சென்ற ஆண்டு போல் அல்லாமல் இந்த ஆண்டு ஏராளமான நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்து சொன்னார்கள். 1953 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினெட்டாம் தேதி – அதாவது, மார்கழி மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்குப் பிறந்தேன். ரிஷப ராசி. கிருத்திகை நட்சத்திரம். தலைச்சன். நான்கு வயது வரை பேச்சு வரவில்லை. அம்மாச்சி ஒரு பெருமாள் கோவிலுக்கு (ஊர் மறந்து விட்டது) மொட்டை போடுகிறேன் என்று வேண்டிக் கொண்டதும் பேசினேனாம். ஆனால் ஏண்டா இவன் பேசினான் என்று நினைக்கும் அளவுக்குப் பேசியிருக்கிறேன். என் அழகான அத்தையைப் பார்த்து, நான் பெரியவனாகி உங்களையே கல்யாணம் பண்ணிக்கிறேன், ஆனா உங்க தோல் அவ்வா தோல் மாதிரி கொழகொழன்னு போய்டக் கூடாது என்றேனாம். ஜாதிக் கலப்பு என்பதால் அம்மாவின் அம்மா அம்மாச்சி. நைனாவின் அம்மா அவ்வா.
நேற்று மிக அதிக வேலை உள்ள நாளாகப் போய் விட்டது. தருணிடமிருந்து இன்னுமா நாவலை முடிக்கவில்லை என்று செய்தி வந்ததும் அதில் மூழ்கி விட்டதால் அந்திமழை, தினமணி கட்டுரை தாமதமாகி இரண்டையும் 17, 18 தேதிகளில் ராப்பகலாக எழுத வேண்டி வந்து விட்டது. பொதுவாக இப்படிச் செய்ய மாட்டேன். ஞாயிற்றுக் கிழமை கட்டுரை பிரசுரம் பெற வேண்டும் என்றால் திங்கள் செவ்வாயே அனுப்பி விடுவேன். வெள்ளம் வந்த போது கூட தினமணிக்கு அனுப்பி விட்டு வருமா என்று ஃபோன் செய்து கேட்டேன். வராது என்றார்கள். ஏன் வராது, அலுவலகத்தில் தண்ணீர் புகுந்து விட்டதோ என்றேன் கவலையுடன். நம்ம ஆபீஸ்ல வர்ல, ஆனா படிக்கிறவங்க வீட்டிலயும் ஆபீஸ்லயும் வந்துடுச்சு என்றார்கள். மனசுக்குள் எப்படித் திட்டினார்களோ, அப்புறம்தான் எனக்கு உறைத்தது.
எனக்கு முகநூலில் வாழ்த்து கூறிய, பூங்கொத்து அனுப்பிய, பரிசுப் பொருட்கள் அனுப்பிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலவில்லை. மன்னிக்கவும். ஒரே ஒருவர்தான் வாழ்த்து சொல்லவில்லையே என்று ஏமாற்றமடைந்தேன். இன்று முகநூலில் எட்டிப் பார்த்தால் அங்கே வாழ்த்து சொல்லியிருக்கிறார். ராஜேஷ், இனிமேல் முகநூல் வேண்டாம். நான் அங்கே அடிக்கடி போவதில்லை. கேக் அனுப்பும் நண்பர்கள் இனிமேல் மெக்ரனெட் என்ற கடையில் வாங்க வேண்டாம். கேக் என்ற விஷயத்தையே அவர்கள் அவமானப்படுத்துகிறார்கள். தவறாக நினைக்க வேண்டாம். அன்பாக அனுப்பிய பரிசைக் குறை சொல்கிறானே என நினைக்க வேண்டாம். கேக் என்றால் பத்மஸ்ரீ மட்டும் தான் கேக். நான் முட்டை கலந்த கேக்கும் சாப்பிடுவேன். ஒரு நண்பர் எக்கச்சக்கமாக செலவு செய்து எனக்கு ஜீன்ஸ், டீ ஷர்ட் எல்லாம் அனுப்பியிருந்தார். பணத்தை வீணடிக்காதீர்கள் நண்பர்களே. அந்த உடைகள் எதுவுமே எனக்கு சரியான அளவில் இல்லை. நான் ஜீன்ஸும் டீ ஷர்ட்டும் போடுவதில்லை. லினன் சட்டை, டெர்லின் பேண்ட், இல்லாவிட்டால் ராம்ராஜில் வெள்ளிக்கரை போட்ட மிக மெல்லிய வேட்டி.
நேற்று இரவு விருந்து ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு பார்பெக்யூ உணவு விடுதியில். முத்துக்குமார், ஸ்ரீராம், சுப்ரமணியன், செல்வகுமார், கருப்பசாமி, அரவிந்தாக்ஷன், அருள், கணேஷ் அன்பு, சங்கர் ஆகிய நண்பர்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. இவர்களில் பாதிப்பேர் மாணவர்கள். மீதிப் பேர் முப்பது வயது கூட நிரம்பாதவர்கள். வயதான பார்ட்டிகள் யாரும் என் எழுத்தைப் படிப்பதில்லை என்று தெரிகிறது. அதை விட என் எழுத்து இளைஞர்களுக்கானது என்பதுதான் இதிலிருந்து தெரிய வரும் விஷயம். இவர்களுக்கு நன்றி என்ற வார்த்தை சாதாரணம். இவர்கள் யாவரும் எனக்குச் செய்யும் உதவிகள் ஏராளம். ஜெகாவையும் பிரபு காளிதாஸையும் முந்தின நாளே பார்த்து ’ஆசீர்வாதம்’ வாங்கிக் கொண்டேன். யாரும் பூங்கொத்து வாங்கி வர வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அந்தப் பைசாவில் ப்ரிலிண்டா மாத்திரையாவது வாங்கலாமே? மனசு பூராவும் எழுத வேண்டிய கட்டுரைகளிலேயே இருந்தது. பிறகு ராக்கண் விழித்து எழுதி அனுப்பி விட்டேன்.
முகநூலில் ராஜேஷ் எழுதியிருந்ததை உங்களோடும் பகிர்கிறேன்.
நமக்குப் புடிச்சவங்க பொறந்தநாளில் நமக்குப் புடிச்ச பாட்டுகளை அவங்களுக்கு அனுப்பியோ/வெச்சிக்கினு கேக்கவெச்சோ செஞ்சா, அது ஒரு ஜாலி. தோ இந்தப் பாட்டு, எனக்குப் புடிச்ச ஒரு நபருக்காக.
என்னன்னா, நபர்ல்லாம் இல்ல. லைஃப்ன்னா இன்னா, அன்புன்னா இன்னா, வாழ்க்கையை எப்படி வாழணும், ரசனையை எப்புடிலாம் இம்ப்ரவைஸ் பண்ணணும், சக மனுஷண்ட்ட எப்படி பழகணும்…in short, எனக்குப் பல விஷயங்களில், எதையும் போதனை செய்யாம, ஜஸ்ட் லைக் தட் பல விஷயங்களை போற போக்குல சொல்லிட்டுப் போன சாருவுக்கு இந்தப் பாட்டு..
பாசம், செண்ட்டிமெண்ட்லாம் இல்ல. அதெல்லாமே மொக்கை. என் பையனுக்கும் பொண்ணுக்கும் இப்படி ஒரு அப்பனா நான் இருப்பேன்.. இப்படி ஒரு அப்பன் எனக்கு இருந்திருந்தா, நான் இப்போ இருப்பதை பத்து வருஷம் முன்னாலயே செஞ்சிருப்பேன்..
Anyway, Cheers Charu. இவர்ட்ட, எதை வேணாலும், எப்போ வேணாலும் பேசி, சண்டை போட்டு, திட்டி, சிரிச்சி, கருத்துகளை எக்ஸ்சேஞ்ச் பண்ணமுடியும். அண்ட், எந்த விஷயத்துலயும் எனக்குத் தெரிஞ்சதை விடவும் தெரிஞ்சி வெச்சும், நான் அரை மணி நேரம் பேசுவதையெல்லாம் பொறுமையா கேட்டு… இதை எப்படி முடிக்க..
சாரு. உங்ககிட்ட இருந்து நான் பெற்றது மிக அதிகம்.
கொண்டது உன்றன்னை.. தந்தது என்றன்னை..
ஆர் கொலோ சதுரர்..
இது எனக்கு ரொம்பவே புடிச்ச பாடல். அவ்ளோதான்.