வனத்திலொரு கிளியைக் கண்டேன்
அது என்னைக் கண்டிருக்கலாம்
அதன் வனப்பிலும் பேச்சிலும் மயங்கி
இல்லம் கொண்டு வந்தேன்
ஒரு தங்கக் கூண்டு வாங்கினேன்
வந்ததிலிருந்து என் வாழ்க்கை
மாறியது
எனது எண்ணங்கள்
அதன் குரலால் திருத்தப்பட்டன
மணிக்கணக்கில்
பேசினோம்
’காலையில் உன்னோடு பேசினால்
நாள் முழுதும் உற்சாகம்’
என்றது
இது எனக்குப் புதிது
கவிதையாய் எழுதிக் குவித்தேன்
எல்லாம் அந்தக் கிளி பற்றியே
அந்தக் கிளி
என் சுவாசமாய் மாறியது
ஒருநாள் அதன் கண்கள் மங்கின
கருமேகம் இறகுகளில்
தங்கியது
கடவுளே மனிதனாய்ப் பிறந்து வந்து
உன்னை வளர்த்தாலும்
இப்படி ஒரு அன்பை வர்ஷிக்க மாட்டாரே
எனக் குழம்பி
என்ன ஆயிற்று என்றேன்
பதில் இல்லை
அது தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கலாம்
கடவுளிடம் கேட்டேன்
அவருக்கு நேரமில்லை
என் தோழமை மைனாவிடம்
கேட்டேன்
’தங்கக் கூண்டை வீசியெறி,
கவிதை கூண்டிலிருந்து பெறப்படுவதல்ல’
என்றது
கூண்டை வீசியெறிந்தேன்
பறந்து சென்றது கிளி
வனம் அதை எடுத்துக்கொண்டது
பிறகு
ஒருநாள் கனவில் வந்தது கிளி
வனத்துக்கு வா, பார்க்கலாம்
என்று மறைந்தது