மார்கழி இசைப் பருவம்

மார்கழி இசைப் பருவத்தை ஒட்டி தினமலரில் இன்று என்னுடைய சிறிய பேட்டி ஒன்று வெளியாகி உள்ளது.  இரண்டு திருத்தங்களோடு வாசிக்கவும்.  (1) எம்.டி. ராமனாதன் எழுதிய நூலின் பெயர்: சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்.  (2) காரைக்காலில் கேட்டது கர்னாடக சங்கீதம் அல்ல; மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதம்.

டிசம்பர் முடியும் தறுவாயில் உள்ளது.  தினந்தோறும் நாள் தாளைக் கிழிக்கும் காலண்டர் இல்லாமல் பல ஆண்டுகள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன்.  அதை 2014 ஜனவரியில் மனுஷ்ய புத்திரனிடம் சொல்லி அங்கலாய்த்த போது என்னிடம் நூறு இருநூறு என்று வந்து கிடக்கிறது; ஒன்றை அனுப்புகிறேன் என்று அனுப்பி வைத்தார்.  மெக்கா, மெதினா போட்ட அட்டை.  நானும் நாகூர்க்காரன் என்றபடியால் நல்ல பொருத்தமாக இருந்தது.  ஆண்டும் சிறப்பாகக் கழிந்தது.  இந்த ஆண்டு யாராவது திருப்பதி வெங்கடாஜலபதி அட்டை போட்ட காலண்டரை (தினந்தோறும் கிழிக்கும் வசதி கொண்டது) கொடுத்து உதவுங்கள்.  வெங்கடாஜலபதி பணம் கொடுப்பார் என்கிறார்கள்.  நானும் ஒருமுறை இந்தப் பணப் பிரச்சினைக்காகவே திருப்பதி போய் வெங்கடாஜலபதியிடம் புகார் மனு கொடுத்து விட்டு வந்தேன். அடுத்த நாளே ஒரு செல்வந்தர் உமக்கு மாதாமாதம் பத்தாயிரம் அனுப்புகிறேன், டோண்ட் வொரி என்றார்.  சொன்னபடியே அனுப்பினார். இரண்டு ஆண்டுகள் கழித்து ஆள் காணவில்லை.   காரணம், என்னுடைய நன்றி கெட்ட தனம்தாம்.  நான் மீண்டும் திருப்பதி போய் வெங்கடாஜலபதிக்கு நன்றி சொல்லி விட்டு புகார் மனுவை புதுப்பித்து வந்திருக்க வேண்டும்.  அசால்ட்டாக இருந்து விட்டேன்.  உதவி செய்தவர் காணாமல் போய் விட்டார்.  சரி, காலண்டரையாவது மாட்டி தினமும் வெங்கடாஜலபதியை வேண்டினால் கண் திறக்க மாட்டாரா என்று யோசிக்கிறேன்.  எனவே காலண்டர் விஷயத்தை கவனியுங்கள்.