எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பும் என்னை மறந்த பரவசமும் ஒன்றுதான். பாக்ஹின் இந்த cantataக்களைக் கேட்கும்போது ஏற்படுவது பரவசமா, தாள முடியாத துக்கமா என்று தெரியவில்லை. ஒரு இரவு வேளையில் தனியாக மின்விசிறி சப்தம்கூட இல்லாமல் இந்த இசையைக் கேட்டுப் பாருங்கள். தியாகராஜா நாவல் இன்னும் இரண்டொரு தினங்களில் அச்சுக்குப் போய் விடும். இன்றே அனுப்பியிருக்கலாம். ஆனாலும் இன்னும் ஒரே ஒரு முறை வாசித்துப் பார்க்க இருக்கிறேன். புத்தகத்தில் பிழைகள் இருக்கக் கூடாது என்ற என் கவனமே காரணம். ஒரு வாரம் தாமதம் ஆனாலும் பரவாயில்லை, பிழைகள் இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். இத்தனை செலவு செய்து உருவாக்கப்படும் நூலில் ஒரு பிழைகூட இருக்கக் கூடாது இல்லையா? இப்போது நான் செய்வது நான்காவது முறை பிழை திருத்தம்.
நாளை ஹைதராபாத் கிளம்புகிறேன். எனக்கு லௌகீக காரியங்கள் எதுவுமே தெரியாது. விமானத்துக்கு வெப் செக் இன் செய்து தருவதுகூட ராஜா வெங்கடேஷ்தான். கொழுப்பெடுத்துப் போய் சாலையில் பைக்கை அதிவேகத்தில் ஓட்டி கிளம்பி விட்டார். என் வாழ்வில் ஸோரோவை இழந்தது மட்டுமே பெரும் துக்கம். ஆனால் அது தன் நீண்ட ஆயுளை வாழ்ந்து விட்டுத்தான் போனது. க்ரேட் டேனுக்கெல்லாம் எட்டு ஆண்டுகள்தான். ஆனால் இவரோ முளை விட்டு இலை விடும் முன்பே கிளம்பி விட்டார். தியாகராஜாவில் மூழ்கியிருந்ததால் எதுவுமே தெரியவில்லை. இப்போது நினைக்கும்போதெல்லாம் துக்கத்தில் நெஞ்சு வலிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே குடிப் பழக்கத்தையும் நிறுத்தி விட்டார். குடியிருந்திருந்தால் உயிர் இருந்திருக்குமோ எனத் தோன்றுகிறது இப்போது. எதுவுமே இல்லாததால்தானே சாகசம் தேடி புதிய பைக்கில் வேகமாகப் போகத் தோன்றியது? இதுதான் என் வாழ்வில் சந்திக்கும் இரண்டாவது மரணம். இரண்டாவது இழப்பு. மன்னிக்கவே முடியாத துரோகம். துரோகம்தான். உயிரையே விடும் செயலை பொறுப்பின்மை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
தியாகராஜா நாவலில் பீத்தோவன் நேரடியாக வருகிறார். பாக்ஹ் ஞாபகங்களாக வருகிறார். இசையாக வருகிறார். பாக்ஹின் இந்த காண்ட்டாட்டாக்களைக் கேட்டுப் பாருங்கள்.