அவன் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும்
பிரபலமான எழுத்தாளன்
என் நண்பன்
வாட்ஸப்பில் அவன் ப்ளூ டிக்கை
மறைத்து வைத்திருக்கிறான்
எப்போதும் ப்ளாக் டிக்தான்
கண்ணுக்குத் தெரிகிறது
ஶ்ரீராம்
என் வலது கரம்
மருத்துவன்
அவனும் அப்படியே
ப்ளூ டிக்கைப் பார்த்ததேயில்லை
மோகினிக்குட்டியிடம்
எப்போதும் ப்ளூ டிக்தான்
ஆனால்
திடீரென்று
அவளிடமிருந்தும் மறைந்தது
ப்ளூ டிக்
நித்திரை போயிற்று
ப்ளூ டிக் ஞாபகம் வேட்டைநாயாய்த்
துரத்தியது
என்னடீ?
என்னடா?
விளக்கினேன்
சிரித்தாள்
ஒரு பாறையில் அமர்ந்தபடி
மலையடிவாரத்தின் மௌனத்தைப் பரிசளித்தாள்
நித்திரை போனதோடு
துர்க்கனாவும் துரத்தியது
தினந்தோறும் நூறு கனா
ஏய் என் மீது கொஞ்சம்
இரக்கம் கொள்
ப்ளூ டிக்கை மறைக்காதே
என்றேன்
எதுவும் நடக்கவில்லை
இத்தனைக்கும் அவள்
சமூக ஊடகங்களில் இல்லை
நண்பர்கள் இல்லை
உற்றம் சுற்றம் நெருக்கமில்லை
கணவன் உண்டு
நான் உண்டு
ஒழிந்த நேரத்தில் படிப்பும்
இசையும்
எனக்காக என்னென்னவோ
செய்திருக்கிறாள்
என்ன வேண்டும் கேள்
தருகிறேன் எனும் மாகாளி
குசுவினும் கேவலமான
இந்த ப்ளூ டிக்கால் அடிக்கிறாள்
கடுகு சைஸ்
ஆனால்
அலவாங்காய் இறங்குகிறது
ஒன்றும் நடக்கவில்லை
யென்பதால்.
மனுஷ்ய புத்திரனின்
இருபது ப்ளூ டிக் கவிதைகளில்
ரெண்டை அனுப்பினேன்
எட்டு மணி நேரம் காத்திருந்தேன்
ப்ளாக் டிக் தவிர
வேறு எந்த நடமாட்டமுமில்லை
ஃபோனை ஸைலண்ட் மோடில்
போட்டுவிட்டு
ஜோலியைப் பார்க்க ஆரம்பித்தேன்
ஒரு நாள் கழித்து
ஃபோனைப் பார்த்தேன்
ஒருசில விளம்பர அழைப்புகள்
தவிர வேறேதுமில்லை
வெட்கத்தை விட்டு அழைத்தேன்
கவிதை படித்தாயா?
எந்தக் கவிதை?
மனுஷ்ய புத்திரன்
திருடனுக்குத் திருடன் சாட்சியா
போடா
உங்களுக்கு இந்த
ப்ளூ டிக் தவிர வேறு பிரச்சினையே
இல்லையா?
இல்லடி, நெஞ்சு வெடித்து விடும்
போல் இருக்கிறது
எழுதியிருக்கிறான் பார்
ப்ளூ டிக்கின்
ரெண்டு கொக்கிகளுக்கு நடுவே
ஊஞ்சல் கட்டுவதற்கு
ஓர் இடமிருக்கிறதாம்
ஊஞ்சல் ஏண்டா கட்டணும்
அப்படியே கயிற்றை மாட்டி
ரெண்டு பேரும் தொங்குங்கடா
லூசுங்களா