மேஜிக்

1.

காலை நடையில்
எதையெதையோ
யார் யாரையோ
பார்க்கிறோம்

அப்படித்தான்
அவளை
மூன்று ஆண்டுகளாய்
பார்த்துக்கொண்டிருந்தேன்
புத்தகக் கடையில்
மங்கலான திரையரங்கில்
என் வாசகரில்
அவளும் ஒருத்தி

ஒரு மாலை
காஃபி குடித்தோம்
ஒரு இரவு
நண்பர்களுடன் பியர் பகிர்ந்தோம்

தொலைபேசி எண்ணை அறிவேன்
ஆனால் அழைத்ததில்லை
ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்
பதில் அனுப்ப நினைத்தேன்
மறந்துவிட்டேன்

நானோ சௌந்தர்யப் பிரியன்
அவளோ பேரழகி
ஆனாலும்
எதுவும் தோன்றவில்லை

ஆறு மாதங்களுக்கு முன்
என்ன நடந்தது?
எப்படி நடந்தது?
ஏன் நடந்தது?

ஒரு தருணத்தில்
பித்து பிடித்தது
நான்கு மணி நேரப் பேச்சு
நூறு குறுஞ்செய்திகள்
இன்ன பிற

2
ஆரம்பமும் முடிவும்
தெரியாத
காரணமும் புரியாத
ஒரு ஆட்டம்
இந்த வாழ்வும்
இந்தக் காதலும்