ஜி வணக்கம்..இது என் கவிதையின் pdf வடிவம்…என்னை திட்டனும்னு தோனும்போது படிங்க…
அமிர்தம் சூர்யா.
வேண்டாம் சூர்யா. அநேகமாக நான் படிக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன். என்னை எல்லோரும் ஒரு ரவுடி என்றே எண்ணுகிறார்கள். ஒரு நல்ல வாசகன் என்று ஒருவர் கூட நினைத்து என்னோடு பழகுவதில்லை. கை கொடுத்தால் கூட கையை உதறுகிறார்கள். நவீன காலத்துத் தீண்டாமையை ஒவ்வொரு நாளும் நான் அனுபவித்து வேதனையில் புழுங்கிக் கொண்டிருக்கிறேன். எப்போதும் எல்லாவற்றையும் திட்டிக் கொண்டிருப்பவன் ஒன்று பைத்தியம், அல்லது வக்கிரம் பிடித்தவன். நான் இரண்டுமே அல்ல. தமிழில் என் அளவுக்கு மற்றவர்களை சிலாகித்த எழுத்தாளர்கள் இல்லை. ப. சிங்காரத்தைப் பற்றி முதல் முதலாகப் பாராட்டி எழுதிய இரண்டொரு பேரில் நானும் ஒருவன். அசோக மித்திரனைப் பற்றியும் அப்படியே. ஞானக்கூத்தன், அசோகமித்திரன், பிரம்ம ராஜன், ஆத்மாநாம், நாரணோ ஜெயராமன், பாரவி, அஃக் பரந்தாமன், தி.ஜ. ரங்கநாதன், அழகிய பெரியவன், எம். வி. வெங்கட்ராம், நகுலன், கோபி கிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன், மிக இளைஞர்களான நேச மித்திரன், கணேச குமாரன், கவின் என்று யாரை நான் பாராட்டவில்லை.
சரி, யாரை நான் திட்டி எழுதியிருக்கிறேன்? தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள். அமீரின் ஆதி பகவனை நான் பாராட்டவா? வசந்த பாலனின் காவியத் தலைவனைப் பாராட்டவா? பாலாவின் பரதேசியைப் பாராட்டவா? என்னுடைய சினிமா விமர்சனங்களில் மட்டும் தான் கடும் விமர்சனத்தை நீங்கள் பார்க்கலாம். மற்றபடி எந்தப் படைப்பாளியை நான் திட்டியிருக்கிறேன்.
இந்தத் தமிழ்ச் சமூகத்தால் தொடர்ந்து அவமானப்படுத்தப் படுகிறேன் என்ற ஒரே காரணத்தினால்தான் நான் ஆங்கிலத்தின் பக்கம் போனேன். திரும்பி வந்தால் மறுபடியும் செருப்பால் அடிக்கிறீர்கள். அதுவும் முதல் கை குலுக்கலிலேயே. ஒரு படைப்பாளியைச் சொல்லுங்கள், நான் திட்டியிருக்கிறேன் என்று. ஜெயமோகனுக்கும் எனக்கும் நடந்த சண்டைகள் எதுவுமே நான் ஆரம்பித்தது அல்ல. சரி, மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்; உங்கள் நண்பர் ஜெயமோகன் யாரையுமே திட்டியதில்லையா? அவர் பாராட்டுவதே கூட திட்டுவது போல் இருக்கிறதே ஐயா? நான் கூட பாபாவிடம் அடிக்கடி வேண்டிக் கொள்வேன், எந்தக் காலத்திலும் ஜெயமோகன் என்னைப் பாராட்டி விடக் கூடாது என்று. அந்த அளவுக்கு உள்குத்து அதிகம் உள்ளதாக இருக்கிறது அவருடைய பாராட்டு.
மேலும், சூர்யா, நான் இதுவரை 50 புத்தகம் எழுதி விட்டேன். என்னுடைய 23-ஆவது வயதிலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இதுவரை ஒரு சக படைப்பாளி கூட என் எழுத்தைப் பற்றி பாராட்டாக ஒரு வார்த்தை எழுதியது இல்லை. எழுதியது இல்லை என்பது அடிக்கோடு. பேசும் போது பாராட்டுவதை நான் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அது தவிர, மிக மோசமான வசைகளும் ஒதுக்கி வைப்பதும் தான் நான் கண்டது. ஆனால் எனக்குப் பெயர் எல்லோரையும் திட்டுபவன்.
நான் வாழ்ந்தது வளர்ந்தது எல்லாம் நாகூரில் உள்ள தொம்பச் சேரி. தொம்பர்கள் என்பவர்கள் தெலுங்கு பேசுபவர்கள். மலம் அள்ளுபவர்கள். நான் அந்த ஜாதி அல்ல என்றாலும் காட்டு நாய்க்கன் என்றால் யாருக்கும் தெரியாது. தெலுங்கு பேசுபவன்; உடும்பு தின்பவன். என் நைனா மட்டும் ஆசிரியர் வேலை பார்த்ததால் நான் தப்பினேன். 20 ஆண்டுகள் ஒரு சேரியில் வாழ்ந்து தீண்டாமையை அனுபவித்தவன் என்பதால் இப்போது மேட்டுக்குடி எழுத்தாளர்களான நீங்கள் அனைவரும் என்னை ஒரு ரௌடி போல் சித்தரிப்பது எனக்கு எந்த வலியையும் ஏற்படுத்தவில்லை. ஆனாலும் இளமைக் காலம் ஞாபகம் வருகிறது. என்ன எழுதுவது என்று இதற்கு மேல் தெரியவில்லை. இந்தக் காலை நேரத்தில் தேகம் பூராவும் வியர்க்கிறது.
திருடன் மணியன் பிள்ளை என்ற அற்புதமான நூலைப் படித்தேன். யார் திருடினாலும் திருடன் மணியனைப் பிடிக்குமாம் போலீஸ். அது போன்ற ஒரு பட்டத்தை எனக்கு இந்தத் தமிழ் இலக்கிய உலகம் வழங்கியிருக்கிறது. ரௌடி. எல்லோரையும் திட்டுபவன். இதோ பாருங்கள்… உங்களையும் திட்டி விட்டேன் என்று தான் எல்லோரும் சொல்லப் போகிறார்கள்.
அநியாயம். மேலே உள்ள வரிகள் என்னுடைய வேதனையின் குரல். ரௌடி ரௌடி என்று அழைப்பதால் ஏற்படும் குருதிக் கண்ணீரே மேலே உள்ள வார்த்தைகள். இதையும் திட்டு என்றால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் அதற்கும் தேவை இல்லை. இப்படி ரௌடி ரௌடி என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அது தரும் மன உளைச்சலிலேயே சீக்கிரம் செத்து விடுவேன்.
ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன் சூர்யா. சன் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் தமிழருவி மணியன் என்னை அவன் இவன் (என்ன பேசுறான் இந்த சாரு நிவேதிதா?) என்று குறிப்பிட்டார். அதற்கே நான் ஒன்றும் சொல்லவில்லை. சரி, கோபத்தில் சொல்லி விட்டார் என்று எடுத்துக் கொண்டேன். ஆனால் எனக்குப் பெயர் ரௌடி. நீங்களெல்லாம் சாத்வீகமானவர்கள். இல்லையா? உங்களை நேருக்கு நேராக யாரேனும் – அதுவும் ஒரு நேரடி ஒளிபரப்பில் அவன் இவன் என்று குறிப்பிட்டால் எப்படி எதிர்வினை செய்வீர்கள் என்பதை மட்டும் யோசித்துப் பாருங்கள்.
”திட்டணும்னு தோணும் போது படிங்க…” 40 ஆண்டு எழுத்துப் பணிக்கான விருது இது. இதை விட நீங்கள் நேரில் வந்து என்னை செருப்பால் அடித்திருக்கலாம் சூர்யா.
உங்களை ஒரு துணுக்கு அளவாவது புண்படுத்தியிருந்தால் என்னை மன்னியுங்கள். என் வேதனையை மட்டுமே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்…
சாரு