சாருநிவேதிதாவின் ''புதிய எக்ஸைல்'' – நுண்ணுணர்வின் அழகியலும் அபத்தமும் : கார்ல் மார்க்ஸ்

எக்ஸைல் பற்றி யாரும் எதுவும் எழுதாத நிலையில் கார்ல் மார்க்ஸ் பின்வரும் மதிப்புரையை அவரது முகநூலில் எழுதியிருக்கிறார். பின்னர் அது குறித்து நிர்மல் சிறிது விவாதித்திருக்கிறார்.  மற்ற யாரும் விவாதத்தில் பங்கு பெறவில்லை.  அருணாசலம், செல்வகுமார், அராத்து, கணேஷ் அன்பு, பிச்சைக்காரன், ராஜேஷ் போன்ற நண்பர்கள் விவாதத்தில் பங்கு பெற்றிருக்கலாம்.  எப்படிப்பட்ட மொக்கை, மரண மொக்கைப் படத்துக்கெல்லாம் மாய்ந்து மாய்ந்து விமர்சனம் எழுதி சண்டை போடுபவர்கள் நாவல் என்றால் பம்மி விடுகிறார்கள். கார்ல் மார்க்ஸுக்கு என் பிரத்தியேக நன்றி.   இனி கார்ல் மார்க்ஸின் மதிப்புரை:

இந்த நாவலைப் பற்றி  எழுதத் தொடங்கும்போது எங்கிருந்து ஆரம்பிப்பது என்று கொஞ்சம் தயக்கமாகத்தான்  இருக்கிறது. கிட்டத்தட்ட அவரது எல்லா ஆக்கங்களையும் படிக்கிறேன். அவர் பிளாக்கில் எழுதுவது, பத்திரிகைகளில் எழுதுவது என்று எல்லாவற்றையும் தொடர்ந்து படிக்கும் பெரும்பான்மை வாசகர்களில் நானும் ஒருவன்.  இதை இங்கு  எதற்குச் சொல்கிறேன் என்றால், இவ்வாறான ஒரு வாசகனாக இருப்பது, இந்நாவல் படிக்கும் வேகத்தைச் சில இடங்களில் மட்டுப்படுத்துவதாக இருக்கிறது என்பதைச் சொல்வதற்குத் தான்.

சாருவின் இப்படைப்பு முன்வைக்கும் உலகம் என்ன? குறிப்பாக என்று எதுவும் இல்லாமல், இது ஒரு அப்பட்டமான வாழ்வைச் சொல்கிறது. இந்த நாவலைப் பற்றி அதை வாசித்த அனுபவம் பற்றிச் சொல்வதற்கு வாசகனாக நான் சில வார்த்தைகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. படிப்பதற்கு எளிய நாவலாகத் தோற்றம் தந்தாலும் அதை விமர்சிப்பதற்கு எளிதாக ஒரு விமர்சன மொழியை உருவாக்கிக் கொண்டு விட முடியாது. ஏனெனில் நாவல் எதையும் நேர்க்கோட்டுத் தன்மையில் சொல்லவில்லை. இந்த நாவல் குறித்துப் பேச இதிலிருந்தே நீங்கள் எதையும் எடுத்துக் கொள்ள முடியாது. நாவலின் அதிகார மையத்தை, வார்த்தைகளைத் தொடர்ந்து உருவாக்கும் ஆதார ஊற்றை அது இல்லாமலாக்கிவிட்டிருக்கிறது. நாவலைப்பற்றி பேச அதற்கு வெளியிலிருந்து நமக்குப் புதிய வார்த்தைகள் தேவையாய் இருக்கின்றன.

இங்கு இந்நாவலைப் பற்றி பேச எனக்கு ஒரு தளம் தேவைப்படுகிறது. நான் பற்றிக் கொள்ள ஒரு சரடு வேண்டும். அதனால் ”நுண்ணுணர்வு” என்ற நாவலின் இயங்குதளம் ஒன்றின் மீது ஒரு கட்டமைப்பை நானாக உருவாக்கிக் கொள்கிறேன். இந்த நாவல் உருவாக்கி வைத்திருக்கும் எண்ணற்ற திரிகளில் இதுவும் ஒன்று. அதைப் பற்றிக் கொண்டு இந்த நாவல் குறித்துப் பேச முயல்கிறேன். நீங்களும் கூட இதே போன்றதொரு கருவியோடு இந்த நாவலை அணுகமுடியும். அதுதான் இந்த நாவலின் சாத்தியம். எழுதியவனின் மேதமை.

”நுண்ணுணர்வு” என்பதை நாவலின் இயங்குதளமாக நான் ஏன் வரித்துக் கொள்கிறேன்? அப்படி ஒரு சுதந்திரத்தை, வாசிப்பின் சாத்தியத்தை இந்த நாவல் வழங்குகிறது என்பது இருக்கட்டும். சாருவின் எல்லா எழுத்தும், தொடர்ந்து அது பேச முற்படும் அரசியலும் இந்தத் தளத்தில் கவனம் கொள்ளப்பட வேண்டும் என்று ஒரு வாசகனாக நான் விரும்புகிறேன். அதுவும் ஒரு காரணம்.

நாவலுக்கு வருவோம். நாவலில் வெருட்டும் புகார் இல்லை, காவிய சோகம் இல்லை, வன்முறை இல்லை. ஆனால் ஒரு வாழ்வின் ஆதார இல்லாமைகளைப் பற்றிப் பேசும் படைப்பாக இருக்கிறது. அதே சமயம் இல்லாமைகளிலயே அது நிலைத்து விடுவதும் இல்லை. முழுமையை, ஒரு பூரணத்துவத்தை அடைய முயன்று கொண்டே இருக்கிறது.  அதன் வழியில் எவ்விதக் கட்டுப்பாடுமற்று குற்றவுணர்வின்றி அவ்வாழ்வைக் கொண்டாடுகிறது. நுண்ணுணர்வின் வீழ்ச்சி, ஊசலாட்டம், அது தரும் வலி, புரிந்து கொள்கிறவர்களிடம் அது பெருக்கும் உன்மத்தம் மற்றும்  இத்தகைய ஒத்த, பிறழ்கிற, மீறுகிற சாத்தியத்தை உருவாக்கும் காரணிகளும் அவற்றின் விளைவுகளும்தான் நாவல். தமிழில் இவ்வுணர்வைப் பிரதானப்படுத்தி வந்திருக்கும் நாவல்கள் குறைவு. பல நாவல்கள் நுண்ணுணர்வை  ஒரு கூறாகச் சொல்லியிருக்கக்கூடும். மறுக்கவில்லை. ஆனால் நாவலின் இயங்குதளமே இந்த அடிப்படைதான் என்பதற்கு உதாரணங்கள் இல்லை. அல்லது இந்த அடிப்படையில் மட்டுமே கூட வாசிக்க இயலும் சாத்தியத்தை இந்நாவல் வழங்குவதைப்போல் வழங்கும் வேறொன்று இல்லை.

இந்த ”நான் லீனியர்” கூறுமுறை, படைப்பாளிக்குக் கட்டற்ற சுதந்திரத்தை வழங்குகிறது. வாசகனுக்கும்தான் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லைதான். ”சாருநிவேதிதாவுக்கு கதை சொல்லத் தெரியாது; அவருக்குத் தெரிந்ததை அப்படியே எடுத்து நம்முன் வைப்பார். அவ்வளவு தான்” எனும் ரீதியில் அவர் மீது விமர்சனம் உண்டல்லவா? ஜெயமோகன் தான் இதைச் சொன்னதென்று நினைக்கிறேன். ஒரு விதத்தில் இந்த நாவலைப் படிக்கும்போது, ஆமாம், இந்த விமர்சனம்  சரிதான் என்ற தோற்ற மயக்கத்துக்கு ஆளாவோம். ஆனால் இந்தக் கருத்தோடு மிகவும் பொருந்திப் போனால் நாம்  நாவலைத் தவற விட்டு விடுவோம். நாவல் என்றில்லை; நான் லீனியர் தன்மையின் கட்டற்ற சாத்தியத்தையும் தான்.

குறிப்பாக நாவலில் ஒரு இடத்தில் வரும் குணரட்ணத்தின் பாத்திரம். எப்போதும் அது பேசிக் கொண்டே இருக்கிறது. படிப்பவனை தாரை தாரையாகக் கண்ணீர் வடிக்கச் செய்யுமளவுக்கு எழுத அவ்வளவு சாத்தியங்கள் உள்ள பகுதி அது. ஆனால் அதை வீரியமிக்க பகடியாக மட்டுமே மாற்றி விட்டு நகர்கிறார் எழுத்தாளர். வாசகராகிய நீங்கள் அதைச் சுற்றிச் சுற்றி வரலாம்; உங்களுக்கானதொரு புனைவை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அல்லது அதைக் கலைத்துப் போட்டும் பார்க்கலாம். சிறுகதையோ, நாவலோ உணர வைக்கும் இலக்கிய அனுபவத்தை, தொடர்பற்ற பத்தி போல் தோற்றம் கொள்ளச் செய்யும் சாருவின் எழுத்து உணர வைக்கிறது.

தொலைந்து போன பர்ஸைக் கண்டெடுக்கிறாள் ஒருத்தி. அதை உரியவளிடம் தரும்போது, அவள் அன்பளிப்பாக இவளுக்குக் கொஞ்சம் பணம் தருகிறாள். நன்றியும் சந்தோசமும் வழிகிறது அவள் முகத்தில். இவளால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. ’இது அவளது பணமல்லவா? அதைத்தானே நாம் அவளிடம் தருகிறோம்? அதற்கு ஏன் அவள் எனக்குப் பணம் தருகிறாள்?’ என்று கேட்கிறாள். இவளுக்குச் சொல்ல யாரிடமும் பதில் இல்லைதான். ஆனால் இந்த அடிப்படைக் கேள்வியைத்தான் நாவல் பல பாத்திரங்களின் வழியாக முன்வைக்கிறது. ஆன்மாவைக் களங்கமற்று வைத்துக் கொள்பவர்கள் எதிர்கொள்ள நேரும் துயரம், கைவிடல் என்று நாவல் மீண்டும் மீண்டும் இந்நுண்ணுணர்வைப் பற்றியே பேசுகிறது.

காதலைப் பற்றிப் பேசும் இடங்களிலெல்லாம் மொழியின் கட்டற்ற இன்பத்தைத் துய்க்க முடிகிறது. மையலைக் கொண்டாடுகிறது நாவல். இதுதான் சாருவின் இடமோ என்றும் தோன்றுகிறது. அன்பை, காதலை, பெண்மையை என தனித்தனியாகக் கொண்டாடுகிறதா  என்றால், அப்படியெல்லாம் இல்லை. அதைப் பிரித்தே பார்க்க முடியவில்லை. சொல்ல வரும் உணர்வோடு கலந்து விடும் மொழியாக இருக்கிறது. அவள் உதடென்றதும் உருகி, நிதம்பம் என்று அது தாவிக் கடக்கும் மொழியல்ல இது. எல்லாவற்றையும் கொண்டாடுவது; நம்மையும் அதில் சிக்க வைக்கும் கண்ணிகளைக் கொண்டது. சாகசத்தைப் போல.

இவ்வெழுத்தைத் தற்காலத் தமிழ்ச் சூழலின் எழுத்தோடு வைத்து நாம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் எழுத்தாளன் குடும்பத்தின், சாதியின், சமூகத்தின் கண்காணிப்பின் நிழலிலேயே படைப்பை எழுதிக் கொண்டிருப்பதன் அபத்தம் நமக்குப் புரியும். இந்தக் கண்காணிப்பை எதிர்கொள்ள முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டே படைப்பை வழங்குவதும், அதே சமயம் வன்முறையான  அந்த ஆதிக்கத்துக்குப்  பணிந்துபோன துயரத்தை மறைத்துக் கொள்ள அறம், பண்பாடு என்று பூஞ்சையான கருதுகோள்களைக் கொண்டு சமாளிக்க முயல்வதும் நாம் கண்டு வருவது தான். ஆனால் சாருவிடம் இந்தக் கண்காணிப்பு முற்றிலும் தோல்வியடைகிறது. அவரிடம் இந்த மீறல், தொடர்ந்த ஒரு அரசியல் செயல்பாட்டைப் போல் இருக்கிறது. இந்த நாவல் முன்வைக்கும் அரசியல் காரணிகளில் இதுவும் ஒன்று என்றே நான் நினைக்கிறேன். புறவயமான அரசியலைத் தாண்டி ஒரு இலக்கியப் பிரதி தன்னகத்தே கொள்ளும் இந்த உள்ளுறை அரசியல் கவனிக்கவும் கைக்கொள்ளவும் வேண்டிய ஒன்றுதான்.

வெளிப்படைத்தன்மை என்பதொரு அரசியல் நிலைப்பாடு என்பதே அபத்தமாக இருக்கிறது. ஏனெனில் அது மிகவும் இயல்பாக இருக்க வேண்டியது. அந்த அழகியலின் சரிவைத்தான் நாவல் மீண்டும் மீண்டும் சுட்டிக் கொண்டே இருக்கிறது. சில இடங்களில் மிகவும் வன்முறையாக நம் முகத்தில் மோதுவதைப் போல சொல்கிறது. இந்தச் சீரழிவின் அருவருப்பைக்  குனிந்தபடியே கடந்துவிட நினைக்கும் நமது எத்தனிப்பின் மீது சிறுநீர் கழிக்கிறது. பின்பு தேம்பி அழுகிறது. அஃதொரு கையறு நிலை. எழுதுபவனும், படிப்பவனும், பாத்திரமும் ஒன்றாகி கதகதப்புக்காக ஏங்கும் நிலையை அடைகிறது. மொழியின் இக்கூத்து படைப்பில் பல இடங்களில் நிகழ்கிறது. இவ்வளவு விச்ராந்தியாக ஒருவன் எழுதமுடியுமா, மொழியை அதன் போக்கில் போகவிட்டு படைப்பாளி தன்னை வெறும் பார்வையாளனாக ஆக்கிக் கொள்ளமுடியுமா என்பதெல்லாம் நம்மை ஆச்சர்யத்துக்குள்ளாக்குகிறது.

நம் சூழலில், பெரியாரியம் ஒரு கவசம் போல  பயன்படுத்தப்படும் ஆபாசம் குறித்த இடத்தை நாவல் இயல்பாகவே நோக்குகிறது. கழுகுப் பார்வையில் அதைப் பற்றிப் பேசுகிறது. குமாஸ்தாத்தனத்தைக் கைவிடமுடியாத டெல்லி பிராமணர்களின் அபத்தத்தைப் பேசும் அதே தொனியில், அவர்களெல்லாம் பெரியாரியத்தின் மூர்க்கத்தால் துரத்தப்பட்டதைப் போன்றதொரு சித்திரத்தையும் வழங்குகிறது. இவையெல்லாம் பரந்த விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவை தான். இவ்வளவு மீட்பர்கள் அவதரித்தும், இன்னும் கருவறையை நெருங்க முடியாத பாவப்பட்ட இடைசாதி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் துயரம் குறித்தும் அப்போதுதான் நாம் பேச முடியும்.

அரசியல் சராசரித்தன்மையைப் பகடி செய்து கொண்டே முன்னேறும் நாவல் அதைக் கசப்புடன் எள்ளலுக்கு உட்படுத்துகிறது. பிரதம மந்திரியே ஆனாலும் பத்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ய முடியாது. தேர்தல் கமிஷன் தனது விதிகளைக் கடுமையாக அமல்படுத்தும். நமக்கும் அவருக்கும் ஒரே சட்டம் தான்; ஆனால் நாம் மட்டும் தான் நாளை ரேஷன் கடையில் வரிசையில் நிற்க வேண்டும். இந்தப் பகடியிலிருந்து யாரும் தப்பவில்லை. ஆண், பெண், திருநங்கை என எல்லோரும் தான். சமூக சமனின்மையின் வன்முறையை மீண்டும் மீண்டும் பேசுகிறது நாவல். கல்வி முதல் கலவி வரை எதையும் விட்டு வைக்காமல் கருப்பு நகையாக. பல நேரங்களில் ரத்தமும் நிணமுமாக.

ஆனால் நமக்குச் சில இடங்களில் சலிப்பு வருகிறது தான். கர்ப்பிணியான அஞ்சலி, கணவனுக்கும் அவனுடன் சென்றிருக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்குமாக மிருகக்காட்சி சாலையில் காத்திருந்து சோர்ந்து தவிக்கும் இடமெல்லாம் கிளிஷே போல் தோன்றுகிறது.

நாவலில் கொக்கரக்கோ பாத்திரம்தான் எனக்குச் சில இடங்களில் ஆபாசமாகத் தோன்றியது. உதயா அறையில் உட்கார்ந்திருக்கும்போது, பால்கனியில் நின்றுகொண்டு தனது காதலிகளில் ஒருத்தியிடம் பேசுகிறான் கொக்கரக்கோ. கொஞ்சம் காலைத் தூக்குகிறாயா, நான் உன் புண்டையில் முத்தமிட வேண்டும் என்கிறான். அதைக் காதில் வாங்கும் உதயா அந்த சம்பாஷணையை சிலாகிக்கத்தான் செய்கிறான். இதை வாயோரிசமாகவெல்லாம் புரிந்துகொண்டு, படிக்கும் நீங்கள் அசூயை அடையக் கூடாது. இங்கு எதுவும் அசூயை கிடையாது. உதயாவை விடுவோம்.

இதைப் படிக்கும்போதுதான்  சாருவை நான் முதிர்ந்தவராக  உணர்கிறேன். அவர் செட் ஆட்களுக்காக, அவர்களைக் கடுப்பேற்றுவதற்காக இதை எழுதுகிறார் போல. பார், நான் எவ்வளவு இளமையாக எழுதுகிறேன் என்று. எனக்கென்னவோ மண்டியிட்டு நிதம்பத்தைச் சுவைக்கும் உதயா ஆபாசமாகத் தோன்றவில்லை. இதையும் நான் சொல்லத்தான் வேண்டும். ஆனால் கொக்கரக்கோ தான் ஆபாசமாகத் தோன்றுகிறது. நீ காலைத் தூக்கு, உன் புண்டையில் முத்தமிட வேண்டும் என்கிறான் கொக்கரக்கோ. எப்போதும் மண்டியிடுகிறவனாக இருக்கிறான் உதயா. புண்டை நிதம்பம் என்றாகிறது.  ஆனாலும் அஞ்சலி பற்றிய விவரணைகளில் நாம் அதீத சலிப்புக்குள்ளாகும் இடங்களில் கொக்கரக்கோ தான் காப்பாற்றுகிறான் என்பதையும் நன்றியோடு நினைக்கத்தான் வேண்டியிருக்கிறது.

சுரேஷ் நல்லவனாக இருந்தாலும், உதயாவால் அவளைக் குற்றவுணர்ச்சியற்றுப் புணரமுடியுமா, கணவன் மீது குறைவற்ற காதலோடு இருந்தும் உதயாவை மேலேறிப் புணரும் பெண்ணாக அஞ்சலியை சாருவால் கற்பனை செய்யமுடியுமா என்று எனக்கு ஆர்வமாக இருக்கிறது. அப்படி ஒரு படைப்பூக்க நிலையிலாவது, காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொல்லும்  ஒருத்தி பற்றிய செய்திகளில் இருந்து அவர் மீள வேண்டும்.

ப்ளோஜாப் செய்வதற்காக அஞ்சலி இன்டர்நெட்டில் தேடி அதைக் கற்றுக் கொள்வதை, நான் பகடியாகவே புரிந்துகொள்ள முயல்கிறேன். ஆனால் அதைச் சொல்லும்போது அவளுக்குக் கன்னம் சிவந்தது என்று சாரு எழுதும்போது, இந்த வெட்கத்தை எதிர்பார்க்கும் அந்த வயதான வாசகர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்களைக் கொல்லவேண்டும் என்றே வெறி வருகிறது.

அதே போல் மொகல் கார்டனுக்கு செல்லும் முஸ்தீபுகள். படிப்பவனுக்குத் தெரிந்துபோகிற இடம் அது. ரவி என்னவாக அந்த இடத்தை உணர்வான் என்று படிப்பதற்கு முன்பே முழுக்கவும் புரிகிறது. படிக்கும்போது அதைக் கடந்து ஓடவே தோன்றுகிறது. கன்னா என்ற உயரதிகாரி, அவருக்குப் பெண்களை பிடிப்பது, அவரும் ரவியும் பால் வாங்கப் போவது எல்லாம் நாம் ராஸலீலாவில் படித்தது தானே. டெல்லி குறித்த விவரணைகள் என்பதால் அதுவும் இங்கே வருகிறதா? இந்தப் பகுதி இங்கு மீண்டும் கூறப்படாவிட்டால் முழுமையடையாதா என்ன? எனக்குப் புரியவில்லை.

வெள்ளைக்காரனுக்குக்  குண்டி கழுவ  டிஷ்யூ பேப்பரே  போதுமானதாக ஏன் இருக்கிறது, இந்தியர்களுக்கு ஏன் தண்ணீர் நிறைய தேவைப்படுகிறது என்று உதயா சொல்லும் இடம், எழுத்தாளன் சமூக விஞ்ஞானியாக மிளிரும் இடம். படிக்கும் நமக்கு ஆயாசமாக இருக்கிறது. ஆய் மற்றும் ஆய் போவது இவற்றைப்பற்றி இனி கொஞ்ச நாளைக்கு எழுதக்கூடாது என்று சாருவிடம் சத்தியம் வாங்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சாரு பேசியிருக்கும் செடிகள், கொடிகள், மரங்கள் மற்றைய உயிரினங்கள் மற்றும் அதற்கு அவர் பயன்படுத்தியிருக்கும் அபூர்வமான அழகியல் மொழி என்று நாம் கரைந்து போக நிறைய உண்டு இந்த நாவலில்.

 

***

நிர்மல்:

அதே சமயம் வன்முறையான அந்த ஆதிக்கத்துக்குப் பணிந்து போன துயரத்தை மறைத்துக் கொள்ள அறம், பண்பாடு என்று பூஞ்சையான கருதுகோள்களைக் கொண்டு சமாளிக்க முயல்வதும் நாம் கண்டு வருவது தான். ஆனால் சாருவிடம் இந்த கண்காணிப்பு முற்றிலும் தோல்வியடைகிறது/////   இதே போல், எக்ஸைல் எழுத்து ஸ்டையில் பற்றியும் எழுதுங்கள். அதன் மேஜிக் போன்றவற்றையும் கூட. உதாரணம் – மாறிய டோக்கனும் அபத்த நாடகமும் என்கிற பகுதி. ப்ரான்ஸ் – ஓரதூருக்குச் செல்லும் பயணம், ப்ரான்ஸில் இருந்து கொண்டே ஒரதூரின் சரித்திரம் தெரியாத தோழியின் கதை, இடையில் அந்த டோக்கன் மாறிய குரங்கு செக்ஸ் ஜோக், அடுத்து ஒரதூரின் வன்முறைக் காட்சிகள் இன்றும் பத்திரப்படித்தி வைத்திருக்கும் காட்சி, அடுத்து கீழ்வெண்மணி நிகழ்வு. — How we forget history and keep repeating என்பதை எழுத்தில் காட்சி ரூபமாகச் சொல்வது எனக்குப் பிடித்திருந்தது. —- இலக்கிய வாசிப்பெல்லாம் நமக்குக் கிடையாது, ரசித்ததை சொன்னேன், கார்ல்.

கார்ல்: ஆமாம் நிர்மல். நீங்கள் சொல்லும் எல்லாமே மிகவும் ரசனையான பகுதிகள் தான். இதைப்போல் தனித்தனியாக சிலாகித்துச் சொல்வதற்கு நாவலில் நிறைய உண்டுதான். மிக எளிதான பத்தியைப் போல் சொல்லிவிட்டுப் பகடியோடு கடந்து போகும் நிகழ்வுகள் அவ்வளவு உண்டு. அஞ்சலியிடம், ”இவ்வளவு துயரங்களையும் ஏன் நீ சகித்துக்கொண்டாய், உன் அம்மாவிடம் சொல்லவில்லையா என்று கேட்கும்போது, அவள் சொல்வாள், ”நம்ப மாட்டார்கள் உதயா” என்று. அது ஒருத்தியின் நிலை குலைவு. நாவல் ரொம்பவெல்லாம் சொல்லாது அதைப் பற்றி. ஒரு கெட்ட வசையை உதிர்ப்பான் உதயா. அவ்வளவுதான். அந்தக் கையறுநிலையை உணர்ந்து பெருக்கிக் கொள்வதெல்லாம் வாசகனின் வேலை. இது மாதிரி நிறைய சொல்லலாம். நாவலைப் பற்றி முழுக்க எழுதுவது சவால் தான். அதனால் தான் நான் ஒரு வரையறையை வகுத்துக்கொண்டு அதை மட்டும் எழுதினேன். அதிலிருந்து நாவல் குறித்த ஒரு சித்திரத்தை வழங்க முயன்றேன். நன்றி Mrinzo Nirmal

Mrinzo Nirmal நாகூர், தில்லி நகரங்களின் அமைப்பைப் பற்றி நீண்ட குறிப்புகள் எக்ஸைலில் உண்டு. தமிழில் இப்படி நிலபரப்பைப் பற்றிய நீண்ட வர்ணணை புதுசா?

கார்ல் மார்க்ஸ்: தமிழுக்குப் புதிது தான். எந்த வகையில் என்றால், புனித பிம்பங்ளற்று சொல்வது என்ற வகையில் புதிது தான். ஆனால் டெல்லியைப் பற்றி தமிழ் நாவல்களில் இந்தளவு சொல்லப்பட்டிருக்கிறதா என்பது சந்தேகம். நிலப்பரப்பு என்று மட்டுமல்ல, குறிப்பிட்ட பிரதேசத்து ஆட்கள் குறித்து மற்றவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதும் கூட இருக்கும். தமிழர்கள் என்றால் ‘சம்ச்சாகிரி’ சோப்பு போடுகிறவர்கள் என்று வட இந்தியர்கள் நினைக்கிறார்கள் அல்லவா? அது மாதிரி. அதைச் சொல்வதில் கூச்சமே இல்லை சாருவுக்கு. கன்னாவின் அறைக்கு அந்த பெண் சென்றதும் வெளியே தாழ்ப்பாள் போட்டுவிட்டு, போனில் நேரில் வருபவர்களை சமாளிப்பது என்பதெல்லாம் வேறு யாராவதென்றால் எழுதுவார்களா?

Mrinzo Nirmal அது போல தமிழ்ச் சூழலில் உள்ள ஐரோப்பிய சிந்தனைத் தாக்கம், தமிழ் மரபு – சித்தர் மரபு, இன்றைய சூழலில் உள்ள அதிகாரங்கள், இசங்களைக் கடந்த அணுகுமுறை, ஆன்மிகம் மற்றும் அதையே கேள்விக்குள்ளாக்குதல், முற்போக்குச் சிந்தனைகள் பின்னர் அதையே சந்தேகித்தல் மேலும் கேசவன் யானையில் துவங்கி ஃப்ளோரான் மீனில் முடியும் மேஜிக் என பரந்து விரிந்த படைப்பு எக்ஸைல். மீண்டும் படிக்க ஆசை வந்துவிட்டது. இதை விமர்சனம் என்கிற பெயரில் அட்லீஸ்ட் சாணி கரைத்துக் கூட யாரும் இதுவரை ஊற்றாதது ஒருவித black listed work ஆக literature circle ல் வைத்திருப்பது எனக்கு மிகக் கவலையே. இந்த நாவலைப் பற்றி உரையாடியே கொண்டாட வேண்டும். புது வித முற்போக்கு intellectual thoughts ஐ நம் முன் வைக்கிறது என்று கூட சொல்ல முடியும். ஆனால் நாவலில் உள்ள சில பல political incorrectness அறிஞர்களை இந்தப் படைப்பிலிருந்து தள்ளி வைக்கிறது போலும்?

 

Comments are closed.