படிக்க வேண்டிய தத்துவவாதிகளின் பட்டியல் (2)

யாரொருவர் ஒரே தலைப்பில் இரண்டு அத்தியாயங்களை என்னை எழுதத் தூண்டுகிறார்களோ அவர்கள் ஒன்று, எனக்கு மிகப் பெரிய சந்துஷ்டியைக் கொடுத்திருக்க வேண்டும்; அல்லது, தீவிரமான மன உளைச்சலைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்க வேண்டும்.

என் அன்புக்குரிய வளன், நீ இப்போது என்னை இரண்டாவது பிரிவில் தள்ளியிருக்கிறாய்.  ஒரு தப்பு செய்தால் அந்தத் தப்பை சரி செய்கிறோம் பேர்வழி என்று தப்புக்கு மேல் தப்பாகவே செய்து கொண்டிருப்பதைத்தான் பொதுவாக நான் பார்த்து வருகிறேன்.  அதுவும் என் விஷயத்தில் நண்பர்கள் படு தாராளம்.  ஒரு தப்பை சரி செய்கிறோம் என்று குடைச்சலுக்கு மேல் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.  இப்போது நீ செய்திருப்பது அதுதான்.  என் சந்தேகமும் வினாவும் என்னவென்றால், ஏன் நீங்கள் முந்தைய சம்பவத்திலிருந்து எதையுமே – ஒரு கடுகத்தனை கூட – கற்றுக் கொள்ளவே மறுக்கிறீர்கள்?  அன்பு என்ற அன்பர் எனக்குக் கொடுத்த மன உளைச்சல் பற்றி எக்ஸைலில் எந்த அளவுக்கு வருந்தி வருந்தி எழுதியிருந்தேன் என்பது உனக்குத் தெரியும்.  அந்த அன்புவும் உனக்கு வேண்டியவன் தான்.  எந்த அளவுக்கு அவனால் நான் மன உளைச்சல் அடைந்திருக்கிறேன் என்றால், எக்ஸைலில் இரண்டு இடத்தில் ஒரே சம்பவத்தை எழுதும் அளவுக்கு.  இப்போது அதை நான் அடுத்த பதிப்புக்குள் சரி செய்தாக வேண்டும்.  எப்படியெல்லாம் செய்து நீங்கள் வரலாற்றில் இடம் பெறுகிறீர்கள் பாருங்கள்.  சரி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதானே நம் ஆருயிர் நண்பன் அன்பு சாருவுக்குக் குடைச்சல் கொடுத்து மூன்று மாத காலம் அவர் அவனுடைய தொடர்பையே ரத்து செய்திருந்தார் என்பது உனக்கு ஞாபகம் வர வேண்டாமா?

நீ என்னிடம் உன் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு, தத்துவவாதிகளின் பெயரைக் கேட்டாய்.  அது எனக்கு அதிக பட்ச மன உளைச்சலைக் கொடுத்ததால் நான் ஒரு பகிரங்கமான பதிலை எழுதினேன்.  என்ன பதில்?  நீ என்னுடைய தாந்தேயின் சிறுத்தையைப் படிக்காதது உன்னுடைய விருப்பம்.  ஆனால் அதில் நான் எழுதியிருக்கும் விஷயத்தை என்னிடமே கேள்வி கேட்டால் அது பிழை.  ஒரு எழுத்தாளனின் எழுத்தை முழுமையாகப் படிக்காமல் எப்படி நீங்கள் அவனிடமே கேள்வி மயிரெல்லாம் கேட்கிறீர்கள் என்ற கோபத்துடன் எழுதியதுதான் என் முந்தைய பதிவு.  சரி.  என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டாய்.  பதிலுக்கு என்ன செய்ய வேண்டும்?  இனிமேல் இப்படி நம் பிரியத்துக்குரிய சாருவுக்கு மன உளைச்சல் கொடுக்கலாகாது என்று உனக்குள் முடிவு செய்து கொள்ள வேண்டும்.  அதோடு முடிந்தது விஷயம்.  ஆனால் நீ என்ன செய்திருக்கிறாய்?  தப்பு செய்தால் அதை நீக்க இன்னும் பல தப்புகளைச் செய்வதுதானே இந்திய மரபு.  உடனே மீண்டும் வாட்ஸ் அப்பைத் திறக்கிறாய்.  அதிலிருந்து எனக்கு ஒரு செய்தியைத் தட்டுகிறாய்.

ஐயோ, உங்கள் புத்தகம் தற்சமயம் என்னிடம் இல்லை.  அதனால் கேட்டு விட்டேன்.  ஸாரி.

கடுமையான வார்த்தைப் பிரயோகத்துக்காக என்னை மன்னித்து விடு வளன்.  அயோக்கியத்தனம்.  வேறு எந்த வார்த்தையையும் என்னால் இங்கே எழுத முடியவில்லை.  இதுதான் தப்புக்கு மேல் தப்பு.   கொடுத்த மன உளைச்சல் போதாது.  இன்னும் கொடு.  ஏன் அப்பு, உன் ஸாரியால் எனக்கு என்ன பயன்?  புத்தகம் உன்னிடம் இல்லாவிட்டால் என்ன?  இதுவரை அதை நீ படித்தாயா இல்லையா?  படித்திருக்காவிட்டால் என்னிடம் கேள்வி கேட்டதே பிழை.  சரி, கேட்டு விட்டாய்.  நானும் பதிலுக்குத் திட்டி எழுதி விட்டேன்.  அதோடு விடாமல் இதென்ன விளக்கம்?  இந்த விளக்கம் எனக்கு எதற்கு?  தாந்தேயின் சிறுத்தையை நீ படிக்கவில்லை.  அதை ஒப்புக் கொள். படித்திருந்தால் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் அதில் குறிப்பிட்டிருக்கும் இரண்டு டஜன் தத்துவவாதிகளின் பெயர் உனக்கு மறக்கவே மறக்காது.  சரி, படிக்கவில்லை.  புத்தகமும் இப்போது உன்னிடம் இல்லை.  என்னிடம் விபரம் கேட்டு வாங்கிக் கொண்டு விட்டாய்.  அதற்கு மேல் நீ என்ன செய்திருக்க வேண்டும்?  தாந்தேயின் சிறுத்தை எங்கே என்று தேடிக் கண்டு பிடித்துப் படிக்க வேண்டும்.  இல்லாவிட்டால் வேறு யாரையாவது வாசகர் வட்ட நண்பர்களைத் தொடர்பு கொண்டு அந்த தாந்தேயின் சிறுத்தை என்ற புத்தகத்தில் சாரு எந்தெந்த தத்துவவாதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறார் என்று கேட்டிருக்க வேண்டும்.  அதுவும் இல்லாவிட்டால் கண்ணாடிக்கு முன்னே நின்று சாருவைத் தொந்தரவு செய்து விட்டேன்; இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்.  அல்லது, என்னிடம் ஸாரி கேட்காவிட்டால் உன் தலைமண்டை வெடித்து விடும் போல் இருந்தால், ஸாரி சாரு, இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று எனக்கு ஒரு உறுதி மொழி கொடுக்கலாம்.  அந்த உறுதிமொழி கூட எனக்காக அல்ல;  என்னிடம் ஸாரி சொல்லாவிட்டால் உன் தலைமண்டை வெடித்து விடாமல் இருப்பதற்காக.  மற்றபடி எனக்கு அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.  நானும் மனிதன் தான்;  நானும் எத்தனையோ தவறுகள் செய்கிறேன்.  ஆனால் ஒரு முறை செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன்.  அதை எனக்குள் உறுதி செய்து கொள்வேன்.  என் திருப்திக்காக – கவனி – என் திருப்திக்காக நான் பிழை செய்த மனிதரிடம் “இனி இப்படி நடக்காது; இப்படி நடக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லுவேன்.  அதிலும் நெருங்கிய நண்பராக இருந்தால் சொல்ல மாட்டேன்.  தூரத்து நண்பராக இருந்தால்தான்.  ஆனால் நீயோ மறுபடியும் அலைபேசியை எடுத்து இன்னொரு குறுஞ்செய்தியைத் தட்டி விடுகிறாய்.  புஸ்தகம் கையில் இல்லை; அதனால் கேட்டேன்.  ஸாரி.  ஏய்யா, எனக்குப் புணரப் பெண்கள் இல்லை; அதனால் உன்னை ரேப் செய்தேன் என்று எவனாவது எந்தப் பெண்ணிடமாவது சொல்வானா?  புத்தகம் இல்லையென்றால் தேடிக் கண்டு பிடி; வாசகர் வட்டத்திடம் கேள்.  அதற்குத்தான் நான் திரும்பத் திரும்பக் கூறுகிறேன் – எனக்கு வாசகர் வட்டம் என்ற ஒரு அமைப்பு இருக்கிறது;  அதில் சேர்ந்து உங்கள் சந்தேகப் பருப்புகளை அங்கே போய் கேளுங்கள் என்று.  ஏன் அதைச் செய்யாமல் என் தாலியை அறுக்கிறீர்கள்?

வளன், உன்னுடைய ரெண்டு வரி மெஸேஜை ரத்து செய்து விட்டு என்னுடைய வேலையை நான் பார்க்கப் போகலாம்.  ஒரு நாளைக்கு எனக்குக் குறைந்தது பத்து ங்கொம்மா, ங்கோத்தா கடிதம் வருகிறது.  அதையெல்லாம் நான் குப்பையில் தட்டி விடுகிறேன்.  ஆனால் எனக்கு நெருக்கமானவர்களின் மன உளைச்சல் கடிதங்களையும் அப்படி நான் குப்பையில் தட்டி விட முடியாது.  ஒரு தப்பு செய்தால் அதைத் திரும்பவும் செய்யாமல் இருக்க உறுதி எடுத்துக் கொள்.  அது கூட உன்னுடைய தனிப்பட்ட விஷயம். அதற்கு மேல் அந்தத் தப்பிலேயே மொய்த்துக் கொண்டு கிடக்காதே.  இப்போது பார், எனக்கு எவ்வளவு பெரிய நேர விரயம்.

வளன், நீ ஒரு ஆன்மீகவாதி.  ஆன்மீகவாதிகளுக்கும் உலக சினிமா ரசிகர்களுக்கும் சுரணை உணர்வு கம்மி என்பதை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.  இதனாலேயே நீ இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.  இது இரண்டாவது முறை.  உன்னை ஆறு மாதங்களுக்கு என் தொடர்பிலிருந்து நீக்குகிறேன்.  ஆறு மாதங்களுக்குப் பிறகும் நீ இதேபோல் தொடர்ந்தால் நிரந்தரமாகத் துண்டித்து விடுவேன்.  ஆன்மீகவாதி அதிகம் பேசக் கூடாது.  ஒரு ஆன்மீகவாதியிடம் பயிற்சி எடுத்த என் சகோதரன் தான் தமிழ்நாட்டிலேயே இன்று அதிகம் பேசுபவன் என்ற பெயரை எடுத்திருக்கிறான்.  ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவன் அதிகம் பேச மாட்டான்.  சொற்களை அதிகம் விட மாட்டான்.  அது அவனுக்கும் தெரியும்.  சில பேர் மது அடிமைகளாக இருப்பது போல் அவன் சொல் அடிமை.  நான் எழுதுவதைச் சொல்லவில்லை.  அனாவசியப் பேச்சை சொல்கிறேன்.   ஆன்மீகத்தைப் பயின்று கொண்டிருக்கும் நீ சொற்களை விரயம் செய்யாதே.  மௌனமாக இருக்கப் பழகிக் கொள்.

எனக்குப் பதினெட்டு வயது இருக்கும் போது சுஜாதாவின் ஒரு தொடர்கதையில் ஒரு தத்துவவாதியின் பெயர் தவறாக வந்திருந்தது.  அது தவறான உச்சரிப்பு என்று அப்போது எனக்குத் தெரியாது.  கல்லூரி நூலகத்தில் மூன்று நாட்கள் என்ஸைக்ளோபீடியாவைத் தேடி அந்தத் தத்துவவாதியின் பெயரைக் கண்டு பிடித்தேன்.  அதற்குப் பிறகு அவரே என் குருவாக ஆனார்.  இப்போது உலகமே கையில் உள்ள அலைபேசியில் வந்து விட்டது.  ஆனால் நாம் தத்துவவாதிக்கே போன் செய்து வேறு யாரெல்லாம் தத்துவவாதி? லிஸ்ட் தர முடியுமா? என்று கேட்கிறோம்.  வெட்கமாகவும் அவமானமாகவும் இருக்கிறது வளன்.

ஆறு மாதம் தண்டனை அல்ல; பயிற்சி எனப் பழகு.

சாரு