தீபாவளி நாட்குறிப்பு என்று எழுதுவதை விட தீபாவளி வயிற்றெரிச்சல் என்று எழுதுவதே பொருத்தம். ஒவ்வொரு ஆண்டும் ஏண்டா தீபாவளி வருகிறது என்றே பொங்கும் மனம். எல்லாம் நாஸ்டால்ஜியா தான். வாயில் மெழுகாகக் கரையும் தேன்குழல், கொஞ்சம் கரடுமுரடாக இருக்கும் முள்ளு முறுக்கு, சுழியம், அதிரசம், மைசூர் பாகு, சீடை, வெல்லச் சீடை, ரவா லாடு, பொருளங்கா உருண்டை என்ற தீபாவளி அமர்க்களம் எல்லாம் வெறும் நினைவாக மட்டுமே ஆகி விட்டது. காலையில் அரசனைப் போலவும், மதியம் சம்சாரியைப் போலவும், இரவில் பிச்சைக்காரனைப் போலவும் உண்ணும் வழக்கம் உள்ளவன் நான். ஒரே ஒரு ஆப்பிளும் ஒரு டம்ளர் பசும்பாலும்தான் என் இரவு உணவு. இப்போதெல்லாம் மார்ஜினல் மேன் எடிட்டிங் வேலையில் இருப்பதால் பனிரண்டுக்குப் படுத்து மூன்றரைக்கே எழுந்து விடுகிறேன் என்பதால் காலை ஏழு மணிக்கே கொலைப்பசி பசிக்கும். இல்லாவிட்டாலும் எனக்குக் காலை உணவுதான் அன்றைய தினத்துக்கான சக்தி. அதுதான் பண்டிகை தினங்களில் தோதுப்பட்டு வர மாட்டேன் என்கிறது.
நேற்று காலை நண்பர் வீட்டில் இட்லி கிடைத்தது. மதியம் அவந்திகா அவல் பாயசம் செய்திருந்தாள். ஏன் பாயசம் என்றாலே அவல் பாயசம்தான் செய்கிறாய் என்று கேட்டேன். உனக்கு அதுதானே பிடிக்கும் என்றாள். அவளுக்கு சேமியா, ஜவ்வரிசிப் பாயசம்தான் பிடிக்கும். ஆனால் அதை எங்கள் வீட்டில் செய்ததே இல்லை. இப்படியெல்லாம் உனக்கு ஆசைப்பட்டதைச் சாப்பிடாமல் இருக்காதே; அடுத்த முறை சேமியா ஜவ்வரிசி பாயசமே செய் என்றேன்.
வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் மெர்சல் போகலாமா என்று கேட்டார் ராம்ஜி. பொதுவாக அஜித் படங்கள் என்றால் பயந்து பயந்துதான் போவேன். செம பிளேடாக இருக்கும். விவேகம் கடைசி உதாரணம். ஆனால் விஜய் படம் என்றால் தாராளமாகப் போகலாம். பொழுதுபோக்கும் மசாலாவும் உத்தரவாதம். மெர்சலும் அப்படியே. (ஆனால் இடைவேளைக்குப் பிறகு நன்றாகத் தூக்கம் வரும்படி இழுத்திருக்கிறார் அட்லி). நாளை அது பற்றி விரிவாக எழுதுவேன். இப்போது மார்ஜினல் மேன்.
ஏழு மணி அளவில் தோழியின் போன். சாந்தோமில்தான் நிற்கிறேன், உங்களுக்கு ஸ்வீட் வாங்கிக் கொண்டு வரவா என்று கேட்டார். விஷயத்தைச் சொன்னேன். முகநூலில் ஷாலின் மைசூர் பாகு பற்றி எழுதியிருந்ததை இன்று காலை வாட்ஸப்பில் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். என் மீது அவருக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. ஏற்கனவே முறுக்கு இல்லை, சீடை இல்லை, அதிரசம் இல்லை, அது இல்லை இது இல்லை என்று புலம்பிக் கொண்டிருப்பவனிடம் மைசூர் பாகு பற்றி நான் எழுதியுள்ள கட்டுரையைப் பார் என்று அனுப்பியிருக்கிறார் என்றால் என்ன ஒரு சேடிஸம்!