எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது
இது அதிசயமா
பேரழிவா
அல்லது
காலத்தின் மாய விளையாட்டா
பேரழிவின் அடையாளங்கள் ஏதுமில்லை
ஆனால் மனிதர் யாரையும் காணோம்
இல்லங்கள் மாளிகைகள் குடிசைகள்
மௌனத்தின் மயானமாகக் கிடந்தன
நேற்றைய மழையின் எச்சமாக
சாலைகளில் நீர் தேங்கி
காற்றில் பழைய புத்தகத்தின் மணம்
மறந்துபோன வாழ்க்கையை நினைவூட்டியது
ஒரு ஈ எறும்பு எலி கூட இல்லை
செல்லப் பிராணிகளும் மறைந்தன
போக்குவரத்து அறிகுறியும் இல்லை
நான் வளர்த்த பூனைகள்
மூச்சு விட முடியாமல்
எந்நேரமும் என் மீது
அன்பைப் பொழிந்த என் மனையாள்
யார் சுவடும் இல்லை
ஆனால் வாசலில் கோலம் மட்டும்
அவள் விரல்களின் நினைவாய் நின்றது
ஒவ்வொரு இல்லமாகப் பார்த்தேன்
ஒரு ஜீவன் இல்லை
மரங்களின் இலைகள் அசையாமல்
மரணத்தின் மொழியில் பேசின
காற்று மட்டும் மெல்ல முனகியது
ஆனால் மனித ஒலி எங்கும் காணோம்
வேகமாய் நடந்து
பேருந்து நிலையம் அடைந்தேன்
பேருந்துகள் அசைவற்று நின்றன
ஓட்டுனர் இல்லை
பயணிகள் இல்லை
திடீரென ஞாபகம் கொண்டு
அண்ணாந்து பார்த்தேன்
சூரிய ஒளியில் கண் கூசியது
சூரியன் காணாமல் போகவில்லை
அந்தப்படிக்கு ஒரு ஆறுதல்
அப்படியே ஒரு சுற்று சுற்றி
சங்கீதா உணவகம் வந்தேன்
வாகனங்கள் ஆளற்று
விளக்குகள் அணைந்து
இருண்டு கிடந்தது உணவகம்
மேஜை நாற்காலிகள் இருந்தபடியே இருந்தன
முக்கியமாக ஒரு இடத்தை நோக்கினேன்
மேனேஜர் இருக்கையும் காலி
பயத்தில் தாகம் சுரந்து
ஒரு மேஜையிலிருந்த தம்ளரில்
மிச்சமிருந்த தண்ணீரைக் குடித்தேன்
யார் குடித்ததோ
வியர்த்துப் போய் வெளியே வந்தால்
தரையிலொரு அசைவு
அசைவற்ற உலகிலொரு அசைவு கண்டு
பீதியுற்றுப் பார்த்தால்
நேற்றைய செய்தித்தாள்
பிரிக்கப்படாததன் அடையாளமாக
அதனுள்ளே விளம்பரக் காகிதங்கள்
செய்தித்தாளைப் புரட்டினேன்
தற்கொலை செய்த புதுமணப்பெண்ணின்
தந்தை ‘ஒருத்திக்கு ஒருவனென்ற தமிழர்
மாண்பு’ காத்த தன் மகளுக்காகப்
பெருமை கொண்டு அறிவித்த
செய்தியெல்லாம் இருந்தன
ஆனால்
இன்றைய அதிசயத்தின்
முன்னறிவிப்பு எதையும் காணோம்
செய்தித்தாளை வீசி விட்டு மேலும் நடந்தேன்
திடீரென நினைவு வந்து
கைபேசியைத் திறந்து
காதலியின் எண்ணைத் தொடர்ந்தேன்
தொலைபேசி இறந்திருந்தது
வீட்டுக்குத் திரும்பி
அலமாரியில் ஒளித்து வைத்திருந்த
வைன் போத்தலைத் திறந்து
கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தேன்
ஒரு சந்தேகம் எழுந்தது
நான் இருக்கிறேனா
அல்லது
நானொரு கனவா