இன்று (ஜனவரி 16, வெள்ளிக்கிழமை) ஐந்து மணியிலிருந்து ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். எஃப் 19.
நேற்று ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. விழா அரங்கிலிருந்து காஃபி குடிப்பதற்காக வெளியே சென்று கொண்டிருந்த போது ஒரு நண்பர் ஒரு பாக்கெட் எலந்தப்பழம் கொடுத்தார். எனக்காகத்தான் வாங்கியதாகச் சொன்னார். உங்கள் பெயர் என்ன என்று கேட்டேன். சரவணன் என்றார். சரோ லாமா என்ற பெயரில் எழுதுகிறேன் என்றார். ஆடிப் போய் விட்டேன். ஆ, சரோ லாமா என் நெருங்கிய நண்பர் ஆயிற்றே? பல முறை தொலைபேசியில் பேசியிருக்கிறேன். நேரிலும் சந்தித்திருக்கிறேன். அவர் சொன்னார், டென் டௌனிங்கில்கூட சந்தித்திருக்கிறோம். சே, என் ஞாபக மறதியைக் கடிந்து கொண்டேன்.
அதேபோல் என் நீண்ட கால வாசகியான சங்கரியைச் சந்தித்தேன். வழக்கம்போலவே அவர் கணவரின் பெயர் மறந்து விட்டது. உடனே முடிவுக்கு வராதீர்கள். பல சமயங்களில் ஆண் பெயர் ஞாபகம் இருக்கும். அவரது மனைவி அல்லது தோழியின் பெயர் மறந்து போயிருக்கும். அதனால் ஒரு திட்டம் செய்தேன். யார் பெயர் ஞாபகம் இருக்கிறதோ அவர் பெயருக்குப் பக்கத்தில் அவரது இணையரின் பெயரையும் குறித்து வைக்க ஆரம்பித்தேன். நேற்றும் சங்கரியின் பெயர் ஞாபகம் இருந்தது. கணவர் பெயர் ஞாபகம் இல்லை. தொலைபேசியில் சங்கரியின் பெயருக்கு அருகில் சித்தார்த் என்று இருந்தது. இல்லாவிட்டால் ஒவ்வொரு புத்தக விழாவிலும் கேட்பது போல் நேற்றும் அவர் பெயரைக் கேட்டிருப்பேன். (இருவரையும் ஒவ்வொரு ஆண்டும் புத்தக விழாவின்போதுதான் சந்திப்பது.)
சமீபத்தில் ஒரு நண்பர் கேட்டார், உங்கள் நாவல்களை ஃப்ரெஞ்சில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்யலாமே என்று.
நான் என்ன செய்யாமலா இருக்கிறேன்? இருபத்தைந்து ஆண்டுகளாக முயற்சி செய்கிறேன். நடக்கவில்லை. நடக்கவும் போவதில்லை. ஆனால் எப்போதுமே நான் சொல்லி வருகிறேன், நான் தமிழில் எழுதும் ஃப்ரெஞ்ச் எழுத்தாளன் என்று. என் எழுத்து தமிழர்களுக்கானது மட்டும் அல்ல. ஹருகி முராகாமி போல் சர்வதேச வாசகர்களுக்கானது. ஆனாலும் இருபத்தைந்து ஆண்டுகளாக நான் ஆயிரம் தமிழர்களுக்காக மட்டுமே எழுதி வருவது என் TOV. அது பற்றி எனக்குக் கவலையும் இல்லை.
என் எழுத்து ஏன் ஃப்ரெஞ்சில் வரும் சாத்தியம் இல்லை என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
என் தாயையோ, சகோதரியையோ, மனைவியையோ, என் இனத்துப் பெண்களையோ அந்நிய நாட்டு ராணுவத்தினர் வன்கலவி செய்து கொல்லவில்லை. என் நாட்டு மருத்துவமனைகளும் கல்விக்கூடங்களும் வெடிகுண்டுகளுக்கு இரையாகவில்லை. இதெல்லாம் நடந்தால்தான் ஃப்ரெஞ்சுக்காரர்களின் மனம் இளகி கண்ணீர் வருகிறது. அவர்களுக்குக் கண்ணீர் வரும்படி எழுதினால்தான் அவர்கள் மொழியில் என் எழுத்து மொழிபெயர்க்கப்படும். அல்லது, நான் பிறந்து வளர்ந்த தேசத்தின் மீது நான் காறி உமிழ வேண்டும். ஒய்ட் டைகர் என்ற நாவலில் வரும் ஹீரோ இந்தியா மீது அதைச் செய்கிறான். அதனால் அந்த நாவலுக்கு புக்கர் கிடைத்தது. அதே காரியத்தை வேறு மாதிரி செய்தார் அருந்ததி ராய். அவருக்கும் புக்கர். என் நாட்டின் மீது எனக்கு ஆயிரத்தெட்டு புகார் உண்டு. இங்கே பெண்கள் யாரும் பாதுகாப்பாக நடமாட முடியவில்லை. ஆனால் இந்தியாவை விட பாதுகாப்பற்ற நாடு அமெரிக்கா. உங்கள் நிறம் கருப்பாக இருந்தால் போலீஸ்காரன் உங்கள் கழுத்தில் முழங்காலை வைத்து நசுக்கிக் கொல்வான்.
ஃப்ரான்ஸைப் பொருத்த வரை தமிழ் எழுத்தாளன் கண்ணீர் உகுக்க வேண்டும். அவர்கள் அன்பு கூர்ந்து மொழிபெயர்ப்பார்கள். ஆனால் நானோ வாழ்வின் கொண்டாட்டத்தை எழுதுகிறேன். அது எப்பிர்ரா மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த ஒரு பிச்சைக்கார லோஃபர் வாழ்வின் கொண்டாட்டத்தை எழுத முடியும்? எத்தனை கொடூரமான சேடிஸ்ட் மனநிலை பாருங்கள்! இதை விட ரேஸிஸம் வேறேதேனும் உண்டா? எனக்கு சாரு நிவேதிதாவின் எழுத்து பிடிக்கவில்லை என்றே தமிழ் தெரிந்த, சமகாலத் தமிழ் இலக்கியம் தெரிந்த ஃப்ரெஞ்சுக்கார மாமிகள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லாம் ஃப்ரான்ஸில் வசிக்கும் மைலாப்பூர் மாமிகள்.
என் வயது எழுபத்து மூன்று. இனி நான் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் என்னை மொழிபெயர்ப்பீர்கள் என்று எந்த ஃப்ரெஞ்சுக்காரனின் ஃப்ரெஞ்சுக்காரியின் காலையும் நான் நக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் எழுத்தாளர்களும் கலைஞர்களும் எப்படி வாழ்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? மிஷல் வெல்பெக் (Michel Houellebecq) எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று பாருங்கள். அதில் நான் ஆயிரத்தில் ஒரு மடங்கு eccentricityயைக் கூட வெளிப்படுத்துவதில்லை.
என்னால் ஒருபோதும் கண்ணீர்க் கதை எழுத முடியாது. இப்படிப்பட்ட கண்ணீர்க் கதைகளை ஃப்ரெஞ்சில் மொழிபெயர்ப்பதும் லைவ் ஷோ பார்த்து கர மைதுனம் செய்வதும் ஒன்றேதான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு Tomaž Tomaz Šalamun (1941–2014) என்ற ஸ்லோவேனிய கவியைச் சந்தித்த போது அவர் ஒரு விஷயம் சொன்னார். அவர் என்னுடைய ஸீரோ டிகிரியைப் படித்திருந்தார். “உங்கள் எழுத்து ஃப்ரெஞ்சிலோ, ஆங்கிலத்திலோ வந்தால் அதனால் எந்தப் பயனும் இல்லை. அவர்கள் பழமைவாதிகள். ஜெர்மன் மொழியில் வந்தால் அவர்கள் உங்களைக் கொண்டாடுவார்கள்.”
என் ஆயுளில் அது நடக்கிறதா, பார்ப்போம். நடந்தாலும் நடக்காவிட்டாலும் ஐரோப்பிய மொழிபெயர்ப்பாளர்கள் எதிர்பார்ப்பதைப் போல் நான் அவர்கள் காலை நக்க மாட்டேன். நான் மூன்றாம் உலகைச் சேர்ந்த எழுத்தாளன். எனக்கு முன்னே ஐரோப்பிய மொழிபெயர்ப்பாளர்கள்தான் கைகட்டி நிற்க வேண்டும். இல்லாவிட்டால் அசோகமித்திரனைப் போல், தி. ஜானகிராமனைப் போல், நகுலனைப் போல், புதுமைப்பித்தனைப் போல் எந்த ஐரோப்பியருக்கும் தெரியாமலே மறைந்து போகிறேன்.