இதயப் பரிசோதனைக்காக
மருத்துவரைப் பார்த்தேன்
’குளிக்கும்போது நெஞ்சு
வலிக்கிறதா?’ என்றார்
ஆச்சரியத்துடன் ’ஆமாம்’ என்றேன்.
பிறகு சித்த மருத்துவம்
வலியை நிறுத்தியது
என்னை மற்றவர்
பைத்தியமெனச் சொல்வதுண்டு
எங்கள் வீட்டில்
கண்ணுக்குத் தெரியாத
ஒரு கடிகாரம் இருக்கிறது
நான் குளிக்கப் போகிறேன்
நேரம் 7.32
வெளியே வருகிறேன்
நேரம் 8.02
சரியாக அரை மணி நேரம்
பல் துலக்குதல் இரண்டு நிமிடங்கள்
சவரம் மூன்று நிமிடங்கள்
குளியல் இருபத்தைந்து நிமிடங்கள்
இதுதான் கணக்கு
நீங்கள் எப்படிக் குளிக்கிறீர்கள்?
ஐந்து நிமிடத்தில்?
வாழ்த்துக்கள், நீங்கள் ஒரு ரோபோ
குளியலறைக் குழாய் சரி செய்ய
ப்ளம்பர் வருவதாக இருந்தது
’அதற்குள் குளித்து விடவா?’
என்றேன்
’நீ முக்கால் மணி நேரம் குளிப்பாயே?’
என்றாள் மனையாள்
‘ஆ, உனக்கு எப்படித் தெரியும்?’
பதில் இல்லை
நான் பத்து நிமிடத்தில் குளித்தேன்
நெஞ்சு வலி வந்தது