பொதுமக்கள் சேவைக்கான அரசு அலுவலகம்
சிஸ்டம் வேலை செய்யவில்லையெனக்
காத்திருந்த நேரத்தில்
அங்கிருந்த மனிதர்களை நோக்கினேன்
நாற்பது ஐம்பது பேர் இருக்கலாம்
ஒவ்வொருவர் முகத்திலும்
ஏதோ நோய்மையின் நிழல்
மருத்துவமனை அல்ல அது
ஆனாலும் அவர்கள் நோயாளிகளின்
தோற்றம் கொண்டிருந்தார்கள்
அவர்கள் ஒருபோதும்
வாய்விட்டுச் சிரித்து
காற்றுடன் கைகோர்த்து
நிலவின் குளிர்மையில் திளைத்திருக்க மாட்டார்கள்
பிறர் பசியின் வலியுணர்ந்து வெகுண்டிருக்க மாட்டார்கள்
மலையடிவாரத்தின் தனிமையில் தோய்ந்திருக்க மாட்டார்கள்
கவிதையுடன் மௌனித்து
அண்டத்தின் விகசிப்பில் தம் சிறுமை உணர்ந்திருக்க மாட்டார்கள் மரணம் கண்டு நகைத்திருக்க மாட்டார்கள்
காதல்மிகக் கொண்டு முத்தமிட்டிருக்க மாட்டார்கள்
கலவியின் பரவசம் கண்டிருக்க மாட்டார்கள்
பிறர் துயர் கண்டு கசிந்திருக்க மாட்டார்கள்
வாடிய பயிர் கண்டு வாடியிருக்க மாட்டார்கள்
ஒரு தெருநாயைக் கட்டியணைத்திருக்க மாட்டார்கள்
நட்சத்திரங்களோடு விளையாடி
இசை கேட்டு விம்மியழுதிருக்க மாட்டார்கள்
பிறருக்காகக் கடவுளிடம் பிரார்த்தித்துப்
பணத்தைத் துச்சமென உதறியிருக்க மாட்டார்கள்
குடும்பம் தவிர வேறெதன் மீதும் கருணை கொண்டிருக்க மாட்டார்கள்
வனத்துடனும் வானத்துடனும்
நதியுடனும் சமுத்திரத்தினுடனும்
அருவியுடனும் குருவியுடனும்
மலருடனும் மஞ்சள் வெயிலுடனும்
காற்றுடனும் மழையுடனும்
அவர்கள் சிநேகம் கொண்டிருக்க மாட்டார்கள்
விருட்சத்தையும் பூமியையும் தழுவி முகர்ந்து
கண்ணீர் சிந்தியிருக்க மாட்டார்கள்
விடுதலையின் துடிப்பையும்
பறவையின் சிறகடிப்பையும்
அவர்கள் கனவிலும் கேட்டிருக்க மாட்டார்கள்
ஒருபோதும் அவர்கள் நடனமாடியிருக்க மாட்டார்கள்