அவர் பெயர் Nick Ut. 1972 ஜூன் எட்டாம் தேதி அன்று அவர் வியட்நாமில் எடுத்த ஒரு புகைப்படம் வியட்நாம் போரின் அவலத்தை உலகத்துக்குத் தெரிவித்தது. அந்தப் புகைப்படம்:
குண்டு வெடித்ததால் தோலெல்லாம் பிய்ந்த நிலையில் நிர்வாணமாக ஓடி வருகிறாள் ஒன்பது வயது சிறுமி.
செய்தி சேகரிப்பவர்களின் வேலையே இதுதான். குண்டு வெடித்துக் கொண்டிருக்கும். கொத்துக் கொத்தாக மக்கள் செத்துக் கொண்டிருப்பார்கள். செய்தியாளனோ புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பான். அவனுக்காகச் செய்யவில்லை. இந்த விஷயத்தை அவன் உலகத்துக்குச் சொல்லியாக வேண்டும். இதற்காக அவன் உயிரே போகலாம். அதைப் பற்றி அவன் கவலைப்படக் கூடாது. அவன் ராணுவ வீரனைப் போன்றவன். ராணுவ வீரனுக்காவது ஒரு தேசம் இருக்கிறது. அந்த தேசத்துக்காக அவன் போராடுகிறான். ஆனால் செய்தியாளனோ மதம், இனம், தேசம் எல்லாவற்றையும் கடந்தவன். ஒட்டு மொத்த மனித குலத்துக்கே அவன் தன் உயிரையும் மதியாமல் வேலை செய்கிறான்.
குஜராத் மதக் கலவரத்தை நாம் மறக்க முடியுமா? அப்போது ஒரு புகைப்படம் உலக மக்களின் மனதில் போய் தைத்தது.
ஃபெப்ருவரி 22, 2002-இல் எடுக்கப்பட்ட புகைப்படம் மேலே உள்ளது. இவர் ஒரு தையற்காரர். குதுபுதீன் அன்ஸாரி. கலவரக்காரர்கள் இவர் வசித்த குடியிருப்பின் கீழ்த்தளத்தைக் கொளுத்தி விட்டார்கள். இவர் மேல் தளத்தில் நின்று கொண்டிருக்கிறார். சுற்றிலும் கையில் ஆயுதங்களுடன் மதவெறியர்கள். அன்ஸாரி அவர்களிடம் உயிர்ப் பிச்சை கேட்கிறார். இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் ஆர்க்கோ தத்தா. புகைப்படம் எடுக்கும் போது என் உயிரும் போயிருக்கும் என்கிறார் தத்தா.
Battle of Chile என்ற ஆவணப்படம். Patricio Guzman இயக்கியது. ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் அயெந்தேவை அவரது அதிபர் மாளிகையிலேயே தனது ராணுவத்தைக் கொண்டு குண்டு போட்டுக் கொல்கிறார் ராணுவத் தளபதி பினேசெத். அந்தப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. ராணுவத்தின் வன்கொடுமைகளை விடியோவில் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஒரு செய்தியாளர். செய்தியாளரின் கோணத்திலிருந்து ராணுவ அதிகாரியின் முகத்தையும் துப்பாக்கியையும் நாம் காண்கிறோம். டோண்ட் ஷூட் என்று கத்துகிறான் அதிகாரி. இரண்டு மூன்று முறை கத்துகிறான். படம் ஓடிக் கொண்டேயிருக்கிறது. பிறகு துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்கிறது. செய்தியாளரை அதிகாரி சுட்டு விட்டார் என்ற குரல் வாய்ஸ் ஓவரில் கேட்கிறது.
இதுதான் செய்தியாளனின் வேலை. தன் உயிரையும் கொடுத்து வரலாற்றை அவன் படங்களாகவும் குரலாகவும் வார்த்தைகளாகவும் பதிவு செய்கிறான். Battle of Chile ஆவணப் படத்தின் சில புகைப்படங்கள்:
சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய போது நமது செய்தியாளர்கள் இந்த வேலையைத்தான் செய்தார்கள். பல ஆண்டுகளாக சென்னைவாழ் மனிதர்களும் ஆட்சியாளர்களும் செய்து வந்த இயற்கை நிந்தனையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் அது. காரணம் எதுவாக இருந்தாலும் அதையெல்லாம் படம் பிடித்தது, செய்தி சேகரித்தது எல்லாம் ஊடகத்தில் பணியாற்றிய செய்தியாளர்கள்தாம். சென்னையே வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த போதும் தினமும் நாளிதழ்கள் வந்து கொண்டுதான் இருந்தன. ஒரு நாளிதழ் கூட எங்கள் பணியாளர்களின் வீடுகளில் வெள்ளம் வந்து விட்டது; எங்கள் அலுவலகத்தில் வெள்ளம் வந்து விட்டது; அதனால் இன்று விடுமுறை என்று அறிவிக்கவில்லை. உலகமே அழிந்தாலும் நேற்று உலகம் அழிந்தது என்று தலைப்புச் செய்தியில் போட்டு விட்டுத்தான் உயிரை விடுவான் பத்திரிகையாளன். அதுதான் அவன் வேலை. செய்தியாளனுக்குக் குடும்பம் கிடையாது. வெள்ளம் கிடையாது. சுனாமி கிடையாது. ஏனென்றால் எல்லாவற்றையும் படம் பிடிக்க வேண்டியவனே அவன் தானே? ”என்னப்பா, எங்களையெல்லாம் இப்படி வெள்ளத்தில் விட்டு விட்டு நீ பாட்டுக்குக் கேமராவைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டாயே, உனக்கு அறிவு இருக்கா? நீ மனிதாபிமானிதானா?” என்றெல்லாம் செய்தியாளனின் மனைவி கேட்க முடியாது. ஏனென்றால், அவன் இந்த மனித குலத்துக்கே சேவை செய்வதற்காக நேர்ந்து விடப்பட்டவன். அவனுக்குக் குடும்பம் கிடையாது.
மேலே உள்ள புகைப்படம் இன்னும் க்ளோஸப்பில் பத்திரிகைகளில் வந்திருந்தது. அதில் அந்தச் சிறுமியின் பீதியை நம்மால் காண முடிந்தது.
இப்படிப்பட்ட சூழலில் தான் சிம்புவின் பீப் பாடல் யூட்யூபில் வெளிவந்தது. பாடல் வெளிவந்த நாள் டிசம்பர் 10. மறுநாள் தினசரிகளில் எந்தச் செய்தியும் இல்லை. நான் மட்டுமே என்னுடைய எதிர்ப்பை என் வலைப்பதிவில் எழுதினேன். பிறகு டிசம்பர் 12-ஆம் தேதி இந்து நாளிதழில் அந்தக் கட்டுரை வெளிவந்தது. அந்தக் கட்டுரை:
சிம்பு, அநிருத் இருவரின் காவாலித்தனம் என்றுதான் மேலே தலைப்பு கொடுத்தேன். பிறகு நீண்ட நேரம் யோசித்தேன். ஏனென்றால், யாரையும் ஒருபோதும் திட்டக் கூடாது என்று உண்மையிலேயே சங்கல்பம் செய்து கொண்டிருக்கிறேன். அதனால்தான் சமூக விரோத செயல் என்று மாற்றினேன். ஆனாலும் அவர்கள் செய்திருப்பது பச்சையான காவாலித்தனம்தான்.
இந்தப் பாடலுக்குப் பெயர் Beep Song. சினிமா வசனத்தில் கெட்ட வார்த்தைகள் வரும் போது பீப், பீப் என்று வரும் அல்லவா, அதுதான். சிம்பு அந்தக் கெட்ட வார்த்தையைப் பயன்படுத்திப் பாடுகிறார். என்னப் …டைக்கு லவ் பண்றோம், என்னப் ….டைக்கு லவ் பண்றோம் என்று திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டே இருக்கிறார். பாடலின் இடையேயும் …டை வருகிறது. ”பு” என்ற எழுத்துக்கும் ”ன்” என்ற எழுத்துக்கும் பீப் ஒலி வந்தாலும் பீப் ஒலியையும் மீறி பூவும் இன்னும் டையும் காதில் விழுகின்றன.
என்னுடைய ஆட்சேபம் இந்த வார்த்தையைப் பிரயோகித்துப் பாடியதற்காக அல்ல. இதை நான் அடிக்கோடிட்டுச் சொல்ல விரும்புகிறேன். எல்லா வார்த்தைகளையும் போல அதுவும் ஒரு வார்த்தை. அதையும் அவர்கள் பீப் சத்தம் போட்டு மறைத்து விட்டார்கள். கேட்டால் நாங்கள் சண்டையை அல்லவா சொன்னோம் என்பார்கள். ஆனால் அந்த இரண்டு இளைஞர்களின் காவாலித்தனம் என்னவென்றால், இவர்கள் இந்தப் பாடலை வெளியிட்டிருக்கும் தருணம். மக்கள் எல்லாம் தண்ணீரில் தங்கள் உடைமைகளையும் தங்களுக்குப் பிரியமான உறவுகளையும் பறி கொடுத்து விட்டு அழக் கூட முடியாமல் அதிர்ச்சி அடைந்து கிடக்கிறார்கள். எத்தனை எத்தனை சோகக் கதைகள். ஒரு ராணுவ கர்னல்… என் நண்பரின் உறவினர். 70 வயது இருக்கும். அவர் மனைவி. இருவரும் டிஃபென்ஸ் ஆபீஸர்ஸ் காலனியில் வசிக்கிறார்கள். தரைத்தளம். தண்ணீர் முழங்கால் அளவு ஏறி விட்டது. வீட்டை உள்ளே பூட்டியிருக்கிறார்கள். மாடிக்குப் போகலாம் என்றால் மாடி வீட்டுக்கு வெளியே இருக்கிறது. போகலாம் என்றால் முடியாது. வீட்டை உள்ளே பூட்டியிருக்கிறார்கள். திறந்து கொண்டு போகலாமே? முடியாது. சாவியைத் தேட முடியவில்லை. வீடு முழுவதும் இருள். மின்சாரம் இல்லை. எங்கே வைத்தோம் என்று ஞாபகம் இல்லை. தண்ணீர் முழங்கால் வரை வந்து இடுப்பு வரை வந்து கழுத்து வரை வந்து… இருவரின் பிணம் தான் கிடைத்தது. ராணுவத்தில் கர்னல். இப்படி ஆயிரம் கதைகள். சிம்பு என்னப் …டைக்கு லவ் பண்றோம் என்று பாடுகிறார். அநிருத் என்ற பையன் இசை அமைக்கிறார். ஏன் தம்பிங்களா நீங்கள் சென்னையில்தான் இருக்கிறீர்களா அல்லது அமெரிக்கத் தமிழர்களா? அமெரிக்காவில் போய் கண்ட் கிண்ட் என்று பாட வேண்டியதுதானே?
இது போன்ற வார்த்தைகளை நானும் என் நாவல்களில் கதைகளில் பிரயோகித்திருக்கிறேன். ஆனால் அதை 18 வயதுக்கு உட்பட்டவர்கள் படிக்க மாட்டார்கள். ஆனால் இது சினிமா ஹீரோ பாடியது. இந்தப் பாடலை நாளை விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாலு வயதுக் குழந்தை பாடப் போவதை எண்ணியே நான் பயப்படுகிறேன்.
சென்னையே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. ஆயிரக் கணக்கான மக்கள் முகாம்களில் இருக்கிறார்கள். கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்ட முன்னணி நடிகர்கள் ஏதோ சில லட்சங்களை பைல்ஸ் வந்தவன் முக்குவது போல் முழு மனசில்லாமல் முக்கி முக்கிக் கொடுத்து விட்டுப் பதுங்கி விட்டார்கள். களத்தில் இறங்கி வேலை செய்ததெல்லாம் பாலாபிஷேபகத்துக்கு ஆட்படாத சித்தார்த், விஷால், கார்த்தி, ஆர்ஜே பாலாஜி, பார்த்திபன் போன்ற நடிகர்கள்தான். அரசியலிலும் சினிமாவிலும் தமிழர்கள் யாரையெல்லாம் கொண்டாடினார்களோ அவர்கள் வீட்டுக்குள் பதுங்கி விட்டார்கள். முகம் தெரியாத அத்தனை பேரும் இறங்கி வேலை செய்தார்கள்.
என் வீட்டுக்குள் தண்ணீர் வந்தால் என்னைக் காப்பாற்ற ஆண்டவனாலும் முடியாத நிலை. பிற மனிதர்களைக் கண்டாலே பேயாட்டம் ஆடும் ஐந்தடி நீளமும் மூன்று அடி உயரமும் கொண்ட ஸோரோ (எடை 60 கிலோ) என்ற க்ரேட் டேன் என்ற நாயுடனும், நடக்க முடியாத கால்களைக் கொண்ட பப்பு என்ற 40 கிலோ லாப் நாயுடனும் முழங்கால் அளவு தண்ணீரில் வீட்டுக்குள் முடக்கப்பட்டேன். நாய்களை விட்டு விட்டு வெளியேற முடியாது என்று முடிவு செய்து விட்டேன். மொட்டை மாடிக்குப் போக படிகள் இல்லை. பப்புவை மிகவும் சிரமப்பட்டு மாடிப்படி ஏற்றினோம் நானும் அவந்திகாவும். இரண்டு பேரும் சாகத் தயாராக இருந்தோம். பப்புவும் ஸோரோவும் எங்களுக்கு இரண்டு குழந்தைகள். படகே வந்தாலும் ஸோரோ படகைச் சாய்த்து விடும். பிற மனிதர்களைக் கண்டால் ட்ராகுலாவாகவே மாறி விடும். க்ரேட் டேன் ஜாதி அப்படித்தான். பழகியவர்களோடு மட்டுமே குழந்தை மாதிரி பழகும்.
என் வீட்டில் தண்ணீர் ஏறியிருந்தால் இந்நேரம் எனக்கு இரங்கல் கட்டுரைகள் வந்திருக்கும். தண்ணீர் முழங்காலோடு நின்று விட்டது. தண்ணீரில் மின்சாரம் பாய வாய்ப்பு இருந்ததால் மின்சாரத்தை நிறுத்தி விட்டோம். அதைக் கூட நீ நிறுத்தாதே நான் நிறுத்துகிறேன் என்று சொல்லி ஒரு மரக்கட்டையால் நிறுத்தினாள் அவந்திகா.
இதெல்லாம் ஜுஜுபி. ஆயிரக் கணக்கான கதைகள். தண்ணீரில் தன் சொந்தங்கள் பிணமாய் மிதப்பதைப் கண் கொண்டு பாத்தவர்களின் கதைகள் இருக்கின்றன. சிம்பு பாடுகிறார், என்னப் … டைக்கு லவ் பண்றோம்?
ஆபாசம் என்றால் என்ன? என் அப்பனும் ஆத்தாளும் உறவு கொண்டுதான் என்னைப் பெற்றார்கள். மனிதன் மிருகம் எல்லாம் அப்படித்தான். ஆனால் எதை எங்கே செய்ய வேண்டும் என்று வரைமுறை இருக்கிறதுதானே? கக்கூஸில் மலம் கழிக்கலாம். அங்கே போய் சாப்பிடலாமா? படுக்கை அறையில் உள்ள சமாச்சாரம் பூஜை அறைக்கு வரலாமா? ஆணுறையை உங்கள் குழந்தைக்கு விளையாடக் கொடுப்பீர்களா? இதைத்தான் சிம்புவிடமும் அநிருத்திடமும் கேட்கிறேன். இங்கே இணையத்தில் என்ன சென்ஸாரா இருக்கிறது? சோறு தட்டில் இருந்தால் சாப்பாடு. தரையில் கிடந்தால் குப்பை. அதே தான், சிம்பு பாடியிருக்கும் பு வார்த்தை சரியான இடத்தில் இருந்தால் பூஜைக்குரியது; ஏனென்றால் அது நாமெல்லோரும் இந்த உலகத்துக்கு வரக் காரணமாக இருந்த இடம். நமது ஜென்ம ஸ்தானம். ஆனால் அதையே சிம்பு பாடலில் பயன்படுத்தியிருப்பதால் காவாலித்தனமாக மாறி விட்டது. தட்டில் இருந்தால் சோறு. தரையில் கிடந்தால் குப்பை.
எல்லோரையும் அவமானப்படுத்தி விட்டார்கள் சிம்புவும் அநிருத்தும். சமீபத்தில் நயன் தாரா பெயரில் ஒரு படம் வந்தது அல்லவா? அது நம் சமூக மதிப்பீடுகளின் வீழ்ச்சியின் குறியீடு என்று எழுதியிருந்தார் சமஸ். நம் சமூகம் முழுமையாக சீக்குப் பிடித்து விட்டது என்பதன் குறியீடு சிம்புவின் பாடல். புண் இருந்தால் சீழ் வரும் அல்லவா, நம் சமூகத்தின் புண்ணாக மாறி விட்ட சினிமாவிலிருந்து வடிந்திருக்கும் சீழ் தான் சிம்பு அநிருத்தின் பாடல்.
அடுத்த நாள் மீண்டும் ஒரு சிறிய குறிப்பு எழுதியிருந்தேன். அந்தக் குறிப்பு:
”சிம்புவின் செயலில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், சினிமா ஹீரோ என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; கேட்க நாதி இல்லை என்ற அவருடைய திமிர் தான். பொதுவெளியில் இது போன்ற ஒரு அயோக்கியத்தனத்தை என் வாழ்நாளில் கண்டதில்லை. அயோக்கியத்தனம் செய்பவன் கொஞ்சம் ஒளிந்து கொண்டு, அடையாளம் தெரியாமல் செய்வான். ஆனால் இங்கே சினிமா ஹீரோ பொதுவெளியில் செய்கிறார். என்னுடைய மிக முக்கியமான ஆட்சேபணை எல்லாம், குழந்தைகளைப் பாழடிக்க இவர் யார்? பள்ளிக்கூட சிறார்கள்தானே பாட்டு கேட்கிறார்கள்?”
அநிருத்தின் பெயரை இப்போது நீக்கி விட்டேன். காரணம், அந்தப் பாடலுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; அது முழுக்கு முழுக்க சிம்புவின் பாடல் என்று சொல்லி விட்டார் அநிருத்.
சிம்புவின் பொறுக்கித்தனமான பாடலில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பெண்ணுறுப்பைக் குறிக்கும் அந்தச் சொல்லின் நடு எழுத்துக்கு மட்டும்தான் பீப் சத்தம் கேட்கிறது. முதல் எழுத்தும் மூன்றாம் எழுத்தும் அப்படியே சிம்புவால் உச்சரிக்கப்படுவதால் பாடலில் திரும்பத் திரும்ப அந்த வார்த்தை கேட்டுக் கொண்டே இருக்கிறது.
ஏன், நீங்களும்தானே அந்த வார்த்தையை உங்கள் கதைகளில் உபயோகித்தீர் என்கிறார்கள் பலர். ஆண்டாள் பயன்படுத்தாததா, கோவில்களில் இல்லாததா? இதெல்லாம் சிம்பு ஆதரவாளர்களின் வாதம். ஐயா, அதெல்லாம் கலை. கலைக்கும் காவாலித்தனத்துக்கும் வித்தியாசம் இல்லையா? ஆண்டாள் செய்தது கலை; கோவிலில் இருப்பது கலை; எமினெம் இதை விட ஆபாச வார்த்தைகளைத் தன் பாடலில் கையாண்டிருக்கிறார். அது கலகம். சமூகத்தின் புரையோடிப் போன மதிப்பீடுகளை எதிர்த்து எமினெம் செய்யும் கலகம். அதற்காக அவர் பாடல்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் சிம்புவின் பாடல் பொறுக்கித்தனமானது. ஆங்கிலத்தில் லும்பன் என்று சொல்வார்கள். சமூக வெளியில் பெண்களை அவர்களின் பிறப்புறுப்பை வைத்துத் திட்டுவது மிகப் பெரிய வன்கொடுமையாக இருந்து கொண்டிருக்கிறது. அதிலும் தமிழ் ஜனரஞ்சக சினிமாவில் பெண்களை அவமதிக்கும் காட்சிகள் இல்லாத சினிமாவே இல்லை என்று சொல்லலாம். ஒரு படத்தில் ஹீரோவும் காமெடியனும் பைக்கில் போகிறார்கள். சிவப்பு விளக்கில் வண்டி நிற்கிறது. பக்கத்தில் ஒரு பெண் துப்பட்டாவால் முகத்தை மூடிக் கொண்டிருக்கிறார். ஹீரோ அவரிடம் ஏதோ கேட்கிறான். அவர் முகத்துணியை எடுத்து விட்டு பதில் சொல்லும் போது அவள் முகத்தில் பற்கள் எடுப்பாகக் கவர்ச்சியற்றுத் தெரியவும் ஹீரோ சீ என்று காறித் துப்புகிறான். இப்படிப்பட்ட படங்கள் தடை செய்யப்பட வேண்டாமா? ஒரு சீரியஸான படத்தில் இப்படி ஒரு காட்சி இருக்கலாம். ஆனால் அப்படிக் காறித் துப்பும் ஆள் ஒரு பொறுக்கியாக இருக்க வேண்டும். ஹீரோவாக இருந்தால் படத்தைத் தடை செய்ய வேண்டியதுதான். பெண்களை இழிவு படுத்த எவனுக்கும் இங்கே உரிமை கிடையாது.
திரும்பத் திரும்ப பலரும் கேட்பது நீ அந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லையா? இதோ என் பதில்: தில்லியில் ஜோதி சிங்கை வன்கலவி செய்து கொன்ற மிருகங்களைப் பற்றி ஒரு கதை எழுதுகிறேன். அந்த மிருகங்கள் இப்போது சிம்பு பயன்படுத்தும் வார்த்தையைத்தானே பேசிக் கொள்வார்கள்? அதை நான் கதையில் எழுதத்தானே வேண்டும்? இல்லை, மகாத்மா காந்தியின் சுயசரிதையைப் படித்துக் கொண்டிருந்தார்கள் என்று எழுதவா? அப்படி எழுதினால் அது கதையா?
சிம்புவின் காரியம் ஏன் கோபத்தை ஏற்படுத்துகிறது என்றால், ஒட்டு மொத்த சமூகமே பெண்களுக்கு எதிரான சொல்லாடல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது, ஒட்டு மொத்த ஜனரஞ்சக சினிமாவே பெண்களை இழிவுபடுத்திக் கொண்டிருக்கும் போது அவர்களின் ஜனன உறுப்பை வசை வார்த்தையாகப் பயன்படுத்திப் பாடல் எழுதிப் பாடியதுதான். சரி, நடந்தது நடந்து விட்டது. பத்திரிகையிலும் செய்தி வந்து விட்டது. சிம்பு என்ன செய்திருக்க வேண்டும்? மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் என்ன செய்தார்? என் உபயோகத்துக்காகப் பாடினேன், நான் பாத்ரூமில் பாடினால் அதைக் கேட்க நீங்கள் யார்? எவனோ அதைத் திருடி வெளியிட்டால் அதற்கு நானா பொறுப்பு?
இப்போது சிம்பு மாட்டிக் கொண்டிருக்கும் பிரச்சினைக்கு சிம்புவின் மேற்கண்ட திமிர்த்தனமான பதில் மட்டுமே காரணம். பாத்ரூமில் கூட பெரிய ஆர்க்கெஸ்ட்ராவையும் இசையமைப்பாளரையும் வைத்துக் கொண்டு பாடியபடியே குளிக்கும் ஒரே ஹீரோ இந்த உலகத்திலேயே சிம்புவாக மட்டுமே இருக்க முடியும்.
யாரோ அதைத் திருடி வெளியிட்டால் அதற்கு நானா பொறுப்பு?
ஆமாம், சிம்பு மட்டுமே பொறுப்பு. நான் என்னுடைய சொந்த உபயோகத்துக்காக வெடிகுண்டு தயாரித்தேன். அதை எவனோ திருடி வெளியில் போட்டு வெடித்து விட்டான். மக்கள் செத்ததுக்கு நானா பொறுப்பு? இந்தக் கேள்விக்கும் சிம்புவின் கேள்விக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பெண்களை இழிவு செய்து பாடியது மட்டும் அல்ல; அதற்கு ஒரு பெரிய ஆர்க்கெஸ்ட்ராவே இசையமைத்திருக்கிறது என்கிற போது அதன் முழுப் பொறுப்பும் சிம்புவைச் சேர்ந்ததுதானே? மேலைநாடுகளில் நம் வீட்டு வாசலில் பனி விழுந்து உறைந்து போனால் அதை நாம் தான் மண்வெட்டி கொண்டு அப்புறப்படுத்தியாக வேண்டும். 80 வயது கிழவன் கிழவியெல்லாம் அதை அங்கே செய்கிறார்கள். செய்ய முடியாவிட்டால் பணம் கொடுத்து அப்புறப்படுத்த வேண்டும். வேலைக்கு இங்கே போல் அங்கே ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். கிடைத்தாலும் உங்கள் சொத்தையே எழுதி வைக்க வேண்டும். அதனால்தான் இந்தியப் பணக்காரர்களுக்கு மேலை நாடுகள் என்றால் வலிக்கிறது. அங்கே போனால் குளிர்காலத்தில் மண்வெட்டி எடுத்தாக வேண்டும். ஆக, வீட்டு வாசலில் பனி விழுந்தாலே அதை அப்புறப் படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்றால், இவ்வளவு பெரிய அயோக்கியத்தனமான பாடலை ஆர்க்கெஸ்ட்ரா வைத்து இசையமைத்திருக்கும் போது அதை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பும் சிம்புவினுடையதுதான். யார் வீட்டிலாவது சிக்கன்குனியா வந்தாலே அந்தத் தெருவுக்கு அரசு மருத்துவர்கள் வந்து விடுகிறார்கள் இல்லையா? இப்போது சிம்புவின் பாடல் என் சகஜீவிகளான ஒட்டு மொத்தப் பெண் இனத்தையே இழிவு படுத்துகிறதே? இது பற்றிக் கேள்வி கேட்டால், அது என் இஷ்டம், என் பாத்ரூமை ஏன் எட்டிப்பார்க்கிறாய் என்று பதில் சொல்கிறார் சிம்பு. சினிமா மட்டுமே இந்தத் திமிரை ஒருவருக்குக் கொடுக்கிறது. அரசியல்வாதி கூட பயப்படுகிறார்.
பிறகு மாதர் சங்கங்களின் எதிர்ப்பின் காரணமாக ஒவ்வொருவராக பதில் சொல்லக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். வைரமுத்து நான் இன்னும் பாடலைக் கேட்கவில்லை; ஆனாலும் பாடல் எழுதுபவர்கள் கொஞ்சம் பொறுப்போடு இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். மார்கழி மாதத்தில் குளிருகிறது கவிஞரே. ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா… ஹுஹுஹ்ஹ்ஹ்ஹூஹ்ஹ்ஹூ… தேகம் நடுங்குகிறது எனக்கு. இதுதான் ஒரு மூத்த கவிஞருக்கு அழகா? பாடலில் முதல் வரியைக் கேட்க ஒரு ரெண்டு வினாடி கூட ஆகாது. ஆனால் இந்த விஷயத்தில் மற்ற பாடலாசிரியர்களின் எதிர்ப்பு அறிக்கை மிகவும் வலுவாகவே இருந்தது. அந்தத் துணிச்சல் பாராட்டுக்குரியது.
இது விஷயத்தில் இளையராஜாவிடம் ஒரு தொலைக்காட்சி நிருபர் கேள்வி கேட்டதற்கு அவர் உனக்கு அறிவு இருக்கா என்று பத்துப் பதினைந்து முறை கேட்கிறார். வெள்ள நிவாரணத்துக்கான கூட்டம் நடக்கும் போது நிருபர் அப்படிக் கேட்டு விட்டாராம். கூட்டம் முடிந்து தானே கேட்டார் அவர்? மேலும், தர்மசங்கடமான இடங்களில் தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்பதுதானே அவர்களின் தொழில்? காணொளியில் அந்தக் காட்சியைப் பார்த்த போது எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாணவனை, ஒரே ஒரு மாணவனை பத்துப் பதினைந்து மாணவர்கள் கட்டையால் தாக்கிய சம்பவம் தொலைக்காட்சியில் பார்த்ததுதான் ஞாபகம் வந்தது. அந்த நிருபர் அப்படி என்ன தப்பாகக் கேட்டு விட்டார்? இளையராஜாவிடம் அவர் என்ன அமெரிக்கத் தேர்தல் பற்றியோ, சந்திரயான் மங்கள்யான் பற்றியோ, மோடியின் வெளியூர்ப் பயணங்கள் பற்றியோவா கேட்டார்? வெள்ளத்தில் சென்னை மிதந்து கொண்டிருக்கும் போது சிம்பு இப்படி பெண்களை அவமதிக்கும் பாட்டை வெளியிட்டிருக்கிறாரே, அது பற்றி உங்கள் கருத்து என்ன? கேட்கக் கூடாதா? கடவுளை விட பெரிய இடத்தில் இருக்கிறீர்களா? கடவுளிடமே மனிதன் என்னென்னமோ கேட்கிறானே? நீங்கள் ஒரு மூத்த இசையமைப்பாளர், பாடகர் என்பதால்தானே உங்கள் துறைக்கு சம்பந்தமான கேள்வியைத்தானே அவர் கேட்டார்? உங்கள் முகத்துக்கு நேரே பாடலை அவர் பாடிக் காண்பித்தாரா என்ன? அப்படியே பாடிக் காண்பித்திருந்தாலும் சிம்புவின் மீது அல்லவா உங்களுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும்? ‘தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே’ என்ற அற்புதமான பாடலை இசையமைத்துப் பாடிய உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பார்? அதற்கு ஏன் இத்தனை பாய்ச்சல்?
வாஸ்தவத்தில் இளையராஜா ஒரு மூத்த இசையமைப்பாளர் என்ற முறையில் ஆரம்பத்திலேயே சிம்புவின் பாடலைக் கண்டித்துப் பேசியிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. கேள்வி கேட்ட நிருபரையும் பார்த்து, ஏய், உனக்கு எதாவது இருக்கா, ஏய் உனக்கு எதாவது இருக்கா, ஏய் உனக்கு எதாவது இருக்கா என்றும் பிறகு உனக்கு அறிவு இருக்கா, உனக்கு அறிவு இருக்கா, உனக்கு அறிவு இருக்கா என்றும் கேட்கிறார். செய்தியாளர் எனக்கு அறிவு இருக்கிறதுனாலதான் கேட்கிறேன் என்று சொல்ல, இளையராஜா உனக்கு அறிவு இருக்குங்கிறதை எந்த அறிவுல கண்டுபிடிச்சே, உனக்கு அறிவு இருக்குங்கிறதை எந்த அறிவுல கண்டுபிடிச்சே, என்னோட நின்னு பேச உனக்கு என்ன தகுதி இருக்கு என்றும் பல கேள்விகளைக் கேட்கிறார்.
அந்தக் காணொளியில் நிகழ்த்தப்பட்ட மேற்படி வன்முறையைக் கண்டு என்ன மாதிரியான தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றே ஆச்சரியப்பட்டேன். சரி, கலைஞர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள்; கோபப்படுவார்கள். நியாயம். நான் அப்படிச் செய்திருந்தால் என் கோபம் தணிந்த பிறகு அந்த நிருபரை வரவழைத்து எல்லார் முன்னிலையிலும் அவரைக் கட்டியணைத்து மன்னிப்புக் கேட்டிருப்பேன். அதுதானே முதிர்ச்சியின் அழகு? அதுதானே ஆன்மீகத்தின் அழகு?
என்ன பிரச்சினை என்றால், அதிகாரம். கஞ்சா தரும் போதையை விட, மது தரும் போதையை விட, பணம் தரும் போதையை விட அதிகாரம் தரும் போதை அதிகம். அதிகாரத்தைப் போல் போதை தரும் விஷயம் எதுவுமே இல்லை. அதனால்தான் தந்தையே தனயனுக்கு நாற்காலியை விட்டுத் தர மாட்டேன் என்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் அரசியலை விட சினிமாவுக்குத்தான் அதிக அதிகாரம் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆம்; நான் எந்த அரசியல் தலைவரையும் விமர்சித்துக் கட்டுரை எழுதலாம். ஆனால் சினிமாவில் ஈடுபட்டிருப்போரை ஒரு வரி கூட விமர்சிக்க முடியாது. டின் கட்டி விடுவார்கள். அந்த அளவுக்கு சினிமாவில் ஈடுபட்டிருப்போரை வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக வைத்திருக்கிறது தமிழ்ச் சமூகம். அந்த அதிகாரம்தான் உனக்கு அறிவு இருக்கா என்று கேட்கிறது.
இதற்குப் பத்திரிகையாளர்களோ, தொலைக்காட்சியினரோ எந்த எதிர்ப்பும் தெரிவித்ததாக எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் பத்திரிகையாளர் என்றால் யார் என்று இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பல உதாரணங்களைக் குறிப்பிட்டேன்.
ஆனால் ஒன்று. நம் சமூகம் எந்த அளவுக்கு ஒரு நடிகரையோ பாடகரையோ இசையமைப்பாளரையோ கொண்டாடுகிறதோ அதே வேகத்தில் மறந்தும் போகும். சிவாஜிக்கு நடிகர் திலகம் என்று பட்டம் கொடுத்துக் கொண்டாடிய தமிழ்நாட்டில் இப்போது வீரபாண்டியக் கட்டபொம்மனைப் போட்டால் சிறார்கள் சிரிக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட நடிப்பு இப்போது நகைச்சுவையாகி விட்டது. எம்.கே.டி. கடவுளாகக் கொண்டாடப்பட்டார். இப்போது அவரைக் கேட்பாரே இல்லை. கிட்டப்பா, பி.யு. சின்னப்பா, பாபநாசம் சிவன், ஜி. ராமனாதன், கே.வி. மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற மேதைகளை முற்றாக மறந்து விட்ட தமிழ்ச் சமூகத்தில் மிகவும் தற்காலிகமான பாராட்டுகளைக் கொண்டு அதிகாரம் இருப்பதாக நினைத்துக் கொள்வது வேதனையாக இருக்கிறது…
இறுதியாக, இசைஞானி சார்… நான் ஒரு முட்டாள். அதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை. நான் முட்டாளாக இருப்பதற்கு நான் காரணம் இல்லை. அது கடவுளின் பிழை. ஒருத்தர் ரெண்டு நாளில் முடிக்கக் கூடிய புத்தகத்தை முடிக்க எனக்கு ரெண்டு வாரம் ஆகிறது. ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச், சம்ஸ்கிருதம், அரபி என்று பிற மொழிகளையும் கற்றுக் கொள்ள முயன்றேன். படு தோல்வி. எதுவுமே வரவில்லை. மூளை வேலையே செய்ய மாட்டேன் என்கிறது. கடவுளின் பிழை. இருந்தாலும் கேள்விகள் மட்டும் இந்த மரமண்டையில் உதித்துக் கொண்டே இருக்கின்றன. இன்று அந்த மரமண்டையில் உதித்த கேள்வி, அந்த சிம்பு பாடல் பற்றி உங்கள் கருத்துதான் என்ன?
இந்தப் பிரச்சினை தொடர்பாக பத்திரிகைகளில் நான் தெரிவித்த கருத்துக்கள்:
***
The Hindu, December 22, 2015
Charu Nivedita questioned the very need for such a composition. “The very basis of eve-teasing comes from youth being influenced by what they see in popular culture and how lightly it is represented. Apart from being extremely offensive to women, songs like these influence a society to act vulgar,” he said.
He further added, “The mindset of relegating women to specific roles within households and discriminating against their capabilities is what comes through in songs like this. At an individual level, we should introspect and raise our voices against such misogyny and vulgarity.”
http://www.thehindu.com/news/cities/chennai/more-brickbats-for-the-beep-song/article8015743.ece
http://www.thehindu.com/multimedia/dynamic/02666/TH22_Beep-song__TH_2666362g.jpg