மகிழ்ச்சியின் மறுபெயர்

நான் பறவை இனத்தவன் போல
தாமதமாக எழுந்ததே இல்லை.
இன்று எழும்போது
சூரிய ஒளி கண்களைத் தாக்கியது

நேற்று அவள் சொன்னாள்
இன்று பேச முடியாதென்று
அதனால் உறங்கினேன்
நடைப்பயிற்சி இல்லை

ஏழரை மணி
வழக்கமாக சங்கீதா உணவகத்தில்
காஃபி குடித்திருப்பேன்.
இன்று
நானே காஃபி போட்டுக்கொண்டு வந்து
அமர்ந்தேன்.

வனத்தில் இருப்பது போல்
பறவைகளின் குரல்கள் எங்கும்
கிளி மைனா குயில்
சிலவற்றை மட்டும் அறிவேன்
மற்றவை பெயர் தெரியவில்லை

காலை நேரம்
கையில் காஃபி
ரேமண்ட் கார்வரின் ’மகிழ்ச்சி’
நினைவுக்கு வந்தது
எனக்கு மகிழ்ச்சி இல்லை

மகிழ்ச்சி இருந்தால் கவிதை இல்லை
என் கவிதை
என் ஆத்மாவின் குமுறல்.

பறவைகளின் பாடல்கள்
எத்தனை மகிழ்ச்சியானவை
ஆனாலும்
என் துக்கத்தை விடுவிக்கவில்லை.

வாழ்நாள் முழுவதும்
மகிழ்ச்சியில் திளைத்தவன்
இன்று அவள் குரல் இல்லாமல்
துக்கத்தில் மூழ்கினேன்

நீ பைத்தியம் என்பாள்
துக்கத்தை விரும்புவார் யார் பேதையே?

எல்லாம் பழகி விடும் என்பாள்
இழப்பு பழகுமா?
உன்னோடு பேசாமல் இருப்பதும்
உன்னைப் பார்க்காமல் இருப்பதும்
பழகுமா?

என் செல்ல நாய் ஸோரோ இறந்து
ஆண்டுகள் ஆனாலும்,
நினைத்தால் நெஞ்சு வெடிக்கிறதே?

எதுவும் பழகாது
குறைந்தபட்சம் ஒரு கவிஞனுக்கு
நினைவுகள் வேட்டைநாயாய்
துரத்துவதால் அவன்
கவிதை இயற்றுகிறான்

வைன் இல்லை எனக்கு
ஆகவே
கார்வரின் ’மகிழ்ச்சி’யை எடுத்து
வாசிக்கத் தொடங்கினேன்.