருக்க மாட்டேன் என்று. அதேபோல் சென்றார். துரதிர்ஷ்டவசமாக ப்ரியா கல்யாணராமனினின் மரணச் செய்தி வந்த போது நான் கடும் போதையில் இருந்தேன். அப்போது நடந்த சம்பவங்கள் என் வாழ்வில் முன்னும் பின்னும் நடந்திராதவை. சீனி இருந்திருந்தால் தவிர்த்தப்பட்டிருக்கும். சீனிக்கு அந்தத் திறமை உண்டு. நான் போதையில் இருக்கும்போது என்னைக் கோபப்படுத்தாதீர்கள் என்று எப்போதுமே எல்லோரிடமுமே வேண்டுகோள் வைப்பேன். சிலர் அதைக் கேட்பதில்லை. ஜனரஞ்சக உலகில் என்னைக் கொண்டாடியவர் ப்ரியா கல்யாணராமன். ஒரு கட்டுரை அனுப்புவேன். பத்து நிமிடத்தில் அவரிடமிருந்து பதில் வரும். தலைவரே, அட்டகாசம். அப்பாடா நிம்மதி என்பேன். என்னது என்பார் ஆச்சரியத்துடன். உண்மைதான், எப்போதுமே என் எழுத்தை அனுப்பி விட்டு ஒரு இருபது வயது இளைஞனைப்போல்தான் காத்திருப்பேன் என்பேன். உங்களைப் போல் ஒருவரையும் கண்டதில்லை என்பார்.அதேபோல் இன்று ஒரு கவிதை எழுதினேன். மதியம் பன்னிரண்டு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை. ஒரு குறுங்காவியம். எழுதி முடித்தபோது வலது தோள் மூட்டு தேள் கொட்டியது போல் வலித்தது. மாற்றி மாற்றி ஐந்து முறை எழுதினேன். ஐந்தாறு பக்கம். என் கவிதை வாழ்வில் இதுவே உச்சம். இதை என்னால் தாண்ட முடியாது. ஆத்மார்த்திக்கும் ஸ்ரீக்கும் சீனிக்கும் அனுப்பினேன். ஸ்ரீ அவளுடைய பூனைக் கதையை ரத்தக் கண்ணிர் வருமாறு சொன்னாள். உண்மையிலேயே ரத்தக் கண்ணீர்க் கதைதான். சந்தேகமேயில்லை. ஆத்மார்த்தி இது உங்களின் ஆகச் சிறந்த கவிதை, உயிர்மைக்கு அனுப்புங்கள் என்றார். உடனடியாக ஹமீதுக்கு அனுப்பி வைத்தேன்.சீனியை அழைத்து கவிதை அனுப்பியிருப்பதைச் சொன்னேன். பப்பில் இருந்தார்.நாளை அழைப்பார்.இப்போது ஒரு இருபது வயது பையனைப் போல் அந்தக் கவிதை உயிர்மையில் வருமா, வராதா எனக் காத்திருக்கிறேன். அதுதான் நான். எப்போதும் அப்படித்தான்.