புத்தக விழா – 4

நேற்று (14 ஜனவரி) புத்தக விழாவில் கூட்டமே இல்லை. தேவதேவனைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்ததுதான் ஒரே சுவாரசியம். எலந்தப் பழம் கிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை அன்று சக்திவேல் எலந்தப் பழம் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். அதை என் அருகிலிருந்த நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முயற்சித்தபோது அந்தப் பழம் யாருக்குமே பிடிக்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது. கால கட்டத்துக்கு ஏற்றாற்போல் மனிதர்களின் உணவு ரசனையும் மாறி விடும் போல் தெரிகிறது. பல பழங்கள், பல உணவுப் பண்டங்கள் மனிதர்களின் வாழ்விலிருந்தே காணாமல் போய் விட்டன. மாசிக் கருவாடு, அக்கார அடிசில் எல்லாம் அந்தப் பட்டியலில்தான் வரும்.

ஒரே ஒரு நண்பர் மட்டும் எலந்த வடை பிடிக்கும் என்றார். எனக்கும் எலந்தப்பழத்தை விட எலந்த வடை பிடிக்கும்.

எழுதி எழுதியோ என்னவோ, யாரும் இந்த ஆண்டு என்னைப் பார்த்து, என்ன டல்லா இருக்கீங்க என்று கேட்கவில்லை. நாராயணி கண்ணகி ஸீரோ டிகிரி நாவலை சிலாகித்து ஒரு பதினைந்து நிமிடம் என்னிடமும் அவந்திகாவிடமும் பேசினார்.

சென்ற ஆண்டு என்னோடு சிநேகமாய்ச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ஏழெட்டு பெண் நண்பர்கள் இந்த ஆண்டு என்னைப் பார்த்தும் பார்க்காதது போல ஒதுங்கிப் போனார்கள். எல்லோரும் இன்புற்றிருக்க குறுநாவலின் விளைவு என்பதை எளிதில் புரிந்து கொண்டேன். இப்படி அவர்கள் ஒதுங்கிப் போவதையும் என்னைத் தவிர்ப்பதையும் நான் மிகவும் சிலாகிக்கிறேன். இதுதான் தேவை. இப்படியில்லாமல் உள்ளுக்குள் வெறுப்பை வைத்துக்கொண்டு, வெளியே சிரித்துப் பேசி நடிப்பது நன்றன்று.

நேற்று வேறோர் சம்பவம் நடந்தது. ஒரு முக்கியமான நண்பரின் பெயர் மறந்து போனேன். அவர் எனக்கு மிகவும் முக்கியமானவர் என்று தெரிந்தது. பெயர் போய் விட்டது. பெயர் தெரிந்தால்தான் அவர் என் வாழ்வில் எப்படி முக்கியமானவர் என்பது ஞாபகம் வரும். பிறகு ஒரு நண்பரைக் கேட்டு அவர் பெயரைத் தெரிந்து கொண்ட பிறகு என்னை என்னாலேயே மன்னிக்க முடியவில்லை. இவர் பெயரையா மறந்தோம்? அதற்குப் பிறகு அவரைக் குறிந்த இனிய நினைவுகள் அனைத்தும் நினைவுக்கு வந்தன.

ஆனால் என் ஞாபக சக்தி மிகவும் கண்டிக்கத் தக்கதாக நடந்து கொள்கிறது. என் அருகில் ஒரு நண்பர் என்னுடைய இன்னொரு நண்பரோடு ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவரோடு இரண்டொரு முறைதான் ஹலோ சொல்லியிருக்கிறேன். எனக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாதவர். ஆனால் அவர் பெயர் இனிஷியலோடு ஞாபகம் வந்தது. அந்த ஒன்றரை மணி நேரமும் அவர் எனக்கு இரண்டு அடி தூரத்தில்தான் இருந்தார் என்றாலும், அவர் கண் பார்வையில் நான் தெரிந்துகொண்டே இருந்தேன் என்றாலும், அவர் ஒரு புன்முறுவல்கூடத் தரவில்லை. அதையும் மிகவும் சிலாகித்தேன். இதெல்லாம் இன்று காணாமல் போய் விட்ட அரிய பண்பு. ஒருவரை நமக்குப் பிடிக்கவில்லை என்றால், அவரைக் கண்டு புன்முறுவல் தரலாகாது. அது நடிப்பு. ஆஷாடபூதித்தனம். ஓரளவுக்காவது மனதின் விருப்பத்திற்கேற்ப நடந்து பழக வேண்டும்.

மற்றபடி நேற்று ஒன்றும் சுவாரசியம் இல்லை. வாசகர்களுக்குக் கையெழுத்துப் போடுவதற்காகத்தான் தினமும் புத்தக விழாவுக்கு வருகிறேன். தினமும் மாலை நான்கு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை. டாக்ஸி செலவை நண்பர் ஒருவர்தான் ஏற்றுக் கொள்கிறார்.

இன்று ஐந்தரை மணி அளவில் ஸீரொ டிகிரி அரங்கில் இருப்பேன். எஃப் 19.