நான் தான் காரணம்!

புதிய எக்ஸைல் நாவலை எல்லோரும் கண்டபடி திட்டுவார்கள்; அப்படித் திட்டினால் நாம் ஒரு நல்ல நாவலை எழுதி விட்டோம் என்று அகமகிழலாம் என்று எதிர்பார்த்தால் நான் சற்றும் எதிர்பாராத வேறோர் அதிரடி ரகளை நடந்து கொண்டிருக்கிறது.  நாவலின் பேப்பர் சரியில்லை; சாணித்தாள், அது இது என்று.  அடப் பாவிகளா?  இது சம்பந்தமாக ஒரு பழமொழி இருக்கிறது.  கல்பூரம் அது இது என்று வரும்.  சரி விடுங்கள்.  விஷயத்தை நேரடியாகச் சொல்லி விடுகிறேன்.  பொதுவாக நான் பதிப்பாளரின் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை. இப்படிச் சொல்வது கூடத் தவறு.  புத்தகத்தின் மென்பிரதியைக் கொடுத்து விட்டு மறந்து விடுவேன்.  பிழை திருத்தம் செய்யும் விஷயத்தில் மட்டுமே கறாராக இருப்பேன்.  மற்றபடி எதுவுமே தெரியாது.  ஆனால் இந்தப் புதிய எக்ஸைல் விஷயத்தில் மட்டும் இரண்டு வேண்டுகோள்களை பத்ரியிடம் வைத்தேன்.  பிரஸன்னாவும் உடன் இருந்தார்.  ஒன்று, முன்பதிவுத் திட்டம்.  இரண்டு, நாவலின் காகிதம்.  ஆங்கில நாவல்கள் அச்சடிக்கப்படும் காகிதத்தில் இருந்தால் நல்லது என்றேன்.  காரணம், என்னிடம் உள்ள தருணின் மூன்று நாவல்கள்.  அந்த நாவல்கள் புதிய எக்ஸைல் காகிதத்தில் அச்சடிக்கப்பட்டவை தான்.  இந்தக் காகிதம் நீங்கள் நினைப்பது போல் நியுஸ் ப்ரிண்ட் அல்ல; it is imported high bulk paper.  இதன் மதிப்பு குறித்து இப்போது உங்களுக்குத் தெரியாமல் போகலாம்.  ஆனால் பதிப்புத் துறையில் இது ஒரு முன்னோடி என்பதை இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து நீங்கள் உணர்வீர்கள்.  இதன் பயன் என்னவென்றால், நான் கனம் தூக்கக் கூடாது.  ஆனால் பத்து பிரதிகளை அனாயாசமாக எடுத்துக் கொண்டு வந்தேன்.  900 பக்கப் புத்தகத்தை எடுத்தால் இலைச் சருகு போல் இருக்கிறது.  இது தமிழ்ப் புத்தகப் பதிப்புத் துறையில் ஒரு பெரும் புரட்சி இல்லையா?  ஒவ்வொரு புத்தகமும் எவ்வளவு கனமாக இருக்கின்றன?  இது எவ்வளவு லேசாக இருக்கிறது?

என் வேண்டுகோளை ஏற்று மிகவும் சிரமப்பட்டு இந்தக் காகிதத்தைத் தருவித்து புதிய எக்ஸைலைக் கொண்டு வந்ததற்காக பத்ரிக்கு என் நன்றி.  அப்போதே அவர் சொன்னார்.  நம் ஆட்களுக்குப் புரியாதே, திட்டுவார்களே என்று.  நான் தான் அவரைச் சமாதானம் செய்தேன்.  இப்போது பலரும் திட்டினாலும் மிக விரைவில் இந்தப் புத்தகத்தின் பதிப்பு எத்தனை பெரிய முன்னோடியான விஷயம் என்று மக்களுக்குப் புரியும்.  புத்தகத்தின் எடை கையில் இருப்பதே தெரியாமல் இருப்பது எப்பேர்ப்பட்ட விஷயம்! அதை அனுபவியுங்கள் நண்பர்களே!  எதிரிகளின் ஏமாற்றுப் பேச்சில் மயங்கி உங்கள் வசதியை அனுபவிக்க மறந்து விடாதீர்கள்!!!