கேள்வி பதில்

கேள்வி: ஜெயகாந்தன் பற்றிய சன் டிவி கலந்துரையாடலில் நீங்கள் கலந்து கொண்டு பேசியதைக் கேட்டேன்.  அவரைப் பற்றிய உங்கள் கருத்தை ஒரு கட்டுரையாக எழுத முடியுமா?

டாக்டர் ஸ்ரீராம், சென்னை.

பதில்:  ஸ்ரீராம், நாலைந்து நாட்களாக நான் இந்த ஜெயகாந்தன் விஷயமாகத்தான் அலைந்து கொண்டிருக்கிறேன்.  சன் டிவி நிகழ்ச்சியில் என் நண்பர் சொன்னதிலிருந்துதான் எனக்கு அந்த ஜானோதயம் ஏற்பட்டது.  ஆஹா, ஜெயகாந்தன் விலிம்பு நிலை மக்களைப் பற்றி எழுதியிருக்கிறாரே, அது ஏன் என்னுடைய மந்த புத்திக்கு உறைக்கவில்லை என்று என்னையே பலமுறை கேட்டுக் கொண்டேன்.  நண்பர் சொல்லும் வரை எம்.வி. வெங்கட்ராம், கு.ப. ராஜகோபாலன், தி.ஜ. ரங்கநாதன், ந. சிதம்பர சுப்ரமணியன், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, கரிச்சான் குஞ்சு, சார்வாகன், சா. கந்தசாமி, ந. முத்துசாமி, அசோகமித்திரன், ஆதவன் போன்றவர்கள் தான் விலிம்புநிலை மனிதர்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  நண்பர் சொன்ன பிறகு என் மனம் மாறி விட்டது.  இந்த எழுத்தாளர்கள் எல்லாம் நம் நாட்டின் மிட்டா மிராசுதார்கள் பற்றியும் டாட்டா பிர்லாக்கள் பற்றியும் உயர் வர்க்கப் பிராமணர்கள் பற்றியும் எழுதிய பிராமண பூர்ஷ்வா எழுத்தாளர்கள்.  உண்மையான விலிம்பு நிலை எழுத்தாளர் ஜெயகாந்தன் தான்.

ஆனால் விலிம்பு நிலை என்கிற போது எனக்கு ஜேகேயோடு எம்ஜியார் ஞாபகமும் சேர்ந்தே வருகிறது.  எம்ஜியாரும் விலிம்புநிலை மக்களைப் பற்றித்தானே படம் எடுத்தார்?  நாடோடி மன்னனில் எம்ஜியார் தன் முகத்தருகே ஸ்டைலாக விரலை வெட்டி ஒரு நீண்ட வசனம் பேசுவாரே, அது அப்படியே கார்ல் மார்க்ஸின் கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ளதுதானே?  உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்.  ஆஹா ஆஹா…  கார்ல் மார்க்ஸையும் எம்ஜியாரையும் தவிர வேறு யார் சொன்னது இதை?  அதனால்தானே மக்கள் அவரை – எம்ஜியாரை –  புரட்சித் தலைவர் என்று அழைக்கிறார்கள்?  படகோட்டி என்ற படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?  என் தலைவனுக்கு முன்னால் படகோட்டிகளைப் பற்றி யார் கவலைப்பட்டார்?  எனவே எம்ஜியாரும் ஜெயகாந்தனும்தான் தமிழில் முதல் முதலாக விலிம்பு நிலை மக்களைப் பற்றிப் பேசியவர்கள்.

இதை என் சினிமா நண்பர்களிடம் பேசிக் கடுமையாக விவாதம் செய்தேன்.  ஆனால் அந்த முட்டாள்களோ சத்யஜித் ரே, அகிரா குரஸவா, பெர்க்மன் போன்றவர்களைத்தான் சினிமா கலைஞர்கள் என்று சொல்கிறார்கள்.  அவர்களை நான் எம்ஜியார் படங்களுக்கும் அழைத்துப் போனேன்.  பார்த்து விட்டு என்னை அடிக்க வருகிறார்கள்.   இதெல்லாம் இண்டலெக்சுவல் அராஜகம் என்று திட்டி விட்டு ஓடி வந்து விட்டேன்.  பிறகு நாலைந்து நாளாக ஜெயகாந்தனை எப்படியாவது அகில உலக விலிம்பு நிலை எழுத்தாளர்கள் மத்தியில் நிலைநிறுத்தி விடுவது என்று போராடி வருகிறேன்.

 

 

Comments are closed.