அவ்வப்போது சென்னை போன்ற நகரங்களில் பந்த் நடக்கும் போது இங்கே குடும்பத்தில் இல்லாமல் தனியாக வாழ்பவர்கள் உணவைத் தேடி அலையும் அவலத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது, அனுபவித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு தீபாவளியின் போதும் அப்படிப்பட்ட அவலத்தை நான் அனுபவிக்கிறேன். என்னுடைய பழைய பதிவுகளைத் தேடி வாசித்தீர்களானால் ஒவ்வொரு தீபாவளியின் போதும் அச்சுப் பிசகாமல் இதே போன்றதொரு புலம்பல் கட்டுரையை எழுதியிருப்பேன். இப்படிப் பட்டினி கிடக்க நேரிடும் என்பதை உணர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பே பயம் வந்து விடும். ஐயோ, காலையில் தெருத் தெருவாக அலைய வேண்டியிருக்குமே? சின்மயா நகரிலிருந்து மைலாப்பூருக்குக் குடி வந்ததே உணவுக்காக தெருத் தெருவாக அலையக் கூடாது என்றுதானே? இங்கே தெருவுக்கு நாலு உணவகங்கள் உள்ளன. நல்ல உணவகங்கள். உணவு தேடி அலையும் பிரச்சினை தீர்ந்தே போனது. ஆனால் பண்டிகை தினங்களில் மாட்டிக் கொள்கிறேன். அதிலும் தீபாவளியின் போது உச்சம்.
சென்னையில் ஒரு பகுதியில் பண்டிகை என்றால் அது அங்கே நடக்கும் ஒரு போட்டியைக் குறிக்கிறது. குத்துச் சண்டை. பண்டிகை படத்தில் பார்த்திருக்கலாம். அஞ்சாயிரம் பத்தாயிரத்துக்காக உயிர் போகும் அளவுக்கு அடித்து விளையாடுவார்கள். பந்தயமும் நடக்கும். துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் ஒரு ஃப்ரெஞ்சுப் படம் கூட வந்திருக்கிறது. அங்கே துப்பாக்கி. இங்கே கை. ஒரே ரத்தக்களரிதான்.
குடும்பம் என்பது அடிமைத்தனத்தில் கட்டப்படுகிறது. பெண் ஆணுக்கும் ஆண் பெண்ணுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கும் அமைப்பு அது. பெரியார் சொன்னது. நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் பண்டிகை தினங்களில் உணவகங்கள் இல்லாமல் பட்டினி கிடக்க வேண்டியிருக்கிறதே ஐயா? எனக்கு நண்பர்கள் அதிகம். உணவுக்காக யார் வீட்டுக்கும் போய் கதவைத் தட்டலாம். அப்படி என் பிள்ளைகள் வீட்டுக்குப் போனேன். எல்லாம் நாலு மணிக்கே எழுந்து பட்டாசு வெடித்துக் களைத்துக் கிடந்தன. மணி எட்டு. உறவினர் கூட்டம் வேறு.
நான் இரண்டு மூன்று தினங்களாக அதிகாலை மூன்றரை மணிக்கே எழுந்து கொள்கிறேன். இன்றும் அதே போல் எழுந்து அரை மணி நேரம் தியானம் பண்ணினேன். பிறகு காஃபி போட்டுக் குடித்தேன். ஒரு மணி நேரம் மார்ஜினல் மேன் நாவலில் எடிட்டிங் வேலை செய்தேன். ஆறு மணிக்கு மீகன் தெரப்பிக்காகப் படுத்தேன். ஏழேகால் வரை செய்தேன். கொலைப் பசி. வீட்டில் ஒரு முறுக்கு கூட இல்லை. லட்டு மட்டும் இருந்தது. இத்தனை பசியில் காலங்காலையில் லட்டைத் தின்றால் வாந்தி வரும். ஒரு ஆப்பிளை நறுக்கிச் சாப்பிட்டேன். கொலைப் பசி அதிகரித்தது. அப்போதுதான் பிள்ளைகள் வீட்டுக்குப் போனேன். உறவினர் கூட்டம். பண்டிகை களேபரம். அந்தக் களேபரத்திலும், அந்தக் கொலைப்பசியிலும் ஒரு அட்டகாசமான கதையைக் கேட்டேன். பசிக்கிறது என்று பிள்ளையிடம் சொல்லலாம் என்றால் அவன் தூங்கி வழிந்து கொண்டு இருந்தான். மற்ற தினங்களாக இருந்தால் நானே குசினிக்குள் போய் ஏதாவது தோசையைப் போட்டுச் சாப்பிட்டு விடுவேன். பசி என்று யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை.
எனக்கு ஒவ்வொரு தீபாவளியின் போதும் சிதம்பர நினைவுகள் என்ற நூல் நினைவுக்கு வந்து விடும். மலையாளக் கவி பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதியது. ஷைலஜா மொழிபெயர்ப்பு. சுள்ளிக்காடு அங்கே ரொம்பப் பிரபலம். அவர் கவிதைகள் கல்லூரிகளில் பாடமாக உள்ளன. சுள்ளிக்காடு பராரியாக எங்கெங்கோ திரிந்து கொண்டிருக்கிறார். வயது முப்பதோ முப்பத்து இரண்டோ இருக்கலாம். பிச்சை எடுத்துத்தான் சாப்பாடு. ஓனப்பண்டிகை அன்று திருவனந்தபுரம் வருகிறார். 15 ஆண்டுகளுக்கு முன்பு படித்தது. ஞாபகத்தில் இருந்தே எழுதுகிறேன். சாப்பிட்டு மூன்று தினங்கள் ஆகியிருந்தன. பசியில் கண்கள் இருண்டன. ஒரு வீட்டுக் கதவைத் தட்டி பசிக்கிறது எனச் சொல்லி யாசிக்கிறார்.
அந்த வீட்டு அம்மாளுக்கு அடிவயிறே கலங்கி விடுகிறது. இத்தனை சௌந்தரியமான ஒரு பையன் இப்படி ஒரு பண்டிகை தினத்தன்று பட்டினியில் கண்கள் இருண்டு பிச்சை கேட்கிறானே, ஐயோ பகவானே என நினைத்தபடி அவனை உள்ளே அழைத்து உணவிடுகிறார்.
அதற்குள் அந்த வீட்டுப் பையன் ஓடி வந்து பிச்சைக்காரனைப் பார்த்து இது பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அல்லவா என்று அவரைக் கேட்டு விடுகிறான்.
நான் பசியில் களைத்து, கிளம்புகிறேன் என்று சொன்னபோது, ”என்னது, கிளம்புவதா, சாப்பிட்டு விட்டுப் போங்கள்” என்று சொல்லிக் கடிந்து கொண்டு சுடச்சுட இட்லியையும் சட்னியையும் முறுக்கையும் வைத்த புண்ணியவதிக்குக் கோடி வந்தனம். என் மனம் நிறைந்தது. வயிறு நிறைந்தது. வந்ததுமே பசிக்கிறது என்று சொல்லியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். இன்னமும் ஏதோ தடுக்கிறது.
கதை இதோடு முடிந்திருந்தால் இதை எழுதியே இருக்க மாட்டேன். வீட்டுக்குக் கிளம்பும்போது அவந்திகாவிடமிருந்து போன். சாரு, ரொம்பப் பசிக்கிறது, மகாமுத்ராவிலிருந்து ஏதாவது வாங்கி வாயேன்.
பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் போது எப்படி மகாமுத்ரா போவது? பண்டிகை நாளில் ஆட்டோ கிடைக்குமா? வெளியே வந்தேன். ஆட்டோ கிடைத்தது. எதிர்பார்த்தது போலவே மகாமுத்ரா பூட்டியிருந்தது.
இட்லி மாவுக் கடையில் ஒரே தள்ளுமுள்ளு. வெறுங்கையுடன் வீடு திரும்பி இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்.