ஒரு பின் நவீனத்துவ எழுத்தாளர் ஆன்மீக நாவல் எழுதலாமா?: வளன் அரசு

பின் நவீனத்துவம் எதையுமே ஒதுக்கியதில்லை. அதன் முக்கியமான அம்சம் தேர்ந்தெடுத்தல். அதாவது உங்களுக்கு முன் பல்வேறு வாய்ப்புகள் இருக்கிறது. அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். அல்லது நீங்கள் வேட்டைக்கு செல்வதாக கற்பனை செய்துகொள்ளுகள். காட்டில் பல்வேறு விலங்குகள் இருக்கிறது. பார்க்கும் அத்தனை விலங்குகளையும் வேட்டையாடுதல் சரியான வேட்டையல்ல. ஒரு வேட்டைக்காரன் தன் வேட்டையை தெரிவு செய்கிறான். அப்படி தேர்ந்தெடுத்ததும் தன் வேட்டைக்காக காத்திருக்கிறான் அல்லது காட்டில் சுற்றி வருகிறான். அப்போது அவன் முன் தன் வேட்டையைவிட பெரிய விலங்கு வந்தாலும் அதை அவன் கொல்வதில்லை. அப்படித்தான் பின் நவீனத்துவமும். நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். அப்படியாகத்தான் நான் சாரு நிவேதிதா எழுதும் ‘தியாகராஜா’ நாவலை பார்க்கிறேன்.

நாவல் வெளியாகும் முன்பே நாவலின் ஒவ்வொரு அத்தியாயங்களும் சுடச்சுடப் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக சாருவுக்கு என் அளப்பரிய அன்பும் நன்றியும்.

தியாகராஜா தான் கடவுளை நேரடியாகப் பார்த்தேன் என்கிறார். சாரு நிவேதிதா அதை நம்புகிறார். தான் நம்பியதை நாவலாக எழுதுகிறார். தியாகராஜா நாவல் குறித்து அறிவிப்பு வந்ததிலிருந்து சாருவின் மீது வழக்கமான சச்சரவுகளும் ஆரம்பித்துவிட்டன. நாம் இங்கே கவனிக்க வேண்டியது எந்தளவுக்கு சாரு தான் தேர்ந்துக்கொண்ட விஷயத்துக்கு உண்மையாய் இருக்கிறார் என்பதே. இதை சாருவிடம் கேட்டால், “இவ்வளவு குழப்பிக்கொள்ள வேண்டாம், தியாகராஜா என் வழியாக அவர் வாழ்க்கையை எழுதிக்கொள்கிறார்” என்று முடித்துவிடுவார்.

நாவலைப் பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது. சொல்லக் கூடாது. ஆனால் நாவல் படுசுவாரசியமாக இருக்கிறது. சாரு எழுதிய நாவல்களில் இது மிகவும் தனித்துவமானது. ஔரங்ஸேப் நாவல் மாதிரிகூட இல்லை. இது வேறு மாதிரியான ஒன்று. பொதுவாக இந்த மாதிரி நாவல்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் தரவுகள் இல்லாமை. இதற்கு ஒரு உதாரணம் க.நா.சு எழுதிய ‘தாமஸ் வந்தார்’ நாவல்.

க.நா.சு மிகப் பெரிய மேதை. அவருடைய நாவல்கள் முழுவதும் தத்துவச்சரடுகளால் நெய்யப்பட்டிருக்கும். பல சமயங்களில் அதுவே அந்நாவல்களின் பின்னடைவுக்கு காரணமாகிவிடும். இதே பிரச்சனைத்தான் உம்பர்த்தோ எக்கோவின் அத்தனைப் படைப்புகளிலும் இருக்கும். க.நா.சுவின் தாமஸ் நாவலை ஆர்வமாக வாசித்தேன். நாவலில் திருவள்ளுவர் வருகிறார். அவருக்கு ஒரு நண்பர் இருக்கிறார். ஒரு பெண். அவள் அறிவாளி. பெண்ணின் தகப்பனார் நல்லவர். வள்ளுவரின் நண்பனின் தகப்பன் கெட்டவர். இது தான் கதையின் மாந்தர்கள். நாவல் முழுவதும் திருக்குறளின் தத்துவ சரடுகள் தொடர்ந்து வந்து ஒரு கட்டத்தில் திருக்குறளுக்கான inspiration தாமஸ் அவர்கள் தான் கொடுத்தார் என்பது போல போகும். க.நா.சு chose to believe in the statement. அதில் பிரச்சனை இல்லை. அதை கதையாக எழுதும் போது அவரின் மேதமை நம்மை சலிப்பிறச் செய்துவிடுகிறது. இதையே அவர் ஒரு ஆய்வு நூலக எழுதியிருந்தால் இந்தப் பிரச்சனை இருந்திருக்காது. கதை என்று வந்ததால்தான் பிரச்சனை. க.நா.சு ஒரு கலைஞனாக மாறி கிடைத்த தரவுகளை கொண்டு ஒரு கதையை உருவாக்கியிருக்கலாம். நான் ஏற்கனவே சொன்னது போல நம்மிடம் தரவுகள் இல்லை. திருவள்ளுவரை மட்டும் கொண்டு ஒரு நாவல் எழுதியிருக்கலாம். இதெல்லாம்தான் தாமஸ் நாவலின் பிரச்சனைகள்.

ஓவியத்துக்கு முன் நிற்கும் பார்வையாளனுக்கு நிறங்கள் எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்பது குறித்தோ, தூரிகைகளின் அழுத்தங்கள் குறித்தோ, ஓவியத்தின் காட்சிக் கோணங்கள் குறித்தோ தெரிந்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அதெல்லாம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உரிய வெளி. ஒரு எளிய பார்வையாளனை தன் முன் ஓவியம் எவ்வளவு நேரம் நிறுத்தி வைக்கிறது என்பதில் தான் ஓவியத்தின் வெற்றி இருக்கிறது. தாமஸ் நாவல் முழுவதும் க.நா.சுவை மட்டுமே பார்க்க முடியும். தியாகராஜா நாவலில் சாரு இல்லை. கதையைக் கொடுத்துவிட்டு சாரு அந்த கதையில் கரைந்து போய்விட்டார். க.நா.சு தாமஸ் நாவலில் எதை தவறவிட்டாரோ அதை சரியாக தியாகராஜா நாவலில் (படித்தவரை) பூர்த்தியாகியிருக்கிறது.

நாவலைப் படித்ததிலிருந்து மனம் ஒரே உற்சாகமாக இருக்கிறது. இது சாருவின் புனைவுலகின் உச்சம் என்று சொல்லலாம். சாரு என்னும் கலைஞன் தியாகராஜா என்னும் கலைஞனுக்கு செலுத்திய அஞ்சலி என்றும் சொல்லலாம்.