குப்பையிலிருந்தும்
சமயங்களில் பிரபஞ்சத்தின்
மூலை முடுக்குகளிலிருந்தும்
கவிதைக்கான கச்சாப் பொருட்களைப்
பொறுக்கித் திரியும் கவியான
எனக்கு இருபது நண்பர்கள்
அதில் ரெண்டு பேரைத் தவிர
வேறு எவரிடமும் ப்ளூ டிக் வராது
எழவெடுத்த கருப்பு டிக்தான்
இந்தப் பைத்தியக்கார விளையாட்டைப் பற்றி
நான் ஒரு நினைவும் வைத்திருக்கவில்லை
ஆனால் இந்தக் கும்பலில்
மோகினிக்குட்டியும் வந்து சேர்ந்தபோது
என் மண்டை உடைந்து
நானொரு வெறி பிடித்த நாய் ஆனேன்
நண்பர்கள் ஒருத்தர் ஒருத்தராய்
விசாரித்தேன்
ஒரு பைத்தியம் சொன்னது:
என் மனைவி மெஸேஜ் அனுப்பினால்
ப்ளூ டிக் தெரிய வேண்டும்
பதில் அனுப்பாவிட்டால்
வீடு எரிமலை
புரிந்து விட்டது
அதன் பிறகு யாரிடமும் கேட்கவில்லை
பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
ஆனால்
கவிஞர்களுக்கு இது வேறு மாதிரி
நீ என் கவிதையைப் படித்து விட்டயா
மோகினிக்குட்டி?
அது போதும்
பதில் வேண்டாம்
பாராட்டு வேண்டாம்
நீ படித்து விட்டாய் எனத்
தெரிந்தாலே
நான் வானத்தில் பறக்க முடியும்
ஆனால்
இந்த ப்ளூ டிக்கை மறைப்பவன்கள்
பைத்தியங்கள்
அல்லது
அடிமைகள்
நானும் இந்தக் கூட்டத்தில் ஒருத்தன்
எனவே நானும் முடிவு செய்தேன்
ப்ளூ டிக்கை
மறைத்து விடலாமென
ஃபோனை வைத்து ஏதேதோ
செய்தேன்
ஒன்றும் நடக்கவில்லை
இந்தப் பைத்தியக்கார அல்காரிதத்தை
எப்படி மறைப்பதெனத் தெரியவில்லை
இப்போது
மோகினிக்குட்டியின் ப்ளூ டிக்
மறைந்துபோன மாதிரி
என் மனசும் மறைந்து போயிற்று
இந்த உலகமொரு
பெரிய கருப்பு டிக்
நான் இது பற்றி
இன்னும் சில கவிதைகள்
எழுதுவேன்
இருநூறு பேருக்காக