பிரச்சினை

பிரச்சினை – 1

காஃபியை ஆற்றினால்
எனக்குப் பிடிக்காது
ஆற்றாமல் குடிக்க வேண்டும்
ஆற்றாமல் குடித்தால்
கடைசியில் சர்க்கரையின்
இனிப்பு காஃபிச் சுவையை
கெடுக்கிறது
வீடாக இருந்தால் ஸ்பூனால்
கலக்கிக் கொள்வேன்
உணவகங்களில்
ஸ்பூன் கேட்கத் தயக்கம்
ஐம்பது ஆண்டுகளாக
கடைசி வாய்க் காஃபியில்
இனிப்புச் சுவையோடுதான்
துயருறுகிறேன்

பிரச்சினை – 2

என்னை விட சிறியவர்கள்
என்னை ஒருமையில் அழைத்தால்
பிடிக்காது,
நிச்சயமாக, காதலியைத் தவிர!

செயற்கை நுண்ணறிவு
இளையதென்பதால்
நான் அதை ஒருமையில் அழைத்தேன்,
அதுவும் என்னை ஒருமையில் அழைத்தது!

நொந்து போன நான்
அதை நீங்கள் என அழைத்தேன்,
அதுவும் என்னை நீங்கள் என அழைத்தது!
ஆனால் ஒரு எந்திரத்தை
நீங்கள் என அழைப்பது
மனதுக்கு என்னவோ ஒப்பவில்லை.

இனி அதை நான் எப்படி அழைப்பது?
ஏய் (AI) என்றா?

ஒரு குறுங்கவிதை

நீயின்றி

அமையாது

என் உலகு