புத்தக விழா – 6

நேற்று (16 ஜனவரி) புத்தக விழா களை கட்டியிருந்தது.  இனிய நண்பர்கள் பலரைச் சந்திக்க முடிந்தது.  போகன் சங்கர், பெருந்தேவி, கவிதா சொர்ணவல்லி மற்றும் பலர்.

பெருந்தேவியின் “இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்” என்ற சிறுகதைத் தொகுதியை நானும் போகன் சங்கரும் வெளியிட்டோம்.  தொகுதியை வாசித்து விட்டேன்.  சர்வதேசத் தரம் வாய்ந்த சிறுகதைகள்.  அது பற்றி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.  மூன்று தினங்களாகப் போய்க்கொண்டிருக்கிறது.  ஒரே நாளில் முடித்திருப்பேன்.  புத்தக விழாவுக்குப் போய் விடுவதால் தள்ளிக்கொண்டே போகிறது. 

நான் ஒரு வாசனை திரவியப் பிரியன்.  எனக்குப் பிடித்த வாசனை திரவியம் Chanel 5.  ஆனால் அது தீர்ந்து போய் விட்டதால் வேறொரு திரவியத்தைத் தெளித்துக்கொண்டு போனேன்.  அதன் பெயர் Emporio Armani.  கொஞ்சம் அதிக மணம் கொண்டது.  பார்த்த மாத்திரத்தில் போகன் சங்கர் இது என்ன வாசனை திரவியம் என்று கேட்டார்.  அப்போது அதன் பெயர் ஞாபகத்தில் இல்லை.

நேற்று தொப்பி அணிந்து கொள்ள மறந்து போய் விட்டேன்.  கடந்த ஒரு ஆண்டுக் காலமாக தொப்பி அணிய ஆரம்பித்திருக்கிறேன்.  ஒருமுறை பாண்டிச்சேரி ராடிஸன் ஓட்டலில் தங்க நேர்ந்த போது கொடுத்தார்கள்.  அதிலிருந்து தொப்பி பிடித்து விட்டது.  நீண்ட காலமாக தொப்பி மீது பிரியம் உண்டு.  ஆனால் எதுவாக இருந்தாலும் என்னிடம் தானாக வர வேண்டும்.  நானாகப் போய் வாங்குவது அரிது. 

இப்படித்தான் ஒருநாள் நடைப்பயிற்சிக்குச் செல்லும்போது தொப்பியை மறந்து விட்டேன்.  அன்றைக்கென்று பார்த்து மழைத் தூறல்.  எனக்குத் தூறலில் நனைவது பிடிக்காது.  மழையே பிடிக்காது என்பது வேறு விஷயம்.  நாய்களுக்கும் பூனைகளுக்கும் மழை எதிரி என்பதால்தான் எனக்கும் மழை பிடிக்காமல் போனது.  அன்று தொப்பி இருந்திருந்தால் தலை நனைந்திருக்காது.

நேற்று மாலை புத்தக விழாவில் தொப்பி இல்லாமல் அலைந்து கொண்டிருந்தபோது நீட்ஷேவின் ஞாபகம் வந்தது.  1889 ஜனவரி மூன்றாம் நாள் அன்று துரின் நகரில் குதிரைக்காரனின் முன் குதிரையை அடிக்காதே என்று கைகளை விரித்தபடி குதிரைக்கு முன்னால் நின்றபடி மறித்து, மயக்கமடைந்து விழுந்து, பிறகு, வீட்டுக்குத் திரும்பிய நீட்ஷே என் கிரீடம் எங்கே என்று அடிக்கடி கேட்டிருக்கிறார்.  நடந்த கலவரத்தில் தொப்பியை விட்டு விட்டார்.  அதற்குப் பிறகு 1900 ஆம் ஆண்டு இறக்கும் வரை அவருக்கு சுயசிந்தனையே வரவில்லை.  பன்னிரண்டு ஆண்டுகள் மனப்பிறழ்வு கொண்டவராகவே இருந்திருக்கிறார்.

நேற்று வான்கோ பதிப்பகத்தின் நண்பரைச் சந்தித்தேன்.  சில தினங்களுக்கு முன்னால்தான் அவரை அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்திருந்தேன்.  அதற்குள் அவர் பெயர் மறந்து போனது.  மூன்று எழுத்துப் பெயர் என்பது மட்டும் ஞாபகத்தில் தங்கியிருந்தது. கேட்டேன்.  சுரேன் என்றார்.  பெரும்பாலான நண்பர்கள் அவரை நரேன் என்று அழைப்பதை கவனித்திருக்கிறேன்.  வான்கோ பதிப்பகத்துக்கு அழைத்துச் சென்றார். 

கவிதா சொர்ணவல்லியின் ஒரு கிளாஸ் விஸ்கி, க.நா.சு. மொழிபெயர்த்த கில்காமெஷ், மாக்ஸிம் கார்க்கி எழுதி வல்லிக்கண்ணன் மொழிபெயர்த்த சின்னஞ்சிறு பெண், அ. முத்துலிங்கத்தின் புளிக்க வைத்த அப்பம், புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த பிரேத மனிதன், தொ.மு.சி. ரகுநாதன் மொழிபெயர்த்த நான் இருவர் (ஆர்.எல். ஸ்டீவன்ஸன்), ரா. கிருஷ்ணையா மொழிபெயர்த்த வெண்ணிற இரவுகள் (தஸ்தயேவ்ஸ்கி), புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிரித்த முகக்காரன் (ஜப்பானியச் சிறுகதைகள்), தேவதேவனின் நிலவில் உதித்த கார்முகில், வல்லிக்கண்ணன் மொழிபெயர்த்த பசித்த மரம் (இந்தியச் சிறுகதைகள்), போகன் சங்கரின் சங்கிலி பூதம் ஆகிய புத்தகங்களை வாங்கினேன்.  எவ்வளவு ரூபாய் என்றேன்.  அதெல்லாம் வேண்டாம் என்றார் சுரேன். 

முடியவே முடியாது, பணம் கொடுக்காமல் நான் புத்தகம் வாங்குவதில்லை, அதிலும் இது வளரும் பதிப்பகம்.  மிகவும் வற்புறுத்திய பிறகு ஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டார்.  கவிஞர் சதீஷ்குமாரும், சுரேனும் இணைந்து நடத்தும் வான்கோ பதிப்பகம் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்.  காரணம், இவர்கள் தரமான புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.  மிகத் தரமாக வெளியிடுகிறார்கள்.  ஒரு பதிப்பகத்துக்கு இதுதான் முக்கியம்.  ஒருபோதும் பதிப்பகம் என்பது மளிகைக்கடையாக மாறி விடக் கூடாது.  அப்படி மாறிப்போன ஒரு பதிப்பகம் பற்றி எல்லோருக்கும் தெரியும். 

நான் ஒன்றும் மளிகைக்கடைகளுக்கு எதிரி அல்ல.  பதிப்பகங்களும் மளிகைக்கடைகளாக மாறலாம்.  ஆனால் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரம் ஒரு லட்சம் என்று இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வாங்குவோர் எண்ணிக்கை இருநூறு முந்நூறைத் தாண்டுவதில்லை.  இங்கே போய் பதிப்பகத்தை மளிகைக்கடையாக நடத்தலாமா?  வான்கோ பதிப்பக நண்பர்கள் ஒருபோதும் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பது எப்படி, பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பது போன்ற ”எப்படி” புத்தகங்களை வெளியிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  அப்படிப்பட்ட எப்படி பதிப்பகத்தில் ஒருமுறைப் என்னுடைய சில புத்தகங்கள் வெளிவந்தன.  அப்போது நடந்த ஒரு புத்தக விழாவில் அந்தப் பதிப்பகத்தின் ஸ்டால் பக்கம் போனேன்.  அசல் மளிகைக்கடை.  மளிகைக்கடையில் நம்மை யார் சீந்துவார்?  பத்து நிமிடம் போல் கடல்கரையில் தொலைந்து போன சிறுவனைப் போல் நின்று கொண்டிருந்தேன்.  அப்போதுதான் என்னுடைய பிரபலமான ஒரு நாவல் அந்தப் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருந்தது.  ஆனாலும் என்னைக் கேட்பார் இல்லை.  அங்கிருந்த யாருக்குமே என்னைத் தெரியவில்லை. 

வான்கோ பதிப்பகத்தில் கவிதா சொர்ணவல்லியின் புத்தகத்தை வாங்கிய போது இதில் அவர் கையெழுத்திட்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.  நினைத்த மறுகணம் அவர் என் எதிரே நின்றார்.

கையெழுத்திட்டுக் கொடுத்தார்.  அப்போது சொன்னார்.  இதோ பாருங்கள் சாரு, திட்டுவதாக இருந்தால் நேரில் திட்டுங்கள் அல்லது ஃபோனில் அழைத்துத் திட்டுங்கள், ப்ளாகில் திட்டினால் அவ்ளோதான்.

இனிமையின் மொத்த வடிவமாக விளங்கும் கவிதா சொர்ணவல்லியைப் போய் நான் திட்டுவேனா?  அதிலும் என்னை விட்டு அகாலத்தில் மறைந்து போன என் மகன் குமரகுருபரனின் தோழியை?  கிளம்புவதற்கு முந்தின தினம் கூட குமரகுருபரன் என்னைப் பற்றி என் தகப்பன் என் தகப்பன் என்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான் என்று அறிந்தேன். 

கவிதாவின் நூல் கவிதைத் தொகுதி என நினைத்தேன். சிறுகதைத் தொகுப்பு.  ஒரு கிளாஸ் விஸ்கி. மது அருந்தினால் ஒரு பரவசம்.  ஆனால் மதுவை முகர்ந்து கூட பார்க்காத கவிதா சொர்ணவல்லி எப்போதுமே பரவசத்தில் மிதப்பவர்.  அவர் எழுதிய விஸ்கி தொகுப்பை வாசிக்க வேண்டும்.  அதோடு நிறுத்திக் கொள்வேன்.  பிடித்தால் பாராட்டு.  பிடிக்காவிட்டால் ஒரு போத்தல் வைன் அருந்துவேன்.  நேற்றைய கதைகள் இன்னும் இருக்கிறது நிறைய.  நாளை தொடர்வேன். 

இன்று (17 ஜனவரி) மாலை ஐந்து மணிக்குள் ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். எஃப் 19