1
மைனாவின் பாடல் கேட்பதை
செவிகள் நிறுத்தி விட்டன
தேன்சிட்டின் இசையும் தொலைந்து போயிற்று
இரவு
நட்சத்திரங்களின் ஒளியை மறைக்கிறது
நிலவு ஒரு மங்கிய கண்ணாடி
சொற்கள் என்னை விட்டு ஓடி விட்டன
வாசிப்பு கானல் நீர்
சலன சித்திரங்கள் அர்த்தமற்ற நிழல்கள்
சிநேகத்துடன் பழகி வந்த
விருட்சங்களும் கைவிட்டன
நாய் பூனை என் குரல் மறந்தன
நித்திரை தூரத்து நினைவு
ஊணும் சுவை குன்றியது
கனவுகளால் வேட்டையாடப்பட்டு
கவிதையில் தஞ்சமடைகிறேன்
2
மனிதர் யாவரும் ஒருவரையொருவர்
காயப்படுத்திக் கொள்கிறார்கள்
ஆனாலும்
ஒருவர் மீதொருவர்
அன்பு செலுத்துவதாகவே நம்புகிறார்கள்
அன்பின் மொழியை மட்டுமே
கவிதையாக்குவதாக
நான் நம்புவதைப் போல