எத்தனை அன்புடனும் தொந்தரவு தராமலும் பழகினாலும் எனக்கும் நண்பர்களுக்கும் கொஞ்ச காலத்தில் விரிசல் ஏற்பட்டு விடுகிறது. நண்பர்கள் பிரிந்து விடுகின்றனர். புதிய நண்பர்கள் ஏற்படுகின்றனர். நீண்ட கால நண்பர்கள் என்றே யாரையும் சொல்ல முடியவில்லை. ஏன் என்று நண்பர் மனோவைக் கேட்ட போது நீங்கள் comfort zone எதையும் தருவதில்லை என்றார். அப்போதுதான் எனக்கும் புரிந்தது. நண்பர்களைப் புண்படுத்த மாட்டேன். எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய மாட்டேன். சமமாக நடத்துவேன். ஆனாலும் என்னோடு இருப்பது வசதியாக இருக்காது. உண்மை பேசுவதும், சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பதும், அதிகாரம்-பணம்-புகழ் ஆகியவற்றுக்கு சாமரம் வீசாமல் இருப்பதும்தான் வசதியற்ற தன்மை. உதாரணமாக, என் புத்தக வெளியீட்டு விழாவில் வந்து என் நெருங்கிய நண்பராக இருந்த மிஷ்கின், சாருவின் நாவல் சரோஜாதேவி புத்தகம் என்று பேசினால் மறுநாள் அவரைப் பார்க்கும் போது என்ன மிஷ்கின் இப்படிப் பேசிப் புட்டீங்க ஹிஹி என் மேல என்ன கோவம் மிஷ்கின் ஹி ஹி என்று 32 பல்லும் தெரிய இளிக்கத் தெரியாது எனக்கு. காரசாரமாகக் கட்டுரை எழுதி விடுவேன். அத்தகைய வசதியையே எல்லா நண்பர்களும் எதிர்பார்க்கிறார்கள். என்ன செய்தாலும் இளிக்க வேண்டும்.
நான் என் மனசைத் தொறந்து சொல்லிப்புட்டேன். இனிமேல் நான் உங்களோடு சகஜமாக இருக்க முடியும் என்று ஒரு நண்பர் சொன்னால், என்னது, மனசைத் தொறந்திட்டியா, அப்பன்னா என் மனசை மூடிட்டேன், பொய்க்கோ என்று சொல்லி டாட்டா காண்பித்து விடுவேன். நட்பில் ரொம்பவெல்லாம் மனசைத் திறக்கக் கூடாது. இப்படிப்பட்ட இக்கட்டான சூட்சுமங்களைக் கொண்ட நட்பு என்ற பிராந்தியத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக என்றும் போல் தொடரும் நட்பாக இருப்பது தினமலர் ரமேஷின் நட்பு. அவர் சொன்னதற்காக தேவகோட்டை அரிமா சங்கத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே பேசியதன் காணொளி இது. நன்றி ஷ்ருதி டிவி நண்பர்களுக்கு.